Sunday, May 29, 2011

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சில குறிப்புகள்.

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!


சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!

உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.


பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

நன்றி - speedsays.blogspot.com

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு : நகரசபை தலைவர்கள் - மேயர் நேரடியாக தேர்வு ; தமிழக அரசு பரிசீலனை.


உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு:  நகரசபை தலைவர்கள்- மேயர் நேரடியாக தேர்வு; தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலைப் போல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி அமைப்பில் சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 மேயர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.

அவர்களில் 8 பேர் தி.மு.க.வினர், 2 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். இதேபோல் 148 நகரசபை தலைவர்கள் உள்ளனர். இது தவிர மாவட்ட ஊராட்சிகள் 31, ஊராட்சி ஒன்றியங்கள் 385, பேரூராட்சிகள் 561 உள்ளன. மொத்தத்தில் பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட 1 லட்சத்து 32 ஆயிரத்து 95 பதவிகள் உள்ளன.

தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவடைகிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு உள்ளாட்சி தேர்தலை வழக்கமான காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சையத் முனீர்கோடா கடந்த 24-ந்தேதி பதவி விலகினார்.

புதிய தேர்தல் அதிகாரியாக சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

அநேகமாக ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த முறையை ரத்து செய்து விட்டு பெரும்பான்மை உறுப்பினர்களே தலைவர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தனர்.

உள்ளாட்சி மன்றத்தில் தலைவர் ஒரு கட்சியாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மாற்று கட்சியாகவும் இருந்தால் தீர்மானங்களை நிறைவேற்று வதில் சிக்கல்கள் ஏற்படுவதால் புதிய முறையை கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போது ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அ.தி.மு.க. மீண்டும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறது. முன்பு நடைமுறையில் இருந்தது போல் மேயர்கள், நகரசபை தலைவர்கள் பதவிகளுக்கு மக்கள் வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறை மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள, செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும். அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

அண்ணா பல்கலைக்கழகங்களை இணைக்க அதிமுக அரசு திட்டம்.


திமுக ஆட்சிக்காலத்தில் ஊர் ஊருக்கு ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து அண்ணா பல்கலைக்கழகத்தை கூறு போட்டனர். தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து சென்னையில் மட்டும் இயங்கும்படி செய்ய அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பிரித்து கோவை, திருச்சி, நெல்லை, மதுரை என பிரித்து கிளைகளை அமைத்தனர். அதன் பிறகு சென்னை அண்ணா, கோவை அண்ணா, நெல்லை அண்ணா, திருச்சி அண்ணா என்று அவை அழைக்கப்பட்டன.

தற்போது இந்த பல்கலைக்கழக பிரிவினையை ரத்து செய்து விட்டு ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக, முன்பு போல மாற்றியமைக்க அதிமுக அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர அரசு பணிந்தது : 9 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் மேதா பட்கர்.


மும்பை, குடிசைவாசிகள் தங்கியிருந்த இடத்தை மகாராஷ்டிர அரசு தனியார் நிறுவனத்துக்கு அளித்ததை எதிர்த்து சமூக நல ஆர்வலர் மேதா பட்கர் 9 நாள்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

குடிசைவாசிகளை அந்த இடத்தில் இருந்து அகற்றும் முடிவை மகாராஷ்டிர அரசு கைவிட்டதை அடுத்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

மும்பையின் புறநகர் பகுதியான கோலிபாரின் பகுதியில் உள்ள 140 ஏக்கர் நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு மகாராஷ்டிர அரசு அளித்தது. ஆனால் அந்த இடத்தில் ஏராளமானோர் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர்.

