Wednesday, March 9, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-3.


ஜூலை 29, 1987ஆம் வருடம். ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக 40,000 இந்தியராணுவ வீரர்களைக் கொண்ட IPKF – அமைதி காக்கும் இந்தியப் படை அனறே இலங்கை விரைகிறது. அதன் முதல் கமாண்டராக ஜெனரல் ஹர்கிரத் சிங் பொறுப்பு ஏற்கிறார். இனி அவரது வார்த்தைகளில்,

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே இடையிலான, இந்திய இலங்கை உடன் பாட்டின்படி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும். இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும்.அனைத்து போராளிக்குழுக்களும், இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் வசம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும். துவக்கத்தில் IPKF கமாண்டரான என்னிடம் கூறப்பட்ட அணுகுமுறை இது தான்.

எனவே நான் விடுதலைப்புலிகளிடமும், அதன் தலைவர் பிரபாகரனுடனும் நல்ல அணுகுமுறையிலும், நட்புமுறையிலும் பழகினேன். தினமும் அவர்களுடன் உட்கார்ந்து கலந்து பேசி டீ சாப்பிடும் அளவிற்கு எங்கள் உறவு சுமுகமாக இருந்தது. ஆனால், பிறகு நடந்தது வேறு. விடுதலைப் புலிகளிட மிருந்து மட்டுமே ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டன. மற்ற போராளிக் குழுக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன், மேற்கொண்டு ம் இந்திய அரசால் அவர்களுக்கு ஆயுதங்கள் தரப்பட்டன. அந்த போட்டி குழுக்கள், புலிகளை அழிக்கும் பணியில் ஊக்குவிக்கப்பட்டன.

இவ்வாறு அமைதி காக்க வேண்டிய படையை, டபுள் கேம் (இரண்டு வித ஆட்டங்களை) ஆடும்படி இந்திய அரசியல் தலைமை எங்களுக்கு உத்திர விட்டது. எனவே, விடுதலைப் போராளிகளை அழிக்கும் பணியில் IPKF படை துணை போக ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இதைப்பற்றி வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தபோது, அதை இந்திய அரசு சட்டை செய்ய வில்லை. மாறாக,இந்திய அமைதி காக்கும்படைக்கு இன்னுமொரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிளவையும், அவ நம்பிக்கையையும் உண்டாக்கும் வேலை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை பலவீனமாக்கி அழித்து ஒழிக்கும்படி அமைதி காக்கும் படைக்கு தில்லியிலிருந்து உத்திரவு கொடுக்கப்பட்டது

புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பது நடவாத காரியம் – தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக்கு புலிகளையே நம்பி இருக்கிறார்கள் என்பது எனக்கு (ஜெனரல் ஹர்கிரத் சிங் ) நன்றாகப் புரிந்தது. இதை நான் அப்போதைய இந்தியத் தூதர் ஜெ.என்.தீக்ஷித் திடம் சொன்னபோது அவர் அதை ஏற்பதாக இல்லை. மாறாக, “ஜெனரல் – நான், பிரதமர் ராஜீவ்காந்தியுடன் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளில் கிடைத்துள்ள உத்திரவுகளின்படி நான் சொல்வதை நீங்கள் ஏற்று செயல்பட வேண்டும். புலிகளிடம் சமாதானப் பேச்சுநடத்துவதைக் கைவிட்டு விட்டு மிரட்டி அடிபணிய வைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாக தீக்ஷித் திடமிருந்து 1987 செப்டம்பர் மாதம் 14/15 தேதி இரவு கிடைத்த உத்திரவு, என்னை நிலை குலையச் செய்தது.

நான் பிரபாகரனையும் மற்றவர்களையும், அவ்வப்போது தோன்றும் பிரச்சினை களைப்பற்றி விவாதித்து சுமுகமுடிவுகளை எடுக்க, தேவைப்படும்போது இரவு நேரங்களில் 12 மணி வாக்கில் சந்திப்பது வழக்கம்.

1987 செப்டம்பர் 14/15ந் தேதி இரவு, அப்போது இலங்கையில் இந்திய தூதராக இருந்த ஜெ.என்.தீக்ஷித் “பேச்சு வார்த்தை நடத்த வரும்போது பிரபாகரனை கைது செய்யுங்கள் - முடியவில்லை என்றால் - சுட்டு வீழ்த்துங்கள். என்று என்னிடம் கூறினார்.

