Friday, April 1, 2011

எம்.ஜி.ஆரும் - பிரபாகரனும் - புலமைப்பித்தன் பேட்டி

அதிகாரத்தில் இருந்த தமிழக அரசியல் வாதிகளில் எம்.ஜி.ஆர் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவருக்கும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இருந்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் மனப்பூர்வமாக உதவவிட முனைந்த மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பங்கு மறக்க முடியாதது. இது குறித்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த புலமைப்பித்தன் அவர்களது பேட்டி (இந்த பேட்டி கொடுக்கப்பட்டது பிப்ரவரி 2008-ல்)

கேள்வி: ”அதிமுக புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல” என்கிறீர்களே. எப்படி?

புலமைப்பித்தன்: மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) “ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வரை தேவைப்படும்?” என்று கேட்டார்.

தம்பி கொஞ்ச நேரம் யோசித்து “நூறு கோடி வரை தேவைப்படும்” என்றார். “சரி பார்க்கலாம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர். அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அதிமுகவின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெயலலிதாவும் புலிகளை ஆதரித்தவர்தான்.

1989ம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜானியை, பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித் தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி “நான் லண்டன் போய் வரட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆமாம். ஜானி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்’ என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப் போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து “ஒருகொலையை” மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள்.

கேள்வி: தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

புலமைப்பித்தன்: அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், “ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம்.

அந்த நிலையில் வேறு வழியில்லாமல் தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29ம் தேதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2ம் தேதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர். ஜூலை 31ம் தேதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5 மணியளவில் ராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் பரங்கிமலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழி மறிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம் கோர்த்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது.

இந்திய ராணுவத்தால் ஈழப்பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் முறையிட்டார். அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.

கேள்வி: அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

புலமைப்பித்தன்: நான் ராஜீவ் கொலையை ரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்தியராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டஎன் தமிழ்ச்சாதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?”


No comments: