Monday, July 18, 2011

சீனாவின் ‘அசத்தலான’ வியாபார தந்திரம் !



கடந்த வருடம் சில சீன நிறுவனங்கள் வர்த்தக விசாரணைகளுடன் பிரேசிலுக்கு வந்தபோது, சீனர்கள் பிரேசிலில் என்ன செய்யப் பார்க்கிறார்கள் என்பது யாருக்கும் புரிந்திருக்கவில்லை. இப்போதுதான் சீனத்திட்டம் புரிந்திருக்கிறது பிரேசில் நாட்டில்.

வந்திறங்கிய சீன அதிகாரிகள் பிரேசிலின் சிறிய நகரங்களைக் குறிவைத்து அங்கே சென்றார்கள். அவர்களது விசாரணைகள் சோயா பீன்ஸ் வாங்குவது பற்றியே இருந்திருக்கின்றது. வியாபார விசாரணைகளில் அவர்களது அணுகுமுறை, அதுவரை பிரேசிலியர்கள் கண்டிராத ஒன்றாக இருந்தது.

சோயா பீன்ஸ் மொத்த விற்பனை விலையைத்தான் முதலில் கேட்டார்கள் சீனர்கள். அது விளையும் பண்ணை நிலங்களைப் பார்க்க வேண்டும் என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்கள். மூன்றாவது கேள்விதான் பிரேசில் விவசாயிகளை தலை கிறுகிறுக்க வைத்தது.

“இவற்றை மொத்தமாக விலைக்குத் தருவீர்களா?” என்பதே அந்தக் கேள்வி.

இதில் என்ன ஆச்சரியம்? பொருள் பிடித்து விலையும் சரியாக அமைந்தால் மொத்தமாக வாங்குவது சகஜம்தானே? கதை அதுவல்ல. அவர்கள் மொத்தமாக விலைக்குக் கேட்டது சோயா பீன்ஸ்களை அல்ல. அவை விளையும் பண்ணை நிலங்களை!

அந்த நிலங்களின் மார்க்கெட் விலையைவிட இரண்டு மடங்கு விலை கொடுக்க தயாராக இருந்தன சீன நிறுவனங்கள். ஆனால், பிரேசிலின் பண்ணை விவசாயிகள் விழித்துக் கொண்டனர். சீனர்கள் மொத்தமாக விலைபேசிய கிட்டத்தட்ட 60,000 ஏக்கர் பண்ணை நிலங்களை அவர்கள் விற்கத் தயாராக இல்லை.

சீன நிறுவனங்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த விவசாயிகளிடமிருந்தே சோயா பீன்ஸ்களை நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள். சீனாவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்தார்கள்.

உராசூ சிறு நகரின் பண்ணைகளுக்கு நடுவே, சோயா பீன்ஸ் எடுத்துச் செல்ல புதிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டது.

அடுத்த போக வேளாண்மை எப்போது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். பிரேசிலைவிட்டு சீனாவுக்குத் திரும்பியபோது, தமது அலுவலகம் ஒன்றையும் அங்கே அமைத்துவிட்டு, அதற்கு ஒரு பிரதிநிதியையும் நியமித்துவிட்டுச் சென்றார்கள்.

இந்த சீனப் பிரதிநிதி, பிரேசிலின் சிறு நகரங்களிலுள்ள பெரிய, சிறிய பண்ணை விவசாயிகளுடன் தொடர்பில் இருந்தார். அதிகளவில் சோயா பீன்ஸ் பயிரிடுமாறும், சீன நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

இந்த இடத்தில் ஒரு சிக்கல்.

அதிக உற்பத்திக்கு பிரேசில் விவசாயிகளிடம் போதிய முதலீடு இருக்கவில்லை. “அப்படியா விஷயம்? நோ ப்ராப்ளம்” என்றார் சீனப் பிரதிநிதி.

பண்ணை விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு கடன் கொடுத்தன சீன நிறுவனங்கள். ஒப்பந்தத்தின்படி, பண்ணைகளில் விளையும் சோயா பீன்ஸில் 80% கடன் கொடுத்த சீன நிறுவனங்களுக்கு விற்கப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி, 7 பில்லியன் அமெரிக்க டாலர்!

பிரேசிலின் சிறு நகரங்களில் ஒன்றான உராசூவில் வசிக்கும் பண்ணை விவசாயி எடிமில்சன் சன்டானா, “இந்த சீனர்களுக்கு இவ்வளவு சோயா பீன்ஸ் எதற்கு என்றே புரியவில்லை. நிலைமையைப் பார்த்தால், உலகிலேயே சோயா பீன்ஸை அதிகளவில் நேசிப்பவர்கள் சீனர்கள்தான் போலிருக்கிறது” என்கிறார் வியப்புடன்.

எடிமில்சன் சன்டானாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறோம். சீனாவுக்கு எதற்காக சோயா பீன்ஸ் ஏற்றுமதியாகிறது தெரியுமா? சீனாவின் பெரிய பண்ணைகளில் உள்ள ஆடு. மாடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்க!

இருந்து பாருங்கள், அந்த கோழி இறைச்சி பேக் பண்ணப்பட்டு பிரேசிலின் மார்க்கெட்டுக்குள் வந்துவிடும், Product of China என்ற எழுத்துக்களுடன்!

-viruvirupu.com

No comments: