Saturday, June 4, 2011

கறுப்புப் பணம் மீட்பு குறித்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்கத் தயார்- கபில் சிபல்.


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்தார். நாடெங்கும் இது எழுச்சியை ஏற்படுத்தியதால் கலக்கம் அடைந்த மத்திய அரசு ராம்தேவ் உண்ணாவிரதத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்தது.

மத்திய மந்திரிகள் கபில் சிபல், சுபோத்காந்த் சகாய் இருவரும் நேற்று சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ராம்தேவுடன் சுமூக முடிவை எட்ட இயலவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

பாபா ராம்தேவ் இன்று (சனிக்கிழமை )மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், எங்களது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றிரண்டைத் தவிர மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்.

இருந்தபோதும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது, சனிக்கிழமை இரவு வாக்கில் கறுப்புப் பணம் மீட்பு குறித்து எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தால் மட்டும் உண்ணா விரதத்தை கைவிட முடியும் என்று பாபா ராம்தேவ் கூறியதையடுத்து,

கறுப்புப் பணம் மீட்பு குறித்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்கத் தயார் என்று - கபில்சிபல் சொன்னதாக செய்தி வெளியானது.

மரபணு மூலம் உருவாக்கப்பட்ட வெள்ளரிக்காய் ; 17 பேர் பலி, 1500 பேர் பாதிப்பு.


மரபணு மாற்றப்பட்ட காய்கறி - பழங்களில் பாக்டீரியா கிருமிகள் சேர்க்கப் படுகின்றன. காய்கறி - பழங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும், மாதக் கணக்கில் வைத்திருந்தாலும் புதிதாக விளைந்தது போல் இருப்பதற்கும் இவை சேர்க்கப்படுகிறது. கத்தரிக்காயில் “கிரை-1 ஏசி” என்ற பாக்டீரியா சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறி நம்நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து மரபணு கத்தரிக்காய் விளைவிக்க இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனாலும் சர்வதேச விதை நிறுவனங்களை சேர்ந்த இந்திய வேளாண்மை விஞ்ஞானிகள் மரபணு காய்கறி-பழங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்பெயினில் விளைவிக்கப்பட்ட வெள்ளரிக்காய் சாப்பிட்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இன்னொருவர் சுவீடனை சேர்ந்தவர். ஸ்பெயினில் வெள்ளரிக்காய் தற்போது ஏராளமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த வெள்ளரிக்காய் சாப்பிட்ட 9 நாடுகளை சேர்ந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான உயிர்களை பறித்து வரும் ஸ்பெயின் வெள்ளரிக்காய்க்கு ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

ஆஸ்திரியா நாடு ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, பெரிய மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து மரபணு மாற்றப்பட்ட காய்கறி- பழங்களுக்கும் தடை விதித்துள்ளது. ஜெர்மன் மருத்துவ விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயில் உயிரிழந்தவர்களிடம் நடத்திய பரிசோதனையில் “இ-கோலி” என்ற கொடிய பாக்டீரியா இருப்பதை கண்டறிந்தனர்.

இதையறிந்ததும் ஜெர்மனி நாட்டு சுகாதார மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் நாடு முழுவதிலும் ஸ்பெயின் காய்கறி-பழங்கள் விற்க தடை விதித்தனர். அவற்றை பொதுமக்களுக்கு விற்க கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஸ்பெயின் வெள்ளரிக்காயை பரிசோதித்த இங்கிலாந்து நுண்ணுயிரியல் விஞ்ஞானி ரோன்கூட்லர் கூறும்போது, இந்த வெள்ளரிக்காயில் இ-கோலி போன்று வேறு சில கொடிய கிருமிகளும் உள்ளன. இதை யாராவது சாப்பிட்டால் இதில் உள்ள கிருமிகள் நேரடியாக சிறுநீரகத்தை தாக்கி செயலிழக்க செய்து விடும்.

இதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம் என்றார். ஜெர்மனியில் உள்ள ஷம்பர்க் நகரில் மட்டும் ஸ்பெயின் வெள்ளரிக்காய் சாப்பிட்ட 467 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த போது சிறுநீரகம் தொற்று கிருமிககளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உயிருக்கு உலை வைக்கும் ஸ்பெயின் வெள்ளரிக்காய் மரபணு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஜெர்மனி, டென்மார்க், செக் குடியரசு, லக்கம்பார்க், ஹங்கேரி, ஸ்வீடன், பெல்ஜியம் போன்ற நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

முறையான பரிசோதனை எதுவும் செய்யப்படாத வெள்ளரிக்காய் போன்ற காய்கறி-பழங்கள் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஸ்பெயினுக்கு அந்நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் நாட்டு சுகாதார மந்திரி கூறும்போது, *ஸ்பெயின் நாட்டில் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெள்ளரிக்காய் விளைவிக்கப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வெள்ளரியில் இ-கோலி பாக்டீரியா எப்படி கலந்து என்பதையும் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளரிக்காயில் இ-கோலி பாக்டீரியா கலந்திருப்பதாக பீதி பரவியதால் உலகம் முழுவதிலும் சாலட் விற்பனை பெருமளவு குறைந்தது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கர தீவிரவாத இயக்கம் ; அமெரிக்கா அறிவிப்பு.

அல்கொய்தாவை போன்று லஷ்கர்-இ-தொய்பாவும்    பயங்கர தீவிரவாத இயக்கம்;    அமெரிக்கா அறிவிப்பு

அல்கொய்தாவை போன்று லஷ்கர்- இ-தொய்பாவும் பயங்கர தீவிரவாத இயக்கம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜானட் நபோலிடானோ வாஷிங்டனில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாத இயக்கம் மீது கடந்த 10 ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டது. அப்போது அதனுடன் தொடர்புடைய மற்ற இயக்கங்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ- தொய்பாவும் அல்கொய்தாவை போன்று அதிபயங்கர தீவிரவாத இயக்கம்தான் என தெரிய வந்துள்ளது.

இதுதான் மும்பையில் தாக்குதல் நடத்தியது. அது போன்று அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் அல்கொய்தாவை போன்று இதற்கும் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

மும்பையை போன்ற தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதால் அமெரிக்காவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஓட்டல்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

திக்விஜய் சிங் கருத்தும் - பாபா ராம்தேவ் பதிலடியும்.

திக்விஜய் சிங் கருத்துக்கு பாபா ராம்தேவ் பதிலடி

பாபா ராம்தேவ் பதிலடி

ஊழல் மற்றும் கறுப்புபணத்தை ஒழிக்க உண்ணாவிரதம்மேற்கொண்டுள்ளார் ராம்தேவ். இன்று இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்தார் .

இதற்க்கு பதிலடியாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ள செய்தியில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொள்வது மூலம் விளபரம் தேடவில்லை உண்ணாவிரத ஏற்பாட்டு செலவுகள் அனைத்தும் மக்கள் பணம் மேலும் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொள்வதை மத சாயம் பூசுவது முட்டாள்தனமானது என தெரிவித்தார்

இதையடுத்து எங்கள் லட்சியத்திலிருந்து பின்வாங்க போவதில்லை எனவும் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்கவும் கறைபடியாத நிர்வாகத்தை அமைப்பதே எங்கள் இலக்கு என தெரிவித்தார் .


உண்ணாவிரதம் பற்றி திக்விஜய் சிங் கருத்து
பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் பற்றி திக்விஜய் சிங் கருத்து

ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் ராம்தேவ்.

இதுப்பற்றி இன்று தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது. என்று தெரிவித்தார்.

மேலும் பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பயணிக்கிறார். 5 நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். உண்ணாவிரத திடலில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஏற்பாட்டு செலவுகளும் அதிகம் எனவே இந்த உன்ணாவிரதம் 5 நட்சத்திர சத்தியா கிரகம் போல் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

நேரடி போராட்டத்தில் ம.தி.மு.க. குதிக்கும் : கேரள முதல் அமைச்சருக்கு வைகோ கண்டனம் .


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக கூறி உள்ளார். 5 ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி முதல் அமைச்சர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வந்தார். அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னிகுக், கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொன்னார்.

முல்லைப் பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளமான இடத்தில் அமைவதால் கேரள அரசு நினைத்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், பின்னர் 145 அடி உயரத்துக்கும் அதன் பின்னர் 152 உயரம் வரையிலும் படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கேரள அரசு இதற்கு எந்தவிதத்திலும் முட்டுக் கட்டை போடுகின்ற வேலையில் ஈடுபடக்கூடாது என்றும், 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது. அதை எதிர்த்து, அச்சுதானந்தன் போன்றவர்களின் வற்புறுத்தலால், கேரள அரசு உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி, 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த முடியாது என்றும், முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

அப்போதைய அ.தி.மு.க.அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து தமிழ்நாட்டிற்கு நியாயமான தீர்ப்பு வர இருந்த நிலையில் அநீதியாக ஒரு உத்தரவை வெளியிட்டது. பென்னி குக் கட்டிய அணையின் வலுவை ஆய்வு செய்வதற்கும், புதிய அணை கட்டுவது குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது.

இந்த நிலையில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு இப்போது அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தென்பாண்டிச் சீமையில் 5 மாவட்டங்கள் அடியோடு பாசன வசதியையும், குடிநீர் வசதியையும் இழக்கும் அபாயம் தலைக்குமேல் இப்போது கத்தியாகத் தொங்குகிறது. கேரள மாநில அரசின் அக்கிரமமான போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்யவே இல்லை. கேரள அரசு பென்னி குக் அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ முனைந்தால், நிரந்தரப் பொருளாதார முற்றுகையைத் தமிழகம் ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

தமிழக முதல் அமைச்சர் நம் மாநிலத்தின் முக்கிய வாழ் வாதாரப் பிரச்சினையான இந்தப் பிரச்சினையில், கேரள அரசின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க, மறுமலர்ச்சி தி.மு.க. நேரடியாக கிளர்ச்சியில் ஈடுபடும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தேடப்பட்ட தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலி.


அமெரிக்க ஏவுகனை தாக்குதலில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தெற்கு வாசரிஸ்தானில் பழங்குடியின பகுதியில் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.

இதணையடுத்து நடத்தப்பட்ட ஏவுகனை தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்து உள்ளன. மேலும் அல் கொய்தாவின் தொடர்புடைய ஹர்த்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக அங்குள்ள பழங்குடியினர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாலும் அதற்கான தகவல் ஆதாரங்கள் ஏதுமில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா 5 பயங்கரவாதிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமீபத்தில் அளித்து அதில் இலியாஸ் காஷ்மீரி பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் தொடங்கினார் ; லட்சக்கணக்கானோர் பங்கேற்பு.


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்தார். நாடெங்கும் இது எழுச்சியை ஏற்படுத்தியதால் கலக்கம் அடைந்த மத்திய அரசு ராம்தேவ் உண்ணாவிரதத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்தது.

மத்திய மந்திரிகள் கபில் சிபல், சுபோத்காந்த் சகாய் இருவரும் நேற்று சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ராம்தேவுடன் சுமூக முடிவை எட்ட இயலவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை (இன்று) முதல் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் திட்டமிட்டப்படி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லிராம் லீலா மைதானத்தில் இன்று காலை யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

ராம்லீலா மைதானத்துக்கு அவர் அதிகாலை 4.50 மணிக்கு வந்தார். ஏற்கனவே அந்த மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிக்கணக்கான சீடர்களும், பொது மக்களும் பலத்த கரகோஷம் எழுப்பி, ராம்தேவை வரவேற்றனர். ராம்தேவும் முக்கிய பிரமுகர்களும் அமர்வதற்காக சற்று உயரமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று ராம்தேவ் அமர்ந்தார். முதலில் அவர் சிறிது நேரம் யோகா பயிற்சிகள் செய்தார். பிறகு பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. யோகாவும், பஜனைப்பாடல் நிகழ்ச்சிகளும் சுமார் 2 மணி நேரம் நடந்தன.

இதையடுத்து உண்ணாவிரதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேடையில் ராம்தேவுடன் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி ரிதம்பராவும் அமர்ந்தார். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்துக்காக அமைக்கப்பட்டுள்ள 2 1/2 லட்சம் சதுரஅடி பந்தல் நேற்று முதலே திருவிழா கோலமாக காணப்பட்டது. இன்று காலை உண்ணாவிரத பந்தல் நிரம்பி வழிந்தது. சாதி, மத வேறுபாடியின்றி பல்லாயிக்கணக்கானவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். சீக்கிய, ஜெயின், முஸ்லிம் மத தலைவர்களும் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரத மேடையில் அமர்ந்த சிறிது நேரத்தில் யோகா குரு பாபா ராம்தேவ்
உரையாற்றினார், அவர் கூறியதாவது :-

ஊழலில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காகவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஏழை- எளிய மக்கள் நல்ல வாழ்க்கை பெற இந்த உண்ணாவிரதப் போராட்டம் உதவும். முடியாதது எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும். நம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது. நமது உண்ணாவிரதத்தை நடத்த விடாமல் செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டது.

எனக்கு எதிரான அந்த சதி தோற்று போய் விட்டது. இது தொடர்பான எல்லா தகவல்களையும் இன்று நான் வெளியிடப் போவது இல்லை. நமக்கு எதிரான அந்த சதி என்ன? யாரால் அந்த சதி திட்டம் தீட்டப்பட்டது என்பதை உரிய நேரத்தில் சொல்வேன். நமக்கு ஆதரவு தரும் அரசியல் வாதிகளை வரவேற்கிறோம். அவர்கள் இங்கு வரலாம். ஆனால் இந்த மேடையில் அரசியல் பிரமுகர்கள் பேச அனுமதிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் பேச்சு முரண்பாடுளுக்கு வழி வகுத்து விடும்.

உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய யோசனை சொல்ல விரும்புகிறேன். உங்களுக்காக இங்கு குடிநீர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் தயாராக உள்ளது. ஆனால் நிறைய குடித்து விடாதீர்கள். நம்மால் நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஊழலுக்கு எதிராக ஏற்கனவே கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து மிஸ்டு கால் கொடுத்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் இந்தியாவும், இந்திய மக்களும் என்ன பெற்று விடப் போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கக் கூடும். இன்று இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளது. தொழில் கல்வியை தாங்கள் தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பை மக்கள் பெறப் போகிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கால வரையற்ற இந்த உண்ணா விரதத்தால் இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கும். ஒன்று குண்டாக இருப்பவர்கள் உடல் நலம் பெறுவார்கள். இரண்டாவது நாடு வளம் பெற்று செழிப்படையும்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்தியாவின் சொத்து. அது மீட்கப்பட வேண்டும் என்று ராம்தேவ் பேசிய போது மக்களிடம் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரமானது. அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ராம்லீலா மைதானத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதிரடிப் படை வீரர்களும் தயார் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ளனர். ராம்லீலா மைதானத்துக்குள் வரும் அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

ராம்தேவை தொடர்ந்து சுவாமி ரிதம்பரா பேசினார். அவர் பேசுகையில், நமது நாட்டில் நிறைய வல்ல பாய் படேல்கள் இருந்திருந்தால், ஊழலுக்கு எதிராக எங்களைப் போன்ற சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்க வந்திருக்க மாட்டோம் என்றார். போஜ்புரி மொழியில் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றழைக்கப்படும் மனோஜ் திவாரியும் உண்ணாவிர தத்தில் கலந்து கொண்டார். இதற்காக அவர் ஒரு மாதம் தன் படபிடிப்புகளை ரத்து செய்து விட்டதாக கூறினார்.

