Wednesday, July 20, 2011

தலைமறைவான வீரபாண்டி ஆறுமுகத்தை பிடிக்கத் தனிப்படை.சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில் சுமார் 21 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 1959-ம் ஆண்டு முதல் 31 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.

2008-ல் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி கே.சுரேஷ்குமார் என்பவர் இந்த நிலம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி அங்கிருந்தவர்களை காலி செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், வீடுகள் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

இது குறித்து, போலீஸில் புகார் அளித்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பிரச்னைக்குரிய நிலத்தைப் பார்வையிட்ட அப்போதைய கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, அங்கம்மாள் காலனி நிலத்தில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தவும், நிலத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் 2008-ல் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 11-ல் மனு அளித்த அங்கம்மாள் காலனி பொதுமக்கள், அப்போதைய கோட்டாட்சியர் அளித்த பொய்யான அறிக்கையை ரத்து செய்யவும், நிலத்தைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

இது குறித்து, சேலம் மாநகரக் குற்றப்பிரிவு, நில அபகரிப்பு மீட்புப் பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், அவரது தம்பி மகனும், 6 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவருமான பாரப்பட்டி கே.சுரேஷ்குமார், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கெளசிக பூபதி, சேலம் மாநகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி,

முன்னாள் கோட்டாட்சியர் ஏ.பாலகுருமூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர் உலகநம்பி, மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஜிம் ராமு, கூல் மகேந்திரன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தன், பெட்டிக்கடை கனகராஜ், முருகேசன் (எ) மெக்கானிக் முருகன், அதிமுக பிரமுகரான கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில், எம்.ஏ.டி. கிருஷ்ணசாமி, பெட்டிக்கடை கனகராஜ், முருகேசன் (எ) மெக்கானிக் முருகன் ஆகிய 3 பேரை மட்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 (சட்ட விரோதமாக கூடுதல்), 148 (ஆபத்தை விளைவிக்கும் ஆயுதம்), 447 (அத்துமீறி நுழைதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 386 (மிரட்டுதல்), 467 (உயில் உள்ளிட்ட ஆவணங்களை திருத்தம் செய்து மோசடி), 506(2) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்ததாகவும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், சேலம் தொழிலதிபர்களான ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராமநாதன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.துரைசாமி, அசோக் துரைசாமி, கீதா, சுமித்ரா தேவி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திமுக பிரமுகர் அழகாபுரம் முரளி, விஜய்பாபு ஆகிய 11 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கம்மாள் காலனியை அபகரித்த வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

உடலை கட்டுப்படுத்தும் சக்கரங்கள்.மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்

மூலாதாரம்

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூலகாரணமாக விளங்கு வதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

ஸ்வாதிஷ்டானம்

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள், இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

வைகோ எதிர்ப்பு : கிளிநொச்சி இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.

இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனை ஏற்று இன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

இதுகுறித்து மனோ கூறியிருப்பதாவது, என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரிந்தது.

நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி. இவ்வாறு மனோ கூறியுள்ளார்.

கார்பரேட் கம்பெனிகள் கைகளில் இருந்து நிலங்களைக் காப்பற்ற..தரிசு நில மேம்பாட்டிக்காண மற்றும் ஒரு நல்ல லாபாகரமான விவசாய பயிராக கருதபடுவது காட்டாமணக்கு ( கொட்டை முத்து), இனி வரும் காலங்களில் மாற்று எரிபொருளுக்கான முக்கிய மூல பொருளாக கருதபடுவதும் இதுவே ஆகும். சில வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விவசாயிகள் இதை பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு, தங்கள் தரிசு நிலங்களில் விவசாய துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் பயிரிட துவங்கினர்,

தமிழ்நாடு விவசாய துறை கணக்கெடுப்பில் சுமார் 41 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடபட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த, ஜெய்ப்பூரில் இருந்து காட்டாமணக்கு விதைகள் டன் கணக்கில் வரவழைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. விவசாயத்துறை அதிகாரிகள், "வானம் பார்த்த பூமியாக கிடக்கும் தரிசு நிலங்களில், காட்டாமணக்கு செடியை நடவு செய்தால், ஒரு ஏக்கருக்கு 3 டன் காட்டாமணக்கு கொட்டைகளை மகசூலாக பெறலாம்.

ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும், பயோ டீசல் தயாரிக்கலாம்,காட்டாமணக்கு செடியை ஆடு, மாடுகள் மேயாது,அதிக ஆண்டு காலம் மகசூல் பெறலாம்' என்ற வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் போல் அள்ளித் தெளித்தனர். தரிசு நிலம் அதிகமாக காணப்படும் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், இந்த அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு காட்டாமணக்கு பயிரிடப்பட்டது.

ஆனால் நடப்பட்ட செடிகளுக்கு நீர் தேவை என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, வாரம் ஒருமுறையாவது சிறிதளவு தண்ணிர் பாய்ச்ச வேண்டியதாக இருந்தது, வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை இதற்கு காரணம் விதைகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏனோ தானோ என்று இருந்த விவசாய அதிகாரிகள்தான். விளைச்சல் இல்லாத நிலத்தை விளை நிலமாக மாற்றும் அருமையான திட்டம். செடிகளை மாவட்ட அளவில் சில ஏக்கர் அளவில், சோதனை முயற்சியாக பயிரிட்டு, மகசூல் எப்படி கிடைக்கிறது என்பதை, கள ஆய்வின் மூலம் கண்டிருக்க வேண்டும்.

மத்திய அரசு திட்டம் என்பதாலும், நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதாலும், ஏனோ தானோ என திட்டத்தை அவசர கதியில் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் நிறைவேற்றினர். மேலும், தரமான விதைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தரமான செடிகளை உருவாக்காமல் தவறு நடந்திருக்கிறது. அதனால், அருமையான திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவை வேளாண்மை பல்கலையில் நல்ல தரமான காட்டாமணக்கு செடிகள் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் அப்போது பயோ டீசல் ஒரு லிட்டர் தயாரிக்க ஆகும் செலவு, டீசல் விலையை விட சற்று அதிகமாக இருந்தது, ஆனால் இப்போது நிலைமை தலை கிழாக மாறிவிட்டது, டீசல் விலை 100 -ஐ தாண்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதால், பயோ டீசல் என்பது விரைவில், தரிசு நிலங்களை தங்க நிலமாக மாற்றும் என்பதில் மாற்றம் இல்லை. ஏற்கனவே கார்பரேட் கம்பெனிகள் தரிசு நிலங்களை 1000 ஏக்கர், 2000 ஏக்கர் என வளைக்கத் தொடங்கிவிட்டனர்.

தங்கள் பணத்தை முதலீடு செய்யும் நண்பர்கள், வீடு, சைட் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக, ஒரு ஏக்கர் ரூ 2 அலல்து 3 லட்சங்களுக்கு கிடைக்கும் நிலங்களில் முதலீடு செய்தால், நல்ல லாபம் பெறலாம். நமது பாரம்பரிய நிலங்களையும் கார்பரேட் கம்பெனிகள் கைகளில் இருந்து காப்பற்றலாம்..

வீரபாண்டியார், சட்டவிரோத கும்பலின் தலைவரா?


தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம், 23 கோடி ரூபாய் ஏப்பம் விட்டுவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சருடன் சேர்த்து 11 பேர்மீது 8 குற்றப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. அந்தப் பிரிவுகளில் ஒன்று, ‘சட்டவிரோதமான கும்பல்!’

சேலம் ஐந்து ரோடுக்கு அருகே பிரிமியர் ரோலர் ப்ளவர் மில் இயங்கிவந்தது. இதில்தான் கைவைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர்.

குறிப்பிட்ட மில்லின் உரிமையாளர் வெங்கடாசலம், ஆடிட்டர் ஒருவரிடம் 3 கோடி ரூபாய் கடன் வாங்க நேர்ந்தது. அதைத் திருப்பிக் கொடுக்க தயாரானபோது, அமைச்சர் காட்சிக்குள் வந்திருக்கிறார்.

“வாங்கிய கடனைத் திருப்பியெல்லாம் கொடுக்க முடியாது. அதற்காக மில்லை கொடுத்துவிட வேண்டும்” என்று அமைச்சர் மிரட்டவே, மில் அமைச்சருக்கு கைமாறியது. அதன்பின், அந்த மில்லை, பிரபல ஜவுளிக்கடை அதிபர் சீனிவாசனிடம், 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார் வீரபாண்டி ஆறுமுகம்.

அந்தத் தொகையிலிருந்து மில்லின் உரிமையாளர் வெங்கடாசலத்து 7 கோடி ரூபாய் கொடுத்த முன்னாள் அமைச்சர், மீதமுள்ள தொகையில், தனக்கு 15 கோடி ரூபாய், மிரட்டலுக்கு உதவி வழங்கிய இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு 4 கோடி ரூபாய், ஆடிட்டர் துரைசாமிக்கு, 4 கோடி ரூபாய் என்று பங்கீடு செய்து கொண்டார்.

மில்லை பறிகொடுத்த வேதனையில், வெங்கடாசலம் உயிரிழந்து விட்டார்.

தி.மு.க. ஆட்சியின் தூண்களில் ஒருவராக வீரபாண்டியார் விளங்கிய காரணத்தால், இதுபற்றி அப்போது யாரும் புகார் கொடுக்க முடியவில்லை. தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருக்கு அடுத்தபடியாக ஆடிட்டர் துரைசாமி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், மாநகர தி.மு.க., துணைச் செயலர் அழகாபுரம் முரளி என்று தொடங்கி, மொத்தம் 11 பேர்மீது வழக்கு பதிவாகியுள்ளது.

சேலம் போலீஸார் இதுபற்றித் தெரிவிக்கையில், வீரபாண்டியார் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ள சட்டப் பிரிவுகளைப் பட்டியலிட்டுள்ளனர். சட்டவிரோதமான கும்பல், ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல், அத்துமீறி நுழைதல், மிரட்டுதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல்… என்று நீள்கிறது அந்தப் பட்டியல்.

மதுரையில் பிரபல சினிமா பைனான்ஷியர் அன்பு கைது.


பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.

பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்ததன் மூலம் இவர் திரைத்துறையில் மிக பிரபலமாக இருந்து வந்தார்.

திரைப்படத் தயாரிப்பில், தயாரிப்பாளர்களின் நெருக்கடியான சூழ்நிலைக்கு எந்த நேரத்தில் எவ்வளவு பணம் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் ஆற்றலுடன் கொடிகட்டிப் பறந்தவர்.

திரைப்படத் தயாரிப்பிற்கான நிதிஉதவி என்றாலே வட்டி அதிகம். ஆனால் இவரிடம் வட்டி இன்னும் அதிகம். அதேபோல் வசூலில் இவரது கெடுபிடிகள் கொடூரமானது.
.
பிரபல இயக்குநர் மணிரத்னம் அண்ணன் ஜி.வி. தற்கொலைக்கு இவரே மூலகாரணம். இவரிடம் பெற்ற கடனுக்காக அதைவிட பன்மடங்கு வட்டி செலுத்தியபோதும் அசல் அடைபடாமல் இருந்தது ஒருபுறமும், இன்னொருபுறம் இவரது கொடூரமான கெடுபிடிகள் தந்த மன உளைச்சலின் விளைவே மேற்கண்ட தற்கொலை முடிவிற்கான காரணமாக அமைந்தது.

25இலட்சரூபாயே ஜி.வி.யை தற்கொலையின் விளிம்பிற்குத் தள்ளியது.

நான் கடவுள் படத்தில் இருந்து நடிகர் அஜீத் விலகியபோது, அவரை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துவந்து, இவரால் கொடூரமாக மிரட்டப்பட்டிருக்கிறார். மரணபயம் அவருக்குக் காட்டப்பட, கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதிருக்கிறார் 'தல' அஜீத். இறுதியாக 3கோடிரூபாய் ஈடாக தருவதாக ஒப்புக்கொண்டபின் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொன்னமாதிரியே பயத்துடன் 3கோடிரூபாய் கொடுத்தும் இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டியதாக அவ்வப்போது இவர் மீது சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருந்தது.

காலப்போக்கில் அவரே தயாரிப்பாளர் ஆனார். பின்னர் விநியோகஸ்தருமானார். ரியல்-எஸ்டேட் துறையிலும் கால்பதித்தார்.

இந்நிலையில் நில அபரிப்பு வழக்கில் இவர், 19-07-2011 இரவு மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் நான்கு புகார்கள் உள்ளன என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

நில அபகரிப்பு வழக்கு : வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு.திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்துகளின் மூலம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்போர் மற்றும் அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததன் பேரில் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி தவறு செய்த தி.மு.க.வினர் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வேளாண்துணை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் மீது நில அபகரிப்பு வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அங்கம்மாள் காலணியில் இருந்து மக்களை விரட்டி விட்டு அவர்கள நிலத்தை அபகரித்தது சம்பந்தமாக ஒரு வழக்கும்,

சேலம் பிரிமியர் மில் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபகரித்தது சம்பந்தமாக ஒரு வழக்கும்,

இன்று சேலம் மாநகர காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.