Thursday, July 28, 2011

வைர கம்மல் - முத்து நெக்லசுடன் கண்கவர் உடைகளில் கலக்கிய பாக். மந்திரி ஹினா.


பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரியாக 34 வயதே ஆன இளம்பெண் ஹினா ரப்பானி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் கொள்கை குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச வேண்டும் என்பதால், இளம் வயது பெண்ணை எப்படி நியமிக்கலாம் என்று பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஹினா ரப்பானி இந்த எதிர்ப்புகளை கண்டு கதி கலங்கி நிலை குலைந்து போய் விடவில்லை. எந்த கொள்கை பற்றியும் தன்னால் விவாதிக்க முடியும் என்று அவர் நிரூபித்து வருகிறார்.

கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லி வந்த அவர் நேற்று பிரதமர் மன் மோகன்சிங், வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, சுஷ்மாசுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். அதோடு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களையும் துணிச்சலாக சந்தித்துப் பேசி எல்லாரது புருவத்தையும் உயர வைத்து விட்டார்.

இந்திய மூத்த தலைவர்களிடம் மிக இயல்பாக பேசியதால் எல்லாரது மனதிலும் ஹினா ரப்பானி தனி இடம் பிடித்து விட்டார். அதோடு கண்கவர் உடைகள் அணிந்தும் ஹினா எல்லோரையும் கவர்ந்து விட்டார். பார்த்த உடன் புன் சிரிப்பு, கையில் எப்போதும் கூலிங்கிளாஸ் சகிதமாக டெல்லியில் வலம் வந்த இவர் விலை உயர்ந்த பொருட்களையே பயன்படுத்தினார்.

இவர் வைத்திருந்த கைப்பையின் விலை 17 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ஹினா டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது நீலநிற உடை அணிந்திருந்தார். அந்த நிறத்துக்கு ஏற்ற வைர கம்மல், முத்துக்களால் ஆன நெக்லஸ் போட்டு இருந்தார்.

நேற்று காலை இந்திய தலைவர்களை சந்திக்க சென்றபோது உள்ளங் கால் முதல் உச்சிவரை நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். அந்த உடையில் பார்ப்பதற்கு ஹினா தேவதை போல காணப்பட்டார். மதியம் சாப்பிட வந்த போது பனீரென பச்சை நிற உடையில் வந்தார்.

நேற்றிரவு அவர் மிகவும் வித்தியாசமான தோல் ஆடை அணிந்திருந்தார். அந்த உடை மதிப்பு ரூ 46 லட்சம் என்று கூறப்படுகிறது. கோடீசுவர குடும்பத்தைச் சேர்ந்த ஹினா ரப்பானி வைர நகைகளையும் விதம், விதமாக அணிந்து வந்தார். நேற்று மதியம் சாப்பிட வந்தபோது வைர மோதிரம் அணிந்து வந்தார். விருந்தில் அதை ஹினா தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

சில லட்சம் மதிப்புள்ள அந்த மோதிரம் காணாமல் போனது பற்றி ஹினா கொஞ்சமும் வருத்தப்படவில்லை. சிரித்துக் கொண்டே மோதிரத்தை காணவில்லை என்றார்.

டெல்லியில் ஹினா அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டார். தந்தூரி பிரான், பதர் கபாப் மற்றும் பிரியாணியை அவர் ஒருபிடி பிடித்தார். அவருக்காகவே ஐதராபாத் இல்லத்தில் சிறப்பு சாலிமர் பிரியாணி தயாரிக்கப்பட்டது.

உபசரிப்பு, பணிவு, இயல்பான பேச்சு போன்றவை மூலம் இந்திய தலைவர்களை மட்டுமின்றி இந்தியர்களையும் ஹினா கவர்ந்து விட்டார். இதுவரை இந்தியா வந்து சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் யாரும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஹினா ரப்பானி மூலம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் புதிய நட்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி பிறந்த ஹினாவுக்கு பஞ்சாப் மாகாணத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. லாகூரில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் வைத்துள்ளார். எம்.எஸ்சி பட்டதாரியான இவர் தொழில் அதிபர் பெரோஸ் குல்சர் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

2002-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட இவர், பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் மிக, மிக வயதில் இளையவர். முதலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2008-ம் ஆண்டு தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி இவருக்கு போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து முசாபர்கர் தொகுதியில் போட்டியிட்டு 84 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலில் மந்திரி சபையில் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க மந்திரியாக இருந்தார்.

2009-ல் பட்ஜெட் உரை மீது இவர் பேசிய பேச்சு பாகிஸ்தான் தலைவர்களை பிரமிக்க வைத்தது. அழகும் அறிவும் நிரம்பிய அவர் தற்போது வெளியுறவு மந்திரி என்ற உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார். கடந்த 20-ந்தேதிதான் அவர் இந்த பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: