Thursday, August 18, 2011

விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா..



விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.

பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.

இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.

26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்... விலைவாசி உயரும் அபாயம் !



தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்றுமுதல் 26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதைத் தொடர்ந்து லாரி அதிபர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் இன்சூரன்ஸ் கட்டணம், உதிரிபாகங்கள் மீதான விலை உயர்வினை குறைக்க வேண்டும், தனியார் மூலம் சுங்கவரி வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும், சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்தது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இதையொட்டி தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தாழ 26 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு லாரி தொழிலை சார்ந்த பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 14-ந் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு சரக்கு பதிவு செய்வதை நிறுத்தி கொண்டன.

எனவே வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் ஜவுளி, தீப்பெட்டி, தேங்காய், பட்டாசு உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் 26 லட்சம் லாரிகள் ஓடாது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாயும், 6 மாநில அரசுகளுக்கும் சேர்த்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் நாமக்கல் தாலுகா அளவில் 8 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், தமிழக அளவில் 30 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 6 மாநிலங்களிலும் சேர்த்து 70 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் ஓடாது என நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 4100 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயுவை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பு கருதி கேஸ் டேங்கர் லாரிகளையும் நிறுத்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே இன்று தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸில் ஐடி ரெய்டு : 50 அதிகாரிகள் சோதனை.



சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி. நகர் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 6 கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 50 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த திடீர் சோதனையால் கடைகள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான் ஊழல் செய்யவில்லை என நீதிபதி செளமித்ரா சென் ராஜ்யசபாவில் வாதம்..



ராஜ்யசபா இன்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் ராஜ்யசபாவில் தொடங்கின. விசாரணைக்குட்படுத்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் நேரில் ஆஜராகி அவர் சார்பி்ல் அவரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

நான் ஊழல் செய்யவில்லை. இதுதொடர்பாக ராஜ்யசபாவுக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அவர் வாதிட்டார்.

தவறான நடத்தை காரணமாக ஒரு நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் ராஜ்யசபாவில் வாதத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்று பிற்பகலுக்கு மேல் செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானம் மீதான வாதம் தொடங்கியது. இதற்காக ராஜ்யசபா அரங்கம் கோர்ட் போல மாறியது.

முன்னதாக செளமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து அவர் ஒரு சிறப்பு விசாரணைக் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, நீதிபதி சென் மீதான நிதி முறைகேடு புகார் உண்மையானது என்று கண்டுபிடித்தது. 90களில் வக்கீலாக இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ரூ. 24 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க ராஜ்யசபா உத்தரவிட்டது. அதன்படி இன்று ராஜ்யசபாவில் ஆஜரானார் சென். ராஜ்யசபாவில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றார் சென். அவருக்குப் பின்னால் அவரது வக்கீல்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து பதவி நீக்க தீர்மானத்தை சிபிஎம் உறுப்பினர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார். இதையடுத்து தனது தரப்பு வாதத்தை 90 நிமிடங்களுக்குள் தரலாம் என சென்னுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வக்கீல்களுக்குப் பதில் தானே வாதாடினார் சென்.

அவர் கூறுகையில், என் மீதான ஊழல் புகார்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை. நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. சட்டப்படியும் சரி, மனசாட்சிப்படியும் சரி நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

எனக்கும், ராஜ்யசபாவுக்கும் இந்த புகார்கள் தொடர்பாக தரப்பட்டுள்ளவை தவறான தகவல்களாகும் என்று வாதிட்டார்.

வாதத்திற்குப் பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும். அதில் தீர்மானம் நிறைவேறினால் ஒரு வாரத்திற்குள் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நீதிபதி செளமித்ரா சென்னை பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படி,ஒரு உயர்நீமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஊழல் புகார் வந்தால், அவரை உடனடியாக பதவி நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றி அதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, உச்சநீதின்ற நீதிபதி வி.ராமசாமி மீது லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1993ம் ஆண்டு இது நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பிலில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இதனால் தீர்மானம் தோற்று, ராமசாமி தப்பினார். ராமசாமி சார்பில் அவரது வக்கீலாக கபில் சிபல் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது..

எனவே தற்போது நீதிபதி சென்னின் பதவி தப்புவதும், தப்பாமல் போவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இருஅவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் செளமித்ரா சென்னுக்குக் கிடைக்கும்.