Wednesday, June 22, 2011

“பூஜ்ஜிய டிஸ்சார்ஜ்” தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு.

“பூஜ்ஜிய டிஸ்சார்ஜ்” தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு:    சாய ஆலை உரிமையாளர்கள் ஒப்புதல்

பூஜ்ஜிய டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை சரிவர செயல்படுத்தாததால், திருப்பூரில் உள்ள அனைத்து சாய சலவை ஆலைகளையும் மூட, சென்னை ஐகோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.

அதன்படி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அனைத்து சாய சலவை ஆலைகளும், தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பனியன் துணிக்கு சாயமிடுவது பாதிக்கப்பட்டதால், பின்னலாடை உற்பத்தி குறைந்தது; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், முத்தரப்பு பேச்சு நடத்தப்பட்டது. சாய ஆலை உரிமையாளர்கள், கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதுவரை, 2,100 டி.டி.எஸ்., அளவுக்கு கழிவுநீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தொழில் மற்றும் விவசாயிகளின் எதிர்கால நலன் கருதி, தமிழக அரசும் பூஜ்ய டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், தற்போது ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அரசு அறிவுறுத்தலை தொழில் துறையினர் ஏற்று, “பூஜ்யடிஸ்சார்ஜ்‘ தொழில் நுட்பத்தில், சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்வதாக ஒப்புக்கொண்டனர். இது பற்றி திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன், பொதுச்செயலாளர் முருகசாமி கூறியதாவது:-

கடந்த 140 நாட்களாக சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை நீடித்தால், பின்னலாடை தொழிலே காணாமல் போய்விடும். நீண்டகால திட்டங்களை அரசு முடிவு செய்யும் வரை, தற்காலிகமாக பழைய தொழில்நுட்பத்தை பின்பற்ற ஒப்புதல் அளித்துள்ளோம்.

ஏற்கனவே அனுமதித்துள்ள அளவுக்கு, கழிவுநீரை சுத்திகரிக்க அனுமதி கோரி, மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு, சாய ஆலைகள் கடிதம் கொடுத்துவிட்டன. கண்காணிப்பு குழுவினர் விரைவில் ஆய்வு நடத்தி, இசைவாணை வழங்கினால் உடனடியாக சாய சலவை ஆலைகளை திறந்து இயக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு : 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது ; நில அதிர்வுக்கு பின்பு திடீர் மாற்றம் - மக்கள் பீதி.

பனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு:  50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது; நில அதிர்வுக்கு பின்பு திடீர் மாற்றம்-மக்கள் பீதி

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று அதிகாலை பல இடங்களில் அதிகாலை நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் உருண்டு ஓடியது. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த மக்கள் வீட்டிற்குள் செல்லவே அச்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 2.9 பதிவாகி இருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மட்டும் தொடர்ச்சியாக 2 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் சத்தம் போட்டுக் கொண்டே ஓடி வந்தனர். தெரு முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூடிநின்று கொண்டு இதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர்.

மேலும் நில அதிர்வு தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தில் ஆய்வு செய்த சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பொதுவாக நில அதிர்வு, நில நடுக்கம் ஏதாவது ஏற்பட்டால், அது தாக்கப்பட்ட பகுதியில் நிலப்பரப்பில் ஏதாவது மாறுதல் இருக்கும். அதே போல் நேற்று நடந்த பூமி அதிர்வுக்கு பின்னர் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குள்ளப்பநாயக்கனூர் பெரியகல்மேடு பகுதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் நேற்று திடீரென 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. சுமார் 10 அடி ஆழத்துக்கு குழி ஏற்பட்டு இருக்கிறது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து வேடிக்கை பார்த்தனர். நில அதிர்வுக்கு பின்னர் பூமியில் இது போன்ற மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். குழிக்குள் வெற்றிடமாக இருக்கிறது. இந்த திடீர் குழி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பூவியியல் அறிஞர்களும் அங்கு சோதனை நடத்த முடிவு செய்து இருக்கின்றனர்.

போர்க்குற்றம் குறித்து ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு இலங்கை அரசு ரகசிய பதில்.

