Thursday, July 21, 2011

அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை.

அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை

உலக மக்கள் தொகை வரும் அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960ம் ஆண்டு 300 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1999ஆம் வருட கணக்கெடுப்பின்படி 600 கோடியாக உயர்ந்தது.

ஒரு வினாடிக்கு 5 குழந்தைகள் வீதம் ஒரு வருடத்திற்கு 7.8 கோடி அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 2025ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயரும் என கணக்கிடப் பட்டுள்ளது.

சேலத்தில் , நித்யானந்தா - ரஞ்சிதா படத்திற்கு செருப்படி.



சேலம் பெரியார் சிலை அருகே திடு திடுப்பென சிவப்பு சேலையுடன் திரண்ட பெண்கள் 'நித்யானந்தா படத்தையும் ரஞ்சிதா படத்தையும் செருப்பால் அடித்தனர். சிலர் கையில் கொண்டு வந்த விளக்குமாறால் அடிக்க நாம் அவர்களிடம் பேசினோம் 'நாங்கள் பெண்கள் விடுதலை முன்னணி' சேர்ந்தவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாச கூத்து நடத்தி வருகிறார் நித்யானந்தா.

ஆன்மிகம் என்ற போர்வையில் வியாபாரம் செய்தும், நடுத்தர வர்க்க மக்களை சிந்தனை ரீதியாக மழுங்கடித்தும் வருகிறார் நித்யானந்தா. அதை கண்டிக்கும் விதமாக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றபடியே மீண்டும் செருப்பால் அடிக்க தொடங்கினர் இதை வேடிக்கை பார்த்த மக்களும் நல்லா அடிக்கனும்ங்க கடவுள் பேருல காம களியாட்டம் நடதுரானே என்று முனு முணுத்தபடி சென்றனர்.








சேலம் மாவட்ட செயலாளர் காந்தம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் கலந்து கொண்டனர்.

சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.



சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வரும் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலேயே அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தது.

அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது. சமச்சீர் கல்வி நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படுமா என்று அன்று தான் உறுதியாகத் தெரியும்.

சோமாலியா நாட்டில் 1 கோடி பேர் பட்டினி ; உணவின்றி தினமும் 6 பேர் சாவு.

கடும் வறட்சி: சோமாலியா நாட்டில் 1 கோடி பேர் பட்டினி; உணவு இல்லாமல் தினமும் 6 பேர் சாவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 1992-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது. அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் செத்தனர். ஐ.நாசபை, மேலை நாடுகளின் உதவியால் நிலைமை சீறடைந்தது.

இந்த நிலையில் இப்போது மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றனர். ஒரு கோடியே 13 லட்சம் பேர் பட்டினி கிடப்பதாக ஐ.நாசபை தகவல் தெரிவித்துள்ளது.

சோமாலியா நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதுவும் இல்லை. 1990-ம் ஆண்டு அங்கு அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எந்த ஆட்சியும் இல்லை. நாட்டின் பெரும் பகுதியை முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அவர்கள் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கிறார்கள். அதை மீறி தொண்டுநிறுவனங்கள் உணவு போன்றவற்றை கொடுத்து உதவி செய்தால் தொண்டு நிறுவன ஊழியர்களை சுட்டுக் கொல்கிறார்கள்.

எனவே, ஐ.நாசபை உள்ளிட்ட எந்த தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை. இதனால் வறட்சியால் பாதித்து மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். தினமும் 6 பேர் பட்டினியில் சாவை சந்திக்கின்றனர். அதில் பாதிபேர் குழந்தைகளாக உள்ளனார்.

வறட்சி தாங்கமுடியாமல் பெரும்பாலான மக்கள் பக்கத்து நாடான எத்தியோப்பியாவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டில் மட்டும் விலைவாசி 270 சதவீதம் உயர்ந்துள்ளது. அங்கு தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளது. 90 சதவீத கால்நடைகள் வறட்சியால் இறந்து விட்டன.

நிலைமை இப்படியே சென்றால் பல்லாயிரக்கணக்கானோர் சாவை சந்திப்பார்கள் என்று நிபுனர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியாவுக்கு உதவ உடனடியாக 2500 கோடி ரூபாய் தேவைப்படுவதாகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஐ.நாசபை கேட்டுக் கொண்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு !



"நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்" என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி களுக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே எம்.பி.பி.எஸ். படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திர மவுலி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மருத்துவ கவுன்சில் கவர்னர் புருசோத்தம் லால், சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை இணைய தளத்தில் வெளியிடுவது என்றும், பொது மக்களின் கருத்துக்களைக் கேட்பது என்றும் முடிவாகி இருக்கிறது. இந்தத் தகவலை, கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திர மவுலி, புருஷோத்தம் லால், வினீத் ஜோஷி உறுதி செய்தனர்.

தனியாருக்கு சாதகமாக அரசு மருந்து நிறுவனங்கள் மூடல்.



