Saturday, June 11, 2011

சிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன் !


16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!

யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் ரூ.4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.

பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் ரூ.33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும் டெண்டரைக் கைப்பற்றினார். கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார்.

வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், ரூ. 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் ரூ.270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் ரூ.24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.

சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள்.

தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள்.

மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது.

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன்.

ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!

நன்றி - ஜூனியர் விகடன்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பண பரிமாற்றம்: சிபிஐ-அமலாக்கப் பிரிவு குழு லண்டன் பயணம்.


முறைகேடாக 2 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது கோடிக்கணக்கான லஞ்சப் பணம் ஐரோப்பிய நாடுகள் வழியாக பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரிக்க 2 சிபிஐ அதிகாரிகள், 2 அமலாக்கப் பிரிவுகள் அடங்கிய குழு நாளை லண்டன் செல்கிறது.

முறைகேடான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் துறை அறிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக ரூ. 30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியது.

இதற்கிடையே 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது இங்கிலாந்து உள்பட சில ஐரோப்பிய நாடுகள் வழியாக பண பரிமாற்றம் நடந்தது தெரிய வந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் இடையே இந்த பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

குறிப்பாக வரி ஏய்ப்புக்கு பேர் போன ஐல் ஆப் மேன் தீவுகள் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் உள்ள வங்கிகள் வழியாக இந்தப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பான ஆதாரங்களை திரட்ட இந்த 4 பேர் கொண்ட விசாரணை குழு நாளை இங்கிலாந்து செல்கிறது. இவர்களுக்கு உதவ இங்கிலாந்து நிதித்துறை-காவல்துறை ஆகியவை தயாராக உள்ளன.

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ளவர்கள் மீதான பிடி மேலும் இறுகும் என்று தெரிகிறது.

முன்னதாக சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தியதில் இந்த பணப் பரிமாற்றங்கள் குறித்து பல தகவல்கள் கிடைத்தன. அப்போது லண்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தப் பணப் பரிமாற்றங்கள் நடந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து முதலில் லண்டன் செல்லும் இந்தக் குழு பின்னர் தேவைப் பட்டால் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நேரில் சென்று விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

இது தவிர அமலாக்கப் பிரிவின் மேலும் இரு குழுக்கள் சைப்ரஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அடுத்த சில வாரங்களில் செல்ல இருக்கின்றன. அங்கும் ஸ்பெக்ட்ரம் பணம் பாய்ந்துள்ளது உறுதியாகியுள்ளதால், அது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

ரூ.7,877.82 கோடி லாபம் ஈட்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாலை அமைக்கும் திட்டப் பணிகளை தனியாருக்கு அளித்ததன் மூலம் ரூ. 823.50 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கான அனுமதியை அளித்ததன் மூலம் இத்தொகை ஈட்டப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலம் ஆணையத்தின் செலவு குறைந்து வருமானம் அதிகரித்துள்ளது.

அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் இதுபோல திட்டப் பணிகளை தனியாருக்கு அளிப்பதன் மூலம் ரூ. 31,352 கோடியை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரையில் ஈட்டப்பட்ட தொகையின் மதிப்ப ரூ. 7,877.82 கோடியாகும்.

கால்வாயில் கிடந்த 9 பெண் சிசுக்களின் உடல்கள்.

மகாராஷ்டிரத்தில் பீட் மாவட்டத்தில் ஒரு கால்வாயில் 9 பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்தன.

ஆனால், 2 சிசுக்களின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்த உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அவை 4 மாதம், 5 மாதமே ஆன சிசுக்கள் என்று தெரியவந்துள்ளது.

வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், சிசுவை அபார்ஷன் செய்து, உடல்களை கால்வாயில் போட்டுள்ளனர். இந்த பாதக செயலை செய்தது ஏதாவது மருத்துவமனையா அல்லது தனி நபர்கள் யாருமா என்று தெரியவில்லை.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்திலேயே மிகக் குறைவான பெண் குழந்தைகள் உள்ள மாவட்டம் பீட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 1000 ஆண் குழந்தைகளுக்கு 801 பெண் குழந்தைகளே உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 1000 ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள் என்ற நிலை உள்ளது.

இந்த மாவட்டத்தில் ஸ்கேன் செய்து வளரும் சிசுவின் பாலினத்தை அறிந்து அது பெண் குழந்தையாக இருந்தால் அதை அபார்ஷன் செய்வது மிக அதிகமாக உள்ளது.

தயாநிதி - கலாநிதி சொத்தில் 2130 கோடி மாயம் !


மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை சிறைக்கு அனுப்புமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் மாறன் சகோதரர்களின் சொத்துக்களில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாவை மாயமாக மறைய வைத்திருக்கின்றது!

அதாவது, கடந்த 10 நாட்களுக்குள் அவர்களது சொத்து மதிப்பில் 2000 கோடி ரூபா குறைந்திருக்கின்றது.

மாறன் சகோதரர்களின் நிகர வர்த்தகச் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பவை இரண்டு நிறுவனங்கள். ஒன்று, சன் டீ.வி. நெட்வேர்க். மற்றையது, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ். இந்த இரு நிறுவனங்களின் மொத்த பங்குகளிலும், மாறன் சகோதரர்களின் வசமிருப்பவை எவ்வளவு?

சன் டீ.வி. நெட்வேர்க் – 77%. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் – 38.61%.

இவ்விரு நிறுவனங்களின் பங்குகளும், முன்பு பங்குச் சந்தையில் நல்ல கிராக்கியுடன் இருந்தன. அதற்குக் காரணம், தயாநிதி மாறன் மத்திய அமைச்சர், அவரது தாத்தா தமிழக முதல்வர். இதனால், போட்டி நிறுவனங்களை வியாபார ரீதியாக வீழ்த்தக்கூடிய அரசியல் செல்வாக்கு.

முதலில் தமிழக ஆட்சி கைவிட்டுப் போயிற்று.

அப்படியிருந்தும், தயாநிதி மாறன் மத்திய அரசில் செல்வாக்கான அமைச்சராக இருந்ததால், பங்குகள் நல்ல விதமாகத்தான் ட்ரேட் பண்ணிக்கொண்டிருந்தன.

இப்படியான நேரத்தில்தான் தயாநிதி மீதான பகீர் குற்றச்சாட்டுகள் வெளியாகின. வெளியான குற்றச்சாட்டுகள் இறுகவும் தொடங்கின. தயாநிதிமீது சி.பி.ஐ விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாத் திசையிலுமிருந்து வரத்தொடங்கின.

அடுத்த கட்டமாக, தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தயாநிதி தீகார்வரை போகக்கூடும் என்ற வதந்திகளும் எழுந்தன.

இந்த நிலையில் இரு நிறுவனங்களின் பங்குகளும் சரியத் தொடங்கின. அதில் முதலீடு செய்திருந்தவர்கள், தமது முதலீட்டை மாற்றத் தொடங்கினார்கள்.

இம் மாதம் (ஜூன்) 1ம் தேதி, பங்குச் சந்தை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 377.40க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 41.10.

இதன் பின்னர்தான் தயாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சூடு பிடிக்கத் தொடங்கின. இந்த வாரத்துக்கான பங்குச் சந்தை நேற்று (10ம் தேதி) மாலை மூடப்பட்டபோது, சன் டீ.வி. நெட்வேர்க் பங்குகள் ரூபா 307.15க்கு ட்ரேட் பண்ணின. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பங்குகளின் பெறுமதி ரூபா 34.05!

இதன் அர்த்தம் என்னவென்றால், மேற்படி இரு நிறுவனங்களின் புக்-வேல்யூவும் முறையே 19, 17 சதவீதங்கள் குறைந்துள்ளன. அவற்றில் மாறன் சகோதரர்களின் பங்குகள் முறையே 77, 38.61 சதவீதங்கள்.

மாறன் சகோதரர்கள், கடந்த 10 நாட்களில், தமது வர்த்தகச் சொத்தில் 2130 கோடி ரூபா தொகையை இழந்திருக்கின்றனர்.

இவ்விரு நிறுவனத்தின் பங்குகளும், பங்குச் சந்தை புரோக்கர்களிடையே ‘ஹாட்-பிக்” என்ற வகையில் கடந்த மாதத்தில் இருந்தன. இந்த மாதம் ‘எபவுட் கோல்ட்-ரேட்டட்” நிலைக்குச் சென்றிருக்கின்றன.

ஏதாவது அதிசயம் நடந்தால்தான், இவை பழைய நிலையை எட்டிப் பிடிக்க முடியும்!

வீட்டு வேலை செய்யும் பெண்களை விலைக்கு வாங்கி மனைவியாக்கி கொள்ளலாம் !


குவைத் , வீட்டில் பணி புரியும் பெண் பணியாட்கள் மேல் ஆசைப்படும் ஆண்கள் அவர்களை சட்டபூர்வமாக விலைக்கு வாங்கி அடிமை மனைவிகளாய் வைத்துக் கொள்ள சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குவைத்தை சார்ந்த பெண் அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சல்வா அல் முதைரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இணைய தளத்துக்கு அளித்த நேரலை பேட்டியின் போது சல்வா, குவைத் ஆண்களில் சிலர் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாட்களளின் அழகில் மயங்கி, தவறாக நடந்து கொள்வதைத் தடுக்க அப்பெண்களை விலைக்கு வாங்கி இரண்டாம் தர அல்லது அடிமை மனைவிகளைப் போல் வைத்துக் கொள்ள சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார். மேலும், குவைத் ஆண்கள் விபசாரம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்பதாலேயே இத்தகைய யோசனையைத் தான் கூறுவதாகத் தெரிவித்தார்.

தற்போது குவைத்தில் வீட்டு வேலைகளுக்கு பணிப்பெண்கள் வேண்டுவோர் அதற்கென உள்ள ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களை அணுகுவது போல், இதற்கும் தனி நிறுவனங்களை அமைக்கலாம் என்று கூறினார். செச்னியா போன்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பெண்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.

எலி “ஸ்டெம் செல்” மூலம் மாரடைப்புக்கு சிகிச்சை.

எலி “ஸ்டெம் செல்” மூலம் மாரடைப்புக்கு சிகிச்சை: இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை

சமீப காலமாக மாரடைப்பு நோய்க்கு பலர் பலியாகி வருகின்றனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு இருதய செல்கள் அழிவதால் ரத்த ஓட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததுதான் காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே இருதய செல்கள் அழிவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க அவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது எந்திர தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் மாரடைப்பு ஏற்பட காரணமான அழிந்து வரும் செல்களை மீண்டும் வளர செய்ய பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த பால் ரிலே குழுவினர் எலியின் இருதயத்தில் உள்ள ஸ்டெம் செல்கள் மூலம் மனிதர்களின் மாரடைப்பை தடுக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர்.

எலியின் இருதயத்தில் உள்ள தைமோசின் பேடா 4 என்ற மூலக்கூறுடன் கூடிய ஸ்டெம் செல் இதற்கு பயன்படும் என தெரிய வந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட எலிக்கு உடல் நலத்துடன் கூடிய எலியின் ஸ்டெம் செல்லை செலுத்தி இந்த சிகிச்சை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அதே முறையில் மனிதர்களுக்கும் சிகிச்சை அளித்து மாரடைப்பு நோயை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கலைஞர் டி.வி.'க்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சமா - கடனா?

கலைஞர் டி.வி.'க்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சமா - கடனா? உரிய ஆவணங்களை வழங்கும்படி சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, அந்த துறையின் உயர் அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், கலைஞர் டி.வி.யின் பங்குதாரரும் தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கனிமொழி எம்.பி. மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டிலும் பின்னர் டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலருடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக பயன் அடைந்த டி.பி. குரூப் நிறுவனத்தின் உரிமையாளரான சாஹித் பல்வா, அவருடைய துணை நிறுவனங்களான குசேகான் புரூட்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சமாக வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. ஆனால், அது லஞ்சம் அல்ல, கடன் பணம் என்று எதிர் தரப்பில் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், குசேகான் புரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோருக்கு ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வாதாடிய வக்கீல், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட அந்தப் பணம் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடனாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பாரிகோக், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான அசல் ஆவணங்களை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

பிரதான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. தனி கோர்ட்டு, தொடர்புடைய அந்த ஆவணங்களை விசாரணை அதிகாரி மூலம் டெல்லி ஐகோர்ட்டுக்கு கொடுத்து அனுப்பும்படி அந்த உத்தரவில் நீதிபதி பாரிகோக் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற இரு முக்கிய பிரமுகர்களான சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகிய இருவரும், சி.பி.ஐ. தனி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர்.

அதில், டி.பி. ரியாலிட்டி குழும கூட்டு நிறுவனமான எடிசலாட் டி.பி. மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எடிசலாட் நிறுவனங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை செல்ல அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தனர். தங்கள் நிறுவன வர்த்தகம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

மனுவை விசாரித்த சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி, "இருவரும் மிகவும் அற்பமான கோரிக்கைகளை தாக்கல் செய்து இருப்பதாக'' கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் தங்கள் பணபலத்தால், அரசு நிர்வாகத்தை தங்கள் இஷ்டம்போல் வளைக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் இருவருக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.

சமச்சீர் கல்வி வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு "அப்பீல்”


தமிழகத்தில் பள்ளிக் கூடங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இதற்காக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த போதே சட்டசபையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு எதிர்க்கவில்லை. பாடத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த மனுக்களை விசாரித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார்.

2011-12-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும், அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட்டின் இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் நேற்று இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கோர்ட்டு தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வக்கீல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அரசு வக்கீல்கள் டெல்லி விரைந்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று காலை டெல்லி சென்றார்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்து 15-ந்தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.கோர்ட்டு நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் 15-ந்தேதி திட்டமிட்டப்படி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்னா ஹசாரே மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டவர் - திக்விஜய்சிங்.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தாக்குதல் தொடுத்துள்ளார் சமூக ஆர்வலரும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவின் முக்கிய உறுப்பினருமான அன்னா ஹசாரே.

இதையடுத்து அன்னா ஹசாரே தான் மனநலம் பாதிக்கப்பட்ட அனுபவமும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அனுபவமும் உள்ளவர் என்று திக்விஜய் சிங்கும் பதிலடி தந்துள்ளார்.

முன்னதாக அன்னா ஹசாரேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக திக்விஜய் சி்ங் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஹசாரேவின் உண்ணாவிரதப் பந்தலில் இடம் பெற்றிருந்த பாரத மாதாவின் படம் ஆர்எஸ்எஸ் வழக்கமாக பயன்படுத்தும் படம் தான் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹசாரே, புனேவில் யெரவாடா பகுதியில் ஒரு மன நல மருத்துவமனை உள்ளது. அதில் திக்விஜய் சிங்கை சேர்க்கலாம் என்றார்.

இதற்கு பதில் தந்துள்ள திக்விஜய் சிங், ஹசாரே மீது நான் மதிப்பு கொண்டவன். இப்போதும் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. எனக்கு மென்டல் ட்ரீட்மென்ட் தேவைப்பட்டால் எந்த மருத்துவமனைக்குப் போவது என்பது குறித்து நான் முடிவு செய்து கொள்வேன். ஏற்கனவே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஒருவரிடம் (ஹசாரே) எனக்கு அறிவுரை தேவையில்லை என்றார்.

நன்கொடை அளித்தோர் விவரம்-ராம்தேவ் வெளியிட வேண்டும்:

முன்னதாக திக்விஜய் சிங் நிருபர்களிடம் பேசுகையில், பாபா ராம்தேவ் சிங்கின் அறக்கட்டளைக்கு உள்நாடு, மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பேர் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணம், இந்திய அரசுக்கு அறிவிக்கப்படாமல், மறைமுகமான ஹவாலா வழியில் அறக்கட்டளைக்கு வந்திருக்கிறது. இதனால் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ராம்தேவின் அறக்கட்டளை பற்றி மத்திய அரசின் நிதி, அமலாக்கப் பிரிவினர் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனவே ராம்தேவ் தனது அறக்கட்டளைக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.