இதனையடுத்து குடிசைவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த 20-ஆம் தேதி கோலிபாரின் பகுதியில் மேதா பட்கர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

மேதா பட்கரின் போராட்டத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்தது. குடிசைவாசிகள் மறுவாழ்வுத் திட்டத்துக்கு சம்மதித்து விட்டதாக போலியாக கையெழுத்திட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று மேதா பட்கர் குற்றம்சாட்டினார். மேலும் மகாராஷ்டிர மாநில குடிசைப் பகுதிச் சட்டம் 1971-ன் 3கே பிரிவை நீக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஏனெனில் இந்தப் பிரிவு, எவ்வித அனுமதியுமின்றி குடிசைவாசிகளை அகற்ற மாநில அரசு அதிகாரம் அளிக்கிறது.

எனினும் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாததால் மேதா பட்கரின் உண்ணாவிரதம் தொடர்ந்து 9 நாள்கள் வரை நீடித்தது.

இந்நிலையில் ஆட்சியர் நிர்மல் தேஷ்முக், மேதாபட்கரை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவரது கோரிக்கைகளை ஏற்று பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். இதனையடுத்து மேதா பட்கர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, தேசிய மக்கள் கூட்டணி அமைப்பின் உறுப்பினர் மதுரேஷ் குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய இரு குழுக்களை அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

தடுமாற்றத்தில் குடிநீர்வாரியம்...

வ. ஜெயபாண்டி


நீரின்றி அமையாது உலகு'' என்பது வள்ளுவப் பெருமானின் வாக்கு. உலகில் உயிர்வாழ அடிப்படையாக உள்ள தண்ணீரைப் பாதுகாப்பானதாக்கிப் பயன் படுத்துவதில் தமிழகம் இன்னும் கற்கால நிலையிலே இருக்கிறது என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

மனிதன் உயிர் வாழத் தேவையானவற்றில் முதன்மையானதாக உள்ள குடிநீர் என்பது அனைத்து மக்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதைவிட, கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்குத் தகுதி உள்ளதாக இருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

குடிநீர் மூலமே தமிழகத்தில் 25% தொற்றுநோய்க் கிருமிகள் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படிப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மட்டும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசு செலவிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், பெரும்பாலான உள்ளாட்சிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகக் கூறி மக்கள் போராட்டம் நடத்தினாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை. சுகாதாரத் துறையும் நீரின் மூலம் பரவும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த பல கோடி ரூபாயைச் செலவிடும் அரசானது, அந்த நோய் எதன் மூலம், எப்படிப் பரவுகிறது? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்பதும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளது கவலையாகும்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் குடிநீர் மேல்நிலைத் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக குடிநீர் விநியோகத்துக்கான கட்டணமும் மக்களிடமிருந்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்கின்றன.

இவ்வாறாக வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. காரணம், குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே பராமரித்து வருகிறது. ஆனால், அந்த குடிநீர் விநியோகப் பராமரிப்புக்கு உரிய நிதியானது அந்த வாரியத்துக்கு வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே குடிநீரானது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதாக விநியோகிக்கப்படுவதில்லை என்கின்றனர் வடிகால் வாரியத்தில் உள்ள அதிகாரிகள்.

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் இரண்டரைக் கோடி பேர் குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் குடிநீரையே தினமும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதில் 5 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 98 நகர டவுன் பஞ்சாயத்துகள், 175 ஊரக டவுன் பஞ்சாயத்துகள் அடங்குகின்றன.

இதைத்தவிர்த்து 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் குடிநீர் பராமரிப்புக்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் குடிநீர் கட்டண நிதி மட்டும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அளிக்கப்படுவதில்லை என்பதே அதிர்ச்சித் தகவல்.

கடந்த 2000-வது ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரையில் மட்டும் தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.488 கோடியே 47 லட்சம் என்கிறார்கள் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள்.

மாநகராட்சிகளில் சேலம், கோவை ரூ.52 கோடியும், நகராட்சிகளில் எடப்பாடி, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், ஜெயங்கொண்டம், கம்பம், கூடலூர், புளியங்குடி ஆகியன ரூ.1.99 கோடியும் பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல கிராமப் பஞ்சாயத்து யூனியன், மூன்றாம்நிலை நகராட்சிகள் என 15 உள்ளாட்சி அமைப்புகள் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. பெரும்பாலான கிராமப் பஞ்சாயத்துகள் ரூ.35 கோடிக்கும் மேலாகப் பாக்கி வைத்துள்ளன.

மேலும், தூத்துக்குடி துறைமுகம், உர நிறுவனம், சிப்காட் என பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ.18 கோடிக்கும் மேலாக குடிநீர் வாரியத்துக்கு பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடிநீருக்கென கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் அந்தக் கட்டணத்தை குடிநீரைச் சுத்தமாக மக்களுக்கு வழங்கும் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும் அல்லவா? ஆனால், குடிநீர் கட்டணத்தை முழுவதுமாக உள்ளாட்சி நிர்வாகிகளே பங்குபோட்டு வேறு திட்டக்கணக்கு எழுதி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஒருவர் குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்த சில நாள்கள் தாமதம் ஆனாலும் குடிநீர் இணைப்பைத் துண்டித்து கட்டணத்தை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்துக்குப் பணம் செலுத்தாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? அப்படிக் கட்டணம் செலுத்தாத உள்ளாட்சி அமைப்புகளின்

குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரமும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இல்லையாம். ஆகவே, குடிநீர் வடிகால் வாரியம் தனக்கான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் நிர்பந்தப்படுத்தி வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது என்கிறார் குடிநீர் வடிகால் வாரிய ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவர் கே.கே.என்.ராஜன்.

நிலைமை இப்படியிருக்க, குடிநீரில் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டதும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவில்லை என குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது உள்ளாட்சி அமைப்புகள் பழியையும் போட்டு வருவதாக ஆதங்கப்படுகின்றனர் வாரிய அதிகாரிகள்.

குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் குழு கூட்டமும் அவ்வப்போது கூட்டப்படுகிறது. ஆனால், அக்கூட்டத்தில்கூட வாரியத்துக்கான நிலுவைத் தொகையை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், நிலுவைத் தொகைக்கான வட்டி தள்ளுபடி செய்யும் நடவடிக்கை மட்டும் மேற்கொள்ளப்படுகிறதாம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல, குடிநீரைப் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்கவும் அப்போதைய அரசு ஆர்வம் காட்டியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதற்கு அடுத்து வந்த திமுக அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டது. வருமுன் காப்போம் என்ற வாக்கியத்தைக் கூறி திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்த திமுக அரசு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு நிதியோ, மானியமோ வழங்கவில்லை.

ஆக, அடிப்படையில் மக்களுக்கு எது தேவையோ அதைத் தராத அரசாகவே திமுக அரசு இருந்தது. கோடை வெயில் இப்போது கொளுத்திவரும் நிலையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் குளிர்நீர், குளிர்பானம் என அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி அனைவரும் நீரை நம்பியுள்ள நிலையில் அந்த நீர், நோய் பரப்பும் வகையில் இருந்தால் உடல்நலம் பாதிக்கும்.

ஆகவே, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சேர வேண்டிய நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வசூலித்து, அதை வைத்து மக்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க இப்போதைய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக நல விரும்பிகள் அனைவரது வேண்டுகோள்.

மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய அரசு துணைபோகிறது : பொன்முடி குற்றச்சாட்டு


சமச்சீர் கல்வியை நீக்கி, மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய அதிமுக அரசு துணை போகிறது என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்தபின் அவர் பேசியது:

ஆட்சியில் இருந்தபோது நடந்த கூட்டங்களுக்கு வந்ததைவிட இப்போது அதிகளவில் கூட்டம் வந்துள்ளது, இதுதான் திமுக. விழுப்புரம் மாவட்டம் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளீர்கள்.

தேர்தல் தோல்வி குறித்து நாம் இங்கு பேசவரவில்லை, அதற்கான காரணங்களை நீங்கள் ஏற்கெனவே பேசிவிட்டிருப்பீர்கள். ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 88-வது பிறந்தநாள் விழாவை பட்டிதொட்டியெல்லாம் கூட்டங்கள் நடத்தி கொண்டாட வேண்டும்.

தோல்வி நிரந்தரமல்ல, உள்ளாட்சித் தேர்தல் வருகிறது, அடுத்து மக்களவைத் தேர்தல் வருகிறது. இப்படி பரபரப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தொகுதியில் வெற்றிபெற்று இவ்வளவு பெரிய இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர் (கருணாநிதி) நம்முடன் இருக்கிறார் என்ற மகிழ்வோடு நாம் கட்சிப் பணியாற்றுவோம்.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் ஒரே பாடமுறையில் கல்வி கற்க, 5 ஆண்டுகளாகப் படிப்படியாக கல்வியாளர்கள் குழு கருத்தைக் கேட்டே செயல்படுத்தியுள்ளோம். முத்துக்குமரன் குழுவுக்குப் பிறகு மற்றொரு குழுவும் அமைத்து தமிழ்வழி, ஆங்கில வழி என படிக்கலாம், ஆனால் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதுதான் சமச்சீர் கல்வி.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது சமச்சீர் கல்வி. இதனை நிறுத்துவதற்கு பதில் அதை செயல்படுத்த படிப்படியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இருக்கலாம்.

மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய இக்கல்வி முறையை அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு துணைபோகிற அரசாக அதிமுக அரசு உள்ளது என்றார்.

ரஜினியைக் காணத் துடித்த கமல்.. ஒரு உருக்கமான பின்னணி !


திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத்தில் ஆயிரம் கருத்துவேறுபாடுகளைத் தாண்டிய நண்பர்கள். தமிழ் சினிமாவின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவுக்கு புதிய கவுரவம் தந்த சாதனையாளர்கள். பெயர்களைச் சொல்வதில் கூட இவர்களை பிரித்து உச்சரிக்க முடியாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் தன்னிச்சையாக வரும்... அந்தப் பெயர்கள் ரஜினி - கமல்!

கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மருத்துவனையில் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காண அத்தனை விவிஐபிக்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் அனுமதிதான் கிடைத்தபாடில்லை. வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் ரஜினியைத் தாக்கக் கூடும் என்பதால் சிறப்பு வார்டில் அவர் வைக்கப்பட்டிருந்தார். மனைவி, மகள்கள், மருமகன் தவிர வேறு யாரும் ரஜினியைப் பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்து, பின்னர் ரஜினி வழியில் நடிகராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ள விஜயகாந்த் கூட ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலை. ஐசியுவிலிருந்த ரஜினியை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு வந்து, "அண்ணன் ரஜினி நலமுடன் இருக்கிறார். திரும்ப பழையபடி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று உருக்கத்துடன் கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரால் ரஜினியை பார்க்கக் கூட முடியவில்லை. எனவே அவர் ராகவேந்திரர் கோயிலில் ரஜினிக்காக பிரார்த்தனை செய்து, மக்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்தார். "இன்றைய சினிமாவில் அனைவருமே ரஜினிக்கு ரசிகர்கள்தான். பிறகுதான் நடிகர்கள். எங்கள் அன்புக்குரிய ரஜினி விரைந்து நலம்பெற்று வரவேண்டும்," என்றார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் எழுப்பிய கேள்வி, "கமல் சார் ஏன் இன்னும் பார்க்கவில்லை. அவரை விட உரிமையுள்ளவர் யார் இருக்கிறார்கள்...?" என்றே கேட்டு வந்தனர்.

உண்மையில் ரஜினியைக் காண மூன்றுமுறை கமல் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் ஒவ்வொரு முறை பார்க்க முயன்றபோதும், ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது டயாலிஸிஸ் சிகிச்சையில் இருந்ததால், பார்க்க முடியவில்லையாம்.

ரஜினியைப் பார்த்தாக வேண்டும் என லதா மற்றும் ஐஸ்வர்யாவிடம் அவர் சார்பில் கேட்கப்பட்டபோது, இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைள் காரணமாக நாங்களே அவரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே மருத்துவர்கள் அனுமதி அளித்ததும் உங்களுக்கு உடனே சொல்கிறோம்," என்று மிகுந்த தயக்கத்துடன் கூறியுள்ளனர்.

