Friday, December 9, 2011

பரஞ்சோதி நீக்கம் : தமிழக அமைச்சரவை மாற்றியமைப்பு.



இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து பரஞ்சோதி நீக்கபட்டார்.

அத்துடன், முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

அமைச்சர் பொறுப்பில் இருந்து பரஞ்சோதி நீக்கப்பட்ட நிலையில், சமூக நலத்துறை பொறுப்பில் இருந்து செல்வி ராமஜெயம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன், பா.வளர்மதி ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை பொறுப்பு, பா.வளர்மதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சட்டம், நீதித்துறை மற்றும் சிறைத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதிக்கு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை வழங்கப்பட்டது.

பரஞ்சோதி மீது, 'சட்டப்படி திருமணம் செய்து வாழ மறுத்தல், கொலை மிரட்டல்’ உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவத்தின் எதிரொலியால், அவர் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

மத்திய அரசு கேரளாக்காரர்களின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது . - பெ.மணியரசன்.



எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளாவை கட்டுப்படுத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவி போல் நயவஞ்சகமாக நாடகமாடுகிறது. மத்திய அரசு கேரளாக்காரர்களின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்து தரைமட்டமாக்க மூர்க்கமாக முயல்கிறார்கள் கேரளாக்காரர்கள். இந்திய தேசியம் பேசும் காங்கிரசும், சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாக்காரர்களிடம் இனவெறியைத் தூண்டி அணையை உடைப்பதற்கான ஆயத்த பணிகள் செய்து வருகின்றன.

எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளாவை கட்டுப்படுத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவி போல் நயவஞ்சகமாக நாடகமாடுகிறது. மத்திய அரசு கேரளாக்காரர்களின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்த பிறகு முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் கேரள அரசும், மற்ற அரசியல் கட்சிகளும் கழிவறைத் தாளுக்குத் தரும் மதிப்பைக்கூட உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு அளிக்கவில்லை. 142 அடி வரை தண்ணீர் தேக்க விடாமல் தமிழகத்தைத் தடுத்துவிட்டார்கள். சிற்றணையை செப்பனிடவும் விடவில்லை. மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றை கள ஆய்வு செய்ய வைத்து, அந்த குழு அளித்த பரிந்துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதி திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப் போவதாக கேரள அரசு ஆசை வார்த்தை காட்டியுள்ளது. இப்போது அந்த மூடு திரையை நீக்கிவிட்டு அணையை உடைப்போம் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இதற்கு சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட 2.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைக் காரணம் காட்டுகிறார்கள். இதற்கு முன் 2001ல் இடுக்கியில் 4.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை அவர்கள் மறைக்கின்றனர். 2011 ஜனவரி 20ம் தேதி அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழு அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது.

கேரள காங்கிரஸ் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் பொய் உரைக்க கூச்சப்படாதவர்கள். புரளியை கிளப்ப அச்சப்படாதவர்கள். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போல் மோசடியாக பரப்புரைக் குறுந்தகடு தயாரித்து கேரளத்தில் ஊர் ஊராக போடச் செய்தார், முன்னாள் மார்க்சிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்.

இப்போது கேரளாக்காரர்கள் அந்த புரளியை ஒரு திரைப்படமாகத் தயாரித்து ”டேம் 999” என்ற பெயரில் பல மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு இந்திய அரசின் தணிக்கைத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறி வரும் பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. (1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குக் கூட அதற்கு நீர்வரத்து இல்லை. இந்த அணையை முழுக் கொள்ளளவும் நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே கேரளாக்காரர்களின் திட்டம்.

இத்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சி திட்டமே முல்லைப் பெரியாறு அணை வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்துவிடும் எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

தமிழகத்தில் தினமும் 700 டன் அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி, காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு போகின்றன. இவற்றை நிறுத்தினால் கேரளம் மூச்சுத் திணறி உயிருக்குப் போராட வேண்டிய நிலை ஏற்படும். தமிழக மணலை அன்றாடம் கொள்ளையடித்துக் கடத்திச் செல்லாவிட்டல் கேரளாவில் புதிய கட்டடங்கள் கட்ட வாய்ப்பு இல்லை.

சுமார் 30 லட்சம் கேரளாக்காரர்கள் தமிழகத்தில் தான் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

ஒருவர் ஓராண்டில் பயன்படுத்தும் தண்ணீரின் சராசரி அளவு 1700 கனமீட்டர். 30 லட்சம் கேரளாக்காரர்கள் ஓர் ஆண்டில் பயன்படுத்தும் தமிழகத் தண்ணீரின் அளவு 510 கோடி கனமீட்டர். முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் வெறும் 12.6 கோடி கனமீட்டர் மட்டுமே. (பழ.நெடுமாறன், தினமணி 30-11-2011).

தமிழக நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மின்சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட். இத்தனை வழிகளில் கேரளம் தமிழகத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான நன்றி உணர்ச்சி எதுவும் கேரளாக்காரர்களிடம் இல்லை.

தமிழர்களே, 1947 ஆகஸ்டு 15க்குப் பிறகு நாம் இழந்துள்ள உரிமைகளை எண்ணிப் பாருங்கள். வெள்ளைக்காரன் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலை நாட்டி 1924ல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்து வைத்தான். டெல்லி ஆட்சியில் அது செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 லட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

கடந்த 1895ல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 999 ஆண்டுகளுக்கு அது தமிழகத்திற்கு உரியது என்று ஒப்பந்தம் செய்து வைத்தான் வெள்ளைக்காரன். இன்று அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள். அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணையால் பாசனம் பெற்ற 2 லட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

1950க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டது ஆந்திரா அரசு. இப்போது கடைசி எல்லையான கணேசபுரத்திலும் அணை கட்டுகிறது ஆந்திரா. இனி பாலாற்றில் இருந்து கசிவு நீர் கூட தமிழகத்துக்கு வராது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று மூன்றையும் இழந்துவிட்டால் பாசனத்திகு மட்டும்மல்ல குடிநீருக்கு கூட தமிழகத்தில் தண்ணீர் கிடையாது.

1950களில் மொழிவாரி மாநிலம் அமைத்த பொழுது பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஊர்களையும், நகரங்களையும், இயற்கை வளங்களையும், ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம் பறிகொடுத்தோம். 1974ல் நமது கச்சத்தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்தது இந்தியா.

சிங்களப் படையாட்கள் சற்றொப்ப 550 தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல இந்தியா துணை நின்றது. இனியும் தமிழக மீனவர்களை கொல்லவும், தமிழகக் கடற்பரப்பில் தமிழர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்கவும் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கப் போகிறது. 2008-2009 ஆண்டுகளில் நம் உறவுகளான ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கும் ஈழ விடுதலைப் போரை வீழ்த்துவதற்கும் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்றது இந்தியா. இனியும் பொறுப்பது கூடாது தமிழர்களே, எரிதழல் நெஞ்சில் ஏந்துங்கள்!

உலகின் மூத்த இனமான தமிழினம் நம் தலைமுறைக் காலத்தில் அழிந்து விட நமது செயலின்மை காரணமாக அமைந்து விடக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பதற்குரிய எல்லா வழிகளும் மூடப்பட்டுவிட்டன. இந்திய அரசு, நீதித்துறை, இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்தும் நம்மைக் கைவிட்டுவிட்டன. பகைவனைப் பணிய வைத்து உரிமைகளைக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

கேரளாவுக்கு செல்லும் எல்லா பாதைகளையும் மூடி, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதார முற்றுகையை உருவாக்குவோம். இதற்கான பரப்புரை இயக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 07.12.2011 (இன்று) தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடங்குகிறது. இதில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள வாழ் தமிழர்களின் சொத்துகள் குறித்த விவரம் சேர்க்கும் மலையாள அமைப்புகள்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் கேரளாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்களைக் கணக்கெடுக்கும் விஷமனத்தனமான வேலையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளனவாம்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக கேரள எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இரு மாநிலங்களில் வர்த்தக உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கம்பம், குமுளி பகுதியில் தொடர்ந்து நிலவும் பதற்றத்தால் கேரள செல்லும் பல வாகனங்கள் செங்கோட்டை வழியாக செல்கின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் வாழும் தமிழர்களின் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் தமிழர்கள் கடை வைத்துள்ளனரா, அல்லது வீடு உள்ளதா, ஒவ்வொருவருக்கும் கேரள மாநிலத்தில் எவ்வளவு சொத்துகள் உள்ளன, என்பதை அங்குள்ள அமைப்புகள் திரட்டி வருகின்றன.

குமுளி, வண்டிபெரியார், பீர்மேடு ஏலப்பாறை, பகுதியில் வசிக்கும் தமிழர்களின் சொத்துப்பட்டியல் அங்குள்ள சில மலையாளிகள் அமைபபுகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடை நடத்தினால் அதற்கான உரிமம், மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா போன்ற விபரங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கேராளவில் வசிக்கும் தமிழர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு எதற்கு என்று தெரியவில்லை. இப்படி தமிழகத்தில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் தமிழர்களை விட மலையாளிகளுக்கே அதிக அளவில் சொத்துக்ககள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.