Thursday, August 11, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது : ஜெயலலிதா.



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து 11.8.2011 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது,

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்சே Headlines Today கூடினயல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த Marzuki Darusman; அமெரிக்காவைச் சேர்ந்த Steven Ratner; தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Yasmin Sooka ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு,

இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.

அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசைவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

மேலும், கோத்தபய ராஜபக்சே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார். இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான்.

இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

கோத்தபய ராஜபக்சே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,

“போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபசேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு;

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபசேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமருகிறேன்.

கோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும் - ஜெயலலிதா ஆவேசம்.



தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை கொடூரமாகக் கொல்ல உத்தரவிட்டவர் கோத்தபயா. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினரும் வரவேற்றிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தீர்மானத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அளித்துள்ளார் கோத்தபயா. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோத்தபயாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கோத்தபயாவின் விஷமப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேணடும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இந்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதுதான் இன்று கோத்தபயா ராஜபக்சே அந்தத் தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசும் அளவுக்குப் போயுள்ளது.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. இது இந்தியா இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது.

தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க முழு உரிமையும் உள்ளது. இதை இந்திய அரசு, இலங்கையிடம் தெரிவித்து கோத்தபயாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசிய கோத்தபயாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீ்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

ஆன் - லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்கத்தின் விலை.



தங்களிடம் ஒரு குண்டுமணி அளவிலாவது தங்கம் வீட்டில் இருக்க வேண்டும். தங்கத்தால் மட்டுமே வீட்டில் செல்வம் தங்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நம்நாட்டுப் பெண்கள்.
இன்றைய நிலையில், தங்கத்தின் விலை விண்ணைத்தாண்டிச் செல்லும் அளவில் உயர்ந்து வருவது அவர்களை மட்டுமன்றி, பெற்றோர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணச் சீர்வரிசைகளில் தங்கம் முக்கிய பங்கு வகித்தாலும், பிறந்தநாள், காதணி, பூப்புனித நீராட்டு, திருமணம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை, விழாக்கள் என பல்வேறு விழாக்களிலும் பரிசளிக்கப்படும் முக்கிய ஆபரணமாக தங்கம் விளங்குகிறது.

விழாக்காலங்களில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வீதிகளில் நடமாடும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அளவை வைத்தே அவர்களது குடும்பத்தின் கௌரவம் நிர்ணயிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இதனால்தான், கிராம மக்கள் ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வீட்டில் வாங்கி வைப்பது வழக்கம். அதுவும் பெண் குழந்தை பிறந்து விட்டால், பிறந்தநாள் முதலே அந்தக் குழந்தைக்காகப் படிப்படியாகத் தங்கம் வாங்குவதை நடைமுறைப்படுத்திக் கொள்வர்.


முந்தைய காலங்களில் அவரவர் தகுதிக்கேற்ப ஆபரணங்கள் செய்வதற்கு தங்கம் வாங்குவர். இதனால் தங்கத்தின் விலை கட்டுக்குள் இருந்தது. எனவே, அன்றாடம் கூலி வேலை செய்யும் பாமரர்கள் கூட குண்டுமணி அளவிலாவது தங்கம் வாங்க முடிந்தது.
ஆனால், இன்று தங்கத்தின் விலை "ஆன் -லைன்' ஆசியால் கடுமையாக ஆட்டம் போட்டு வருகிறது. ஆன்- லைன் வர்த்தகம் மூலம் தங்கம் அதிக அளவில் வாங்கப்படுவதுதான் இன்று தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம்.

குறைந்த அளவில் "மார்ஜின்' பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன் - லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன் - லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு "மார்ஜின்' பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன் - லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம்.

ஆன் - லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன் - லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது.
ஆனால், உண்மையிலேயே தங்கத்தை ஆபரணமாகச் செய்து பயன்படுத்த நினைக்கும் பொதுமக்களோ, தங்கத்தின் விலை ஏற்றத்தை எண்ணி ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது.

தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் உலகப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனமும் ஆன்- லைன் தங்கத்தின் மீது திரும்பியதால், தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 2,500ஐ நெருங்குகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலையேற்றம் மக்களின் சமூக - பொருளாதாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொலை செய்யும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், ஆன்- லைனில் தங்கம் வாங்குபவர்கள் நீண்டநாள்கள் வைத்திருப்பதில்லை. உடனடியாக அதை விற்றுக் காசாக்கி விடுவர். இது தேசத்துக்கு ஆபத்து. ஆனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வாங்கும் தங்கத்தை நீண்டநாள்களுக்கு சேமித்து வைத்திருப்பர். இது தேசத்துக்குப் பாதுகாப்பு.

தங்கத்தின் விலை ஏற்றம் இதேபோல் நீடித்தால், யாராலும் தங்கத்தை எளிதில் வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்போது ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்கும் கட்டாயம் ஏற்படும். அப்படி ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கப்பட்டால், தங்கத்தின் விலை தலைகீழாகச் சரிந்துவிடும். அப்போது ஏற்படும் நஷ்டம் அனைத்தும் சிறுகச்சிறுகச் சேர்ந்து, தற்போது தங்கம் வாங்கி சேமித்து வைக்கும் சாதாரணப் பொதுமக்களின் தலையில்தான் விழும். இது நம் தேசத்தின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும்.

எனவே, நமது தேச மக்களின் வாழ்வோடும், கலாசாரத்தோடும் ஒன்றிவிட்ட தங்கம், பாமரனுக்கு காட்சிப்பொருளாக மட்டும் மாறிவிடாமல் தடுக்க, அதன் விலையைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஆன்- லைனில் இருந்து உடனடியாக தங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தினமணி

சமச்சீர்கல்வி - அ.தி.மு.க. அரசை, மண்ணை கவ்வவைத்த 25 காரணங்கள்.



1.தமிழகத்தில்தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.

2.கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.

3.சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.

4.கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.

5.கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.

6.புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.

7.தமிழகஅரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

8.தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

9.சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

10.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.

11.கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

12.தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடிக்க ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.

13.தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.

14.சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.

15.பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.

16.ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.

17.சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

18.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.

19.கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.

20.சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.

21.ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.

22.தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.

23.சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.

24.ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.

25.உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.

சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.

ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது.

அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும்.

அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.
இடுகையிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !



அலைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல; இது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை; இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான், என்பது எல்லோரும் அறியவேண்டிய உண்மையாய் இருக்கிறது.

எனினும், 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச வருவாய் இழப்பு என்று கணக்குத் தணிக்கையாளர் குழு அளித்த மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடி என்ற தொகை முழுவதையும் ஊடகங்கள் ‘ஊழல்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இம்மாபெரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் பின்புலமாக அமைந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்னும் மையமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஊழல்தான் நாட்டின் மையமான பிரச்சினை என்று சித்தரிப்பதற்கும், இன்னும் ஒரு படி மேலே போய் தனியார்மய தாரளமயக் கொள்கைகள் மூலம் நாடு அடையக்கூடிய முன்னேற்றத்தைத் தடுப்பதே ஊழல்தான் என்று சித்தரிப்பதற்கும் இது பயன்பட்டது.

‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ‘உத்தமர்’ மன்மோகன் சிங்கும் டாடா, அம்பானி, மித்தல், ரூயா, ராடியா, பவார், சிதம்பரம், மாறன், ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. தி.மு.க., ராஜா, கனிமொழி என்று இந்த இலக்கை குறுக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணியசாமி, சோ, ஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர். இந்த மாபெரும் கொள்ளையின் முழுப்பரிமாணமும் வெளிவருவதை யாரும் விரும்பவில்லை என்பதனாலும், இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.

இப்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் (Framing of Charges) தன் மீது பல்வேறு கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது வாதங்களை ராஜா முன்வைத்திருக்கிறார். குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவர் முன்வைத்துள்ள இந்த வாதங்கள் எந்த அளவிற்கு அவருக்குப் பயன்படும் என்பது குற்றவியல் வழக்கு விசாரணை சார்ந்த விசயம். ஆனால், இப்பிரச்சினையில் இதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் இந்தப் பகற்கொள்ளையின் அரசியல் பின்புலத்தை அம்பலமாக்குவதற்கும் அவரது வாதங்கள் நமக்குப் பயன்படுகின்றன.



“1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான் என்கிறார் ராசா. உண்மைதான். ஆனால், 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூக்குரலிட்ட சுப்பிரமணியசாமி, ஜெயா, பா.ஜ.க. முதல் ஊடகங்கள் வரை யாரும், “இழப்புத் தொகையை சி.பி.ஐ. குறைத்துக் காட்டியுள்ளது ஏன்? என்ற கேள்வியை எழுப்பவில்லை.

“இழப்பு இத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பிடுவதற்கு சி.பி.ஐ. யார்? அது அரசாங்கத்தின் வேலை. இழப்பு எவ்வளவு என்பதை அரசு சொல்லட்டும். என்பது ராசாவின் அடுத்த வாதம்.

அரசு என்ன சொல்கிறது? முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி. ராசா நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்த அன்றைக்கு இரவு என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில்கூட, “இழப்பு இல்லை. என்ற கருத்தையே கபில் சிபல் வலியுறுத்தினார். அதாவது, சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ராசா மட்டும் மறுக்கவில்லை, இந்த அரசே அதனை மறுக்கிறது என்பதுதான் வேடிக்கை!

“டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

“2001இல் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் அலைக்கற்றை வழங்கப்பட வேண்டும் என்பதில் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் உறுதியாக இருந்தது. நிதி அமைச்சகம் டெண்டர் விடவேண்டும் என்று கூறியது, என்று கூறினார் சிதம்பரம் (பிசினெஸ் லைன், ஜூலை 26, 2011). இரு அமைச்சகங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவும்போது கொள்கை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியவர் பிரதமர். இப்பிரச்சினையை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்யாததுதான் குற்றம் என்றால், அந்தச் சதிக் குற்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர் பிரதமர். அமைச்சர்கள் குழுவைக் கூட்டும் அதிகாரம் அவருடையதுதான் என்பதே ராசா முன்வைக்கும் வாதத்தின் சாரம்.

விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.

அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்குத் தெரியாமலும் பிரதமரை ஏமாற்றியும் ராசா பயங்கரமான ஊழலைச் செய்துவிட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணி துவக்க முதலே உருவாக்கியிருக்கிறது.

இது ஒரு இமாலயப் பொய் என்ற போதிலும், மன்மோகன்சிங் என்ற நபருடைய பிம்பம் நொறுங்கினால், அது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் மீதே விழுந்த கறையாகிவிடும் என்பதனாலும், மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன்சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்.

ஆனால், விசயங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல் மேம்புல் மேய்பவர்களை மட்டுமே இவ்வாறு ஏமாற்ற இயலும். இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது. அரசாங்க இரகசியம் என்று கருதப்படும் இக்கடிதங்களை ராசாதான் கொடுத்து வெளியிடச் செய்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் இருட்டிலிருந்தார் என்ற கூற்றை அக்கடிதங்கள் பொய்ப்பிக்கின்றன. அதன் பின்னர் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்ட அறிக்கை இப்பிரச்சினையில் மன்மோகன் சிங்கிற்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்ததுடன், மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரைகளிலிருந்தே அவரது தொடர்பை நிரூபித்துக் காட்டியது. ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக காங்கிரசு கலகம் செய்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது



யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அலைக்கற்றையை வாங்கின. அதன் பின்னர் தமது நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியைப் பன்மடங்கு அதிக விலைக்கு அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றனர். இவ்வாறு அலைக்கற்றை உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள், தமது பங்குகளை உடனே அதிக விலைக்கு விற்றிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் ஈட்டிய தொகை மட்டும் 22,000 கோடி ரூபாய் என்கிறது சி.பி.ஐ. இவர்களது பங்குகளின் விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.