நேரம் செல்ல, செல்ல ராம்லீலா மைதானத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தை சுற்றி இருந்த பகுதிகளும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. முக்கிய பிரமுகர்கள் மட்டும் ராம்தேவை சந்தித்து வாழ்த்தினார்கள். அப்போது மக்களிடம் எழுச்சி ஏற்படுத்தும் வகையில் ரகுபதி ராகவ ராஜாராம்.... என்ற பாடல் உள்பட பல தேசப்பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இடையிடையே ராம்தேவும், “மைக்”கில் பேசியபடி இருந்தார். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்போ நிதி உதவி செய்யவில்லை” இது மக்களால், மக்கள் நடத்தும் போராட்டம் என்று ராம் தேவ் அடிக்கடி கூறினார்.

மவுலவி ரிஸ்வி பேசுகையில், இது முல்லா உமரின் தலிபான் பகுதி அல்ல. இது இந்துஸ்தான் என்றார். இதை கேட்டு அரங்கமே அதிரும் வகையில் கரகோஷம் எழுந்தது. உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பலர் ராம் தேவிடம் நிதி அன்பளிப்பு கொடுத்தனர். ஒருவர், ரூ.11 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தார். அப்போது ராம்தேவ், புகைப்படம் எடுப்பவர்களை பார்த்து, தாராளமாக நீங்கள் இதை படம் எடுக்கலாம். இது கறுப்புப் பணம் அல்ல என்றார்.

இதை கேட்டதும் ராம்லீலா மைதானம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. ராம்தேவ் உண்ணாவிர தத்தை ஆதரித்து நாடெங்கும் மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ராம்தேவ் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இந்தியர்களும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டன், நியூயார்க், ஹஸ்டன், தம்பா, நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல், உள்பட 13 நகரங்களில் உண்ணாவிரதம் நடக்கிறது. அது போல ராம்தேவ் சீடர்கள் அதிகம் உள்ள மற்ற நாடுகளிலும் உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது. ராம்தேவ் உண்ணாவிரதம் இந்தியாவில் மட்டு மின்றி கடல் கடந்து வாழும் இந்தியர்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தயாநிதி மாறனிடம் விரைவில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை இந்தக் குழு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில் முன்பு தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பொறுப்பை வகித்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்த இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து சாக்கோ கூறுகையில்,

தயாநிதி மாறனையும் விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளோம். தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஸ்பெக்ட்ரம் லைசென்களை ஒதுக்கீடு செய்தது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம்.

விரைவில் தயாநிதியிடமும் விசாரணை நடத்துவோம். நாடாராளுமன்றக் கூட்டுக் குழுவின் அடுத்தக் கூட்டம் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும். 7ம் தேதி சிபிஐ இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ இதுரவை சேகரித்துள்ள விவரங்களைக் கேட்பாம் என்றார்.

மாறனை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-பாஜக:

இந் நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில், முறைகேடு புகாருக்கு ஆளான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தயாநிதி மாறன் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அவராக ராஜினாமா செய்யாவிட்டால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்றார்.

புற்றுநோயை ஏற்படுத்தும் செல்போன்கள்.


செல்போனை பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களை புற்றுநோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நவீன உலகில் செல்போன் உள்ளிட்ட மின்காந்த அலையை வெளியிடும் தொலைத்தொடர்பு சாதனங்களை தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்தவரை அதை பயன்படுத்துவதில் இருந்து ஒதுங்கியிருந்தால் ஓரளவுக்கு புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க இயலும் என்றும் உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பை (ஐஏஆர்சி) சேர்ந்த விஞ்ஞானிகளின் கூட்டம் பிரான்சில் உள்ள லியோன் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. 8 நாள்கள் நடந்த இந்த கூட்டத்தில், செல்போனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து விரிவாக ஆலோசித்தனர். செல்போனால் ஏற்படும் தீங்கு குறித்து இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளை ஆய்வு செய்தனர். பெரும்பாலான ஆய்வுகளில் செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.