'பக்கத்திலிருந்தும் என் நண்பன் ரஜினியைப் பார்க்க முடியவில்லையே... அவரைச் சந்திக்கும் சூழலை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுங்கள்', என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் கலைஞானி.

கமல் 50 என்ற பெயரில் விஜய் டிவி விழா கொண்டாடியபோது, முதல் ஆளாய் அதில் கலந்து கொண்டு கடைசி ஆளாய் வெளியேறி நட்புக்கு மரியாதை செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. விழாவில் தன்னைப் பற்றி ரஜினி பேசியதைக் கேட்டு கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட கமல், அவரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார். "எவன் சொல்வான் இந்த மாதிரியெல்லாம்... ரஜினி என் உண்மையான நண்பன்... பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்" என்றெல்லாம் கமல் புகழ்ந்தது நினைவிருக்கலாம்.

ரஜினிக்கு விசேஷ டாக்டர்கள் சிகிச்சை.


நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ராணா படதொடக்க விழாவில் கலந்து கொண்டு முதல் காட்சியில் நடித்தார். அப்போது படப்பிடிப்பு குழுவினருடன் சாப்பிட்டு வீடு திரும்பிய போது உடல் நலக் குறைவு ஏற்பட்டது. வயிற்று கோளாறு காரணமாக வாந்தி ஏற்பட்டது.

இதையடுத்து மைலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மூச்சு திணறல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்யப்பட்டது.

சிறு நீரக பாதிப்புக்கு மேல் சிகிச்சை பெறுவதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறு நீரக சிகிச்சையில் ஆசியாவிலேயே பெரிய மவுன்ட் எலிபெத் மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் அங்கு நவீன வசதிகளுடன் கூடிய விசேஷ வார்டில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் உடனடியாக சிகிச்சையை தொடங்கினார்கள். முதலில் ரஜினியின் உடல் உறுப்புகள் பாதிப்பு குறித்து அவருடன் சென்ற சென்னை டாக்டர்களுடன் சிங்கப்பூர் டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், பல்வேறு சோதனை அறிக்கைகளையும் பார்த்து ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு ரஜினிக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய விசேஷ குழு அமைக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரஜினி அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்டது. சென்னை ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்யும் போது ரஜினிக்கு வலி அதிகமாக ஏற்பட்டதாகவும், சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் வலி இல்லாத வகையில் நவீன முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டது.

டயாலிசிஸ் செய்யப்பட்ட பிறகு அவரது சிறு நீரகங்களின் செயல்பாடு குறித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்கிறார்கள்.

ஒருவருக்கு 2 சிறு நீரகங்கள் இருக்கும். இதில் ஒன்று செயல் இழந்தால்கூட மற்றொன்றின் மூலம் உயிர் வாழலாம். இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தால் டயாலிசிஸ் செய்து அதன் பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து அடுத்த கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்கிறார்கள்.

ரஜினிகாந்த் நேற்று முன் தினம் இரவு சிங்கப்பூர் சென்ற போது அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின் ஆகியோர் சென்றனர். சில காரணங்களால் மனைவி லதா ரஜினி காந்த் செல்லவில்லை. நேற்று இரவு 11.15 மணிக்கு அவர் சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.


மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த காந்திய வாதியான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பெங்களூரில் ஊழலுக்கு எதிரான அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் அன்னா ஹசாரே கலந்து கொண் டார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால் சோனியாகாந்தி ரிமோட் கன்ட்ரோல் போல் இருந்து கொண்டு அவரை இயக்கி வருகிறார். சோனியாகாந்தி தான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் கெட்ட மனிதர் அல்ல. ஆனால் பிரச்சினைகளை உருவாவதற்கு ரிமோட் கன்ட்ரோல் தான் காரணம்.

எந்த அரசாக இருந்தாலும் மக்கள் சக்தி தான் பலம் வாய்ந்தது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஊழல்வாதிகளை விசாரிக்கும் லோக்பால் சட்ட மசோதாவை வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். இதற்கான கர்நாடக மக்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஊழலுக்கு எதிராக நான் பிரசாரம் செய்து வருவதால் இதுவரை 6 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள். ஆனால் கறைபடியாதவன் என்பதால் அவர்களால் என்னை நெருங்க முடியவில்லை.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

அதிமுகவின் அராஜகம்.


திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

11 மணிக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.

காலை 8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.

விபத்து நடந்த அன்றும் அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான் மரியம்பிச்சையின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.

ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?

சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.

கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.

மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)

மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம் போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.

இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

www.vinavu.com

விலைவாசிஉயர்வை கண்டித்து போராட்டம்: தா.பாண்டியன்.


விலைவாசி உயர்விற்கு தேர்தல் வரை மாநில அரசை பொறுப்பாக்கிய கம்யூனிஸ்டுகள் அதுவும் குறிப்பாக தா.பாண்டியன் தற்போது மத்திய அரசை பொறுப்பாக்குகிறார்.

விலைவாசி உயர்விற்கு உண்மையான காரணகர்த்தா மத்திய அரசுதான் என்று தெரிந்திருந்தும் ஓட்டுக்காக அல்லது கூட்டணிக்காக உண்மையை மறைத்துப் பொய் பேசியிருக்கிறார்.

தா.பாண்டியனை பொறுத்தவரையில், கீழே விழுந்தேன் மீசையில் மண் படவில்லை என்பதைக் கூட, சதிகாரர்களால் கீழே தள்ளப்பட்டபோதும் கூட கீழே விழாமலும் மீசையில் மண்படாமலும் நிமிர்ந்து நின்றவர்கள் நாங்கள் என்று சுவைபட பேசுபவர்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதனை கண்டித்து வருகிற ஜுன் மாதம் முதல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். திறமையற்ற ஆட்சியாளர்களால் விலைவாசி நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

பணவீக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்று மத்தியமந்திரி கூறுவது, அரசை பயமுறுத்துகிறாரா? அல்லது மக்களை பயமுறுத்துகிறாரா? என்று தெரியவில்லை என்றார்

யார் இந்த மரியம்பிச்சை? ஒரு ரவுடி மந்திரியான கதை!


க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார்.

அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர். இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.

இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில் புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப் பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.

சொந்த வாழ்க்கையில் நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.

மேலும் தான் வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.

இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.

அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின் மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும் கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.

மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.

மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில் தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம், தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும் கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள் போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.

உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

www.vinavu.com

நல்வழி காட்டுவார்களா ஆட்சியாளர்கள்?

சி. சீனிவாசன்


நாளும் உழைத்திடும் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்று மே தினத்தில் விடுத்த அறிக்கையில் அன்றைய முதல்வர் கருணாநிதி கூறி இருந்தார்.

இதேபோல் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம், உழைப்பவரை உயர்த்துவோம் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து, தொழிலாளர்கள் வாழ்வில் நலமும் வளமும் கொழிக்கட்டும் என வாழ்த்துகிறேன் என்று அதிமுக பொதுச் செயலரும் இன்றைய முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்த வாழ்த்துகளைக் கூறும் இவர்கள் உண்மையிலேயே தொழிலாளர்கள் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறையோடுதான் இருக்கிறார்கள் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தொழிலாளர் வர்க்கத்துக்கும், குடும்பப் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தீமையை விளைவிப்பார்களா?

ஒரு நல்ல அரசின் கடமைகள், அரசுக்கு வருவாய்க்கு வழிவகை செய்தல், வருவாயைத் திரட்டுதல், நிதி விரயம் ஆகாமல் காத்தல், திட்டமிட்டு நிதியை ஒதுக்கீடு செய்தல் என்பதை "இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்று வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார். ஆனால் இன்றைய தலைவர்கள் நாட்டுக்கு எப்படி வருவாய் ஈட்டுவது என்பது தெரியாமல் திக்குமுக்கு ஆடுகிறார்கள்.

