Saturday, April 23, 2011

நாவரசு கொலை குற்றவாளி ஜான்டேவிட் சரண்.


நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜான்டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரணடைந்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு. இவரை, 1996ல், சகமாணவர் ஜான்டேவிட் என்கிற மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்தார்.

இதையடுத்து கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில், ஜான்டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜான்டேவிட், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததன் பேரில், விடுதலை செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. தற்போது, கடலூர் செஷன்ஸ் கோர்ட் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இது குறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம், "இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் ஜான்டேவிட் தற்போது எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோர்ட் உத்தரவு கிடைத்த பின் ஜான்டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியிருந்தார்.

ஜான்டேவிட்டை கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட ஒரு தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர்.

பின்னர் வெங்கமேட்டில் ஜான்டேவிட் வீட்டிற்கு சென்றனர். ஆனால் ஜான்டேவிட் டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,

மாணவர் நாவரசு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்டேவிட்டை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 3 தனிப்படைபிரிவில் 2 பிரிவினர் திருச்சி, சென் னைக்கு சென்று விட்டனர்.

ஒரு பிரிவான நாங்கள் ஜான்டேவிட்டின் சொந்த வீடு உள்ள கரூர் வெங்கமேடு வந்து சோதனை செய்தோம். ஆனால் இங்கு யாரும் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள்.

இதனால் டேவிட் மாரிமுத்து இங்கு எப்போது வந்தார், வாடகை பணம் எவ்வாறு பெற்று உள்ளார் என்பது குறித்து இங்கு உள்ள அலுவலர்களிடம் விசாரித்து உள்ளோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த வீட்டில் டேவிட் மாரிமுத்து இருந்து உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் தலை மறைவாகி உள்ளார். தாய் எஸ்தரின் லட்சுமி தற்சமயம் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதே போன்று இங்கு முன்பு பணியாற்றி வந்த வாட்ச் மேன்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். அதே போன்று ஜான்டேவிட் படித்த கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அவரது முழுவிவரங்கள் பற்றி விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் ஜான்டேவிட்டின் தந்தை டேவிட் மாரிமுத்து பணியாற்றிய கரூரில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்த உள்ளோம். ஜான்டேவிட்டின் தாய் எஸ்தரின் லட்சுமி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்து உள்ளார். அவர் பணியாற்றி வந்த பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்படும். மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட்டின் உறவினர்களிடமும் விசாரித்து வருகிறோம்.

உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் ஜான்டேவிட் பெயரில் பாஸ்போர்ட்டு எதுவும் எடுக்க வில்லை என்று தெரியவந்துள்ளது.

ஒருவேளை வேறு பெயரில் பாஸ்போர்ட்டு எடுத்துள்ளாரா? என்று விசாரித்து வருகிறோம். இருந்தாலும் ஜான்டேவிட் தமிழகத்தில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று நம்புகிறோம், விரைவில் ஜான்டேவிட் கைது செய்யப்படுவார்’’ என்று கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னை வந்துள்ளனர். அடையாறில் ஜான்டேவிட்டின் தாயார் சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்துள்ளார்.

தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்று பார்த்தபோது தாயார் வேறு இடம் சென்று விட்டது தெரியவந்தது. ஜான்டேவிட்டின் தாயாரை ஓரளவு நெருங்கி விட்டோம் என்றும், அவர் பிடிபட்டால் ஜான்டேவிட் பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு விடும் என்றும், சென்னை வந்துள்ள தனிப்படை போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஜான்டேவிட் சரணடைந்துள்ளார்.

கறுப்பு பண பிரச்சினை: இத்தனை ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? - உச்சநீதிமன்றம் கேள்வி.

கறுப்பு பண பிரச்சினையில் இத்தனை ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனு, நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை பார்த்து, நீதிபதிகள் காட்டமாக கேள்வி கேட்டனர். நீதிபதிகள் கூறியதாவது:

கறுப்பு பண பிரச்சினையில், மத்திய அரசின் முழுமையான பங்கேற்பு அவசியம். அந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியமான கேள்வி. அந்தப் பணம், தீவிரவாதிகள் பணமாகவும் இருக்கலாம், போதை மருந்து கடத்தலால் கிடைத்த பணமாகவும் இருக்கலாம்

கறுப்பு பண பிரச்சினையில், ஒரே நபரை (ஹசன் அலி) குறிவைத்து விசாரணை நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ள மற்றவர்களின் பெயர் ஏன் வெளியே வரவில்லை?

இந்த ஒருநபர்தான் கறுப்பு பணம் வைத்துள்ளாரா? மற்றவர்களின் வங்கிக் கணக்குகள், சந்தேகத்துக்குரியவையாக இல்லையா? மற்றவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்கள் மத்திய அரசிடம் இல்லையா? கறுப்பு பண பிரச்சினை, ஒரே நபரை சுற்றி வருவது ஏன்? அப்படியானால், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் எல்லாம் ஒரே நபருக்கு சொந்தமானதா?" என்றனர்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், 'கறுப்பு பண விவகாரத்தை, வெவ்வேறு விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டியுள்ளது. சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணம் குறித்து ரிசர்வ் வங்கியிடம் உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். பாஸ்போர்ட் விவகாரம், வெவ்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், அதை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும்' என்று பதிலளித்தார்.

தூங்கினீர்களா?

இந்த பதில் நீதிபதிகளை கோபம் கொள்ள வைத்தது.

"அப்படியானால், கறுப்பு பண பிரச்சினையில், இத்தனை ஆண்டுகளாக அனைத்து அரசு விசாரணை அமைப்புகளும் தூங்கிக்கொண்டு இருந்ததாக சொல்கிறீர்களா? இந்த பிரச்சினையை வெவ்வேறு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறீர்கள். ஹசன் அலியைத் தவிர, வேறு யாரும் சந்தேகத்துக்குரியோர் பட்டியலில் இல்லை என்று கூறுகிறீர்களா?

2009-ம் ஆண்டில் இருந்து இப்பிரச்சினையை விசாரித்து வருகிறீர்கள். என்ன தகவல் வைத்து இருக்கிறீர்கள்? அந்த கறுப்பு பணம், தீவிரவாதிகள் பணமா அல்லது போதை மருந்து கடத்தலால் கிடைத்த பணமா என்று தெரிய வேண்டும்.

அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில், ஒரு குழும நிறுவனம் ரூ.600 கோடி கறுப்பு பணத்தை வெளிநாட்டு வங்கியில் போட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது எங்கிருந்து வந்தது?" என்றனர் காட்டமாக.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், "இப்பிரச்சினையை அமலாக்கப் பிரிவு சரியாக விசாரித்து வருவதாகவும், வெவ்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்த, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத் தேவையில்லை", என்றும் கூறினார்.

சிறப்பு குழு

ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. அவர்கள் கூறியதாவது:

"இந்த விசாரணையில் தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அமலாக்கப்பிரிவே பலதடவை கூறியுள்ளது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் விசாரிப்பதுதான் நல்லது. அந்த விசாரணையை, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போன்ற ஒரு நபர் கண்காணிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் விசாரிப்பதில் தவறு இல்லை.

யாருடைய அதிகாரத்தையும் யாரும் மீற மாட்டார்கள். இது சீரியசான பிரச்சினை என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் விசாரிக்க வேண்டும். அதற்காக சிறப்பு விசாரணைக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசின் உத்தரவை பெறுங்கள்," என்றனர்.

அடுத்தகட்ட விசாரணையை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

எண்டோசல்ஃபனுக்கு தடை விதிப்பதில் பிரதமர் மெத்தனம்: கேரள முதல்வர்.



விவசாயத்தில் பயன்படுத்தப்படும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்துக்கு தடை விதிப்பதில் பிரதமர் மெத்தனமாக செயல்படுகிறார் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அச்சுதானந்தன் கூறியதாவது:

எண்டோசல்ஃபன் மருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க, கூடுதல் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த விவகாரத்தில் வேளாண் அமைச்சர் சரத் பவார், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் கருத்தையே பிரதமரும் தெரிவித்துள்ளார்.

எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது. அந்த மருந்துக்கு தடை விதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும்.

பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதில், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். ஏராளமானோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் 11 பஞ்சாயத்து பகுதிகளும், கர்நாடகத்தில் 96 கிராமங்களும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர். அதுமட்டுமில்லாமல் மக்களுக்கும் எதிரானவர்.

மத்திய அரசு பூச்சி மருந்து நிறுவனத்துக்கு குரல் கொடுக்காமல், உடனடியாக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

சாய்பாபா உடல்நிலை மோசம்: பக்தர்கள் திரண்டதால் பதட்டம்;போலீஸ் குவிப்பு; தலைவர்கள் வருகைக்காக ஹெலிகாப்டர் தளம் அமைப்பு.

சாய்பாபா உடல்நிலை மோசம்:   பக்தர்கள் திரண்டதால்   பதட்டம்;போலீஸ் குவிப்பு;   தலைவர்கள் வருகைக்காக    ஹெலிகாப்டர் தளம் அமைப்பு
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை இன்று காலை மேலும் மோசமானது. இதனால் புட்டபர்த்தி நகரில் உச்சக்கட்ட பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது. இதனால் புட்டபர்த்தி நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 28-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய்பாபா உடல் நிலையில் ஒவ்வொரு நாளும் பின்னடைவு ஏற்பட்டபடி உள்ளது.

கடந்த வாரம் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் முழுமையாக முடங்கிப் போனது. இதன் தொடர்ச்சியாக சாய்பாபாவின் இதயத் துடிப்பு குறைந்து விட்டது. ரத்த அழுத்தமும் குறைந்து போனது. இதன் காரணமாக அவரது உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத நிலையில் உள்ளன.

இதனால் டாக்டர்கள் 24 மணி நேரமும் சாய்பாபாவை கண்காணித்தப்படி உள்ளனர். தற்போதைய நிலையில் சாய்பாபாவின் இதயத் துடிப்பு, சிறுநீரகம், கல்லீரல் உள்பட சில முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்கை முறையில் தான் இயக்கப்பட்டு வருகின்றன.

உடல் உறுப்புகள் 100 சதவீதம் இயங்காவிட்டால் செயற்கை முறையில் எது செய்தாலும் பலன் இருக்காது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை கணித்து கூற முடியாத நிலையில் டாக்டர்கள் தவித்தப்படி உள்ளனர். செயற்கை சுவாசம், செயற்கை ரத்த சுத்திகரிப்பும் திருப்தியாக இல்லை என்று டாக்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து புட்டபர்த்தியில் எல்லாவித ஏற்பாடுகளையும் அனந்தபூர் மாவட்ட கலெக்டர் ஜனார்த்தனன் ரெட்டி செய்து வருகிறார். புட்டபர்த்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டு சுமார் 5 ஆயி ரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு மட்டும் சுமார் 300 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புட்டபர்த்தி நகரில் உள்ள கடைகள் இன்று 3-வது நாளாக மூடப்பட்டு இருந்தன. இதனால் புட்டபர்த்தியில் ஆங்காங்கே உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் பல்வேறு முன் ஏற்பாடுகளை ஆந்திர மாநில அரசு ஓசையின்றி செய்து வருகிறது.

இதற்காக அரசின் உயர் அதிகாரிகள் புட்டபர்த்தியில் முகாமிட்டுள்ளனர். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 26 தாசில்தார்களும், புட்டபர்த்தியில் தங்கி இருந்து சில வசதிகளை செய்து வருகிறார்கள். கர்னூல் 2-வது பட்டாலியனைச் சேர்ந்த போலீஸ் பாண்டு வாத்தியக் குழுவினர் புட்டபர்த்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத், கடப்பா, நெல்லூர் உள்பட மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து ராட்சத ஜெனரேட்டர்கள் புட்டபர்த்திக்கு கொண்டு வரப்பட்டு நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டு வருகிறது. அது போல் நகரின் முக்கிய சந்திப்புக்களில் ராட்சத எல்.சி.டி. திரைகள் நிறுவப்பட்டு வருகிறது.

புட்டபர்த்தி புறநகர்களில் ஏராளமான தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர். புட்டபர்த்தி அருகில் உள்ள கிராமங்களிலும் எல்.சி.டி. திரை வைக்கப்பட்டு வருகிறது. சாய்பாபாவுக்கு 188 நாடுகளில் தீவிர பக்தர்கள் உள்ளனர். அவர்கள் புட்டபர்த்திக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஏதாவது நிலைமை ஏற்பட்டால் வி.வி.ஐ.பி.க்களும் புட்டபர்த்திக்கு வருவார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், கோடீசுவரர்கள், புட்டபர்த்திக்கு படையெடுப்பார்கள். இதை கருத்தில் கொண்டு புட்டபர்த்தி அருகே 6 இடங்களில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

புட்டபர்த்தியில் பிரம்மாண்ட ஸ்டேடியம் ஒன்று உள்ளது. அந்த ஸ்டேடியத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் இருக்கலாம். அந்த ஸ்டேடியத்தை நேற்று பார்வையிட்ட ஆந்திர மாநில அரசு உயர் அதிகாரிகள், அதை வி.ஐ.பி.க்கள் வந்து செல்வதற்கு வசதியாக சீரமைத்து வருகிறார்கள்.

மாநில அரசு சட்டம்- ஒழுங்கு மற்றும் வி.ஐ.பி.க்கள் வருகை பாதுகாப்பு விஷயங்களில் அக்கறை காட்டி வரும் நிலையில் சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சாய் பாபாவுக்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றலாமா என்று அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதனால் என்ன முடிவு எடுப்பது? என்பதை தீர்மானிக்க முடியாமல் அறக் கட்டளை நிர்வாகிகள் உள்ளனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஒருவித இறுக்கமான சூழ்நிலை புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நிலவுகிறது.

இதற்கிடையே சாய் பாபா அறக்கட்டளை ஆசிரமத்தில் இருந்து பக்தர்கள் அனைவரும் நேற்று அதிரடியாக வெளி யேற்றப்பட்டனர். இனி ஆசிரமத்துக்குள் வி.ஐ.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் மல்க தெருக்களில் நிற்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சாய்பாபா பிழைத்து எழுந்து வருவார். 96 வயது வரை உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இன்று காலை ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபயா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாய்பாபாவுக்கு சுவாச கோளாறு இருப்பதால் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

அவரது சிறுநீரகம் சரிவர செயல் படாததால் ஹீமோ டயாலி சிஸ் அளிக்கப்படுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மஞ்சள் காமாலை ஏற்பட் டுள்ளது. இவற்றை சரி செய்ய தொடர்ந்து மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருந்துகளை உடல் உறுப்பு கள் ஓரளவுதான் ஏற்கிறது.

இதனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. இதயதுடிப்பு மிகவும் குறைவாக உள்ளது. ரத்த அழுத்தமும் குறைந்து விட்டது. பேஸ்மேக்கர் கருவி பொருத்தியும் இதய துடிப்பு சீராகவில்லை. அதை சரிப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க டாக்டர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அதில் கூறி உள்ளார்.

சாய்பாபா உடல் நிலை மோசம் அடைந்திருப்பதை அறிந்த பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் சாய்பாபாவை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள். ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் சோகமாகவே காணப்படுகிறது.

ராயலசீமா ஐ.ஜி. சந்தோஷ் மெகரா தலைமையில் 20 கம்பெனி அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விமான நிலையம், சத்யசாய் ஆஸ்பத்திரி, புட்டபர்த்தி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தோண்டி எடுத்துவரப்பட்ட மரங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் நடப்பட்டுள்ளன; ஆய்வு குறித்து வைகோ அறிக்கை.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தோண்டி எடுத்துவரப்பட்ட மரங்கள்    ஸ்டெர்லைட் ஆலையில் நடப்பட்டுள்ளன;    ஆய்வு குறித்து வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல், தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அ.தி.மு.க. அரசின் அனுமதியையும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.


கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டர் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக் கூடாது என்ற சுற்றுசூழல் அமைச்சகம் வரையறுத்த சட்ட விதியை மீறி, 15 கிலோ மீட்டர் தொலைக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு அமைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு அடர்த்தியான பசுமைச் சூழல் அமைக்க வேண்டும் என்று முதலில் நிபந்தனை விதித்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒரு சில நாள்களுக்கு உள்ளாகவே, 94 ஆகஸ்ட் 18- ஆம்நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல் அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உச்ச நீதிமன்றம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக் கூடம் நீரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின் போது, எதிர்மனுதாரர் களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்று கூறியது. 40 நாள்கள் கழித்தே நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல் 6,7,8 தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. மீண்டும் ஏப்ரல் 19ந் தேதி ஆய்வு தொடங்கியது.

இதில் நானும் சுற்றுச் சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டோம். 25 மீட்டர் சுற்றளவுக்கு ஆலையில் அடர்ந்த பசுமைச் சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு இருப்பதாக, உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது.

உயர்நீதிமன்றம் ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்ட ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக் கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்குத் தெரிவித்து இருந்தனர். அதனால், பல இடங்களில் மரங்கள் பட்டுப் போய் நிற்பதும், ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்தவே, ஸ்டெர்லைட் முயற்சிக்கிறது என்பதையும் நீரி ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தோம்.

வருகின்ற 29-ந் தேதி, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இடையில் 4 நாள்களே உள்ளன. நீரி நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்குத் தரும் அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும். அந்த அறிக்கையைக் கண்டபிறகே அது குறித்து நம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க இயலும். விவசாயிகள், மீன வர்களின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், சுற்றுச் சூழல் நாசமாவதால் ஏற்படும் நோய்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாக்கவும், தூய நோக்கத்தோடு நாம் மேற்கொண்டு உள்ள, நீதிக்கான அறப்போராட்டத்தை நம்பிக்கையோடு தொடர்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் செயற்பாடுகளால் டைம்ஸ் பத்திரிகை வாக்கெடுப்பில் நான் அவமானப்பட்டேன் : ராஜபக்சே.


டைம்ஸ் பத்திரிகையின் உலகின் அதிகாரம் வாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சே 4வது இடத்தில் இடம் பெற்று இருந்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்புகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாகவும், அதற்காக அதிபரின் ஊடக செயலகத்தில் தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டு மோசடியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அந்த தலைவர்கள் பட்டியலில் இருந்து ராஜபக்சேவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டது.

தலைவர்கள் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதையடுத்து, ஒரு சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாகவே டைம்ஸ் பத்திரிகையின் வாக்கெடுப்பில் நான் அவமானப்பட நேர்ந்தது என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

ராஜபக்சே தனது செயலாளர் ஒருவரிடம் டைம்ஸ் பத்திரிகையின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து உரையாடும்போது இதனை குறிப்பிட்டதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

டைம்ஸ் பத்திரிகை வாக்கெடுப்பில் தனது பெயரை சேர்க்க வைத்து, அதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் கௌரவத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ராஜபக்சேவை நம்ப வைத்த அதிகாரி ஒருவரும், அவரது நண்பரான வர்த்தகர் ஒருவரும் அந்த நடவடிக்கைகளுக்காக கோடிக்கணக்கில் ராஜபக்சேவிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அதன் பின்பு அவர்கள் ராஜபக்சேவின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் இருந்தும் தமது நடவடிக்கைகளுக்கான ஆதரவைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதன் மூலமாக ராஜபக்சேவின் பெயரை டைம்ஸ் பத்திரிகையின் வாக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற வைத்து மேலுமொரு தொகையையும் இலங்கை அரசிடம் இருந்து கறந்து கொண்டிருந்தனர்.

டைம்ஸ் பத்திரிகையின் வாசகர்களின் வாக்குகள் மூலமாக மட்டுமே உலகின் செல்வாக்குமிக்க நபர்களின் வரிசை பட்டியலிடப்படும் என்று நம்பியிருந்த ராஜபக்சேவும், அவரது புகழ்பாடும் ஊடகங்களும் பட்டியலில் நான்காம் இடத்தை ராஜபக்சே பெற்றுக் கொண்டிருந்தமை குறித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆயினும் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் இறுதி முடிவின்படியே உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்பான பட்டியல் வெளியான நிலையில், முன்பு வெளியான பட்டியல் கலைந்து போனதன் காரணமாக அதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகளை ராஜபக்சே கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐ.நா சபைக்கு எதிராக - இலங்கை 10 இலட்சம் கையொப்பம் திரட்டுகிறது.


இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில்,

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு இலங்கையின் பலதரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை நாட்டு மக்களிட மிருந்து பத்து லட்சம் கையொப்பங்களைத் திரட்டும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.

இலங்கை தனியார் போக்குவரத்து சேவை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும், இந்த வேலைத்திட்டம், கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆரம்பிக்கப் படவுள்ளதாகவும், அறியப்படுகிறது.

தயாளுஅம்மாள், கனிமொழி பெயர்கள் இடம் பெறும் : 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகை.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

செக்ஸ் தொல்லை-கணவரை அரிவாளால் வெட்டிய புது மணப்பெண் கைது.

செக்ஸ் தொல்லை தந்து, டார்ச்சர் செய்த கணவரை அரிவாளால் வெட்டிய புதுமணப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் நடராஜனுக்கும் (30) குளித்தலையைச் சேர்ந்த சுபாவுக்கும் (23) ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணம் நாளில் இருந்து நடராஜன் மனைவிக்கு அளவுக்கு அதிகமாக செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுபா உடல்நிலை சரியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தபோதும் நடராஜன் செக்ஸ் தொல்லை கொடுத்தாராம்.

இதையடுத்து சுபா வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து நடராஜனின் தொண்டைப் பகுதியில் வெட்டினார்.

நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய குடும்பத்தினர் ஓடி வந்து அவரை திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரணை செய்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுபாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவோம் – ஐ.நாவை மிரட்டுகிறது இலங்கை.

ஐ.நா நிபுணர்குழுவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்தால், வீட்டோ அதிகாரம் மூலம் அதைத் தோற்கடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வரப்பட்டால் கூட நாம் கவலைப்படப் போவதில்லை.

பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் பலம்வாய்ந்த எமது நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, போன்ற நாடுகளைக் கொண்டு அதை எதிர்கொள்வோம்.

இலங்கைக்கு எதிரான எந்தவொரு விவகாரத்தையும் தோற்கடிக்க இந்த நாடுகள் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

sivasinnapodi1955.blogspot.com

சுப்ரமணியன்சாமி தகவலுக்கு தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்: கலைஞர்.


முதல்அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: ஜனதா கட்சி தலைவரான சுப்ரமணியன்சாமி 4 வெளிநாட்டுக்காரர்கள் அதாவது ஜெர்மனியிலிருந்து இரண்டு பேரும் பிரிட்டனிலிருந்து ஒருவரும் பிரான்சிலிருந்து ஒருவரும் சென்னைக்கு வந்து இறங்கியிருப்பதாகவும் அவர்கள் வாக்குப்பதிவான எந்திரங்களில் மாற்றம் செய்யப் போவதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?.

பதில்: இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இதுகுறித்து விசாரித்து, மக்களுக்கு உண்மையை தேர்தல் ஆணையம் தெரிவிப்பதோடு, இந்தச் செய்தியில் தவறு இருக்குமாயின் அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களைப் பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையையாவது எடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் சர்வ வல்லமை உள்ளது என்பது உணரப்படும். இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி : ராமதாஸ்.


6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

மனைவியின் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டல் : கணவன் மீது மனைவி புகார்.

மேல்படிப்புக்காக ரூ.10 லட்சம் தராவிட்டால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் மீது இளம்பெண் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). கம்ப்ழூட்டர் என்ஜினீயர். இவருக்கும் மதுரை தெற்கு பெருமாள் வீதியைச் சேர்ந்த சிவகாமசுந்தரிக்கும் (28) கடந்த 2008 ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சிவகாமசுந்தரியின் பெற்றோர் 60 பவுன்நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் திருமண செலவுக்காக ரூ.2 லட்சம் ரொக்கமும் சீர்வரிசையாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்கள் மட்டுமே வேல்முருகன் எடமலைப்பட்டிபுதூரில் மனைவியுடன் வாழ்ந்தார். பின்னர் அவர் மேல்படிப்புக்காக லண்டனுக்கு சென்றார்.

அங்கு சென்ற பிறகு தன் மேல்படிப்புக்காக ரூ.10 லட்சம் வேண்டும் என்று சிவகாமசுந்தரியிடம் வேல்முருகன் கேட்டார். பின்னர் அந்த பணத்தை உன் பெற்றோர் வீட்டில் வாங்கி வரவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு சிவகாமசுந்தரி இவ்வளவு பெரியதொகையை எப்படி என் பெற்றோரிடம் வாங்க முடியாது என்று கூறி பிடிவாதமாக மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், பணத்தை வாங்கி வராவிட்டால், உன் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிவகாமசுந்தரி எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். அதில் லண்டனில் மேல்படிப்புக்காக என் கணவர் பெற்றோரிடம் ரூ.10 லட்சம் வாங்கி வா என்றார். அதை வாங்க முடியாது என்று கூறியதும் இண்டர்நெட்டில் என் ஆபாசபடத்தை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் அவருடைய தாயார் சந்திரா ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வரதட்சணை கொடுமை, மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மற்றும் அவருடைய தாய் சந்திரா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக வேல்முருகன், சந்திரா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன் : நடிகர் விக்ரம்.


தமிழ்ப் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23வது நிர்வாகக்குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய விக்ரம் கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதற்காக சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

இதற்காக பச்சைப்புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.

சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதையடுத்து கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். இதன் மூலம் குடிசைப்பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் பிரென்ச்' தாடி வைத்தால் அவர்களும் பிரென்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.

எனவே பச்சைப்புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

நாவரசு கொலை வழக்கு : குற்றவாளி ஜான்டேவிட்டின் தாயார் சென்னையில் பதுங்கல்.


சிதம்பரம் மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டின் பெற்றோர் தலைமறைவானார்கள். தாயார் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜான் டேவிட்டை கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட ஒரு தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர். பின்னர் வெங்கமேட்டில் ஜான் டேவிட் வீட்டிற்கு சென்றனர். ஆனால் ஜான்டேவிட்டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:

மாணவர் நாவரசு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 3 தனிப்படைபிரிவில் 2 பிரிவினர் திருச்சி, சென் னைக்கு சென்று விட்டனர்.

ஒரு பிரிவான நாங்கள் ஜான்டேவிட்டின் சொந்த வீடு உள்ள கரூர் வெங்கமேடு வந்து சோதனை செய்தோம். ஆனால் இங்கு யாரும் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். இதனால் டேவிட் மாரிமுத்து இங்கு எப்போது வந்தார், வாடகை பணம் எவ்வாறு பெற்று உள்ளார் என்பது குறித்து இங்கு உள்ள அலுவலர்களிடம் விசாரித்து உள்ளோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த வீட்டில் டேவிட் மாரிமுத்து இருந்து உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் தலை மறைவாகி உள்ளார். தாய் எஸ்தரின் லட்சுமி தற்சமயம் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதே போன்று இங்கு முன்பு பணியாற்றி வந்த வாட்ச் மேன்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். அதே போன்று ஜான்டேவிட் படித்த கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அவரது முழுவிவரங்கள் பற்றி விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் ஜான் டேவிட்டின் தந்தை டேவிட் மாரிமுத்து பணியாற்றிய கரூரில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்த உள்ளோம். ஜான்டேவிட்டின் தாய் எஸ்தரின் லட்சுமி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்து உள்ளார். அவர் பணியாற்றி வந்த பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தப்படும். மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட்டின் உறவினர்களிடமும் விசாரித்து வருகிறோம்.

உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் ஜான்டேவிட் பெயரில் பாஸ்போர்ட்டு எதுவும் எடுக்க வில்லை என்று தெரியவந்துள்ளது. ஒருவேளை வேறு பெயரில் பாஸ்போர்ட்டு எடுத்துள்ளாரா? என்று விசாரித்து வருகிறோம். இருந்தாலும் ஜான்டேவிட் தமிழகத்தில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று நம்புகிறோம், விரைவில் ஜான்டேவிட் கைது செய்யப்படுவார் என்றார்.

இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னை வந்துள்ளனர். அடையாறில் ஜான்டேவிட்டின் தாயார் சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்துள்ளார். தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்று பார்த்தபோது தாயார் வேறு இடம் சென்று விட்டது தெரியவந்தது. ஜான்டேவிட்டின் தாயாரை ஓரளவு நெருங்கி விட்டோம் என்றும், அவர் பிடிபட்டால் ஜான்டேவிட் பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு விடும் என்றும், சென்னை வந்துள்ள தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

ஜப்பானில் இருந்து வரும் கப்பல்கள் தண்ணீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டாம்.


ஜப்பானில் கதிர்வீச்சு அபாயம் எதிரொலியால் அந்நாட்டில் இருந்து வரும் கப்பல்கள் தண்ணீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டாம் என 2 முக்கிய துறைமுகங்களை கோவா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மர்மகோவா துறைமுக அறக்கட்டளைக்கும், மாநில அரசுக்குச் சொந்தமான பனாஜி துறைமுகத்துக்கும் இதுதொடர்பாக கோவா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவையடுத்து ஜப்பானில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு பெரிய கப்பல் துறைமுகத்துக்கு வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டது.

ஜப்பான் துறைமுகம் சென்றுவிட்டு வரும் 2 கப்பல்கள் கோவா துறைமுகத்துக்குள் நுழையலாம் என மாநில அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் தகவல் அளித்ததையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உடனடியாக 2 துறைமுகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து விட்டோம் என கோவா மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சைமன் டி செளஸா தெரிவித்தார்.

கதிர்வீச்சின் அளவைத் தெரிந்துகொள்ளும் கருவி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை. அந்த தண்ணீர் கதிர்வீச்சால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று டி செளஸா குறிப்பிட்டார்.

