Friday, April 1, 2011

விஜயகாந்த்துக்கு ஜெ. வைத்த ஆப்பு : திருமாவளவன்.

சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் நடைபெறுகிற தேர்தல் யார் யார் சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பது அல்ல. யார் முதல்வராக வேண்டும் என்பதற்கான தேர்தல். கலைஞர் தலைமையிலான ஒரு அணி. நம்மை எதிர்க்கும் ஒரு அணி. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பேரியக்கம் சொல்லுகிறது கலைஞர்தான் முதல்வராக வேண்டும் என்று. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு பாமக சொல்கிறது கலைஞர்தான் முதல்வராக வேண்டும் என்று. யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் சொல்லுகிறோம் கலைஞர்தான் 6வது முறையாக முதல் அமைச்சராக வரவேண்டும். இதேபோன்று கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலைஞர்தான் என்று சொல்லுகிறார்கள்.

ஆனால் நம்மை எதிர்க்கிற அணியில் இருப்பவர்கள் கலைஞர் கேட்ட வினாவிற்கு எதிர் அணியில் இருப்பவர்கள் விடை சொல்லுவார்களா. ஒரே மேடையில் இருந்து அவர்கள் மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு கூட, தெம்பு இல்லாதவர்களாக, ஒருவருக்கொருவர் நம்ப கூடியவர்களாக இல்லாத நிலையில் மக்களை சந்திக்கிறார்கள்.

நண்பர் விஜயகாந்த் ஒரே மேடையில் நின்று வாக்குகள் கேட்க வேண்டாம். நாங்கள் அம்மாவை தான் முதல் அமைச்சராக ஆக்குவோம் என்ற துணிச்சல் உண்டா. இல்லை. ஏனென்றால் அடுத்த முதல்வர் நான்தான் என்ற எண்ணத்தில் இருப்பவர் அவர். ஆகவே அதனை அவரால் சொல்ல முடியாது.

வாக்காளர் பெருமக்களே ஒப்பிட்டு பாருங்கள். யார் முதல்வர். தலைவர் கலைஞரா. கலைஞரை விமர்சிக்கும் அம்மையாரா.

1984ல் அரசியலுக்கு வந்தவர் அம்மையார். ஆனால் 1938ஆம் ஆண்டிலேயே வந்தவர் கலைஞர். பெரிய தலைவர்களுடன் பழகி, அரசியல் அனுபவம் பெற்று தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் பாதுகாப்பதற்காக தம் வாழ்வை அற்பணித்துக்கொண்ட இந்த 87 வயதிலும் சக்கர நாற்காலியில் சுற்றி சுழன்று வந்து, தமிழகத்தில் ஓய்வின்றி உழைத்து வந்துகொண்டிருக்கும் கலைஞர் முதல்வராக வேண்டுமா. அல்லது திட்டி தீர்ப்பதையே அரசியல் கொள்கையாக வைத்திருக்கும் அம்மையார் முதல்வராக வரவேண்டுமா. ஒப்பிட்டு பாருங்கள்.

ரவுடிகள் ஆட்சியை ஒழிப்போம் என்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் பேசுகிறார். அரசியல் நாகரீகம் இல்லாமல், கலைஞர் அவர்களை ஒருமையில் பேசுகிற அளவுக்கு, பெயரைச் சொல்லி பேசுகிற அளவுக்கு அநாகரிகமான அரசியலுக்கு அடித்தளமிட்டவர் மீண்டும் முதல்வராக வரவேண்டுமா.

சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தாலும் தம்பி என்றும், அண்ணா என்றும், பெரியவர் என்றும், அய்யா என்றும் அழைக்கக் கூடிய நாகரீகம் உடைய கலைஞர் முதல்வராக வேண்டுமா. சாதாரண மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்று போரடிக் கொண்டிருக்கிற கலைஞர் வேண்டுமா. அல்லது பழிவாங்குவதே ஒன்றே தன் செயல் என்ற அந்த அம்மையார் வேண்டுமா.

அந்த அம்மையார் 10 ஆண்டுகாலம் முதல் அமைச்சராக இருந்தார். முதல் ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை என்ன. ஒன்றே ஒன்றை சொல்லலாம். 30 வயதுக்கு மேலே உள்ளவரை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அந்த வளர்ப்பு மகனுக்கு உலகமே வியக்கக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி திருமணம் செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகாலம் மக்கள் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார்கள். அந்த ஐந்து ஆண்டுகாலம் அவர் செய்த சாதனை, தலைவர்களை கைது செய்து பழி வாங்கினார்.

கலைஞரை கைது செய்தார். மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை கைது செய்தார். இவர்களுக்காக குரல் கொடுத்த நெடுமாறனை கைது செய்தார். தமிழ்நாட்டில் யார் யார் எல்லாம் தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார். என்னையும் கைது செய்தவர்தான் அந்த அம்மையார். பாமக நிறுவனர் ராமதாசையும் கைது செய்தார். அவர் ஆட்சிக் காலத்தின் சாதனை வளர்ப்பு மகனின் திருமணம். எதிரணி தலைவர்களை கைது செய்து பழி வாங்கிய சாதனை.

கலைஞரின் சாதனைகளையும், எதிரணி சாதனைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். இந்த மேடையில் யார் யார் அமர்ந்திருக்கிறோம். தலைவர்களை அமர வைத்து அழகு பார்க்கிறார். இந்த ஜனநாயகத்தை எதிரணியில் பார்க்க முடியுமா.

சட்டமன்றத்திலே குடித்துவிட்ட உளறுகிறார் விஜயகாந்த் என்று சொன்னார் அம்மையார். ஊத்தி கொடுத்தாயே என்று பதிலுக்கு கேட்டார் விஜயகாந்த். இரண்டு பேரும் இன்று ஓரணியில் நிற்கிறார்கள். ஆனால் ஒரே மேடையில் நிற்க முடியவில்லை.

சொந்தக் கட்சி வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையில் சாத்து சாத்து என்று சாத்துகிறார் ஒருவர். அடிக்கிறார். அடித்துவிட்டு சொல்லுகிறார் தன் கையால் அடிப்பட்டவர்கள் மகாராஜாவாக ஆவார்களாம். அப்படி என்றால் தனக்கு தானே அடித்துக்கொள்ளலாமே. மகாராஜா ஆகலாமே. ஏன் மக்களிடத்திலே சென்று வாக்கு கேட்டு கெஞ்ச வேண்டும்.

கருப்பு எம்ஜிஆர். அடுத்த முதல் அமைச்சர் எல்லாவற்றுக்கும் சேர்த்து அந்த அம்மையார் ஆப்பு வைத்துவிட்டார். வெள்ளை எம்ஜிஆரே எனக்கு பிடிக்காது. கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுக் கேட்டு அலைகிறாய். எம்ஜிஆர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, ராஜீவ்காந்தியை சந்தித்து ஆட்சியை என்னிடத்திலே கொடுங்கள் என்று கேட்டவர் அம்ûமையார்.

ஆகவே யார் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதை விட, யார் முதல்வராக வேண்டும் என்பதே முக்கியம். 6வது முறையாக கலைஞர் அவர்களை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தோழமை கட்சிகளும் பாடுபடும் என்றார்.

சினிமாவில் ஹீரோ, அரசியலில் `ஜீரோ'. விஜயகாந்த் மீது வடிவேலு தாக்கு.

சென்னை முழுவதும் பிரசாரம் செய்து விட்டேன். இந்த மாதிரி கூட்டத்தை பார்த்ததில்லை. உங்கள் பிரச்சினைகளுக்காக ஓடோடி வரும் தனசேரனை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

கலைஞர் ஏழைகளுக்காக போட்ட திட்டம் என்னை கவர்ந்தது. அதனால்தான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். புதுசா ஒரு நடிகர் வந்திருக்கிறார். நான்தான் கருப்பு எம்.ஜி.ஆர். அடுத்த முதல்வர் என்றெல்லாம் பேசுறாரு. கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருஷம்தான் ஆகுது.

ஆனால் அஞ்சுமுறை முதல்-அமைச்சரா இருந்த கலைஞரை ஒழிப்பேன் என்கிறார். வயது வித்தியாசம்தான் பார்க்க வேண்டாமாய்யா?

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்.

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்.

பொறுமை இருந்தால் தலைவர் ஆகலாம்.

இந்த மூன்றும் அவரிடம் இல்லையே! தலைவர் என்றால் அடிப்படை தகுதி வேண்டாமா? கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார்.

நான் சினிமாவில் காமெடி பண்ணுகிறேன். அவர் அரசியலில் காமெடி பண்றாரு.

அந்த அம்மா தான் அவரை பெரிய ஆளுன்னு நெனச்சு 41 சீட் கொடுத்திருக்கு. எனக்கு அவரு டம்மி பீஸ்தான். சினிமாவில் ஹீரோவா நடிச்சாலும் அரசியலில் அவர் ஜீரோ தான். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணியை விஜயகாந்த் விரும்பவில்லை: வடிவேலு

அதிமுக கூட்டணியை விரும்பாத காரணத்தினாலேயே, அக்கட்சியினரோடு விஜயகாந்த் மோதலில் ஈடுபட்டார் என, வடிவேலு கூறினார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,

விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும்போது, அதிமுகவினர் அவர்களது கட்சி கொடியை தூக்கி காட்டினார்கள். அவர்களை பார்த்து கொடியை இறக்குங்குங்கடா. சொல்லிக்கிட்டே இருக்கிறேன். இங்க இருக்கிறவன் எல்லாம் முட்டாளா. நீங்க மட்டும் அறிவாளியா என்கிறார்.

இதுக்கு அதிமுகவினர் கொடியை இறக்க முடியாது என்று சொன்னதும், நான் என் கட்சிக்குதான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் என விஜயகாந்த் சொல்கிறார். கூட்டணி கட்சி என்றால் என்ன. ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு கேட்க வேண்டும். அதுதான் கூட்டணி. ஆனால் நீ (விஜயகாந்த்). நீ வேற நா (விஜயகாந்த்) வேற என்று கூட்டணி சேர்ந்திருக்க. அந்த கூட்டணி எதுக்கு உனக்கு. அந்த கட்சியில அந்த ஆள தப்பா சேர்த்துட்டாக. ஒரே அக்கப்போரு. கூட்டணியில் தொகுதி ஒதுக்கவில்லை என உருவபொம்மையை கொளுத்தினாங்க.

வேட்பாளர் பெயரை தப்பா சொல்லிருக்கார் இந்த ஆளு. வேட்பாளர் பெயர் பாஸ்கர். இந்த ஆளு பாண்டியன் என்று சொல்லிருக்காரு. அண்ணே அண்ணே என் பெயர் பாஸ்கர் இல்லையென சொல்லியிருக்கிறார். நான் வைக்கிற பெயர் பாண்டியன் என்று சொல்லி வேட்பாளரை அடிச்சிருக்கிறார். மீதி இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும் அடி இருக்கு.

வேட்பாளரை தாக்கியது ஏன் என்று கேட்டால், என்கிட்ட அடிவாங்கியவர் களெல்லாம் நாளைக்கு மகாராஜாவா ஆகிவிடுவார்கள். அப்புறம் எதுக்கு கட்சி. கட்சியை கலைத்துவிட்டு கல்யாண மண்டபத்தில் அனைவரையும் அழைத்து வாயில் குத்த வேண்டியதுதானே. அதாவது சிந்தனையே இல்ல. நினைவே இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்காரு. இவ்வாறு வடிவேலு பேசினார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மும்பை ஸ்டேடியத்தை தகர்க்க சதி.

மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
Mumbai Wankhede Cricket Stadium
Getty Images

மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதவுள்ளன.

இப்போட்டிக்கு தற்போது தீவிரவாதிகள் மூலம் ஆபத்து வந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாமல் போனதால் ஆத்திரமடைந்துள்ள தீவிரவாதிகள், வாங்கடே ஸ்டேடியத்தை தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அதன்படி வெடி குண்டுகள் நிரப்பிய கார் அல்லது வாகனம் மூலம் வாங்கடே ஸ்டேடியத்தின் வாசலில் மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் ராஜபக்சே ஆகியோரும் போட்டியை நேரில் பார்க்கவுள்ளனர். இதையடுத்து வாங்கடே ஸ்டேடியம் முழுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்டேடியத்தைச் சுற்றிலும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்படவுள்ளன. ஸ்டேடியத்திற்குள்ளும், வெளியிலுமாக மொத்தம் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போட்டி நடைபெரும் மைதானம் உள்ள தெற்கு மும்பையில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை காவல்துறையின் அதி நவீன கமாண்டோப் படையினரும் முக்கிய இடங்கள் மற்றும் ஸ்டேடியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. விமானப்படையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டியையொட்டி நாளை மகாராஷ்டிராவில் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரும் - பிரபாகரனும் - புலமைப்பித்தன் பேட்டி

அதிகாரத்தில் இருந்த தமிழக அரசியல் வாதிகளில் எம்.ஜி.ஆர் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவருக்கும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இருந்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் மனப்பூர்வமாக உதவவிட முனைந்த மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பங்கு மறக்க முடியாதது. இது குறித்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த புலமைப்பித்தன் அவர்களது பேட்டி (இந்த பேட்டி கொடுக்கப்பட்டது பிப்ரவரி 2008-ல்)

கேள்வி: ”அதிமுக புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல” என்கிறீர்களே. எப்படி?

