Thursday, July 28, 2011

லோக்பால் மசோதா : பிரதமருக்கு விலக்கு - ஊழல் செய்து 7 ஆண்டுகளாகி விட்டால் விசாரணை கிடையாது !அன்னா ஹஸாரே உள்ளிட்டோரின் பரிந்துரைகளை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு லோக்பால் மசோதாவை மாற்றியமைத்து விட்டது. பிரதமர், நீதித்துறைக்கு மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவை இன்று கூடி லோக்பால் மசோதாவை பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த மசோதா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளது மத்திய அரசு.

இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் இறுதியில் மசோதாவை ஏற்பது என ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

லோக்பால் மசோதாவை மத்திய அமைச்சரவை ஏற்றுள்ளது. இந்த மசோதா திட்டமிட்டபடி மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

லோக்பால் அமைப்பில் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக செயல்படுவார்.

லோக்பால் அமைப்பில் 50 சதவீதம் பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

ஒருவர் மீது ஊழல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார் கொடுத்தால் லோக்பால் அமைப்பு அதை விசாரிக்காது, ஏற்காது.

பிரதமருக்கு விலக்கு

லோக்பால் வரையறையிலிருந்து பிரதமர், நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

அதேபோல அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

பிரதமராக இருப்பவர் மீது ஊழல் புகார் எழுந்தால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே விசாரிக்க முடியும்.

அனைத்து மாநிலங்களிலும் இதேபோல லோக்பால் மசோதாக்களை தாக்கல் செய்யுமாறு முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதவுள்ளார்.

லோக்பால் மசோதாவில் திருத்தம் தேவைப்பட்டால், அதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அன்னாவின் பரிந்துரைகள் முற்றிலும் நிராகரிப்பு

சமூக சேவகர் அன்னா ஹஸாரே குழுவினர் லோக்பால் மசோதா தொடர்பாக அளித்திருந்த அத்தனை பரிந்துரைகளையும் மத்திய அமைச்சரவை தூக்கி குப்பையில் போட்டு விட்டதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்மீது பொய் வழக்கு : “நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்” வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி .

என்மீது பொய் வழக்கு:   “நிரபராதி  என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்”;   வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி

சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு வழக்கு மற்றும் சேலம் 5 ரோடு பிரிமியர் மில் நிலம் அபகரிப்பு வழக்கு ஆகிய 2 வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்து நேற்று மாலை அவர் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரத்ராஜ் முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.

தினமும் காலை 8 மணிக்கு அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இன்று காலை 8 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடவந்தார்.

அவரது வக்கீல் மூர்த்தி ஒரு நோட்டு வாங்கி வந்து இருந்தார். அந்த நோட்டில் வீரபாண்டி ஆறுமுகம் கையெழுத்து போட்டு போலீசாரிடம் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சந்திப்பேன். நீதிமன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். 3 நாட்கள் என்னிடம் போலீசார் விசாரித்தார்கள். இதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து பதில்கள் தெரிவித்தேன்.

தி.மு.கவினர் மீது பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தி விடலாம் என்றும், தி.மு.வை கலங்கப்படுத்தி விடலாம் என்றும் நினைக்கிறார்கள். அது நடக்காது. எங்களை மிரட்டினாலோ, அச்சுறுத்தினாலோ நாங்கள் பயந்து விடமாட்டோம். தொடர்ந்து கழக பணியாற்றுவோம். பொய் வழக்குகளை போடுவதால் எங்களை அச்சுறுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரபாண்டி ஆறுமுகம் நடந்து வந்து காரில் ஏற சென்றார். அப்போது நிர்வாகிகள் பாண்டித்துரை, அன்வர், மண்டல தலைவர் அசோகன், கவுன்சிலர் கேபிள் சுந்தர் ஆகியோர் அவரிடம் வந்து நேற்று மாலை முதல் தி.முகவினரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து செல்கிறோம் என தெரிவிக்கிறார்கள் என்றனர்.

இதனால் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் சேலம் டவுன் போலீஸ் நிலையம் வந்தார். உதவி கமிஷனர் காமராஜிடம் ஏன் தி,மு.கவினரை கைது செய்கிறீர்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என கேட்டார். அதற்கு உதவி கமிஷனர் காமராஜ், நேற்று டவுன் போலீஸ் நிலையம் அருகே ஆட்டோவை சிலர் தாக்கி விட்டனர்.

இதில் ஆட்டோ டிரைவர் காயம் அடைந்துள்ளார். இதன் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதை கேட்ட வீரபாண்டி ஆறுமுகம் வக்கீல்கள் மூர்த்தி, சிவபாஸ்கரன், துரைராஜ், சக்திவேலை அழைத்து யார் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் எடுக்க உதவுங்கள் என தெரிவித்து விட்டு காரில் ஏறி வீட்டிற்கு சென்றார்.

வைர கம்மல் - முத்து நெக்லசுடன் கண்கவர் உடைகளில் கலக்கிய பாக். மந்திரி ஹினா.


பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரியாக 34 வயதே ஆன இளம்பெண் ஹினா ரப்பானி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் கொள்கை குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச வேண்டும் என்பதால், இளம் வயது பெண்ணை எப்படி நியமிக்கலாம் என்று பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஹினா ரப்பானி இந்த எதிர்ப்புகளை கண்டு கதி கலங்கி நிலை குலைந்து போய் விடவில்லை. எந்த கொள்கை பற்றியும் தன்னால் விவாதிக்க முடியும் என்று அவர் நிரூபித்து வருகிறார்.

கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லி வந்த அவர் நேற்று பிரதமர் மன் மோகன்சிங், வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, சுஷ்மாசுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். அதோடு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களையும் துணிச்சலாக சந்தித்துப் பேசி எல்லாரது புருவத்தையும் உயர வைத்து விட்டார்.

இந்திய மூத்த தலைவர்களிடம் மிக இயல்பாக பேசியதால் எல்லாரது மனதிலும் ஹினா ரப்பானி தனி இடம் பிடித்து விட்டார். அதோடு கண்கவர் உடைகள் அணிந்தும் ஹினா எல்லோரையும் கவர்ந்து விட்டார். பார்த்த உடன் புன் சிரிப்பு, கையில் எப்போதும் கூலிங்கிளாஸ் சகிதமாக டெல்லியில் வலம் வந்த இவர் விலை உயர்ந்த பொருட்களையே பயன்படுத்தினார்.

இவர் வைத்திருந்த கைப்பையின் விலை 17 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ஹினா டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது நீலநிற உடை அணிந்திருந்தார். அந்த நிறத்துக்கு ஏற்ற வைர கம்மல், முத்துக்களால் ஆன நெக்லஸ் போட்டு இருந்தார்.

நேற்று காலை இந்திய தலைவர்களை சந்திக்க சென்றபோது உள்ளங் கால் முதல் உச்சிவரை நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். அந்த உடையில் பார்ப்பதற்கு ஹினா தேவதை போல காணப்பட்டார். மதியம் சாப்பிட வந்த போது பனீரென பச்சை நிற உடையில் வந்தார்.

நேற்றிரவு அவர் மிகவும் வித்தியாசமான தோல் ஆடை அணிந்திருந்தார். அந்த உடை மதிப்பு ரூ 46 லட்சம் என்று கூறப்படுகிறது. கோடீசுவர குடும்பத்தைச் சேர்ந்த ஹினா ரப்பானி வைர நகைகளையும் விதம், விதமாக அணிந்து வந்தார். நேற்று மதியம் சாப்பிட வந்தபோது வைர மோதிரம் அணிந்து வந்தார். விருந்தில் அதை ஹினா தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

சில லட்சம் மதிப்புள்ள அந்த மோதிரம் காணாமல் போனது பற்றி ஹினா கொஞ்சமும் வருத்தப்படவில்லை. சிரித்துக் கொண்டே மோதிரத்தை காணவில்லை என்றார்.

டெல்லியில் ஹினா அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டார். தந்தூரி பிரான், பதர் கபாப் மற்றும் பிரியாணியை அவர் ஒருபிடி பிடித்தார். அவருக்காகவே ஐதராபாத் இல்லத்தில் சிறப்பு சாலிமர் பிரியாணி தயாரிக்கப்பட்டது.

உபசரிப்பு, பணிவு, இயல்பான பேச்சு போன்றவை மூலம் இந்திய தலைவர்களை மட்டுமின்றி இந்தியர்களையும் ஹினா கவர்ந்து விட்டார். இதுவரை இந்தியா வந்து சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் யாரும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஹினா ரப்பானி மூலம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் புதிய நட்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி பிறந்த ஹினாவுக்கு பஞ்சாப் மாகாணத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. லாகூரில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் வைத்துள்ளார். எம்.எஸ்சி பட்டதாரியான இவர் தொழில் அதிபர் பெரோஸ் குல்சர் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

2002-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட இவர், பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் மிக, மிக வயதில் இளையவர். முதலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2008-ம் ஆண்டு தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி இவருக்கு போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து முசாபர்கர் தொகுதியில் போட்டியிட்டு 84 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலில் மந்திரி சபையில் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க மந்திரியாக இருந்தார்.

2009-ல் பட்ஜெட் உரை மீது இவர் பேசிய பேச்சு பாகிஸ்தான் தலைவர்களை பிரமிக்க வைத்தது. அழகும் அறிவும் நிரம்பிய அவர் தற்போது வெளியுறவு மந்திரி என்ற உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார். கடந்த 20-ந்தேதிதான் அவர் இந்த பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றாலத்தில் சீசன் உச்சக்கட்டம் : அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஜோராக கொட்டுகிறது.

