Thursday, December 8, 2011

தமிழக சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது, பெண் - வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு.



தமிழக சட்டத்துறை அமைச்சர் மு.பரஞ்சோதி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சையைச்சேர்ந்த டாக்டர் ராணி, மு.பரஞ்சோதியை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும், அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றும், தன்னிடம் பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். என்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்று புகார் கூறினார். இந்த புகாரை பரஞ்சோதி மறுத்தார்.

இதையடுத்து ராணி, பரஞ்சோதி தனது கணவர் என்பதற்கும், தான் பரஞ்சோதியின் மனைவி என்பதற்கும் உரிய ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்தார்.

இதன்பிறகும் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்காததால், ராணி கோர்ட்டுக்கு சென்றார்.

திருச்சி மே.எம்.நீதிமன்றத்தில் ராணியின் மனு மீதான விசாரணை நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பரஞ்சோதி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், நாளை (9.12.2011) பரஞ்சோதி குறித்து விசாரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

தீர்ப்புக்கு பின்னர் போலீசார், பரஞ்சோதி மீது 294B, 323, 406, 420, 493, 506/2 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களைப் பற்றிக் கவலைப்படாத கேரள அரசு - மலையாள வியாபாரிகள் குற்றச்சாட்டு.



முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கேரள வியாபாரிகள் தங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்பில் குதித்துள்ளனர். மேலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தமிழர்களையும், தமிழர் வாகனங்களையும், ஐயப்ப பக்தர்களையும் சமூக விரோத கும்பல் கடுமையாக தாக்கியது. பணம் பறிப்பு, பொருட்களை நஷ்டப்படுத்துவது, பெண்களை மானபங்கப்படுத்துவது என்று அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். ஆனால் இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.

இதனால் கொதித்தெழுந்த தமிழகத்தில் சிலர் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் கேரளாக்காரர்களின் கடைகள், வர்த்தக நிறுவனங்களைத் தாக்கினர். இதையடுத்து போலீஸார் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த பலரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த கடைக்காரர்கள், தங்களது நிறுவனங்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்கும்வகையில் தமிழக அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் இன்று கடைகளை மூடியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஈரோட்டில் கேரளத்தவர் நடத்தும் டீக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டம் குறித்து ஈரோடு மலையாளிகள் அமைப்பைச் சேர்ந்த சைகோல் என்பவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு இரு மாநில அரசுகளும் நடப்பதே சரியானது. அதை விட்டு விட்டு வன்முறையில் கேரள மக்கள் இறங்கியது தவறானது, கண்டனத்துக்குரியது.

அங்குள்ள தமிழர்களைத் தாக்கியதால்தான் தமிழகத்தில் மலையாளிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எங்களைப் பற்றி கேரள அரசும் சரி, அங்குள்ள கட்சிகளும் சரி சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது வருத்தம் தருகிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை பொருத்தமட்டில் நாங்கள் தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவாக இருப்போம். கேரளாவில் நிலைமை மோசமானால் எங்களது ஆதரவும் தமிழக அரசுக்கு அதிகரிக்கும் என்றார் அவர்.

மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை - ரமேஷ் சென்னிதலா.



தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேரள மக்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. கேரள அரசும், கேரளாவில் வசிப்போரும் தமிழகத்திற்கு எதிராக எத்தனையோ செயல்பாடுகளில் ஈடுபட்டபோதிலும் தமிழக மக்கள் அதை பெரிய அளவில் எடுத்துக் கொண்டதில்லை. மேலும் மலையாள மக்களுக்கு எதிராக எந்தவகையான போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிரான கொந்தளிப்பையும், தாக்குதலையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நாம் என்ன செய்தாலும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வார்கள், பொங்கி எழ மாட்டார்கள் என்ற கேரளத்தின் எண்ணம் முதல் முறையாக தவறாகிப் போயுள்ளது. இதை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டக் கோரி திருவனந்தபுரத்தில் சென்னிதலா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. இதனால் கேரள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதனால்தான் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இந்த அணை கட்டப்பட்டாலும் கூட தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட மாட்டாது. உரிய நீரை முறையாக கொடுப்போம். இதில் எந்தவிதமான சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.

எனவே தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு புதிய அணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

நாங்கள் தமிழகத்திற்கு எதிராகவோ, அல்லது தமிழக மக்களுக்கு எதிராகவோ நடக்கவில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நாங்கள் எதிர்பாராத ஒன்று. இது துரதிர்ஷ்டவசமானது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

அதேசமயம், கேரளாவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சென்னிதலா.