போர்க்குற்றம் குறித்து ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு இலங்கை அரசு ரகசிய பதில்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக் கணக்கான தமிழர்களை ராணுவம் படுகொலை செய்தது. இந்த போர்க்குற்றம் குறித்து ஐ.நா.சபை நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த குழுவின் அறிக்கையை ஏற்க இலங்கை மறுத்து வருகிறது. மேலும் அதை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தது. ஆனால், அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் இலங்கை அரசு ரகசியமான முறையில் பதில் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. லட்சுமண் கிரியெல்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் ஒதுக்கீடு சட்டம் மீதான விவாதம் நேற்று நடந்தது. அதில் அவர் பேசியபோது கூறியதாவது:-

இறுதிகட்ட போரின்போது பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என அரசு கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். இதை அரசு சர்வதேசத்திடம் விளக்கி கூற வேண்டும். இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும், சேனல் 4 வீடியோ காட்சி தொடர்பாகவும் சர்வ தேசத்திற்கு விளக்கம் அளிக்க அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி யிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு சேனல் 4 வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்ததாக கூறிவிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கும் அரசு மிகவும் ரகசியமான முறையில் பதில் அளித்துள்ளது. நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அவப்பெயர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பொய் என நிரூபிப்பது அரசின் கைகளில்தான் உள்ளது. ஆனால் இது தொடர்பாக அரசு உடனடியாக சர்வதேச நாடுகளுடன் பேச வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறந்து இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவில் ரூ.2075 கோடி ஊழல் செய்த அமெரிக்க வாழ் இந்திய தம்பதி.

அமெரிக்காவில் ரூ.2075 கோடி ஊழல் செய்த அமெரிக்க வாழ் இந்திய தம்பதி

இந்தியாவை சேர்ந்தவர் ரெட்டி ஆலென். இவரது மனைவி டாக்டர் பத்மா ஆலென். இவர்கள் அமெரிக்காவில் புளும்பெர்க் நகரில் தங்கியுள்ளனர்.

புளும்பெர்க் மாநகராட்சியில் சிட்டி டைம் என்ற மிகப்பெரிய திட்டத்தை மேயர் மைக்கேல் தொடங்கியுள்ளார். இந்த திட்டப் பணிகளில் ரெட்டி ஆலெனும், அவரது மனைவி பத்மா ஆலெனும் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மேன்காட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கணவன், மனைவி இருவரும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், போலியான ஆவணங்களை தயார் செய்தும் ரூ.2075 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய ஊழல் என கூறப்படுகிறது. எனவே, அங்கு இதுகுறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.


பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவி : நிதி மந்திரியை, மத்திய அரசே உளவு பார்ப்பதா? சுஷ்மா சுவராஜ் கேள்வி.

பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவி: நிதி மந்திரியை, மத்திய அரசே உளவு பார்ப்பதா?    சுஷ்மா சுவராஜ் கேள்வி

மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜியின், அமைச்சக அலுவலகத்தில் மத்திய உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்பு கருவிகளை பொருத்தி கண்காணித்தது தெரியவந்தது. தனது அலுவலகத்தின் பாதுகாப்பு குறித்த ரகசிய விசாரணை நடத்தும்படி பிரதமருக்கு பிரணாப்முகர்ஜி கடிதம் எழுதினார். செப்டம்பர் 7-ந் தேதி அவர் எழுதிய கடிதத்தில், தனது அலுவலகத்தில் 16 ரகசிய கண்காணிப்பு மற்றும் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. என்றாலும் நேரடியாக ஒட்டுக் கேட்டும் மைக்ரோ போன் அல்லது ஒளிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட வில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து உளவுத்துறை அளித்த விளக்கத்தில், பிரணாப்முகர்ஜி மேஜைக்கு அடியிலும், அவர் பகுதியிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சில பொருட்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவற்றை எடுத்து தடயவியல் சோதனை செய்தபோது, அந்த பொருட்கள் சூயிங்கம் என்று தெரியவந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுக்கேட்பு பிரச் சினை குறித்து பிரணாப் முகர்ஜியிடம் கேட்டபோது, உளவுத்துறையினர் எனது அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்தது உண்மை. ஆனால் அந்த ரகசிய கண் காணிப்பு மூலம் எதையும் அவர்கள் கண்டுபிடிக்க வில்லை என்று கூறினார்.

இது குறித்து பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் டியூட்டர் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-

மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்திலேயே பாதுகாப்பு விதி மீறப்பட்டுள்ளது. இதை சாதாரண பிரச்சினையாக கருத முடியாது. அவரது பாதுகாப்பு தொடர்பான இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு சரியான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட வேண்டும். தனது நிதி மந்திரியையே மத்திய அரசு உளவு பார்ப்பதா? இது என்ன தனியார் நிறுவனமா? உளவுத்துறை அளித்துள்ள விளக்கத்தில் நிதி மந்திரி அலுவலக சுவரில் சூயிங்கம் இருந்ததாக கூறுவது விளையாட்டுத் தனமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினை பற்றி அரசு முழு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுஷ்மாசுவராஜ் கூறியுள்ளார்.


லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் - திமுக அதிரடி.


லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று திமுக அதிரடியாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவும் அது தயாராகி விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் கருணாநிதி குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. அது லோக்பால் விவகாரம்.

லோக்பால் விசாரணை வரையறைக்குள் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருவோர், அன்னா ஹஸாரே போன்ற சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் இதை ஏற்க அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக, பிரதமர் பதவியையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என அதிரடியாக தெரிவித்துள்ளது.

நேற்று பிரதமர் தலைமையில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தின்போதுதான் இந்தக் குண்டைப் போட்டுள்ளது திமுக. இதுகுறித்த தகவலை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா கூறுகையில், பிரதமர் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் லோக்பால் மசோதா குறித்து விவரித்தார். அப்போது திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு கூறுகையில், பிரதமரை லோக்பால் வரையறைக்குள் சேர்க்கக் கூடாது என்ற அரசின் நிலையை திமுக எதிர்க்கிறது. பிரதமர் பதவியையும் லோக்பாலுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், லோக்பால் மசோதா குறித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்றார் பரூக் அப்துல்லா.

திமுகவின் இந்த அதிரடிப் பேச்சால் பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று டெல்லியில் தான் இருந்தார். இருப்பினும் இக்கூட்டத்திற்கு அவர் வரவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை கைவிட்ட காங்கிரஸுக்கும், மத்திய அரசுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக லோக்பால் விவகாரத்தைப் பயன்படுத்துவதாக தெரிகிறது.

ஒரு நாளில் லட்சம் பேர் சாப்பிடலாம் : திருப்பதி கோவிலில் புதிய அன்னதான கூடம் ; 7-ந்தேதி ஜனாதிபதி திறந்து வைக்கிறார்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.தற்போது ஒரு நாளைக்கு 70 ஆயிரம் பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி செலவிடப்படுகிறது.

இதற்காக தேவஸ்தானம் சார்பில் வங்கியில் பல கோடி ரூபாய் வைப்பு நிதி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.27 கோடி வட்டி வருகிறது. ரூ.13 கோடியை தேவஸ்தானம் செலுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக அன்னதானத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தற்போதுள்ள அன்னதான கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் தேவஸ்தானம் பிரமாண்டமான புதிய அன்னதான கட்டிடம் கட்டியுள்ளது.

இதில் ஒரே சமயத்தில் 4 ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம் ஒரு நாளில் ஒரு லட்சம் பேர் சாப்பிட முடியும். ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான கூடம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இக்கட்டிடத்தை 7-ந்தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

திருப்பதி கோவிலில்
அறைகளுக்கு டோக்கன் முறை : புதிய திட்டம் அமல்
.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருப்பதி கோவிலுக்கு வரும் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக தங்கும் அறைகள் ஒதுக்கப்படுகிறது.

இந்த நேரடி அறைகள் வழங்கும் அலுவலகம் சி.ஆர்.ஓ. அலுவலகம் முன்பு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ரூ.50 முதல் ரூ.400 வரை வாடகைக்கு தங்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து பக்தர்களுக்கும் இந்த இடத்திலேயே அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து திருமலையில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் வழங்க புதிதாக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டோக்கன் வழங்குவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் விஜயா வங்கியின் இடதுபுறம் 21 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு பக்தர்களுக்கு முதலில் டோக்கன் வழங்கப்படும். அவர்களுக்கு அழைப்பு வரும்போது அடையாள அட்டையை காண்பித்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை மூலம் பக்தர்கள் சிரமங்களை தவிர்க்க முடியும்.

ராமேசுவரத்தில் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : 23 மீனவர்களை விடுவிக்க போராட்டம்.

ராமேசுவரத்தில் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : 23 மீனவர்களை விடுவிக்க போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து ஜெயிலில் அடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் ராமேசுவரம் பகுதியில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையை சேர்ந்த வீரர்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி காட்டி மிரட்டி இங்கிருந்து சென்று விடுங்கள் என்று மிரட்டினர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்து அதிலிருந்த அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராமசாமி, விஜயன் உள்பட 23 பேர்களை சிறை பிடித்து தலைமன்னாருக்கு படகுகளுடன் கொண்டு சென்றனர்.

தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1-ம் தேதி மீண்டும் அவர்களை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தற்போது 23 மீனவர்களும் வவுனியா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக யாழ்பாணத்திற்கான இந்திய தூதர் மகாலிங்கம் கூறும்போது, சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களும் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யும், அடிக்கடி தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட், மெரீஸ்மகத்துவம், தட்சிணாமூர்த்தி உள்பட 13 சங்கங்களின் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.1 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தொழில் தொடர்பான லேத் பட்டறை, ஐஸ் கம்பெனி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகளும் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் ராமேசுவரம் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று மீன்படிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 275 விசை படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலை நிறுத்த போராட்டம் குறித்து கோட்டைபட்டினம் விசைபடகு மீனவ சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

கடந்த மாதம் வரை விசை படகு மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்த இருந்தனர். இந்நிலையில் சிங்கள படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்துள்ளனர். சிங்கள படையினர் தொடர் அட்டூழியத்தை நிறுத்த ஒரே ஒரு வழிதான் உள்ளது. உடனடியாக கச்சத்தீவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை, சிங்கள படையினர் உடனே விடுதலை செய்ய, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டைபட்டினம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. தகவல்.

பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. தகவல்

இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்.

இந்த நிலையில் சில வெளிநாடுகள் துணையுடன் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீது உச்சக்கட்ட தாக்குதல்களை சிங்கள ராணுவம் நடத்தியது.

2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நந்திக்கடல் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இறுதிக்கட்ட ஈழப்போரின் போது சுமார் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்டவர்களில் ஏராளமானவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. பிரபாகரனின் மனைவி மதிவதனியும் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்தது.

பிரபாகரன்-மதிவதனி தம்பதியருக்கு சார்லஸ், பாலசந்திரன் என்ற 2 மகன்களும், துவாரகா என்ற மகளும் பிறந்தனர். இவர்களில் சார்லஸ், பாலசந்திரன் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. என்றாலும் மதிவதனி, துவாரகா, பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக முன்பு பல தடவை கூறப்பட்டது.

இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த எம்.பி.யின் பெயர் ஏ.எச்.எம். அஸ்வர். இவர் இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆவார். அஸ்கரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு அஸ்கர் பதில் சொல்லவில்லை.

தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி.

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை 10ஆம் வகுப்பு மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு பந்த் காரணமாக 21.06.2011 அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதுதெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பள்ளிக்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் தலைமை ஆசிரியரை ஆடைகளை கழற்றி, ஜட்டியுடன் நிற்க வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியும் தனது பங்கிற்கு தலைமை ஆசிரியரை, தனது செருப்பால் அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறப்பட்டதையடுத்து, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எம்.பி.பி.எஸ். வகுப்புவாரி அடிப்படையில் உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண்.தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

இந்த ஆண்டு 3 மதிப்பெண்வரை கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கான (ஓ.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பி.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களில் பலர், பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்காத காரணத்தால் அனைத்துப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-லிருந்து 199-ஆகக் குறைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு கட்-ஆஃப் 197.5, ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அனைத்துப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆக அதிகரித்துள்ளது.

இதே போன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் இந்த ஆண்டு 197.75-ஆக அதிகரித்துள்ளது. - கடந்த ஆண்டு 195.50

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.சி.--199.00

பி.சி.--197.75

பி.சி. (எம்)--196.50

எம்.பி.சி./டி.சி.--196.25

எஸ்.சி.---192.00

எஸ்.சி. (ஏ)--188.50


எஸ்.டி.--188.50

ஓ.சி. - அனைத்துப் பிரிவினர்; பி.சி. - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; பிசிஎம் - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர்; எம்.பி.சி. - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி. - தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.ஏ. - தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர்; எஸ்.டி. - பழங்குடி வகுப்பினர்.


எம்.பி.பி.எஸ். : சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு?

http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_6095.html

எம்.பி.பி.எஸ். : சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு ?எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற ஆர்வம் மாணவர் களிடையே எழுந்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அதிக கட்-ஆஃப் மதிப்பெண் (அனைத்துப் பிரிவினர் கட்-ஆஃப் 199) காரணமாக சென்னை கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அரிதாகியுள்ளது. எனினும் வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 எடுத்துள்ள மாணவர்களுக்கு சென்னை கல்லூரிகள் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சென்னை மருத்துவக் கல்லூரி : 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட "எம்எம்சி' எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பது ஏராளமான மாணவர்களின் கனவாக உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 44 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 37 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 5 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 28 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 21 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 4 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு சென்னை மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 140 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி : 1838-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 39 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 34 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 4 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 26 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 19 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 4 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 127 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி : 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 26 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 23 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 3 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 17 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 12 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 3 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

