Sunday, May 29, 2011

தடுமாற்றத்தில் குடிநீர்வாரியம்...

வ. ஜெயபாண்டி


நீரின்றி அமையாது உலகு'' என்பது வள்ளுவப் பெருமானின் வாக்கு. உலகில் உயிர்வாழ அடிப்படையாக உள்ள தண்ணீரைப் பாதுகாப்பானதாக்கிப் பயன் படுத்துவதில் தமிழகம் இன்னும் கற்கால நிலையிலே இருக்கிறது என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

மனிதன் உயிர் வாழத் தேவையானவற்றில் முதன்மையானதாக உள்ள குடிநீர் என்பது அனைத்து மக்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதைவிட, கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்குத் தகுதி உள்ளதாக இருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

குடிநீர் மூலமே தமிழகத்தில் 25% தொற்றுநோய்க் கிருமிகள் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படிப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மட்டும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசு செலவிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், பெரும்பாலான உள்ளாட்சிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகக் கூறி மக்கள் போராட்டம் நடத்தினாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை. சுகாதாரத் துறையும் நீரின் மூலம் பரவும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த பல கோடி ரூபாயைச் செலவிடும் அரசானது, அந்த நோய் எதன் மூலம், எப்படிப் பரவுகிறது? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்பதும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளது கவலையாகும்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் குடிநீர் மேல்நிலைத் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக குடிநீர் விநியோகத்துக்கான கட்டணமும் மக்களிடமிருந்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்கின்றன.

இவ்வாறாக வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. காரணம், குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே பராமரித்து வருகிறது. ஆனால், அந்த குடிநீர் விநியோகப் பராமரிப்புக்கு உரிய நிதியானது அந்த வாரியத்துக்கு வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே குடிநீரானது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதாக விநியோகிக்கப்படுவதில்லை என்கின்றனர் வடிகால் வாரியத்தில் உள்ள அதிகாரிகள்.

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் இரண்டரைக் கோடி பேர் குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் குடிநீரையே தினமும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதில் 5 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 98 நகர டவுன் பஞ்சாயத்துகள், 175 ஊரக டவுன் பஞ்சாயத்துகள் அடங்குகின்றன.

இதைத்தவிர்த்து 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் குடிநீர் பராமரிப்புக்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் குடிநீர் கட்டண நிதி மட்டும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அளிக்கப்படுவதில்லை என்பதே அதிர்ச்சித் தகவல்.

கடந்த 2000-வது ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரையில் மட்டும் தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.488 கோடியே 47 லட்சம் என்கிறார்கள் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள்.

மாநகராட்சிகளில் சேலம், கோவை ரூ.52 கோடியும், நகராட்சிகளில் எடப்பாடி, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், ஜெயங்கொண்டம், கம்பம், கூடலூர், புளியங்குடி ஆகியன ரூ.1.99 கோடியும் பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல கிராமப் பஞ்சாயத்து யூனியன், மூன்றாம்நிலை நகராட்சிகள் என 15 உள்ளாட்சி அமைப்புகள் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. பெரும்பாலான கிராமப் பஞ்சாயத்துகள் ரூ.35 கோடிக்கும் மேலாகப் பாக்கி வைத்துள்ளன.

மேலும், தூத்துக்குடி துறைமுகம், உர நிறுவனம், சிப்காட் என பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ.18 கோடிக்கும் மேலாக குடிநீர் வாரியத்துக்கு பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடிநீருக்கென கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் அந்தக் கட்டணத்தை குடிநீரைச் சுத்தமாக மக்களுக்கு வழங்கும் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும் அல்லவா? ஆனால், குடிநீர் கட்டணத்தை முழுவதுமாக உள்ளாட்சி நிர்வாகிகளே பங்குபோட்டு வேறு திட்டக்கணக்கு எழுதி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஒருவர் குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்த சில நாள்கள் தாமதம் ஆனாலும் குடிநீர் இணைப்பைத் துண்டித்து கட்டணத்தை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்துக்குப் பணம் செலுத்தாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? அப்படிக் கட்டணம் செலுத்தாத உள்ளாட்சி அமைப்புகளின்

குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரமும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இல்லையாம். ஆகவே, குடிநீர் வடிகால் வாரியம் தனக்கான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் நிர்பந்தப்படுத்தி வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது என்கிறார் குடிநீர் வடிகால் வாரிய ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவர் கே.கே.என்.ராஜன்.

நிலைமை இப்படியிருக்க, குடிநீரில் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டதும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவில்லை என குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது உள்ளாட்சி அமைப்புகள் பழியையும் போட்டு வருவதாக ஆதங்கப்படுகின்றனர் வாரிய அதிகாரிகள்.

குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் குழு கூட்டமும் அவ்வப்போது கூட்டப்படுகிறது. ஆனால், அக்கூட்டத்தில்கூட வாரியத்துக்கான நிலுவைத் தொகையை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், நிலுவைத் தொகைக்கான வட்டி தள்ளுபடி செய்யும் நடவடிக்கை மட்டும் மேற்கொள்ளப்படுகிறதாம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல, குடிநீரைப் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்கவும் அப்போதைய அரசு ஆர்வம் காட்டியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதற்கு அடுத்து வந்த திமுக அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டது. வருமுன் காப்போம் என்ற வாக்கியத்தைக் கூறி திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்த திமுக அரசு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு நிதியோ, மானியமோ வழங்கவில்லை.

ஆக, அடிப்படையில் மக்களுக்கு எது தேவையோ அதைத் தராத அரசாகவே திமுக அரசு இருந்தது. கோடை வெயில் இப்போது கொளுத்திவரும் நிலையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் குளிர்நீர், குளிர்பானம் என அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி அனைவரும் நீரை நம்பியுள்ள நிலையில் அந்த நீர், நோய் பரப்பும் வகையில் இருந்தால் உடல்நலம் பாதிக்கும்.

ஆகவே, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சேர வேண்டிய நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வசூலித்து, அதை வைத்து மக்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க இப்போதைய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக நல விரும்பிகள் அனைவரது வேண்டுகோள்.

No comments: