Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரும் மனு - டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்.


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தவிர இந்த விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்டனர். மேலும், அணையின் நீர்மட்டத்தை நிர்ணயிப்பது, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய ,முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஏஸ்.ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் 2 தொழில்நுட்ப நிபுணர்கள் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் அணையை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். எனவே இந்த நிலையில் கேரள அரசின் மனுவுக்கு என்ன அவசியம் என்று கேட்டனர்.

மேலும், ஏ.ஆஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையே இறுதியானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கேரள வக்கீல் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிஆர்பிஎப் பாதுகாப்பு - மத்திய அரசுக்கு உத்தரவு

இதேபோல முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் வீரர்களை நிறுத்த வேண்டும் என்ற தமிழகம் மற்றும் திமுக கோரிக்கை குறித்து வருகிற 15ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது என்றும்,இந்த விவகாரம் தொடர்பாக கேரளா சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க உத்தரவிடுமாறும் கோரி கடந்த 1ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.மேலும் புதிய அணை கட்டுவதில் முனைப்பாக உள்ளது என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அணை உள்ள பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதைக் காரணம் காட்டி நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றது. ஆனால் அணை உறுதியாகத் தான் உள்ளது என்றும், கேரள அரசு வேண்டும் என்றே இவ்வாறு கூறுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றாதீர்கள் - தமிழக, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து செய்தித் தாள்களிலும் ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தார்.

முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால் அவர்கள் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க நினைக்கிறார்கள். ஒரு சிலரின் சுயநலத்திற்காக கேரள மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போன்ற கருத்துகள் அந்த விளம்பரத்தில் இருந்தது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் ஜெயலலிதா இவ்வாறு விளம்பரம் கொடுத்ததற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அரசியலாக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல கேரள அரசுக்கும் இநத்ப் பிரச்சினையை அரசியல் ரீதியாக பயன்படுத்தி பெரிதாக்கக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கையில் இரு மாநில அரசுகளும் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் அணை குறித்து கேரள அரசு தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை தண்ணீரை திறந்து விடாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் கேரளஅரசை நம்பமுடியாது. : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி.



குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக கேரள எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கேரளாவின் இன்னொரு எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் இப்பிரச்சினைக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக பாறசாலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது பற்றி குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மாறாக முல்லை பெரியாறு அணையை உடைக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

உள்ளபடியே அணையில் நீரை தேக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அதை செய்யாமல் மாற்று கருத்தை தெரிவிக்கும் கேரள அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்று உம்மன்சாண்டி அரசு கூறுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முதலில் அவர்கள் நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதற்கு பிறகு முல்லை பெரியாறு பிரச்சினைக்கு போராடட்டும். முல்லை பெரியாறில் பாதுகாப்புத்தான் பிரச்சினை என்றால் அணையை வலுப்படுத்தும் ஏற்பாடுகளை செய்யட்டும். அதை விடுத்து புதிய அணை கட்டுவோம் என்பதை ஒரு போதும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது.

இது தொடர்பாக நான் டெல்லியில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்து உள்ளேன். அதற்கான நகலை தமிழக முதல் அமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் வருகிற 15 ந்தேதி கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கருத்தாக முல்லை பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது என்பதை பதிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் : பிரதமருக்கு அப்துல்கலாம் யோசனை.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் யோசனை தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார்.

இரு மாநில மக்களும் பலனடையும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலாம் எழுதிய கடிதத்தில், கேரள மாநிலத்துக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப் பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பதிக்கப்பட்டுவிடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கலாம் கூறியுள்ளார்.

அர்த்த புஜங்காசனம், அர்த்த சலபாசனம், பூர்ண சலபாசனம்.

அர்த்த புஜங்காசனம்.
அர்த்த புஜங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி அமர்ந்து கால்களை பின்னே நீட்டி, குப்புறபடுங்கள். உள்ளங்கை முதல் முழங்கை வரை தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டத்தில் இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் இருப்பது அவசியம். நெற்றி, மூக்கு, கீழ்மோவாய் வரை தரையில் கிடத்தி, பிறகு மேலிருந்து கீழாக நெற்றி, மூக்கு, கீழ் மோவாய் வரை கழுத்தை உபயோகித்து தலையை தூக்கவும். முழங்கைகளை சற்று அழுத்தி தோள் பட்டை-இடுப்பு வரை, உடலை மெல்ல மெல்ல மேலே தூக்குங்கள். இதே நிலையில் 15 விநாடிகள் இருந்து ஆசனத்தை கலைக்கலாம்.

பயன்கள்:

சளி, டி.பி, ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா வராது. இடை மெலியும். மார்பு பெருகும். போலீஸ், ராணுவத்தில் சேர விரும்புவோர் அர்த்த புஜங்காசனம் செய்துவந்தால், கூடுதல் பலன்கள் கிடைப்பது உறுதி. மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஆசனமிது!


அர்த்த சலபாசனம்.
அர்த்த சலபாசனம்

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப்படுங்கள். இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையையும் தொடுமாறு செய்யவும். கைகளை சற்று அழுத்தி, வலதுகாலை மட்டும் மேலே தூக்குங்கள். இடதுகாலை மடக்கி, வலதுகால் அல்லது தொடையில் வைத்து இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருங்கள். இதே ஆசனத்தை, காலை மாற்றி மறுபக்கம் செய்ய வேண்டும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பி பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மூலநோய் குறையும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். விரைவீக்கம் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.


பூர்ண சலபாசனம்.
பூர்ண சலபாசனம்

செய்முறை:

விரிப்பில் குப்புறப்படுத்த நிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டிவையுங்கள். இல்லையெனில் - இரு கைகளையும் அந்தந்த பக்கத்து தொடைக்கு அடியில் தரையோடு ஒட்டிவைக்கலாம். முகத்தை நிமிர்த்தி மோவாய்-இரு கைகளையும் அழுத்தி, இடுப்பின் கீழ்ப் பகுதியை மேலே தூக்கவேண்டும். இது குறைந்தபட்சம் அரையடி உயரமாவது இருக்கட்டும். அவரவர்க்கு முடிந்தஅளவு, உடம்பை மேலே கொண்டு வரலாம்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பு பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மலச்சிக்கல் போகும். பெருந்தொந்தி குறையும். சிறுநீரக கோளாறு வராது. செரிமான பிரச்சினையும் இராது. மூலநோய் மறைந்து போகும்.