குற்றாலத்தில்  சீசன்  உச்சக்கட்டம்: அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் ஜோராக கொட்டுகிறது

குற்றாலத்தில் சீசன் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அனைத்து அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்தாண்டு சீசன் ஜூன் 1ந்தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டியது. அதன் பிறகு சாரல் ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் பெயரளவிற்கு காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் பெருமளவு குறைந்து விட்டது.

இந்த நிலையில் தென்மேற்கு மூலம் கேரளா மலைப்பகுதிகளில் தீவிர மழை பெய்து வருவதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. இதனால் சீசன் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் புலியருவி, பழையகுற்றாலம் அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவிகளிலும் தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இதனால் மெயினருவி பகுதியில் குளிப்பதற்கு கூட்டம் அதிகளவு காணப்படுவதால் போலீசார் நீண்ட வரிசையில் நிறுத்தி சிறு, சிறு குழுக்களாக நின்று குளிக்க அனுமதித்து வருகின்றனர்.

மற்ற அருவிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். இன்று காலையிலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 ஜி முறைகேடு : சிதம்பரம், சுப்பாராவ் மீது பெகுரா குற்றச்சாட்டு.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கு தொடர்பு இருப்பதாக, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா புதிய புகார் கூறியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அந்த துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைதான பெகுரா, கடந்த 6 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விசாரணை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் விவாதத்தை தொடர்ந்து, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெகுரா தரப்பு வாதம் நேற்று நடைபெற்றது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கும் தொடர்பு

ஆ.ராசா தரப்பு வாதத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆகியோரின் பெயர்களை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பெகுராவின் வாதத்தின்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவின் பெயரை குறிப்பிட்டு புகார் கூறினார்.

பெகுரா சார்பில் வாதிடுகையில், "ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கான நுழைவு கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியின்போது ரூ.1650 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நுழைவு கட்டணத்தை மறுபரிசீலனை செய்வதற்காக, 2007-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய நிதித்துறை செயலாளர் (தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர்) டி.சுப்பாராவ் கலந்து கொண்டார்.

ப.சிதம்பரம்

தொடக்கத்தில் இந்த கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறி அவர் ஆட்சேபனை கிளப்பினார். ஆனால் அப்போதைய தொலை தொடர்பு துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூர், பழைய கட்டண விகிதம் நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். பழைய கட்டணமே தொடர்ந்து நீடிப்பதற்கு இந்த கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு இருந்தால், பிரச்சினை மத்திய அமைச்சரவையின் முடிவுக்குப் போய் இருக்கும்.

நான் மட்டும் பலிகடாவா?

ஆனால், முதலில் ஆட்சேபனை தெரிவித்த டி.சுப்பாராவ் தனது ஆட்சேபனையை பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பழைய நுழைவு கட்டணத்துக்கு ஒப்புதல் தெரிவித்த குறிப்பில் அனைவரும் கையெழுத்திட்டனர்.

எனவே, இந்த கொள்கை முடிவு எடுத்ததில் மத்திய அமைச்சரவைக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. மத்திய அரசு பகிரங்கமாக இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது என்னை மட்டும் இதில் ஏன் பலிகடா ஆக்க வேண்டும்?

அதிகாரம் இல்லை

அரசின் கொள்கை முடிவுகள் பற்றி விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது. நான் ஒரு அதிகாரி. கொள்கைகளை வகுப்பதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அரசு வகுக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது மட்டுமே எனது பணியாகும்.

அந்த கொள்கை மோசமானதா? என்பதை முதலில் முடிவு எடுக்க வேண்டும். அதன்பிறகுதான் மற்றவர்களின் தவறான செயல்பாடு பற்றி நாம் பேச முடியும். ஆனால், ஒரு கொள்கை சரியா, இல்லையா? என்பது இந்த கோர்ட்டின் அதிகார வரையறைக்கு அப்பாற்பட்டது.

முழுமையான சட்ட மீறல்

எனவே இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு இருக்கும் என்னை விடுவிக்க வேண்டும். எனக்கு முன்பு தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக பணிபுரிந்த டி.எஸ்.மாத்தூர், இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அவரை சாட்சியாக சேர்த்திருப்பதே தவறு. எனவே சாட்சியாக இருக்க வேண்டிய ஒருவரை குற்றவாளியாகவும், குற்றவாளியாக இருக்க வேண்டியவரை சாட்சியாகவும் சேர்க்கப்பட்டு இருப்பது, சட்ட நடைமுறைகளை முழுமையாக மீறிய செயலாகும்''.

இவ்வாறு பெகுரா சார்பில், வக்கீல் அமன் லெகி மேற்கண்டவாறு வாதாடினார்.

சி.பி.ஐ. குற்றச்சாட்டு

சி.பி.ஐ. தரப்பு வாதத்தில், பால்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்து ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் பெகுராவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பெகுராவுக்கு எதிராக கிரிமினல் சதி, ஊழல் மற்றும் மோசடி போன்ற குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனா சாதனை : 7 ஆயிரம் மீட்டர் கடலுக்குள் நீர்மூழ்கி கப்பலை செலுத்தியது.

சீனா சாதனை: 7 ஆயிரம் மீட்டர் கடலுக்குள் நீர்மூழ்கி கப்பலை செலுத்தியது

சீனா “ஜியோலாங்” என்ற நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளது. அதை 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செலுத்தி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நேற்று சீனாவில் உள்ள பசிபிக்கடலில் நடந்தது.

அதற்காக அந்த நீர்மூழ்கி கப்பல் 3 பேர் கொண்ட குழுவுடன் கிரேன் மூலம் கடலுக்குள் இறக்கப்பட்டது. அக்கப்பல் 5,067 மீட்டர் அதாவது 16,591 அடி ஆழத்தில் கடலுக்குள் பயணம் செய்து சாதனை படைத்தது.

இது வருகிற 2012-ம் ஆண்டில் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பயணம் செய்து சாதனை படைக்க வழி வகுக்கும் என நீர்மூழ்கி கப்பல் அதிகாரி வாங் பே தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஜப்பானின் “சிங்காய்” என்ற நீர் மூழ்கி கப்பல் 6500 மீட்டர் ஆழ கடலுக்குள் பயணம் செய்து சாதனை படைத்தது. கடந்த 1989-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதை முறியடிக்கவே சீனா தனது “ஜியோலாங்” நீர் மூழ்கி கப்பலை 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செலுத்தி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

பூர்ண தனுராசனம், பத்மாசனம், வஜ்ராசனம்.

உடல் உறுப்புகளை தூண்டும் பூர்ண தனுராசனம்.
உடல் உறுப்புகளை தூண்டும் பூர்ண தனுராசனம்

வட மொழியில் தனுஷ் என்றால் வில். பூர்ணம் என்றால் பூர்த்தி அல்லது முழுமை என்று பொருள். எனவே இந்த யோக நிலையில் ஒரு முழு வில்லை போன்று உடலை வளைக்க வேண்டும்.

செய்முறை:

உடல், வயிறு பூமியில் படுமாறு குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தலை, கழுத்து, தாடை, மார்பு, தொடைகள் மற்றும் முழங்கால்களை ஒரே நேரத்தில் பின்புறமாக வளைக்கவும். தாடையை தரையிலிருந்து மேலே எழுப்ப வேண்டும். அதே நேரத்தில் அடிவயிறு, கழுத்து, தலை ஆகியவற்றை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.

அதாவது தலை, தோற்பட்டை, மார்பு மற்றும் தொப்புள் பகுதிகள், உங்கள் இடுப்புப்பகுதிகள், தொடைகள், முழங்கால்களுக்கு அடுத்தபடியாக இருக்குமாறு கொண்டு வர வேண்டும். பாதங்களையும் முழங்கால்களையும் சேர்க்க வேண்டும். மேல் நோக்கிப் பார்க்கவும். கணுக்கால்களை பிடித்து வேகமாக இழுக்கவும்.

இப்போது மேலே பார்த்தபடி இருக்கவும். முதுகெலும்பை முடிந்தவரை வில்போல் வளைக்க வேண்டும். இதே நிலையில் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருக்கவும். தொடைகள், அடி வயிறு, மார்பு ஆகியவை தரையில் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

இதே நிலையில் ஆடாமல் அசையாமல் இருக்கவும். இதே நிலையில் இருப்பதை மெதுவாக அதிகரிக்கவும். குறைந்தது 5 வினாடிகளாவது இதே நிலையில் நீடிக்கவும். பிறகு மெதுவாக பழைய நிலைக்கு திரும்பவும்.

பலன்கள்:-

உடல் வலுவை கூட்டுகிறது. அரை வில் போன்ற நிலையில் இருப்பது, கிட்னி, சுரப்பிகள் மற்றும் மறு உற்பத்தி உடல் உறுப்புகளை தூண்டும்.


பத்மாசனம்.

பத்மாசனம்:

செய்முறை:

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது கால் தொடையின் மீதும், வலது காலை இடது கால் தொடையின் மீதும் வைத்து நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகி விடும்.

பயன்கள் :

இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்கபடும், கூன் முதுகு சரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.


வஜ்ராசனம்.

வஜ்ராசனம்

செய்முறை:

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம் இருக்கவும்.

பயன்கள்:

அஜீரணம், வயிற்றில் உள்ள கோளாறுகள் குணமாகும். முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.