Saturday, June 11, 2011

கலைஞர் டி.வி.'க்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சமா - கடனா?

கலைஞர் டி.வி.'க்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சமா - கடனா? உரிய ஆவணங்களை வழங்கும்படி சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, அந்த துறையின் உயர் அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், கலைஞர் டி.வி.யின் பங்குதாரரும் தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கனிமொழி எம்.பி. மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டிலும் பின்னர் டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலருடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக பயன் அடைந்த டி.பி. குரூப் நிறுவனத்தின் உரிமையாளரான சாஹித் பல்வா, அவருடைய துணை நிறுவனங்களான குசேகான் புரூட்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சமாக வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. ஆனால், அது லஞ்சம் அல்ல, கடன் பணம் என்று எதிர் தரப்பில் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், குசேகான் புரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோருக்கு ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வாதாடிய வக்கீல், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட அந்தப் பணம் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடனாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பாரிகோக், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான அசல் ஆவணங்களை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

பிரதான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. தனி கோர்ட்டு, தொடர்புடைய அந்த ஆவணங்களை விசாரணை அதிகாரி மூலம் டெல்லி ஐகோர்ட்டுக்கு கொடுத்து அனுப்பும்படி அந்த உத்தரவில் நீதிபதி பாரிகோக் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற இரு முக்கிய பிரமுகர்களான சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகிய இருவரும், சி.பி.ஐ. தனி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர்.

அதில், டி.பி. ரியாலிட்டி குழும கூட்டு நிறுவனமான எடிசலாட் டி.பி. மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எடிசலாட் நிறுவனங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை செல்ல அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தனர். தங்கள் நிறுவன வர்த்தகம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

மனுவை விசாரித்த சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி, "இருவரும் மிகவும் அற்பமான கோரிக்கைகளை தாக்கல் செய்து இருப்பதாக'' கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் தங்கள் பணபலத்தால், அரசு நிர்வாகத்தை தங்கள் இஷ்டம்போல் வளைக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் இருவருக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.

No comments: