Thursday, January 12, 2012

டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், நடிக்க நடிகை அஞ்சலி மறுப்பு .



முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

'உன்னாலே உன்னாலே' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய், சமீபத்தில் நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட 'டேம் 999'. அணையை உடைக்காவிட்டால் 35 லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை கேரள அரசின் உதவியுடன் செய்தது இந்த படம். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

'டேம் 999' படத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த வினய், விமலா ராமன் மீதும் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் வினய்யை வைத்து தயாராகும் புதுப்படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். ஆனால் வினய்யுடன் நடிப்பதால் தமிழ் ரசிகர்கள் என் மீது ஆத்திரப்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஞ்சலி!

அஞ்சலிக்கு தெரிந்தது கூட, வினய்யை வைத்து படமெடுக்க முயலும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியவில்லையே!

தேவிகுளம், பீர்மேட்டை கேரளாவிலிருந்து மீட்க வேண்டும் - கருணாநிதி அதிரடி.



தமிழர்களுக்குச் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை மீட்டு தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதிகளை முறைகேடாக கேரளத்துடன் இணைத்தது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதை வரலாற்று சான்றுகளுடன் விவரித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமான இடமாகும். தமிழர்களின் இடம் இவை. 1886ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமே பிழையானது.

தமிழர்களுக்குச் சொந்தமான இடத்தை கேரளாவுடன் இணைத்தது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இப்போதாவது வரலாற்றை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகத்துடன் இணைக்க தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.