புலமைப்பித்தன்: மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) “ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வரை தேவைப்படும்?” என்று கேட்டார்.

தம்பி கொஞ்ச நேரம் யோசித்து “நூறு கோடி வரை தேவைப்படும்” என்றார். “சரி பார்க்கலாம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர். அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அதிமுகவின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெயலலிதாவும் புலிகளை ஆதரித்தவர்தான்.

1989ம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜானியை, பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித் தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி “நான் லண்டன் போய் வரட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆமாம். ஜானி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்’ என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப் போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து “ஒருகொலையை” மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள்.

கேள்வி: தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

புலமைப்பித்தன்: அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், “ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம்.

அந்த நிலையில் வேறு வழியில்லாமல் தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29ம் தேதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2ம் தேதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர். ஜூலை 31ம் தேதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5 மணியளவில் ராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் பரங்கிமலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழி மறிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம் கோர்த்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது.

இந்திய ராணுவத்தால் ஈழப்பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் முறையிட்டார். அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.

கேள்வி: அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

புலமைப்பித்தன்: நான் ராஜீவ் கொலையை ரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்தியராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டஎன் தமிழ்ச்சாதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?”


அரசியல் வாரிசுகள் நிறைந்த அசாம்.

வாரிசு அரசியல் அசாம் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அரசியல் வாரிசுகள் 26 பேர் களத்தில் குதித்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாரிசுகளின் எண்ணிக்கைதான் மிக அதிகமாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் மனைவி, மகன், மகள், மருமகள், சகோதரர் உள்பட 14 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரசியல் தலைவர்களின் அத்தை, மருமகன், மைத்துனன், மாமனார் ஆகியோரும் அடங்குவர்.

பாஜக ஒரே ஒரு அரசியல் வாரிசுக்கு மட்டுமே இடமளித்துள்ளது. கட்சியின் மறைந்த தலைவரின் மகனுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. ""வாரிசு அரசியலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் வேட்பாளரின் திறமையைக் கருத்தில் கொண்டு அவருக்குள்ள செல்வாக்கை கணக்கில் கொண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ்தீப் ராய் தெரிவித்தார். பாஜக-வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிமலங்ஷு ராயின் மகனான ராஜ்தீப், மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு சில்சார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சுஷ்மிதா தேவ் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் முக்கிய பிரமுகருமான சந்தோஷ் மோகன் தேவின் மகளாவார். இந்தத் தொகுதி சந்தோஷ் மோகன் தேவின் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய தொகுதியாகக் கருதப்படுகிறது. கடந்த முறை இத்தொகுதியிலிருந்து சந்தோஷ் மோகன் தேவின் மனைவி பிதிகா தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

பராக் பள்ளத்தாக்கு தொகுதியில் மற்றொரு காங்கிரஸ் பிரமுகரின் மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான ராகுல் ராய் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது தந்தை கெüதம் ராய்க்கும் சீட் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அல்காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அசாம் மாநில முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைக்கியாவின் மகன் தேவவிரத சைக்கியாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் நஸிரா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இத்தொகுதியில் முன்னர் இவரது தாய் ஹெமோபுரோவா சைக்கியா போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்குக் கண்ணை மூடிக்கொண்டு சீட் வழங்கப்படவில்லை. கீழ்நிலையிலிருந்து அவர்களது செயல்பாடு கவனிக்கப்பட்டு அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் சீட் வழங்கப்பட்டதாக அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் புவனேஸ்வர் காலிதா தெரிவித்தார். வெறுமனே அரசியல் தலைவர்களின் மகன், மகள், மனைவி என்ற ஒரே காரணத்துக்காக சீட் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலா மற்றும் வனத்துறை அமைச்சர் ராக்கிபுல் ஹுசேன், தொடர்ந்து மூன்றாவது முறையாக சமகுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நூருல் ஹசனின் மகனாவார்.

மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் மகன்களுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் அளித்துள்ளது. மாநிலத்தின் முதலாவது பழங்குடியின பிரிவைச் சேர்ந்த அமைச்சர் ரூபம் குர்மி-யின் மகன் ருப்ஜியோதி குர்மி-க்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது. பைரேன் சிங் எங்டி-யின் மகன் கிலெங்டுன் எங்டி-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் போகஜான் தொகுதியில் போட்டியிடுகிறார். கிறிஸ்டோடும் டுடு, முன்னாள் அமைச்சர் கொசைகோனின் மகனாவார். இவர் டுடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர்கள் தவிர, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருதீன் அஜ்மலின் மகன் அப்துர் ரெஹ்மான், அசாம் கண பரிஷத் கட்சி (ஏஜிபி) ஆட்சியிலிருந்தபோது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த கணேஷ் குதும்-ஸின் மகன் சங்கர் ஜோதி குதும், கோபுர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜைருல் இஸ்லாம் மகன்கள் காலிப் இஸ்லாம் மற்றும் ஜாவித் இஸ்லாம் ஆகிய இருவரும் மன்காசர் தொகுதியில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். காலிப் இஸ்லாம் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராகவும், ஜாவித் இஸ்லாம் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் கோபுர் தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான ரிபுன் போரா-வின் மனைவி மோனிகா போரா, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அமைச்சராக இருந்தபோது ரிபுன் போரா லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது அவரது மனைவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

குமாதி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினும் அசாம் கண பரிஷத் கட்சியைச் சேர்ந்தவருமான புரோபின் கோகோய், உடல் நிலை சரியில்லாததால் இம்முறை போட்டியிடவில்லை.

மூன்று முன்னாள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதவை மனைவிகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் இரண்டு மருமகள்களுக்கும் சீட் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் ராய் இப்போது போட்டியிடுகிறார். இவர் முன்னாள் காங்கிரஸ் எம்பி மணி குமார் சுபாவின் சகோதரராவார். கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்ட இவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் ஹங்ரமா மொஹிலாரி-யின் மூன்று உறவினர்களும் களமிறங்கியுள்ளனர். இவரது மாமனார் பதேந்திரா தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார்

இந்தியா - மாநிலங்கள் வாரியாக மக்கள் தொகை.

2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை குறித்த விவரம்.

தமிழ்நாடு - 7,21,38,958
புதுச்சேரி - 12,44,464
இமாசலப் பிரதேசம் - 68,56,509
ஜம்மு, காஷ்மீர் - 1,25,48,926
பஞ்சாப் - 2,77,04,236
சண்டீகர் - 10,54,686
உத்தரகண்ட் - 1,01,16,752
ஹரியாணா - 2,53,53,081
தில்லி - 1,67,53,235
ராஜஸ்தான் - 6,86,21,012
உத்தரப் பிரதேசம் - 19,95,81,477
பிகார் - 10,38,04,637
சிக்கிம் - 6,07,688
அருணாசலப் பிரதேசம் - 13,82,611
நாகாலாந்து - 19,80,602
மணிப்பூர் - 27,21,756
மிசோரம் - 10,91,014
திரிபுரா - 36,71,032
மேகாலயம் - 29,64,077
அசாம் - 3,11,69,272
மேற்கு வங்காளம் - 9,13,47,736
ஜார்க்கண்ட் - 3,29,66,238
ஒரிசா - 4,19,47,358
சத்தீஸ்கர் - 2,55,40,196
மத்தியப் பிரதேசம் - 7,25,97,565
குஜராத் - 6,03,83,628
டாமன்-டையூ - 2,42,911
தாத்ரா,நாகர் ஹவேலி - 3,42,853
மகாராஷ்டிரம் - 11,23,72,972
ஆந்திரப் பிரதேசம் - 8,46,65,533
கர்நாடகம் - 6,11,30,704
கோவா - 14,57,723
லட்சத்தீவு - 64,429
கேரளம் - 3,33,87,677
அந்தமான், நிக்கோபார் தீவுகள் - 3,79,944.

எமர்ஜென்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. ஈரோடு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.

முதல்வர் கருணாநிதியின் முழுப் பேச்சு:

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தமிழகத்திலே தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு, இன்று பிற்பகல் குருகுலத்திற்கு வந்து சேர்ந்தேன். என்னுடைய குருகுலம், தமிழகத்தில் ஈரோடு நகரம் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். இந்த குருகுலத்தில், பேசுவது என்றாலே எனக்கு உடம்பு எல்லாம் புல்லரிக்கும். உள்ளம் எல்லாம் களிகொள்ளும். நெஞ்சமெல்லாம் இனிக்கும். தேகம் எல்லாம் சுழலும். அத்தகைய, குருகுலத்தில், இன்று நான் பல்லாயிரக்கணக்கில் குழுமி இருக்கிற உங்களை எல்லாம் காணும் போது, பேசுவும் வேண்டுமோ என்று தான் எனக்கு தோன்றுகிறது.