பாபா ராம்தேவ் தனது போராட்டத்தை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடத்தலாம். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட்டு விட்டால் நல்லது.

காந்தி சமாதியில் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனமாடியது, அவரது தகுதிக்கு ஏற்புடையது அல்ல என்றார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ராம்தேவ்:

இந் நிலையில் 7 நாள் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் நேற்று வலுக்கட்டாயமாக டெஹ்ராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடரும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் உணவு உட்கொள்ள மருத்து வருகிறார். இதையடுத்து அவரது உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ரவிசங்கருடன் பேசினார். ஆனால், இனிமேல் ராம்தேவுடன் மத்திய அரசு நேரடியாக பேச்சு நடத்தாது என்று தெரிகிறது.

இலங்கைத் தமிழினத்தை காட்டிக்கொடுத்த ஜெயலலிதாவின் செயலை நாட்டிற்குக் காட்டுவோம் : திமுக.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,

8.6.2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ்ந்திட அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் அனைவரும் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டு முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட அரசினரின் தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழகம் முழு மனதோடு ஆதரிப்பதோடு, அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில் தேவையில்லாமல் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அரசையும், கழகத் தலைவர் கலைஞர் அவர்களையும் ஜனநாயக மரபுகளுக்கு மாறாகவும், கருத்துக்குக் கருத்து என்ற முறையில் எதிர்க் கருத்தை எடுத்து வைத்திட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் - ஒன்றுபட்ட உணர்வோடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் கடுமையாகத் தாக்கி விரோத உணர்வை வெளிக்காட்டிப் பேசியதற்கு இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறத அதே நேரத்தில்,

தமிழகச் சட்டப்பேரவையில் 16.04.2002 அன்று இதே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்போது, கொண்டு வந்த தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றம் கூறியதையும், 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கை தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள் தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதை இந்த உயர்நிலைச் செயல் திட்டக் குழு தமிழ் உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி.


திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போல குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைய உங்கள் தீர்மானத்தில் அது குறித்து ஏதும் குறிப்பிட வில்லையே?.

பதில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.

கேள்வி: 'கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைக் குறிக்கிறது?.

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி: காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.

பதில்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி- அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது.

கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் பிரச்சனை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?

கேள்வி: டெல்லியில் குலாம்நபிஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர் களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.

கேள்வி: ஜுலை மாதத்தில் நீங்கள் கூட்டும் பொதுக்குழுவில் திமுக, காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

பதில்: நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

கேள்வி: பாஜகவுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?

பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.

கேள்வி: அடுத்து சிபிஐ தாக்கல் செய்ய உள்ள 3வது குற்றப் பத்திரிகையிலே தயாநிதி மாறனின் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். சிபிஐ இதை 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி: எதிர்க்கட்சிகள் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே, ஒரு கட்சித் தலைவராக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: ராஜினாமா செய்ய வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதி மாறனை ஆதரித்து கருத்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.

பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப் போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.

கேள்வி: இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.

கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.

கேள்வி: ராசாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். அவர்கள் தான் இந்த விஷயத்தை வெளியிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உங்கள் கட்சித் தொண்டர்களே வெளியே பேசுகிறார்களே?

பதில்: எந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்?.

கேள்வி: டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?

பதில்: போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.

கேள்வி: போபர்ஸ் வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும், இப்போது 2ஜி வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

பதில்: ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.

கேள்வி: உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?

பதில்: உயர் நீதிமன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா?. அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?.

கேள்வி: உங்கள் தீர்மானத்தில் சிபிஐயை கண்டித்திருக்கிறீர்கள். சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.

பதில்: நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?

பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.

கேள்வி: நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நிறுத்தி வைத்ததைக் கண்டித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்துவதாக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் தற்போது கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு பொதுக் குழுவைக் கூட்டுவோம். அந்தப் பொதுக்குழுவில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி: நிருபமாராவ், சிவசங்கர்மேனன் ஆகியோர் இலங்கை சென்று இருக்கிறார்கள். பல முறை அங்கே போய் விட்டு வந்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லையே?