"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று கூறிக்கொண்டே, வருவாயின் மூலாதாரமே மதுக்கடைகள் தான் என்று கூறும் வகையில் தமிழகத்தில் வீதிகள்தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கிராமங்கள்தோறும் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி அமைக்க வேண்டும். தொடக்கப் பள்ளி இல்லாத கிராமமும், நடுநிலைப் பள்ளி இல்லாத பஞ்சாயத்தும் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வி தந்தவர் காமராஜ்.

பள்ளிக் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வி கற்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தையும் அவரே தொடங்கினார்.

ஆனால் இன்றோ, கிராமங்கள்தோறும் மதுக்கடை திறப்பதும், பள்ளி, கல்லூரிகள் அருகிலும்கூட மதுக்கடைகளை ஏக வசதியுடன் திறந்து வருவாய் ஈட்டுவதும்தான் அரசின் முனைப்பாக இருக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி, மக்கள் வசிக்கும் இடங்களில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் மனு அளிப்போர் எண்ணிக்கை எத்தனை, எத்தனை?

மேலும், மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள், மாணவர்கள் போராடாத இடம் தமிழகத்தில் எங்கு உள்ளது?

சென்னையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், டாஸ்மாக் நிறுவனம், இக்கடையை இடமாற்றினால் மது விற்பனை வருவாய் குறைந்து விடும் என்று நீதிமன்றத்துக்குப் பதில் அளித்தது.

குடும்பப் பெண்களின் நிம்மதியைக் கெடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனதைச் சீர்குலைத்து நாட்டுக்கு வருமானம் ஈட்டித் தரும் மதுக்கடைகளை நம்பித்தான் தமிழக அரசு இருக்கிறது என்றால், வருமானத்துக்காக வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் மது அருந்த வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றவும் தயங்காது போலிருக்கிறதே?

விஷச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பைக் குறைக்கத்தான் இந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.

ஆனால், மது அருந்திவிட்டு கொடுமைப்படுத்துவதாக மகளிர் காவல்நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுக்கும் மனைவியும், மது அருந்தப் பணம் இல்லாமல் பிஞ்சுக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் தந்தையும் அதிகரித்து வருகின்றனர். மேலும், குடி போதையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோரும், வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரும் அதிகரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் அண்மையில் 7 வயது பெண் குழந்தையையும், 4 வயது ஆண் குழந்தையையும் பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு மதுக்கடைக்குச் சென்ற தந்தை ஒருவர் போதை மீறிய நிலையில் டாஸ்மாக் கடையின் முன் ரோட்டில் கிடந்துள்ளார்.

வழியின்றித் தவித்த அந்த பிஞ்சுக் குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து தாயிடம் ஒப்படைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் வேண்டுமா?

நாட்டுக்கு 15 சதவிகித வருமானம் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கிறது என்பதற்காக, நாட்டு மக்களின் பணத்தைச் சுரண்டுவதுடன் அவர்களது உடல்நலத்துக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கிறது அரசு.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கல்வியில் பின்தங்கிய மாநிலமாக இருந்த பிகார், இப்போது அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் திறமையான ஆட்சியால் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு பூரணமாக அமலில் உள்ளது. அம் மாநிலம்தான் இந்திய அளவில் முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது. பிகாரும் குஜராத்தும்தான் தமிழகத்தின் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறை வாழ வழிவகை செய்வதே அரசின் கடமை.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காவும் நல்ல திட்டங்கள் பல தீட்டி, நேர்மையான ஆட்சி செய்யும் தலைவரையே ஊர் போற்றும், இந்த உலகம் போற்றும். இதை உணர்ந்து மதுக்கடைகளை மூடிவிட்டு மக்களுக்கு நல்வழி காட்டுவார்களா, தமிழக ஆட்சியாளர்கள்?