தம்பி இளங்கோவன் அவர்கள் இங்கு பேசும் போது, நான் நீண்ட நேரம் பல கருத்துக்களை இந்த கூட்டத்திலே சொல்ல இருக்கிறேன் என்று எல்லாம் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தின் உடைய மொத்த கருத்தாக நாளை, பத்திரிகைகளில் வரப்போகும் செய்தி, கருணாநிதியும் இளங்கோவனும் ஒரே மேடையில் என்பதுதான், இது தான் பெரிய அதிசயமாக செய்தியாக நாளை வெளிவரும் என்று எனக்கு தெரியும்.

நான், அப்படி செய்தி வெளியிடுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். இளங்கோவன் இன்றைக்கு இந்த மேடையிலே ஒரே வரிசையிலே எனக்கு பக்கத்திலே அமர்ந்து இருக்கலாம். ஆனால் இந்த இளங்கோவன், நான் தந்தை பெரியார் குருகுலத்தில் பயின்ற காலத்தில், குழந்தைப் பருவத்தில் என்னுடைய மடியில் தவழ்ந்த பிள்ளைதான் என்றார். அப்போது இளங்கோவன் எழுந்து சென்று முதல்வர் காலைத் தொட்டு வணங்கினார்.

பரவாயில்லை, ஜெயித்து விடுவோம்!

அப்படிப்பட்ட இளங்கோவனை, நான் காலையிலே வந்து இறங்கிய போது சந்தித்த நேரத்தில் சொன்னேன் பரவாயில்லை, ஜெயித்து விடுவோம் என்று சொன்னேன்.

ஏனென்றால் இங்கே பிளவுகளை உண்டாக்கி, பிரிவுகளை ஏற்படுத்தி, பேதங்களை வடிவமைத்து, இந்த இயக்கத்தை, இதனுடைய வெற்றிகளை தடுக்க இயக்கத்தின் வெற்றிகளை தடுக்க யார், யார் கருதுகிறார்களோ, அவர்களுக்கு எல்லாம், கிஞ்சித்தும், இடம் தரமாட்டோம் என்பதற்கு அடையாளமாக தான் இந்த எழுச்சி கூட்டம் நடக்கிறது.

நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இங்கே பேசிய நம்முடைய கூட்டணி கட்சி தலைவர்கள் உங்களுக்கு எல்லாம் எடுத்துரைத்தார்கள். ஆம். நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

யாருக்கு? ,,, ஏதோ ஒரு காரியத்திற்காக, நண்பர்கள் ஒருவரிடத்தில் நமக்கு வேண்டியவர்களிடத்திலேயே வேண்டியதை கொடுத்தவர்களிடத்திலேயே நன்றி உடையவர்களாக இருப்பது என்பது வேறு. ஆனால் மொத்த சமுதாயத்திற்கும் உழைத்து, இந்த சமுதாயத்தையே ஒளிமிக்க இனமாக ஆக்கியவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது.

இங்கே வீற்றிருக்கின்ற அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவோடு, ஆட்சி புரிகின்ற இந்த சூழ்நிலையில் இப்போது இதே குருகுலத்தில் உங்களை எல்லாம் பார்த்து, எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்பதற்கு வந்து இருக்கிறோம் என்றால், வாக்குகளை பெற்று வசதியான வாழ்வுகளை அமைத்து கொள்ளலாம் என்பதற்காக அல்ல.

வாக்குகளை தருகின்றவர்களுக்கு, வசதியான வாழ்வை அளிக்க வேண்டும் என்பதற்காகதான், திராவிட முன்னேற்ற கழகமானாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆனாலும், பாடுபட்டு கொண்டு இருக்கிற இடத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

என்ன சொன்னார்கள். நான் முதல்-அமைச்சர் ஆனால், வீட்டிற்கு வீடு, அரிசி மூட்டை தூக்கி கொண்டு வந்து, அளந்து போடுவேன். நான் முதல்-அமைச்சர் ஆனால் வீட்டுக்கு வீடு எண்ணெய் கலயத்தை தூக்கி கொண்டு வந்து எண்ணெய் ஊற்றுவேன். நான் முதல்-அமைச்சர் ஆனால், இப்படி ஆனால், ஆனால் என்று சொன்னவர்கள், ஆவேன் ஆகவே என்னை ஆதரியுங்கள் என்று சொன்னார்கள்.

அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்?