நம் நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு வந்த வெறி நாய்கடி மருந்து, இரனஜன்னி மருந்து, போலியோ, மற்றும் டி.பி மருந்து என மக்களின் உயிர் காக்கும் முக்கிய மருந்துகளை உதக மண்டலத்தில் உள்ள குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டியூட், மற்றும் சென்னை, கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டியூட் ஆகிய நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வந்தது.

அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்த இரு நிறுவனங்களிலும் உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று காரணத்தை சொல்லி இழுத்து மூடிவிட்டார்.

இதன் விளைவாக, இப்போது சாமானிய மக்களுக்கு அதிகம் பயன்படும் மிக முக்கிய மருந்து வகையான இந்த வகை மருந்துகளை தயாரிக்க இந்தியாவில் பல புது மருந்து நிறுவனங்கள் தோன்றின.

இந்த நிறுவனங்கள், முதலில் சராசரி விலையில் மருந்துகளை விற்பனை செய்து வந்தது, மருந்துகளின் தேவை அதிகரிக்க தொடங்கியதும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விலையை அதிகரித்து வருகிறது.

முந்தைய காலங்களில், அரசு மருத்துவ மனைகளுக்கு இலவசமாக கிடைத்து வந்த இந்த மருந்துகளை இப்போது ஒவ்வொரு மாநில அரசும் தனியார் நிறுவனங்களிடம் காசு கொடுத்து வாங்கி வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் கொடுக்கவேண்டிய இந்தவகை மருந்துகளை இப்போது தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய அரசு கைகட்டி நின்று வருகிறது.

இப்போது தனியார் நிறுவனகள் சாதாரணமாக ஒரு பெட்டிக்கு முன்னூறு ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

நாட்டு மக்களுக்கு தரமான மருந்துகளை தயாரித்து வழங்கிவந்த மத்திய அரசு நிறுவனங்களை மூடியது கண்டிக்கத்தக்கது, மத்திய அரசு உடனடியாக இந்த நிறுவனங்களின் உள் கட்டமைப்பு வசதிகளை சரிசெய்து மூடப்பட்ட கிங் இன்சிடியுட் மற்றும் குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்களை மத்திய அரசு உடனடியாக திறக்க வேண்டும்.

மிக முக்கியமான 356 வகை மருந்துகளை மத்திய அரசு அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்த்து கட்டுப்பாடான விலையில் விற்பனை செய்யவேண்டும்.

இந்திய அளவில் இந்த 356 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலை பட்டியலை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை மாநில அரசும், மக்கள் பிரதிநிதிகளும் சமுக அமைப்புகளும், சமுக ஆர்வலர்களும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்.



கிராமங்களை விட நகர வாழ்க்கையை விரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் கிராமப்புறங்களில் 3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரம் பேரும், நகர்ப் புறங்களில் 3 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.60 சதவீதம். இதில் கிராமங் களில் வளர்ச்சி விகிதம் 6.49 சதவீதம். ஆனால் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.16 சதவீதமாக இருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சியால் காஞ்சீபுரம் 65.35 சதவீதம் உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

சென்னை நகரில் தற்போது மக்கள் தொகை 46 லட்சத்து 80 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது நகரங்களில் வசிக்கும் மக்கள் தொகையில் 13.30 சதவீதம் ஆகும். அகில இந்திய அளவில் ஒப்பிட்டால் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னை 2-வது இடத்தில் உள்ளது. வடமேற்கு டெல்லியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 29ஆயிரத்து 468 பேர் வசிக்கிறார்கள். அடுத்து சென்னையில்தான் சதுர கிலோ மீட்டருக்கு 26 ஆயிரத்து 903 பேர் வசிக்கிறார்கள்.

மும்பை, கொல்கத்தா நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 20 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் சென்னையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் நெரிசலில் 2-வது இடத்துக்கு வந்துள்ளது. மும்பை, கொல்கத்தா நகரங்களை ஒப்பிடும்போது சென்னை நகரின் எல்லை விரிவடைந்துள்ளது. கிராம மக்கள் பெருமளவில் சென்னையில் வந்து குடி யேறியுள்ளனர். எனவே இங்கு மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது. 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 16 ஆயி ரத்து 317 கிராமங்கள் இருந்தன.

நகரங்களின் விரிவாக்கம் மற்றும் நகரமயமாகுதல் காரணங்களால் இப்போது கிராமங்களின் எண் ணிக்¬கை 15 ஆயிரத்து 979 ஆக குறைந்து விட்டது. முன்பு தமிழ்நாட்டில் 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசித்தார்கள். இப்போது 51.55 சதவீதம் பேர்தான் உள்ளனர். நகர்ப்புறங்களில் 25 சதவீதமாக இருந்த மக்கள் தொகை தற்போது 48.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் வளர்ச்சி 15.60 சதவீதம்.

இதில் நகரங்களில் 27.16 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராம பகுதிகளில் 6.49 வீதம்தான் மக்கள் தொகை அதிகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.