பதில்: இது செய்தி

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

தயாநிதி - 2ஜி - தோண்டத் தோண்ட பூதம் !


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார்.

தினகரன் நாளிதழில், "வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின.

அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பத்தில், "தயாநிதியைக் கட்சியை விட்டே தூக்க வேண்டும்" என்றுகூட திமுகவின் உயர்மட்டத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, தயாநிதி மத்திய அமைச்சரைவியில் இருந்து விலக, அவரின் இடத்துக்கு ஆ.ராசா வந்தார்.

தாமிருந்த இடத்தில் மற்றொருவரா; எப்படிச் சகிப்பார் தயாநிதி? தயாநிதிக்குத் தான் இத்துறையில் எப்படியெல்லாம் முறைகேடு செய்ய முடியும் என்று தெரியும்.

பதவியேற்ற சூட்டோடு, திமுக தலைமையைக் குஷிப்படுத்த, "தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது" எனக் குற்றம் சுமத்தினார் ஆ.ராசா.

திமுகவுக்கு எதிராக, "ரூ. 60,000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்" எனத் தமிழக மக்களின் வரவேற்பறைக்கு தொலைக்காட்சி மூலம் கொண்டு சென்று அறிமுகப்படுத்தி - திணித்தது கலாநிதி-தயாநிதி கூட்டணி. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் சன் டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் விலாவாரியாகச் செய்தி வெளியிட்டு நாறடித்தது.

இந்நிகழ்விற்கு பின்பே அதுவரை எதுவும் தெரியாதிருந்த வடநாட்டு அரசியல்வாதிகள், பத்திரிகைகள் தங்களது கவனத்தை ஸ்பெக்ட்ரம் பக்கம் திருப்பினார்கள்.

ராசாவின் பதவிக் காலத்தில் ஓருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, உச்சநீதிமன்ற உத்தரவால் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் கடைக்கோடி மக்கள்வரை அதைக் கொண்டு சேர்த்த பெருமை, சன் குழுமம் போன்ற காட்சி ஊடகங்களைச் சாரும்.

குடும்பக் கலகத்தால் சன் டிவிக்குப் போட்டியாகப் போர்க்கால அடிப்படையில் அதிரடியாகக் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. அதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற வினாவுக்கு விடையாகத்தான் இப்போது கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார்.

திமுகவுக்கு எதிராகத் தாம் பறித்த குழியில் தாமே விழ நேரிடும் என தயாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். tragedy of tragedy ஆக, "ஸ்பெக்ட்ரம் ஊழல்" என முழக்கிய தயாநிதி மீதே ஸ்பெக்ட்ரம் தொடர்பான அறுநூறுகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு பூமராங்காகத் திரும்பி வந்து இப்போது தாக்குகின்றது. ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கத் தாமதப்படுத்திய தயாநிதி, அந்நிறுவனம் மலேஷியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியவுடன் ஸ்பெக்ட்ரம் உரிமம் விரைந்து வழங்கப்பட்டதாகவும் அதற்கு விலையாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களால் சன் குழுமத்தின் 'சன்டைரக்ட்' நிறுவனத்தில் அறுநூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப்ரஸாந் பூஷன், தயாநிதி மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி வழக்கொன்றும் தொடுத்துள்ளார்.

"அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்று கிராமப் பெருசுகள் சொல்வதுபோலவும் "தோண்டத் தோண்ட பூதம்" என்பது போலவும் மேலும் பல புகார்கள் தயாநிதி மீது எழுகின்றன. தயாநிதி தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சன் டிவி தலைமை அலுவலகத்துக்கு அதாவது அறிவாலயத்துக்கு 323 பிஎஸ்என்எல் இணைப்புகள் ரகசியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் புகார் எழுந்துள்ளது.

ஈழத்தில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது கூட டெல்லிக்குச் செல்ல மனமில்லாத கருணாநிதி, ஆ.ராசாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதில் குறியாக இருந்து, டெல்லி சென்று, அனைத்து வகை மிரட்டல்களையும் ஆயுதங்களாக்கிப் போராடினார். ஆ.ராசாவின் திறமையால் ஸ்பெக்ட்ரம் வெடித்தது. இப்போதும் ஸ்பெக்ட்ரம் தொடர்புக்காகச் சிறையிருக்கும் கனிமொழியைப் பார்ப்பதற்காகவே டெல்லி சென்று வந்தார். கருணாநிதியின் டெல்லிப் பயணங்கள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாகவே அமைந்து விட்டன. மொத்தத்தில் கருணாநிதியின் டெல்லிப் படையெடுப்பு, "மலையும் மலை சார்ந்ததும் வயலும் வயல் சார்ந்ததும்" என்பது போல "ஸ்பெக்ட்ரமும் ஸ்பெக்ட்ரம் சார்ந்ததும்" என்றாகிப் போனது, இது அவரது அரசியல் வாழ்வில் கறுப்பு அத்தியாயமே!

ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு எழுந்த போது, "ராசா குற்றமற்றவர்" என நற்சான்று வழங்கிய கருணாநிதி, ஆபத்துக்குக் கை கொடுக்கும் 'தலித்' ஆயுதத்தைக் கையில் எடுத்தபோது அதன் முனை முறிக்கப்பட்டது. கனிமொழி மீது வழக்கு வந்தபோது, பெண் என்றும் தம் குடும்பத்தின் மீதான பழிவாங்கல் என்றும் கருணாநிதி புலம்பினார். கொஞ்ச காலம் ஊடலாக இருந்து, சன் டிவி இலாபத் தொகையில் தம் பங்காகக் கிடைத்த 100 கோடியைக் கையில் வாங்கிக் கொண்டு, கண்கள் பனிக்க இதயம் இனிக்க மீண்டும் சேர்த்துக் கொண்டதோடு, ஜவுளித் துறை அமைச்சராக்கிய பேரன் தயாநிதியையும் அதே ஸ்பெக்ட்ரம் சுற்றி வளைத்துள்ளது. இப்போது என்ன சொல்லப் போகிறாரோ கருணாநிதி.

வளம் கொழிக்கும் துறைகளுள் ஒன்றான தொலைத் தொடர்புத் துறையில் வெளியே தெரியாமல் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கலாம்; அது காமதேனு, கற்பக விருட்சம்; விரும்பிய அளவு கறக்கலாம் என்பதை அறிந்து கொண்டதால்தானோ என்னவோ, அத்துறையைப் பெற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. காங்கிரஸ் அமைச்சரான சுக்ராம் காலம் முதல் பா ஜ கட்சியைச் சேர்ந்த ஜக்மோகன், பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவைச் சேர்ந்த ப்ரமோத் மஹாஜன், அடுத்து வந்த அருண்ஷோரி என, அத்துறைக்கு அமைச்சராக வந்த யாரும் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2010, டிசம்பர் 8ஆம் தேதி இப்படிச் சொன்னது:

"இந்தப் பிரச்சனையில் இழப்பு 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமன்று. இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்கள் தீர்ப்பளிக்க விரும்பவில்லை. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைபெற்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிபிஐதான் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும்."

ஆ. ராசாவுக்கு முன்னர் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த தயாநிதி, அதற்கு முன் பாஜக அரசில் இத்துறை அமைச்சர்களாக இருந்த ஜக்மோகன், ராம் விலாஸ் பஸ்வான், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி மற்றும் சில காலம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தை தன் பொறுப்பில் வைத்திருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இவர்களில் அருண்ஷோரியின் பதவிக்காலத்தில்தான், "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததே இந்தக் கொள்கைதான் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வர என்ன காரணம்?

ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மட்டுமின்றி அத்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடு பாராமல் நீதிமன்றத்தில் நிறுத்திச் சட்டப்படி உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதில்தான் இந்திய ஜனநாயக மாண்பின் மேன்மையும் உயிர்ப்பும் இருக்கின்றன என்பதை அரசு மறக்க வேண்டாம்.

inneram.com - ரஸ்ஸல்.