இப்போது யார் முதல்-அமைச்சர் அந்த அணியில், இங்கே திட்டவட்டமாக எல்லோரும் சொல்லி விட்டார்கள். நீ தான் முதல்-அமைச்சர் என்று உங்களை எல்லாம் சாட்சிகளாக வைத்து கொண்டு 6-வதாக அமைய போகின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல்-அமைச்சர் நீ தான் என்று அறிவித்து விட்டார்கள். அப்படி அங்கே இருக்கிற 2 தலைவர்கள், ஒருவர் ஆண் தலைவர், இன்னொருவர் பெண் தலைவர். இந்த தலைவர்கள் யாரும் ஒரு மேடையில் இன்னார் தான் முதல்-அமைச்சர்தான் என்று இது வரை சொன்னார்களா என்றால்..... ஒரு வேளை இதற்கு பிறகு கருணாநிதி சொல்லி விட்டான் என்று அதற்காக சொல்ல வேண்டும் சொன்னால், சொன்னார் என்று வரும், சொல்லாவிட்டால், தவறு என்று வரும்.

ஆனால் நம்முடைய அணியை பொறுத்த வரையில் உறுதியாக இருக்கிறோம். காரணம் இந்த அணியில் இருப்பவர்கள், எல்லாம் என்னை நம்புகிறவர்கள். நான் அவர்களை நம்புகிறவன். எப்படி நம்புகிறார்கள்? அனுபவத்தின் காரணமாக நம்புகிறார்கள்.

இன்றைக்கு பத்திரிகையிலே பார்த்தேன், தொழிலை நசுங்கச் செய்து விட்டார்கள் - தொழிலே இல்லை. தொழில் திட்டங்கள் அறவே இல்லாமல் போய்விட்டது. நான் வந்துதான் தொழிலை ஆரம்பிக்கப்போகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த அம்மையார் அவர்கள் கூறியிருக்கின்றார்கள், நான் விளக்க விரும்பவில்லை.

இன்றைக்கு தமிழகத்திலே ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கழக ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, அண்ணா அவர்களுக்கு பிறகு நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும் சரி, அமெரிக்காவில் இருப்பவர்கள், கொரியாவில் இருப்பவர்கள், ஜப்பானிலே இருப்பவர்கள், இங்கிலாந்திலே இருப்பவர்களெல்லாம் நாடி, ஓடி, தேடி வருகிறார்கள் என்றால் தமிழ் நாட்டிலே தொழில் தொடங்கத்தான் வருகிறார்கள்.

அப்படிப்பட்ட தொழில் தொடங்குவதிலே கூட, வெளிநாடுகளிலே உள்ளவர்கள் போட்டிப்போடுகின்ற அளவிற்கு தொழில் வளர்ந்திருக்கிறது. அந்தத் தொழிலை ஏதோ நசுக்கிவிட்டோம், தொழிலே இல்லை என்றெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார் என்றால் அது உண்மையா அல்லவா என்பதை நீங்கள் ஊரிலே இருக்கின்ற அறிவாளர்கள், அரசியல் மேதைகள் ஆகியோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்தாண்டு காலத்தில், ஏற்கனவே பொறுப்பிலே இருந்த அ.தி.மு.க. அரசு மின் திட்டங்களை எதிர்காலத்திலே நிறைவேற்றி எத்தனை மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய மின் ஆலைகளை நிறுவ முடியும் என்று கணக்கிட்டு அதற்கான வேலைகளை தொடங்கியதா என்றால், இல்லை. நாம்தான் இப்போது தொடங்கியிருக்கிறோம்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இப்பொழுது தொடங்கப்பட்ட அந்த மின்சார உற்பத்தி நிலையங்கள் - இன்னும் மூன்றாண்டு காலத்திலே முடிவடைந்து உங்களுக்கு போதும் போதும் என்கின்ற அளவுக்கு மின்சாரம் கிடைக்கத்தான் போகிறது. ஒருவேளை அப்படி கிடைக்கப் போவதை எதிர்பார்த்து நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் பார்த்தீர்களா? மின்சாரம் வந்து விட்டது என்று சொல்லக்கூடிய சந்தர்ப்பவாதிகள் கூட இன்றைய தினம் உங்களிடத்திலே வாக்கு கேட்கலாம்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். கருணாநிதியே அப்படி சொல்லி விட்டானே, இவர்கள் வந்தால் என்ன என்று மோசம் போய்விடாதீர்கள், ஏமாந்து விடாதீர்கள். யார் வந்தால், நமக்கு தொண்டாற்றக் கூடியவனாக, யார் வந்தால் நமக்கு கடமை புரிபவராக, யார் வந்தால் நம்முடைய கட்டளைக்கு கீழ் படிபவனாக இருக்க முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டினுடைய தலையெழுத்தை நிர்ணயிப்பது அந்த நாட்டு மக்களாகத்தான் இருக்க வேண்டும். யாரோ ஒருவர் இருந்து விட முடியாது. இன்னும் சொல்லப் போனால் என்னைப் போன்ற ஒருவன் ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயித்து விட முடியாது. தலை இருந்தால் மாத்திரம் அது முடியும் என்று பொருளல்ல. தலைக்குள்ளே இருக்க வேண்டியது இருக்க வேண்டும். அவைகளெல்லாம் இருந்தால்தான் ஒரு நிர்வாகத்தை நடத்த முடியும். ஒரு ஆட்சியை கொண்டு செலுத்த முடியும்.

