Tuesday, December 20, 2011

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித்தான் தீர்ப்பது? - முத்துக்குட்டி.


இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?

இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.

சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.

நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?

ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.

vaiko_atomic_640

அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.

ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.

ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.

ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.

ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.

ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.

ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.

உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.

ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.

ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.

* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.

­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.

 • தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
 • மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
 • ‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?

உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!

ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.

ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.

சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?

இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.

எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்.

அதனால் தான், மக்கள் நடமாட்டம் குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும் வேண்டாம் என்றால் என்ன சொல்வது?

மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

இவை தவிர்த்து உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

 • உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
 • உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை.

நீங்கள் சொல்வது போல் இருந்தால் உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான், செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று படிக்கிறோமே!

எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப் புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான் நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது.

அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?

கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப் பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார்.

திரும்பத் திரும்ப இரசியாவையே சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.

 • அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.
 • புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.
 • சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.
 • இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.
 • செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.
 • சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.
 • பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

எதில் தான் நேர்ச்சிகள் (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது; உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேறுவது?

ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம் பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு உலை தானே?

அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே!

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும் நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை.

ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்!

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா?

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?

நல்ல கேள்வி!

ð கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.

ð அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.

ð அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.

ð இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே!

நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?

எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?

தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?

chernobyl_child_370அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

அணுமின்நிலையம் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

ð அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.

ð குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை விட்டிருக்கிறார்கள்.

ð அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!

‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?

23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.

 • அணு மின்சாரம் மலிவானது.
 • கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
 • அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 • சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
 • நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
 • யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:

ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)

ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.

ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?

ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?

2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.

ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?

ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?

3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?

ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.

ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?

ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?

4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.

ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?

ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)

ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?

ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)

5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.

ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!

ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).

ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.

6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?

ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!

ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?

அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?

நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?

புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில் இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும் ஆகும்.

அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ð இப்போராட்டத்தை நடத்துபவர்கள் அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக் காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’ வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?

ð ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய் வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது.

சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

- முத்துக்குட்டி ( muthukutti@zoho.com)

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

 1. அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்
 2. ‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்
 3. ‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்
 4. ­www.dianuke.org இணையத்தளத்தின் சில கட்டுரைகள்
 5. ‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5

‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்

நன்றி - கீற்று.

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் ; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்.

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் நாளை (புதன்கிழமை) கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்காகன பக்தர்கள் திரள்வார்கள். இதனையொட்டி பக்தர்கள் வசதிக்காக காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பக்தர்கள் சிரமமின்றி சனிபகவானை தரிசிக்க தர்ம தரிசனம், ரூ.100 மற்றும் ரூ.300 கட்டணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நளன் குளத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் குளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே தற்காலிக உடை மாற்று மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சியையொட்டி இன்று இரவு 10 மணியளவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருள்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவுக்கு நாளை வரும் பக்தர்கள் வழிபட்டு செல்ல வசதியாக கோவிலின் வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.

நாளை இரவு சனீஸ்வரபகவான் மீண்டும் யாதாஸ் தானத்துக்கு செல்கிறார். அதோடு சனீஸ்வர பகவானுக்கு நாளை காலை 5 மணி முதல் நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திரவியப்படி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பெயர்ச்சியை குறிக்கும் வகையில் காலை 7.51 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவில் பகுதியில் 32 இடங்களிலும், நளன்குள பகுதியில் 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

வைகோவை தேடும் உளவுத்துறை : கூடலூருக்குள் ரகசியமாகச்சென்றாரா?பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம்பம் பகுதிக்கு சென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் வைகோவின் செயல்பாடுகளை கடந்த நான்கு நாட்களாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கம்பத்தில் 144 தடையுத்தரவு தொடர்வதால், தேனியிலேயே வைகோவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், நேற்று நள்ளிரவு கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைகோ ரகசியமாக சென்றதாக தகவல் பரவியுள்ளது.

நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளை பார்வையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவையில் நடந்த பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்த குறும்பட சிடி வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

நேற்று தேனியில் கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் திடீரென தீக்குளித்தார். படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் அதன் பின்னர் வைகோ எங்கு சென்றார் என தெரியாததால் போலீஸ், உளவுத்துறை குழம்பி போய் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகோவின் உறவினர்கள், கட்சியினரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தபடி உள்ளனர்.