ரேங்க் பட்டியலில்...எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கான மொத்த இடங்கள் 512. இந்த 512 இடங்களில் இடம்பெற்றுள்ள முற்பட்ட வகுப்பினர் (எஃப்.ஓ.சி.)-45 பேர்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)-342 பேர்; பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பி.சி.எம்.)-17 பேர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (எம்.பி.சி.) சேர்ந்தவர்கள்-91 பேர்; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-14 பேர்; தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர் (எஸ்.சி.ஏ.)-2 பேர்; பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) - 1 மாணவர்;

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்றிலும் மொத்தம் 352 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்துப் பிரிவினருக்கும் உரிய இடங்கள் 512-ஐ, சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 352-உடன் ஒப்பிட்டாலே கடும் போட்டி இருப்பது தெளிவாகி விடும்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய பாடங்களில் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ 66 மாணவர்கள் பெற்றுள்ளதால், சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 44 அனைத்துப் பிரிவினர் இடங்களும் ரேங்க் பட்டியல் அடிப்படையில் வரிசையாக நிரம்பி, மீதமுள்ள 22 பேருக்கு வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.75-ல் மட்டும் 69 மாணவர்கள் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199.50-ல் 114 பேர் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ல் மட்டும் 120 பேர் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199-ல் 147 மாணவர்கள் உள்ளனர்.

இத்தகைய கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி காரணமாக சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகள் ஏதாவது ஒன்றில் வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைக்க கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஐ பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ். வகுப்புவாரி அடிப்படையில் உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண்.
http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_3241.html

அரசியல் தலைவர்களை மிரட்டவே அரசு கட்டுப்பாட்டில் சி.பி.ஐ.எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை மிரட்டுவதற்காகவே சிபிஐ அமைப்பை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கேஜரிவால் புகார் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லோக்பால் வரைவுக் குழுவின் இறுதிக் கூட்டத்துக்கு முன், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியது:

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் சிபிஐ விசாரணை அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டவே அந்த விசாரணை அமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எப்போதெல்லாம் மத்திய அரசுக்குப் பிரச்னை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்ற தலைவர்களை மிரட்டுவதற்கு மத்திய அரசு சிபிஐ விசாரணை அமைப்பை அனுப்பிவைக்கும். சிபிஐ நேர்மையாக செயல்படுவதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக சிபிஐ ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு எதிரான விசாரணையை முடக்கவும் சிபிஐ-யை மத்திய அரசு வளைக்கிறது.

பாதுகாப்பு, உளவு தொடர்பான பணிகளில் சிபிஐ ஈடுபடுவதில்லை. எனவே உளவுப் பிரிவு, "ரா' அமைப்பு போன்றவற்றுடன் சிபிஐ-யை சேர்க்கக்கூடாது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் இருந்து பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை நீக்கிவிடலாம் என்று அந்த சட்டமே கூறுகிறது. எனவே சிபிஐ விசாரணை அமைப்பை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறினார்.

மது விலக்கை அமல்படுத்த முடிவு : சத்தீஸ்கர் மாநிலத்தில் மது பானம் குடிக்க தடை; 263 கடைகள் மூடப்பட்டன.

மது விலக்கை அமல்படுத்த முடிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் மது பானம் குடிக்க தடை; 263 கடைகள் மூடப்பட்டன

மாநிலத்தில் முழு அளவிலான மது விலக்கை அமல்படுத்த சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இம் மாநிலத்தில், உள்ளூரில் தயாராகும் மதுபான வகைகளை விற்பனை செய்யவும், வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்யவும், தனித்தனியே மதுபானக்கடைகள் உள்ளன.

இருவகை மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடி விடாமல், படிப்படியாக குறைக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கிராமங்களில் செயல்பட்டு வந்த 263 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. இவற்றில், 227 உள்ளூர் மதுபான கடைகளும், 36 வெளிநாட்டு மதுபான கடைகளும் அடங்கும்.

இதுபற்றி, வணிகவரிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு, நடப்பு நிதியாண்டில் (2011-12) 263 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வந்தவை.

மதுபானத்துக்கு சிறுவர்கள் கூட அடிமையாவதாக கிராமப்புற பெண்களிடம் இருந்து அரசுக்கு நிறைய புகார்கள் வந்தன. எனவே தான் முதல் கட்டமாக கிராமங்களில் செயல்பட்டு வந்த மதுபான கடைகள் மூடப்பட்டன.

263 கடைகள் மூடப்பட்டுள்ளதால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். எனினும் மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.