"செல்போன் பயன்படுத்துவதால் மனிதர்கள் உள்பட அனைத்து உயிர்களுக்கும் தீங்கு ஏற்படுவது உண்மை. மனிதர்களை புற்றுநோய் தாக்குவதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இருப்பினும் இது இன்னும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. ஆனால் பல ஆய்வுகளிலும் செல்போனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரியவந்துள்ளன'' என்று ஐஏஆர்சி விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும் செல்போனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாபா ராம்தேவ், அரசுக்கு விடுத்துள்ள 11கோரிக்கைகள்.


ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள பாபா ராம்தேவ் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளில் உறுதியாக உள்ளார். அந்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

1. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல நூறு லட்சம் கோடி பணத்தை இந்தியாவின் தேசிய சொத்தாக அறிவித்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.

2. அளவுக்கு அதிகமாக, முறைகேடாக பணம் சம்பாதித்து, அந்த கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைப்பது தேசிய குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.

3. ஊழல் செய்து, ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

4. அன்னா ஹசாரே தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் குழு மூலம் வரையறுக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா மிகவும் வலுவான ஒரு சட்டமாக இருக்க வேண்டும்.

5. ஊழல் குற்றச்சாட்டுக்களை சீக்கிரம் விசாரித்து முடிக்க எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் உருவாக்கப்பட வேண்டும்.

6. ஊழல் செய்து சிக்கிக் கொள்ளும் வி.ஐ.பி.க்கள் மீதான வழக்கு விசாரணை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். உடனுக்குடன் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

7. ஊழல் செய்வதற்கு 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களும் ஒரு விதத்தில் உதவியாக உள்ளன. எனவே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்து விலக்க வேண்டும்.

8. பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் தொடர்பான மேற்படிப்புகளை ஒவ்வொரு வரும் தங்கள் தாய் மொழியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

9. பாரத பிரதமரை மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யும் முறையை கொண்டு வரவேண்டும். இதனால் அரசியலில் நிலைத்த தன்மையை உருவாக்க முடியும்.

10. பொதுச்சேவை உறுதி சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

11. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.

தினமணிக்கும், தேர்தல் ஆணையருக்குமான தொடர்பு?.


முரெசாலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப் பதிப்பு 3ம் தேதி தொடங்குகிறது.

தொடங்கி வைப்பவர் யார் தெரியுமா ?.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் தான்.

அ.தி.மு.கவின் ஆதரவு ஏடான தினமணி டெல்லிப் பதிப்பை தொடங்கி வைக்கிறார்.

அப்படி எனறால், தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு?.

அவர் எப்படி இந்த விழாவில்?, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா?, ஏதாவது புரிகிறதா?, புரிந்தால் சரி!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு பிறகே கனிமொழி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு?


2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழி யின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நீதிமன்றத்தின் ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் மேலும் ஒரு மாதம் கனிமொழி திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

டெல்லி நீதிமன்றத்துக்கு ஒரு மாத கால கோடை விடுமுறை இன்று தொடங்கு வதால் நேற்றே தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமைக்கான விசாரணைப் பட்டியலில் கனிமொழியின் வழக்கு இடம் பெறவே இல்லை.

இந் நிலையில் இன்று முதல் விடுமுறையும் ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை 4ம் தேதி தான் நீதிமன்றம் மீண்டும் திறக்கும். இதனால் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அஜித் பரிஹோகே விரும்பினால், நீதிமன்றத்தின் கோடை காலம் முடியும் முன்பே கூட எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கலாம் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

அவர் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு வந்து தனது தீ்ர்ப்பை வழங்கலாம். அல்லது தனது தீர்ப்பை நீதிமன்றத்தின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கலாம், அதை பதிவாளர் நீதிபதியின் சார்பில் நீதிமன்றத்தில் வாசிக்கலாம்.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வர ஒரு மாத காலம் ஆகலாம் என்றும், அதுவரை அவர் சிறையில் தான் இருந்தாக வேண்டும் என்றும் தெரிகிறது.