அதற்கு நான், “பிரபாகரன் இந்திய ராணுவத்தின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த வருகிறார். வெள்ளைக்கொடி ஏந்தி பேச்சு வார்த்தை நடத்த வருபவர்களை சுடுவது ராணுவத்திற்கு இழுக்கு. அத்தகைய செயல்களில் ஈடுபட நாங்கள் தயாரில்லை. மேலும் நீங்கள் போடும் உத்திரவை நான் ஏற்க வேண்டிய அவசியமில்லை- எனக்கு உத்திரவு போட வேண்டியவர்கள் ராணுவத் தலைமையகத்தில் இருக்கிறார்கள் என்றேன்.

எனக்கு ராஜீவ் உத்திரவு கொடுத்திருக்கிறார், என்றார் தீக்ஷித்.

நான் “உங்கள் உத்திரவை ஏற்பதற்கில்லை. என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

ஜெனரல் ஹர்கிரத்சிங் , இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய தளபதிபொறுப்பில் இருந்தவர். ரிடையர் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு அவர் கொடுக்கும் பேட்டி யில், எழுதும் புத்தகத்தில் கூறுபவை நம்பத் தகுந்ததாகத் தானே இருக்கும்? (இதன் பின்னர் ஜெனரல் ஹர்கிரத் சிங், விடுதலைப்புலிகளுடன் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஜனவரி, 1988-ல் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப் பட்டார் )

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பு, போரிடுவதை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த குறைகளைத் தீர்த்து வைக்க IPKF சார்பில் எந்தவித நடவடிக் கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரான, 25 வயது இளைஞன் பார்த்திபன் ராசையா என்கிற இயற்பெயரைக் கொண்ட லெப்டினண்ட் கேனல் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை IPKF முன் வைத்து, அவற்றை நிறைவேற்றக் கோரி, காந்தீய வழியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

வடக்கிலும், கிழக்கிலும் புதிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அவசர கால சட்டம் நீக்கப்பட வேண்டும்.

ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில், அரசாங்கம் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்பனவே அவை.

1987 செப்டம்பர் 15ந்தேதி உண்ணாவிரதத்தைத் துவங்கிய திலீபன் தண்ணீர் கூட அருந்தவில்லை. தமிழீழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் முதல்முறையாக(பிரபாகரனின் சென்னை உண்ணாவிரதத்தைத் தவிர்த்து ) காந்தீய வழியில் உண்ணாவிரதம் இருந்து புதிய வழியில், சாத்வீக முறையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை இந்திய அரசு இதை சற்றும் கண்டுகொள்ள வில்லை.

தில்லி அரசியல் தலைமை - இதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் கூறியது. திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய செய்திகள் அவ்வப்போது புலிகளின் செய்திஊடகங்களிலும்,வானொலியிலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததால், திலீபனின் உண்ணாவிரதம் தமிழர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இளைஞர் திலீபன் அவரது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே செப்டம்பர் 26ந்தேதி உண்ணாவிரதம் காரணமாகவே துடிக்கத் துடிக்க தன் உயிரைத் துறந்தார். இது விடுதலைப் போராளிகளிடையேயும், ஈழத்தமிழ் மக்களிடையேயும் பெருத்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியது.

IPKFக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின.

இங்கே விரோதம் வலுக்கிறது.

இந்த விரோதம் துவங்கவும், தொடர்ந்து வளரவும் ராஜீவ் காந்தியே முக்கிய காரணமாகிறார் என்பது கவனிக்கத் தகுந்தது.

அக்டோபர் 4, 1988. பாயிண்ட் பெட்ரோவிற்கு அருகே, கடலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இலங்கை கடற்படை வழிமறித்துப் பிடித்தது. அதில் 17போராளிகள் இருந்தனர். போராளிகளின் முக்கியத் தலைவர்களான லெப்டினண்ட கேனல் குமரப்பாவும், புலேந்திரனும் அதில் அடங்குவர். ஒப்பந்தத்திற்கு முன்னதாக சில கொலை வழக்குகளின் காரணமாக தேடப்பட்டு வந்த இவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் விலை அறிவித்து இருந்தது சிங்கள அரசு. இப்போது சிக்கிய இவர்கள் மீது மேற்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்கு ஆயுதங்களைக் கள்ளத்தனமாக கடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியது இலங்கை அரசு. விசாரணைக்காக, இவர்களை கொழும்பு கொண்டு செல்லப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுபட்டு விட்டதாகவும், ஆயுதங்களைக் கடத்தியதாக இலங்கைஅரசு குற்றம்சாட்டுவது வடிகட்டிய பொய் என்றும் கூறி உடனே அவர்களை விடுவிக்குமாறு IPKF கமாண்டர் ஹர்கிரத் சிங்கிடம் கேட்டது புலிகள் அமைப்பு.

