Monday, July 18, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு : கருணாநிதி கருத்து.

சமச்சீர் கல்வி தீர்ப்பு :கருணாநிதி கருத்து

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தீர்ப்பு பற்றி தி மு க தலைவர் கருணாநிதி கூறுகையில் சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி ,தோல்வி அல்ல ,இத்தீர்ப்பு நடுத்தர -ஏழை மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதமாக அரசு கருத வேண்டும் உச்சநீதிமன்ற கருத்தை கேட்டே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்கால சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டல் என தெரிவித்தார் .

நடப்பு ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு.


தமிழகத்தில் மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என நான்கு பாடத் திட்ட முறைகள் செயல்பட்டு வந்தன. இவற்றை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சமச்சீரான கல்வித் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக குழு அமைத்து ஆராயப்பட்டது. அதன் இறுதியில், சமச்சீர் கல்வித் திட்டத்தை திமுக அரசு அறிமுகம் செய்தது.

தொடக்கத்தில் 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இது அறிமுகமானது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும், அதாவது 10ம் வகுப்பு வரை இத்திட்டத்தை அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது.

இதற்காக, சுமார் 200கோடி ரூபாய் செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார்நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, புதியதாக பொறுப்பேற்ற. அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தரமானதாக இல்லை. எனவே, இந்த ஆண்டு அதை நடைமுறைப்படுத்த இயலாது. என்று அறிவித்தது.

இதனால், “சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உடனே சட்டசபையில் சமச்சீர் கல்வி திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு தமிழக அரசு ஒத்திவைத்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் தனது தீர்ப்பை அறிவித்தது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்பட வேண்டும்.

1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்கு முரணாக, சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.

ஒன்றாம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.இந்த நிலையில் ஏனைய வகுப்புகளுக்கும் இதே கல்வி திட்டம் தொடர வேண்டும்.

தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்திய நிலையில் மீண்டும் பழைய பாடத் திட்டத்துக்கு மாணவர்களை இழுத்து செல்வதை அனுமதிக்க முடியாது.

இது ஒரு கோடியே 38 லட்சம் மாணவ - மாணவியர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கான சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களை இந்த மாதம் ஜூலை 22-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு பரிந்துரைப்படி ஏதேனும் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணை பட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.

நிபுணர் குழு பரிந்துரைகள் நிராகரிப்பு

முன்னதாக தமிழக அரசு அமைத்த 9 பேர் கொண்ட நிபுணர் குழு 700 பக்க ஆய்வறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த அனைத்து பரிந்துரைகளையும் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் மதியம் 12.45 மணிக்கு தீர்ப்பை படிக்கத் தொடங்கி 1.05 மணிக்கு முடித்தனர்.

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 25 ஆயிரம் பி.இ. இடங்கள் காலியாக இருக்கும் : மன்னர் ஜவகர்.



தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கலந்தாய்வு நடந்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர், இது குறித்து கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களுக்கு தற்போது கலந்தாய்வு நடந்து வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் இந்த கலந்தாய்வில் இது வரை 24 ஆயிரத்து 61 பேர் தங்கள் விருப்ப இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 856 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 133 பேரும், சுயநிதி கல்லூரிகளில் 16ஆயிரத்து 72 பேரும் சேர்ந்துள்ளனர். இன்னும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 182 இடங்கள் உள்ளன.

இதில் சுமார் 20 முதல் 21 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கக்கூடும். இதேபோன்று கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மொத்தம் 25 ஆயிரம் பிஇ இடங்கள் காலியாக இருக்கும். கடந்த ஆண்டு 8 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தது.

இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவைத் தான் விரும்பி எடுத்துள்ளனர். தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு அதிக வேலைவாயப்புகள் உள்ளதால் அந்த பிரிவையும் கணிசமான மாணவர்கள் எடுத்துள்ளனர்.

எந்த பிரிவை எடுத்தாலும் சரி மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தால் வாழ்வில் நன்றாக இருக்க முடியும் என்றார்.

சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்தாகுமா?



நடிகை ரஞ்சிதாவுடன் அலங்கோலமாக இருந்ததாக சர்ச்சையில் சிக்கி, தலைமறைவாகி, இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து பிடிபட்டு, கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சாமியார் நித்தியானந்தாவுக்கு ஜாமீன் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடாதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அங்கு நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றார் நித்தியானந்தா.

இந்த நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சாட்சிகளை நித்தியானந்தா மிரட்டுவதாகவும், கலைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில் இன்று இந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை கர்நாடக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால் மீண்டும் நித்தியானந்தா கைதாகும் சூழல் ஏற்படலாம்.

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் .



தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தெரியவருகிறது. அனைத்து பிரிவினருக்கும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை அளிக்குமாறு மின் வாரியத்தை தமிழக அரசு கோரியுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இதுவரை ரூ.40,300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ.10,000 கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. அனைத்துப் பிரிவுகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் இந்த இழப்பு குவிந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்ற சில துறைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு ஓரளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது இழப்பை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ. 6000 கோடி செலவிடுகிறது. புதிதாக தொடங்கப்படும் சில பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

எனவே பணக்கஷ்டத்தில் தமிழ்நாடு மின்வாரியம் சிக்கியுள்ளது. இதிலிருந்து அதை மீட்கத்தான் மத்திய அரசிடமிருந்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் பெருமளவு நிதியுதவி கோரினார்.

ஆயினும் மின்வாரியத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழக அரசு வந்திருப்பதாக தெரிகிறது. எனவேதான் கட்டண உயர்வு குறித்து யோசனை தெரிவிக்குமாறு மின்வாரியத்தை அரசு கோரியுள்ளது. அவர்கள் எந்தப் பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து கூறுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின்கட்டணம் குறைவு என்று கூறப்படுகிறது. எனவே எந்த பிரிவு அதிக இழப்பை சந்தித்து வருகிறது? இதை ஈடுகட்ட என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை மின்வாரியம் அளிக்கும் என்றார் அவர்.

இதை அரசு ஆராய்ந்து கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும். இதற்கு எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவின் ‘அசத்தலான’ வியாபார தந்திரம் !



கடந்த வருடம் சில சீன நிறுவனங்கள் வர்த்தக விசாரணைகளுடன் பிரேசிலுக்கு வந்தபோது, சீனர்கள் பிரேசிலில் என்ன செய்யப் பார்க்கிறார்கள் என்பது யாருக்கும் புரிந்திருக்கவில்லை. இப்போதுதான் சீனத்திட்டம் புரிந்திருக்கிறது பிரேசில் நாட்டில்.

வந்திறங்கிய சீன அதிகாரிகள் பிரேசிலின் சிறிய நகரங்களைக் குறிவைத்து அங்கே சென்றார்கள். அவர்களது விசாரணைகள் சோயா பீன்ஸ் வாங்குவது பற்றியே இருந்திருக்கின்றது. வியாபார விசாரணைகளில் அவர்களது அணுகுமுறை, அதுவரை பிரேசிலியர்கள் கண்டிராத ஒன்றாக இருந்தது.

சோயா பீன்ஸ் மொத்த விற்பனை விலையைத்தான் முதலில் கேட்டார்கள் சீனர்கள். அது விளையும் பண்ணை நிலங்களைப் பார்க்க வேண்டும் என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்கள். மூன்றாவது கேள்விதான் பிரேசில் விவசாயிகளை தலை கிறுகிறுக்க வைத்தது.

“இவற்றை மொத்தமாக விலைக்குத் தருவீர்களா?” என்பதே அந்தக் கேள்வி.

இதில் என்ன ஆச்சரியம்? பொருள் பிடித்து விலையும் சரியாக அமைந்தால் மொத்தமாக வாங்குவது சகஜம்தானே? கதை அதுவல்ல. அவர்கள் மொத்தமாக விலைக்குக் கேட்டது சோயா பீன்ஸ்களை அல்ல. அவை விளையும் பண்ணை நிலங்களை!

அந்த நிலங்களின் மார்க்கெட் விலையைவிட இரண்டு மடங்கு விலை கொடுக்க தயாராக இருந்தன சீன நிறுவனங்கள். ஆனால், பிரேசிலின் பண்ணை விவசாயிகள் விழித்துக் கொண்டனர். சீனர்கள் மொத்தமாக விலைபேசிய கிட்டத்தட்ட 60,000 ஏக்கர் பண்ணை நிலங்களை அவர்கள் விற்கத் தயாராக இல்லை.

சீன நிறுவனங்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த விவசாயிகளிடமிருந்தே சோயா பீன்ஸ்களை நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள். சீனாவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்தார்கள்.

உராசூ சிறு நகரின் பண்ணைகளுக்கு நடுவே, சோயா பீன்ஸ் எடுத்துச் செல்ல புதிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டது.

அடுத்த போக வேளாண்மை எப்போது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். பிரேசிலைவிட்டு சீனாவுக்குத் திரும்பியபோது, தமது அலுவலகம் ஒன்றையும் அங்கே அமைத்துவிட்டு, அதற்கு ஒரு பிரதிநிதியையும் நியமித்துவிட்டுச் சென்றார்கள்.

இந்த சீனப் பிரதிநிதி, பிரேசிலின் சிறு நகரங்களிலுள்ள பெரிய, சிறிய பண்ணை விவசாயிகளுடன் தொடர்பில் இருந்தார். அதிகளவில் சோயா பீன்ஸ் பயிரிடுமாறும், சீன நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

இந்த இடத்தில் ஒரு சிக்கல்.

அதிக உற்பத்திக்கு பிரேசில் விவசாயிகளிடம் போதிய முதலீடு இருக்கவில்லை. “அப்படியா விஷயம்? நோ ப்ராப்ளம்” என்றார் சீனப் பிரதிநிதி.

பண்ணை விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு கடன் கொடுத்தன சீன நிறுவனங்கள். ஒப்பந்தத்தின்படி, பண்ணைகளில் விளையும் சோயா பீன்ஸில் 80% கடன் கொடுத்த சீன நிறுவனங்களுக்கு விற்கப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி, 7 பில்லியன் அமெரிக்க டாலர்!

பிரேசிலின் சிறு நகரங்களில் ஒன்றான உராசூவில் வசிக்கும் பண்ணை விவசாயி எடிமில்சன் சன்டானா, “இந்த சீனர்களுக்கு இவ்வளவு சோயா பீன்ஸ் எதற்கு என்றே புரியவில்லை. நிலைமையைப் பார்த்தால், உலகிலேயே சோயா பீன்ஸை அதிகளவில் நேசிப்பவர்கள் சீனர்கள்தான் போலிருக்கிறது” என்கிறார் வியப்புடன்.

எடிமில்சன் சன்டானாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறோம். சீனாவுக்கு எதற்காக சோயா பீன்ஸ் ஏற்றுமதியாகிறது தெரியுமா? சீனாவின் பெரிய பண்ணைகளில் உள்ள ஆடு. மாடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்க!

இருந்து பாருங்கள், அந்த கோழி இறைச்சி பேக் பண்ணப்பட்டு பிரேசிலின் மார்க்கெட்டுக்குள் வந்துவிடும், Product of China என்ற எழுத்துக்களுடன்!

-viruvirupu.com