நாளைக்கு சபாநாயகரையும் அடிப்பர்!!

இவைகளெல்லாம் இல்லாமல் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்வதும் - பொதுமக்களுக்கு மத்தியிலே விகாரமாக - விரசமாக நடந்து கொள்வதும், யாரை வேண்டுமானாலும் அடிப்பேன், நீ யார் கேட்பது என்று சொல்வதும், நாளைக்கு சட்டசபையிலே சபாநாயகரைக் கூட அடித்து விட்டு, "என்னுடைய சபாநாயகர்தானே, அப்படித்தான் அடிப்பேன்'' என்று சொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

நான் கேட்கிறேன், எதிரியை அடிப்பது - அதுவே குற்றம். நான் அடித்தது எதிரியை அல்ல. என் நண்பனைத்தான் அடித்தேன் என்றால், அதை யாரும் ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், சட்டம் அதை அனுமதிக்காது. சட்டம் தமிழகத்திலே இப்பொழுது இருக்கிறதா இல்லையா என்பது என்னைப் பொறுத்தவரையிலே சந்தேகம்தான் ஏற்படுகிறது.

மன்னிக்க வேண்டும். முதலமைச்சராக இருக்கிற போது தமிழகத்திலே சட்டம் இருக்கிறதா என்பதைப் பற்றி சந்தேகப்படுகிறாயே நியாயமா என்று கேட்டால், நான் முதலமைச்சர் என்பது நீங்கள் சொல்லும்போதுதான் எனக்குத் தெரிகிறது. ஏனென்றால் தம்பி இளங்கோவனுக்குத் தெரியும். எமர்ஜென்சி காலத்துக் கொடுமைகள் தெரியும்.

மிசா காலத்து கொடுமை!

எமர்ஜென்சி கொடுமை இன்றைக்கும் நடக்கிறது. ஒரு பத்து ரூபாய் நண்பர்களிடத்திலே கொடுத்து சில்லரை வாங்கிக் கொண்டு வா என்றால், அவர் அதை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனால் போலீஸ்காரர் பிடித்துக்கொண்டு, நீ யாருக்கு கொடுப்பதற்கு வாங்கிக் கொண்டு போகிறாய் என்று பிடித்துக் கொள்கிறார். அப்படிப்பட்ட கொடுமை மேல்மட்டத்திலே போட்ட அதிகாரத்தால் அல்ல, அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்றைக்கு ஒரு அடையாளம் தெரியாத, அடையாளம் காட்ட முடியாத, பெயர் சொல்லாத, விளம்பரம் இல்லாத ஒரு எமர்ஜென்சி நாட்டில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறுகிறது.

அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை உடைக்க, கூட்டணியிலே இருப்பவர்களை தளர்க்க - அவர்களை பயமுறுத்த இந்த நெருக்கடிக் கால கொடுமை இங்கே வீசப்படுகிறது. இவைகளையெல்லாம் நாங்கள் நிதானமாக பார்த்துக் கொண்டிருப்போம். அந்த நெருக்கடி காலத்திலே இவைகளையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள்தான் நாங்கள்.

எனவே ஒரு முறை நெருக்கடியால் எங்கள் ஆட்சியைப் பறித்து விட்டால், அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம் என்று பொருள் அல்ல, நாங்கள் இந்த நாட்டிலே தமிழன் இருக்கிற வரையில் - தமிழனுடைய உள்ளத்திலே சுயமரியாதை உணர்வு இருக்கிற வரையில் எங்களுடைய அணிக்குத் தோல்வி கிடையாது, தோல்வி கிடையாது, என்றைக்கும் வெற்றி தான் என்பதை எடுத்துக் கூறி, அந்த வெற்றிச் சிகரத்திலே ஏறி நிற்க வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்கள் வாழ்ந்த இந்த ஈரோடு நகரத்தில் சபதங்கள் மேற்கொள்ளுங்கள் என்று கூறினார் முதல்வர்.