விரயம் ! - தினமணி தலையங்கம்.

உழலை அகற்ற வலுவான லோக்பால் மசோதா தேவை என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.

உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.

ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன. இந்த மெத்தனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.

ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது. இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.

மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகி விடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப் போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.

கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.

இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.

மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து. இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?

மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!

சசிகலா நீக்கம் : மொட்டை அடித்து அதிமுகவினர் மகிழ்ச்சி !தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தினர், நேற்று அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். இச்செய்தி வெளியாகியதும், திருப்பூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே கூடிய அ.தி.மு.க.,வினர் சிலர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிர்வாகிகள் ஒன்பது பேர் மொட்டை அடித்து பட்டாசு வெடித்தனர்; கட்சித் தொண்டர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மொட்டை அடித்திருந்தவர்கள் கூறுகையில், "எம்.ஜி.ஆர்.,காலத்தில் உண்மையான விசுவாசிகளுக்கு கட்சியில் மதிப்பு இருந்தது. முதல்வர் ஜெ., பொது செயலாளரானதும், சசிகலாவின் குடும்பம் அவரை சூழ்ந்து கொண்டது. யாருமே பொது செயலாளரை சந்தித்து பேச முடியாத, புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரதிநிதிகளை வைத்து, சசிகலா குடும்பம், கட்சியை கார்ப்பரேட் கம்பெனி போல் நடத்தி வந்தது.

சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதன் மூலமாக, கட்சியையும், முதல்வரையும் பிடித்திருந்த குடும்ப சனி விலகி விட்டது' என்றனர்.

கொலை வழக்கில் பணம் கைமாரியதால் காங். பிரமுகரை கைது செய்யயாமல் விட்ட சேலம் போலீஸ்.சேலம் நகரில் உள்ள நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டராமன். இவர் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். தனது விசுவாசியான இவருக்கு பல்லவன் கிராம வங்கியின் இயக்குனாராகவும் ப.சிதம்பரம் பதவி வழங்கியிருந்தார்.

சேலத்தில் வளர்ந்து வரும் இந்த காங்கிரஸ் பிரமுகருக்கு கொடிகட்டுவது, தோரணம் கட்டுவது, வாழ்க கோசம் போடுவதற்காக சில எடுபுடிகள் எப்போதும் கூடவே வைத்திருப்பார்.

அப்படி இருந்த எடுபுடிகளில் ஒருவர் கரியபெருமால் கோவில் கரடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்கிற கார்த்திக். இந்த எடுபுடியை கடந்த 11ம் தேதி இரவு கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள எட்டி மாணிக்கம்பட்டி என்ற இடத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு சோளக்காட்டில் வைத்து யாரோ கொலை செய்துவிட்டனர்.

கொலை செய்யப்பட்டவரிடம் கிடந்த செல்போனை வைத்து விசாரணை செய்ததில், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வருன்கிருஷ்ணன் என்கிற விஜய் என்பவர் கொலையான அன்று பல தடவை கார்த்தியுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விஜய்யும், வெங்கட்டராமனின் இன்னொரு எடுபுடிதான், விஜயை பிடித்து விசாரணை செய்ததில், தானும், தன்னுடைய இன்னொரு நன்பரான கிச்சிப்பாளையம் குமார் என்கிற சிவக்குமாரும் சேர்ந்து தான் கார்த்தியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை செய்தபோது, எனக்கும் அவனுக்கும், வரவு செலவு பிரச்சனை.... என்று முதலில் சொல்லியுள்ளான், ஆனால் சிவக்குமாரின் வாக்குமூலம் வேறு மாதிரி இருந்துள்ளது.

இதற்கிடையில் கொலையானவன், கொலை செய்தவன் இருவருமே அந்த காங்கிரஸ் பிரமுகரின் ஆட்களாக இருந்தும் இரண்டு பக்கமுமே அந்த பிரமுகர் தலை காட்டவில்லை.

கொலைக்கு வேறு பலமான காரணம் இருக்கும் என்று சந்தேகம் கொண்ட போலீசார், கொஞ்சம் கடுமையாக விசாரிக்க, என்கிட்ட ஒருத்தன் பணம் வாங்கிக்கிட்டு ரொம்பநாளா திருப்பி குடுக்காம இழுத்து அடிக்கிறான், அவன்கிட்ட பணம் வாங்கிக்குடுன்னு நான் தான் கார்த்திகிட்ட சொன்னேன், அதுக்காக நாங்க மூன்று பேரும் போனப்பத்தான் அந்த சோளக்காட்டுல ஒண்ணா தண்ணியடிச்சோம். அப்ப எங்க அண்ணன் வெங்கட்டராமன் பொண்டாட்டி ராஜேஸ்வரிக்கும் அவருக்கு தெரிஞ்ச ஒரு பஸ் உரிமையாளர் மணிவாசகம் என்பவருக்கும் கள்ளக்காதல் இருக்குதுன்னு கார்த்தி என்கிட்ட சொன்னான்...., இவன் சொன்னத என்னால தங்கிக்க முடியல... எங்களுக்கு எல்லாம் தாயாக இருந்து சோறு போட்ட அண்ணியைபற்றி இவன் தப்ப பேசினது என்னால தாங்கமுடியலே... அதனாலதான், நான் அவனை கொலை செய்தேன் என்று சொல்லியுள்ளான்.

சரி, நீ யாருகிட்ட பணம் கொடுத்தே...? என்று போலீசார் போட்ட முதல் கொக்கிக்கு பதில் சொல்ல முடியவில்லை விஜய்யால். சரி.... நீயும் கார்த்தியும் பணம் வசூல் செய்ய போனவர்கள் எதுக்கு கத்தியெல்லாம் எடுத்து போனீங்க....? என்று போலீசார் கேட்டுள்ளனர்.

அதற்கும் விஜய்யால் பதில் சொல்ல முடியவில்லை. “அண்ணிக்கும், பஸ் ஒன்றுக்கும் கள்ளத்தொடர்பு என்ற போதே இதுக்கும் “அண்ணனுக்கும் தொடர்பு வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, முழு விசயத்தையும் சொல்லிவிட்டான் விஜய்.

அவனது வாக்குமூலம் எப்படியிருந்தது என்பதை நம்மிடம் சொன்ன போலீசார், அவ்வப்போது எங்களுக்கு எடுபுடி வேலைகள் கொடுக்கும் வெங்கட்டராமனின் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருப்போம்.

பல்லவன் கிராம வங்கியின் இயக்குனர் பதவியில் இருந்துகொண்டு சமீபகாலமாக அதிக வருமானம் பார்த்துவரும் வெங்கட்டராமனனின் மனைவி ராஜேஸ்வரிக்கும், மணிவாசகம் என்ற ஒரு பஸ் உரிமையாளர் ஒருவருக்கும் “கள்ளக்காதல் இருந்தது. இதை பலதடவை நாங்க பாத்திருக்கிறோம்.

வெங்கட்டராமன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த கார்த்தி அண்ணன் “மனைவியும் “மணிவாசகாவும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து விட்டேன் என்றும், “அண்ணா நீங்க கொஞ்சம் இந்த விஷயத்தை கவனமாபாருங்க இல்லையின்னா உங்க “மானம் போயிரும் என்று வெங்கட்டராமனிடம் சொல்லியிருக்கிறான்.

அப்படியா நடக்குது...? என்று ஆச்சரியப்பட்ட வெங்கட்டராமன் “சரி இதை எங்கயும் வெளியில சொல்லாதே... என்று கொஞ்சம் “கரன்சியை கார்த்தியின் கையில் கொடுத்துவிட்டு போகிறார்.

ஒகோ... “இதுக்கெல்லாம் பணம் கொடுப்பாங்க போல என்று ருசி கண்ட கார்த்தி, கொஞ்ச நாளுக்கு பின்னர் தனக்கு இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரிடம் போய் கேட்டுள்ளான். பலதடவை அப்படி கொடுத்துள்ளார்.

கார்த்தி மீண்டும்... மீண்டும்.... பணம் கேட்டு தொல்லை கொடுக்க.... “நீ கேட்டப்பவேல்லாம் நான் பணம் குடுக்க முடியாது... நீ வேண்ணா எம்பொண்டாட்டிக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்குதுன்னு ஊருக்குள்ள போய் சொல்லு...., யாரும் நம்பமாட்டங்க.... என்று சொல்லிவிட்டார் வெங்கட்டராமன்.

அப்ப நான், என் வேலைய பார்த்துக்கிறேன், அந்த போட்டோவை ஒரு பிரின்டு போட்டு ஊர்பூராவும் நான் போஸ்டர் அடிச்சி ஓட்டப்போறேன்.... என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளான் கார்த்தி.

“போஸ்டர் அடிச்சு ஒட்டப்போறேன் என்று சொன்னதும் பதறிப்போன வெங்கட்டராமன் “டேய் என்னடா சொல்லறே...? என்று கொஞ்சம் இறங்கி வந்து கேட்டுள்ளார், ஆமானா “நீ சும்மா காசு குடுப்பியாண்ணா...? அதனால தான் நான் எல்லாத்தையும் “வீடியோ போட்டோவெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன் என்று சொல்லியுள்ளான் கார்த்தி.

இப்போதைக்கு இதை வச்சுக்கோ.... என்று கொஞ்சம் பணத்தை கார்த்தியிடம் கொடுத்துவிட்டு, இதற்கு ஒருவழியில் முடிவுகட்ட விரும்பிய வெங்கட்டராமன், தனது இன்னொரு எடுபுடியான விஜயிடம் சொல்லி கார்த்திக்கு “முடிவு கட்டச்சொல்லியுள்ளார்.

அதன்படி, விஜய் தன்னுடைய நண்பரான கிச்சிப்பாளையம் சிவக்குமார் என்பவரை கூட சேர்த்துக்கொண்டு கார்த்தியை கூப்பிட்டு எனக்கு ஒருவன் பணம் கொடுக்க வேண்டும், அதை என்னால் வாங்கமுடியவில்லை.... நீ வந்தால் தான் அவன் எனக்கு கொடுப்பான் என்று சொல்லி ஒருவாரமாக மூவரும் தினமும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடித்துள்ளனர்.

கார்த்தி, விஜயை முழுமையாக நம்ம்பிய பின்னர், அவனை கூட்டிப்போய் சோளக்காட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். அப்போது கார்த்தியை, வெங்கட்டராமனின் மனைவி ராஜேஸ்வரிக்கும் பஸ் ஓனருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொன்னதையும், அதை சொல்லச்சொல்லி சிவக்குமார் மிரட்டுவதையும் கார்த்தியை குத்தி கொலை செய்தபோது சோளக்காட்டுக்குள் நடந்ததையெல்லாம் விஜய் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து வைத்துள்ளான்.

அதுவுமில்லாமல், கொலை செய்தபின்னர் போன் செய்து வெங்கட்டராமனிடம் பேசியது போன்ற எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, இந்த ஆதாரத்தை வைத்து பின்னர் வெங்கட்டராமனிடம் மிரட்டி பணம் வாங்க இவன் திட்டமிட்டுள்ளான்.

அந்த செல்போனில் பதிவு செய்யப்படிருப்பதையும் கைப்பற்றிய கொண்டலாம்பட்டி போலீசார் வெங்கட்டராமனை கைது செய்ய முடிவு செய்திருந்த நேரத்தில், இந்த தகவல், மல்லூர் காவல் நிலையத்தில் புரோக்கராக இருக்கும் தபால்காரர் தனபால் என்பவருக்கு தெரிந்துள்ளது. சேலம் மாவட்ட போலிஸ் டிபார்ட்மென்டில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளவர் இந்த தபால்காரர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பல உயர் அதிகரிகளுக்கு இந்த தனபால்தான் இடமாறுதல் உத்தரவு வாகிக்கொடுப்பவர், இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளா தனபால் நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வார்.

காங்கிரஸ் கட்சியில் நல்ல செல்வாக்கில் இருக்கும் வேங்கட்டராமனை போலீசார் தூக்கப்போவது தெரிந்தது, நேராக வெங்கட்டராமனிடம் போய் டீல் பேசி.... இந்த விசயத்தை “கமுக்கமாக” முடிக்க 40 லட்சத்தை வாங்கிக்கொண்டு வந்து “பரமசிவனின்” பெயரை கொண்ட சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளருக்கும், “தாய்மொழி”யின் செல்வனான ரூரல் துணை கண்காணிப்பாளருக்கும் இருபத்தி ஐந்து லட்சங்களை வாரி இரைத்து விட்டு மீதியை அமுக்கிக்கொண்டார் தனபால்.

உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து கொடுத்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீசார், மற்றும் சில அதிகாரிகள் இப்போது அந்த காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு கூட போடமுடியாமல் உள்ளனர்.

தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் சில நல்ல உள்ளம கொண்ட உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ளார்கள். இந்த விபரங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர் களுக்கும் தெரிந்துவிட்டதால் இப்போது வெங்கட்டராமன் மீது என்ன வழக்கு போடலாம் என்று ஆலோசனை நடத்திவருகிறார்கள் சேலம் மாவட்ட போலிஸ் அதிகாரிகள்.

நன்றி - நக்கீரன்

அமைச்சரவையில் இருக்கும் சசிகலா கும்பலின் பட்டியல். இவர்கள் வெளியேற்றப்படுவர்களா?சசிகலா உள்பட 14 பேர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, இன்னும் தமிழக அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் 15பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் சசிகலாவின் கோஷ்டி என்பதால் இவர்களின் நிலை என்னவாகும் என்பது கேள்வியாக உள்ளது. பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சரவையில் இருக்கும் சசிகலா கும்பலின் பட்டியல்.

செந்தில் பாலாஜி,

பச்சைமால்,

நத்தம் விஸ்வநாதன்,

டாக்டர் விஜய்,

வைத்தியலிங்கம்,

கோகுல இந்திரா,

பழனியப்பன்,

வளர்மதி,

ஆனந்தன்,

ஜெயபால்,

செந்தூர்பாண்டியன்,

எடப்பாடி பழனிச்சாமி,

காமராஜ்,

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

செல்வராஜ்

ஆகியோர் உட்பட ஏராளமான அமைச்சர்களின், இலாகாகளில் மாற்றம் ஏற்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சசிகலா வெளியேற்றப்பட்டதில் சோவின் பங்கு.சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கு கடந்த சில வாரங்களாகவே ஜெயலலிதாவுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. அவையெல்லாம் அதிகாரம் மற்றும் சதி தொடர்பான காரணங்கள். அரசியல் ரீதியான காரணங்கள் அல்ல. ஆனால், அரசியல் ரீதியாக சசிகலாவை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று கடந்த வார இறுதியில்தான் அவருக்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

“தேசிய அரசியலில் நீங்கள் இறங்கும் யோசனை இருந்தால், சசிகலாவை இப்போதாவது கழட்டி விடுவதைத் தவிர வேறு வழி கிடையாது” என்ற ரீதியில் இருந்தது அந்த அட்வைஸ்.

கடந்த வார இறுதியில் போயஸ் கார்டனில் நடைபெற்ற ஒரு சந்திப்புதான் சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கான அரசியல் பக்கத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெளிவாகக் காட்டியது. முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தவர் பத்திரிகையாளரும், சில அரசியல் விஷயங்களில் ஜெயலலிதாவின் ஆலோசகருமான சோ.

அதன் பின்னரே சசிகலாவை வெளியேற்றும் இறுதி முடிவை அரசியல் ரீதியாக எடுப்பதற்கு ஜெயலலிதா தயாரானார்.

சோ இந்தச் சந்திப்புக்கு செல்வதற்குமுன், சில பின்னணி சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.

சென்னையில் தலைமுறைகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு நிறுவனத்திடமே சசிகலா தரப்பு இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு டீல் பேச முயன்றது. அவர்களது பரம்பரை வர்த்தகத்தை இனியும் தமிழகத்தில் தொடர்வது என்றால், அவர்களது நிறுவனத்தின் ஆபரேஷனல் சப்சிடரியாக இயங்கும் மற்றொரு நிறுவனத்தை தமக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்பதே டீலின் சாராம்சம்.

பெரிய நிறுவனம் இந்த மிரட்டலுக்கெல்லாம் பணியத் தயாராக இல்லை. ஆனால், குறிப்பிட்ட பெரிய நிறுவனத்தின் இளைய தலைமுறை தலைமையால் இந்த அழுத்தத்தை சரியாக டீல் பண்ணவும் முடியவில்லை. நிறுவனத்தின் இளைய தலைமுறை, அவர்களின் லீகல் விவகாரங்களைக் கவனிக்கும் மற்றொரு பாரம்பரியம் மிக்க சட்ட நிறுவனத்திடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார்.

அந்த சட்ட நிறுவனம் சென்னையில் உள்ள வேறு பெரிய நிறுவனங்களுக்கும் -இந்திய சினிமா இசை வர்த்தகத்தில் கால்பதித்துள்ள வெளிநாட்டு நிறுவனம் உட்பட- லீகல் கன்சல்டேஷன் செய்யும் குரூப். அவர்களிடம் ஏற்கனவே இதே போன்ற மிரட்டல் தொடர்பாக வேறு நிறுவனங்களிடமிருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டிருந்தன. எல்லாமே இம்முறை அ.தி.மு.க. அரசு அமைந்தபின் வந்த மிரட்டல்கள்தான்!

இந்த விபரங்கள், கடைசியாக ஆலோசனைக்கு வந்த நிறுவனத்திடம் சொல்லப்பட, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மற்றைய நிறுவனங்களின் தலைமைகளுடன் இது தொடர்பாக கலந்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது. சட்ட நிறுவனத்தில் இருந்தே மற்றைய நிறுவனங்களுக்கு போன் செய்யப்பட்டு இது தொடர்பாக பேசப்பட்டது.

நவம்பர் மாத இறுதியில், சென்னையின் முக்கிய தொழிலதிபர்கள் சிலர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சென்னையில் அமைந்துள்ள கிளப் ஒன்றில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விஷயத்தை தமிழக முதல்வரிடம் கொண்டுசெல்ல லாபி குரூப் ஒன்று உருவாகியது.

இதுவரைக்கும் சரி. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது? இதில் சிக்கல் ஏற்படுத்தும் பார்ட்டி, சசிகலா குரூப் என்பதால், தற்போது சென்னையில் பெரியளவில் வர்த்தகம் நடந்து கொண்டுள்ள தொழிலதிபர்கள் தயங்கினார்கள். விஷயம் சசிகலா காதுக்கு போனால், தமது நிறுவனங்களுக்கு தேவையில்லாத சிக்கல் வந்துகேரும் என்ற பயம் அவர்களுக்கு.

இந்தளவுக்கு டெவலப்மென்ட் நடந்த பின்னர், நாம் முதலில் குறிப்பிட்ட சட்ட நிறுவனம் கொடுத்த அட்வைஸ்தான், சோவை தொடர்பு கொள்ளலாமே என்பது. விஷயம் சரியானதாக இருந்தால், அதை தைரியமாக ஜெயலலிதா வரை கொண்டுசெல்ல சரியான நபர் அவர்தான் என முடிவாகியது. தொழிலதிபர்களில் லாபி குரூப் சோவுடன் பேசியது. தம்மிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் காட்டினார்கள்.

அதன்பின் சோ, ஜெயலலிதாவை தொடர்புகொண்டு சந்திப்புக்கு நேரம் கேட்டார். கடந்த வார இறுதியில் சந்திப்பு நடந்தது.

இதற்கிடையே சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரும் ஜெயலலிதா தொடர்பாக சில விஷயங்களை சோவுடன் விவாதித்திருந்தார். ஜெயலலிதா தேசிய அரசியலுக்குள் வருவது தொடர்பாகவும், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டு தொடர்பாகவும் அப்போது பேசப்பட்டது. அந்த விஷயங்களை ஜெயலலிதாவரை கொண்டு செல்லும் பொறுப்பும் சோவிடம் பா.ஜ.க. தலைவரால் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வார இறுதியில் ஜெயலலிதாவைச் சந்தித்த சோ, அவரைச் சுற்றி நடக்கும் சசிகலா குரூப் விவகாரங்களை ஜெயலலிதாவுக்கு விளக்கமாகக் கூறியபோது, ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம் கலந்த கோபம் ஏற்பட்டது. ஆச்சரியத்துக்கு காரணம், இவை எதுவுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

“எம்.ஜி.ஆர். காலத்துக்குப்பின் இம்முறை உங்களை அமோகமாக வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லையா? இன்னமும் ஒன்றரை வருடங்களில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படியொரு வெற்றி கிடைத்தால், தேசிய அரசியலில் நீங்கள் எங்கே போக முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா? அவற்றையெல்லாம், உங்களைச் சுற்றி இருப்பவர்களால் கெடுத்துக் கொள்ளப் போகிறீர்களா?” என்று இறுதியில் சோ கேட்டாராம்.

“நான் கடுமையான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே” என்று ஜெயலலிதா இறுகிய முகத்துடன் கேட்டாராம்.

அதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சோ கூறியபோது, ஜெயலலிதா மரியாதை நிமித்தம் அவரை வணங்கி, “வெளியேற்ற வேண்டியவர்கள் இன்னமும் ஒரு வாரத்துக்குள் வெளியேற்றப்படுவார்கள்” என்றாராம்.

நன்றி - விறுவிறுப்பு.காம்.