“இந்தியாவில் போடப்படும் எல்லா வெளிநாட்டு முதலீடுகளும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்புக் குழுமத்தின் ஒப்புதலைப் பெறுகின்றன எனும்போது, அமைச்சரவை இந்த முதலீடுகளையெல்லாம் அங்கீகரித்திருக்கும்போது, இதில் நான் எந்த சட்டத்தை மீறியிருக்கிறேன்? இவற்றுக்கு பிரதமரின் முன்னிலையில் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். பிரதமரை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம், என்று கூறியிருக்கிறார் ராசா.

“ஆ, பிரதமரையே இழுக்கிறார்! என்று சில ஊடகங்கள் குதிக்கின்றன. உண்மையை சொன்னால், இவ்விசயம் குறித்து மன்மோகன் சிங் ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பதும், தனது பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுவதும் (dilution of equity) நியாயமான வணிக நடவடிக்கைகள். ஸ்வான், யூனிடெக் விவகாரங்களில் நடந்திருப்பதும் அதுதான் என்பதே அவரது கருத்து. “விற்கப்பட்டவை பங்குகள்தானே தவிர, அலைக்கற்றைகளை அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. எனவே, அந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையே (ஜூலை 26, பிசினெஸ் லைன்) என்று ராசாவின் கூற்றை மீண்டும் ஒருமுறை வழிமொழிந்திருக்கிறார் சிதம்பரம். “அலைக்கற்றை உரிமத்தை அரசிடம் விலைக்கு வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு அந்த உரிமத்தை வேறொருவருக்கு விற்கக்கூடாது என்ற விதியை ரத்து செய்து, வாங்கிய மறுகணமே விற்கலாம் என்று 2003ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கி விட்டது, என்று குட்டை உடைத்திருக்கிறார் கபில் சிபல் (ஜூலை 27, தி இந்து). இதன்படி பார்த்தால், அவர்கள் அலைக்கற்றையையே கைமாற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றிருந்தாலும் அது குற்றமில்லை என்றாகிறது.

மொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.

ராசா நீதிமன்றத்தில் கிளறாத இரகசியங்களும் எழுப்பாத கேள்விகளும் இவ்வழக்கில் நூற்றுக்கணக்கில் புதைந்து கிடக்கின்றன. இந்தக் கொள்ளையில் பங்கு பெற்றிருக்கும் பெரும் தரகு முதலாளிகள் யாரையும் சி.பி.ஐ. இதுவரை நெருங்கவே இல்லை. ஒரு உரிமத்தை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரு தொழில்நுட்பங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக 8448.95 கோடி ரூபாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ இன் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இதில் ரூ.4930 கோடியை டாடா டெலிசர்வீசஸ் சுருட்டியிருக்கிறது. ஆனால், டாடாவின் மீது குற்றப்பத்திரிகையும் இல்லை, கைதும் இல்லை.

டாடா மட்டுமல்ல, ஐடியா செல்லுலார் (ஆதித்ய பிர்லா குழுமம்), ஏர்டெல் (சுனில் பாரதி மிட்டல்), டேடா காம் சொல்யூஷன்ஸ் (ராஜ் குமார் தூத், ராஜ்யசபா எம்.பி, வீடியோகான் முதலாளி), ஏர்செல், எஸ் டெல், வோடஃபோன் (எஸ்ஸார், ரூயா) ஆகிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் அலைக்கற்றை கொள்ளையில் பங்கு பெற்றிருக்கின்றனர்.

ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல, மொரீசியஸில் போடப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதை அறிந்த ரூயா குழுமத்தை சேர்ந்த பிரசாந்த் ரூயா, ஐ.பி.கேய்தான் ஆகிய தரகு முதலாளிகள், சி.பி.ஐ. விசாரணை குறித்த விவரங்களைத் தருமாறு மொரீசியஸில் உள்ள இந்திய ஹை கமிசனர் மதுசூதன் கணபதியிடம் பேரம் பேசியிருக்கின்றனர். இது குறித்து எழுத்துபூர்வமான புகாரை அவர் அரசுக்கு கொடுத்த பின்னரும், இவர்கள் மீது சி.பி.ஐ. எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.



இது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. இந்த அளவுகோல் அனில் அம்பானி விசயத்தில் பின்பற்றப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமங்களைப் பெற்றதற்காக அனில் அம்பானி குரூப்பின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.1000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் ஸ்வான் டெலிகாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரூ.10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள தொகை எதையும் அனில் அம்பானி அல்லது அவரது மனைவியின் ஒப்புதலின்றி கொடுக்கக் கூடாது என்பது வங்கிகளுக்கு அம்பானி நிறுவனம் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல். ஸ்வான் டெலிகாமின் 50% பங்குகளை உரிமையாக வைத்திருக்கும் அனில் அம்பானியும் அவரது மனைவியும்தான், இந்த மோசடியின் முழுப்பயனையும் அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அம்பானி நிறுவனத்தின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்களேயன்றி, அனில் அம்பானியை சி.பி.ஐ கைது செய்யவில்லை.

அதேபோல, கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி ரூபாய் கொடுத்த டி.பி.ரியால்டீஸ் நிறுவனத்தின் முதலாளி ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 250 கோடி ரூபாய் நிலத்தை 25 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தும், அமைச்சர் ராசாவைப் பாராட்டி டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதமே ஒரு ஆதாரமாக இருந்தும், பெரம்பலூர் மருத்துவமனைக்கு டாடா அறக்கட்டளையிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்குவது தொடர்பான உரையாடல்கள் ஆதாரமாக இருந்தும் டாடா கைது செய்யப்படவில்லை.

“டி.பி ரியால்டீஸ் நிறுவனம் சரத் பவார் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது மும்பையில் ஊரறிந்த இரகசியம். என்று கூறினார் நீரா ராடியா. புனேவைச் சேர்ந்த பர்ஹாதே என்பவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு டி.பி.ரியால்டிஸ் நிறுவனத்தில் உள்ள தொடர்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்.

ராசாவும் தொடர்ந்து கனிமொழியும் கைது செய்யப்பட்டவுடனேயே, அத்வானியை சந்தித்த பவார், தனது அரசியல் நண்பர்களான மம்தா, சவுதாலா, முலாயம், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவுடன் மாற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பற்றியும், அதற்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வெளியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் ஆலோசித்தார் என்று கடந்த மே மாதத்தில் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது. எத்தனை தரவுகள் இருந்தாலென்ன, கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.

குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராசா, தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியோர் மீது தவிர்க்கவியலாமல் குற்றம் சுமத்துகிறார். அவரது வாதங்கள் இந்த கிரிமினல் வழக்கு தொடர்பான வாதங்களாக மட்டும் இல்லாமல், இந்தக் கிரிமினல் அரசமைப்பு முழுவதையும் குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. “டாடாவை ஏன் கைது செய்யவில்லை? என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்வி ஊடகங்களின் தலைப்பு செய்திக்குரிய தகுதியுள்ள கேள்வி என்ற போதிலும், அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கட்சிகளையும், அதிகார வர்க்கத்தையும், தனியார்மயக் கொள்கைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் ராசாவின் வாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் அம்பலப்படுத்துமாயின், அவை ஊடகங்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்படும்; அல்லது இருட்டடிப்பு செய்யப்படும்.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் சுரங்கங்கள், காடுகள், நிலங்கள், நகர்ப்புற மனைகள், துறைமுகங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் பகற்கொள்ளை. தொலைபேசித் துறையில் நடைபெற்ற ஒரு கொள்ளை மட்டும், சீப்பில் சிக்கிய முடியைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ஊழல், ஊழல் என்று அரசியல் பரபரப்புக்கு மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அதன் பின்புலத்தை சாத்தியமான அளவுக்கு மூடிமறைக்கவே முயற்சிக்கின்றன ஆளும் வர்க்கங்கள். அந்த முயற்சியை முறியடிப்பதே நமது பணியாக இருக்கவேண்டும்.

நன்றி - வினவு.

உட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம், பக்க்ஷிமோத்தாசனம், பார்சுவ பாதாசனம்.

உட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம்.
உட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும், `வி' வடிவில் விரித்தநிலையில் உட்காரவும். சற்றே முன்னோக்கி குனிந்து, வலது கையால் இடதுகால் கட்டைவிரலைப் பிடியுங்கள். அடுத்தபடியாக இடுப்பு, தோள்பட்டை, தலை ஆகிய மூன்று அவயங்களை இடப்பக்கமாக பின்னால் திருப்பவும்.

அப்போது உங்களின் இடது கை, தோள்பட்டைக்கு இணையாக பக்கவாட்டில் நீண்டிருக்கட்டும். இடது கை கட்டை விரலை, அப்படியே கண்களால் கூர்ந்து பாருங்கள். முதுகுத்தண்டு வளையலாகாது. முழங்காலையும் மடக்கக்கூடாது. கடைசியாக, ஆசனத்தை கலைத்து அடுத்த பக்கம் மாற்றி, முன்புபோல செய்யவும்.

பயன்கள்:

இடுப்புபிடிப்பு, முதுகுவலி, கழுத்துவலி, ஸ்பாண்டிலோஸிஸ் குணமாகும். தொந்தி குறையும். உடம்பு மெலிந்து அழகாகும். போலியோ நோயாளிகள் உட்கார்ந்த நிலையில் பயிற்சிசெய்து, மகத்தான பலன்களை பெறலாம்.


பக்க்ஷிமோத்தாசனம்.
பக்க்ஷிமோத்தாசனம்

செய்முறை:

இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். கைகளிரண்டையும் தலைக்குமேல் கொண்டுபோய், மூச்சுவிட்டுக்கொண்டே மெதுவாக முன்னோக்கி குனியுங்கள். அப்போது உங்களின் ஆள்காட்டி விரல், நடுவிரல்களும் முறையே இரண்டு கால்விரல்களையும் பற்றட்டும்.

கால்களை தூக்கக்கூடாது. முழங்கை கள் இரண்டும் தரையில் படுவது அவசியம். அடுத்தபடியாக, மெதுவாக தலைகுனிந்து, முழங்காலில் முகத்தை படரவிடுங்கள்.

பயன்கள்:

சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். மலச்சிக்கல், செரிமானக் கோளாறு அகலும். வாய்வு பிரச்சினை இராது. மாதர்களுக்கு மாத விடாய் கோளாறு நீங்கும். கர்ப்பப்பை கோளாறு மறையும். இடை சுருங்கும்.மகப்பேறுவுக்கு பின் ஏற்படும் வயிற்று பெருக்கம் குறையும்.

பக்ஷிமோத்தாசனத்துக்கு `எமனை வெல்லும் ஆசனம்' என்கிற பட்டப்பெயருண்டு. ஆகவே, இதை தினந்தோறும் செய்துவந்தால், நோய்-நொடியின்றி நீண்டநாள் வாழ்வது, 100 சதவீதம் நிச்சயம்!


பார்சுவ பாதாசனம்.
பார்சுவ பாதாசனம்

செய்முறை:

முதலில், குத்தவைத்து உட்காருங்கள்.இடுப்பை இடப்பக்கமாக சரித்து, வலதுகாலை பக்கவாட்டில் கொண்டு போய், நேராக பின்னால் நீட்டவும். உடம்புக்கு முன்னால் இடது முழங்காலை மடித்து வையுங்கள். இரண்டு கை விரல்களும் வலது முழங்காலை தொடும் வகையில், பின்னோக்கி வளைந்து செல்லட்டும். இப்படியாக-இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்தபின், ஆசனத்தை கலைத்து பக்கம் மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

அடித்தொடை, புட்டம், அடிவயிறு பகுதியிலுள்ள அதிகப்படியான தசைகள் குறையும். ஜனன உறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும். விரை வீக்கம், சிறுநீரக கோளாறு, குடலிறக்கம் அகலும். முதுகுவலி, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, பெருந்தொந்தி நீங்கும்.