ஹர்கிரத் சிங்கின் சார்பாக, அவரது துணைத் தளபதி IPKF பிரிகேடியர் பெர்னாண்டஸ் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வு பற்றி அவரே கூறி இருப்பது .

உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்த பிரிகேடியர் பெர்னாண்டஸ் 17 கைதிகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களை பலாலி விமான தளத்திற்கு அனுப்பி வைத்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த இலங்கை ராணுவத்திடம் பேச்சு வார்த்தை நிகழத்திய பிறகு, போராளிகள் பலாலி விமான தளத்தில் பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களைச் சூழ்ந்துகொண்டு உள் வளையத்தில் AK- 47 துப்பாக்கிகளுடன் இலங்கை ராணுவம் இருந்தது. வெளிவட்டத்தில் இந்திய ராணுவம் இருந்தது. போராளிகளிடம் இருந்த ஆயுதங்கள் ஏற்கெனவே பறிக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 5ந்தேதி காலை பிரிகேடியர் பெர்னாண்டஸுக்கு கிடைத்த தகவல் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. ஆம் -இலங்கை ராணுவம் போராளிகளை கொழும்புக்கு கொண்டு போகப்போவதாக அறிவித்தது. காலையில் கொழும்பி லிருந்து பலாலி வரும் இலங்கை ஆகாயப்படை விமானத்தில் போராளிகளை ஏற்றிச்செல்லப்போவதாகத் தெரிந்தது.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் துரிதமாகச் செயல்பட்டார். இந்த தருணம் வரை – எதைச் செய்தாவது, IPKF போராளிகளைக் காப்பாற்றி விடுவிக்கவே விரும்பி செயல்பட்டது. இலங்கை விமானம் தரை இறங்கியவுடன், அது மீண்டும் மேலெழும்பாத வண்ணம் ஓடுபாதையில் அதைச்சுற்றி நான்கு புறங்களிலும், IPFK ன் BMP கவச போர் வாகனங்கள் விரைவாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

இலங்கை ராணுவம் கடுங்கோபம் கொண்டது. எந்த நேரத்திலும் இரு தரப்பாருக்கும் சண்டை நிகழக்கூடிய சூழ்நிலை உருவானது.

இந்த சம்பவத்தை நினைவுகூறும்போது கூறுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் -

“பத்தே நிமிடங்களில் இலங்கைப் படையை மௌனிக்கச் செய்து விட்டு 17 போராளிகளையும் கவச வாகனங்களில் ஏற்றிச்சென்று பத்திரமாக விடுதலை செய்திருக்க எங்களால் முடிந்திருக்கும் .

ஆனால் – துரதிருஷ்டவசமாக தில்லி அரசியல் தலைமையிலிருந்து, அவசரமான கட்டளை ஒன்று பறந்து வந்தது. “உங்களை யார் இந்த விஷயத்தில் தலையிடச் சொன்னது ? உடனடியாக விலகி இருங்கள். இலங்கை ராணுவம் விரும்புவதைச் செய்யட்டும்” என்று. எங்கள் இயலாமையை எண்ணி வருந்துவதை விட வேறோன்றும் செய்ய முடியவில்லை எங்களால் “.

ஆம் – உடனடியாக சம்பவ இடத்திலிருந்து நகர்வதைத் தவிர IPKF ஆல் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

பிரிகேடியர் பெர்னாண்டஸ் – போராளிகளிடம் சென்று விஷயத்தை விளக்கி விட்டு, தன் இயலாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மிகுந்த வருத்தத்துடன் வெளியேறினார்.

விளைவு – இலங்கை ராணுவம் 17 போராளிகளையும் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்க, அத்தனை பேரும் சயனைடு அருந்தி உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது.

தெரிந்தே, ராஜீவ் காந்தி எடுத்த இந்த முடிவு - போராளிகளை இலங்கை அரசுக்கு பலி கொடுப்பது என்கிற முடிவு.

விரோதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும், இந்திய அரசின் மீதும், IPKF மீதும் கடும் கோபம் கொண்டனர். உடனடியாக வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. சில மணி நேரங்களுக்குள்ளாகவே விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாம்களின் மீது தாக்குதல்களை நிகழ்த்தினார்கள்.

புலிகளை அடக்க முடியவில்லை என்றால் IPKF எதற்கு என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனே கேட்க,

முழு பலத்துடன் விடுதலைப்புலிகளை அடக்கவும், அழிக்கவும், தில்லியிலிருந்து உத்திரவு வந்தது.

விரோதம் தொடர்கிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.