ஜப்பான் துறைமுகத்துக்கு சென்றுவிட்டு வந்த 2 கப்பல்களில் ஒன்று, கோவாவுக்கு வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், கப்பலில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் சர்வதேச கடல் அமைப்புகள் தெரிவிக்கும் கடிதத்தை அந்த கப்பலின் முகவர் அளித்துள்ளதாக டி செளஸா கூறினார்.

கோவா வரும்வழியில் சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் ஏற்கனவே தண்ணீரை வெளியேற்றிவிட்டு புதிய தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதாக அந்த முகவர் கூறியிருந்தார். முகவர் கூறிய ஆவணங்களை பரிசோதித்த பின்னரே இந்த விவகாரத்தில் கோவா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இறுதி முடிவு எடுக்கும் என டி செளஸா தெரிவித்தார்.

இந்தியா, சீனா எழுச்சி : ஒபாமா பேச்சு.


உலகில் இந்தியாவும் சீனாவும் எழுச்சி பெற்று வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒபாமா பேசியதாவது :

உலகம் முழுவதும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. மத்திய கிழக்குப் பகுதியில் பல நாடுகளில் ஸ்திரமற்ற நிலை உள்ளது.

தொழில்நுட்பத்தால் உலகமே சுருங்கி வருகிறது. வேகமாக வளரும் நாடுகள் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துகின்றன.

அமெரிக்காவில் நாம் தற்போது அனுபவித்து வரும் சூழலை, நமது எதிர்கால தலைமுறையினரும் அனுபவிக்கும் வகையில் புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார்.

ஐநா அறிவிப்பு : இலங்கை குறித்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் .


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை திருத்தம் எதுவுமின்றி முழுமையாக வெளியிடப்படும் என்று ஐநா சபை அறிவித்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில், ஐநாவின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐநா அறிக்கையை பகிரங்கமாக வெளியிடக் கூடாது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இக்கோரிக்கையை ஐநா நிராகரித்துவிட்டது.

இன்னும் சில நாட்களில் ஐநா அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

மே தினத்தில் ஐநா அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த, இலங்கை அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி : அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்; வெங்கையா நாயுடு பேட்டி.

உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி: அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்; வெங்கையா நாயுடு பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் வெங்கையா நாயுடு எம்.பி. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது :-

உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்திருப்பதால் நெல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

உணவுப் பொருட்களை வைப்பதற்கான கிடங்குகளை ஒரு டன் அளவுக்கு கூட கூடுதலாக இந்த அரசு கடந்த 6 ஆண்டுகளாக உருவாக்கவில்லை. உணவு உற்பத்தி இந்த ஆண்டு 235.9 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச சாதனையாகும். இந்த ஆண்டு அறுவடை கோதுமை 84.34 மெ.டன்னாகவும், அரிசி 102 மெ.டன்னாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அளவு அதிக உற்பத்தியால் இவற்றின் விலைகள் குறைந்தபட்ச ஆதார விலையைவிட மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வேளாண் பொருட்களுக்கான விலை கொள்கையை அரசுக்கு பரிந்துரைக்கும் ஆணையம் ஏற்றுமதியை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அரசிடம் 28.72 மெ.டன் அரிசியும், 17.15 டன் கோதுமையும் கையிருப்பு உள்ளது. இதுவும் அரசின் வழக்கமான கையிருப்பைவிட இரு மடங்காகும். இதற்காகவும், வேளாண் உற்பத்தி பெருக்கத்திற்காகவும் விவசாயிகளை பாராட்டுகிறோம்.

உலக சந்தையில் உற்பத்தி குறைவால் பல நாடுகளில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. இங்கு அதிகமாக விளைந்து விலை குறைந்துள்ளது. எனவே இதுவே ஏற்றுமதிக்கு சரியான தருணம். ஆந்திராவில் மட்டுமே 35 லட்சம் டன் அரிசி தேவைக்கு அதிகப்படியாக கையிருப்பு உள்ளது. இதனால் அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை விட ரூ.175 குறைவாக விற்கிறார்கள். பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மார்ச் 16-ந் தேதி மத்திய வேளாண் மந்திரி சரத்பவாரை சந்தித்து அரிசி ஏற்றுமதியை அனுமதிக்கும்படி வலியுறுத்தினோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனைத்து கட்சிகளின் விவசாய பிரதிநிதிகளும், விவசாய சங்கத்தினரும் விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உடனடியாக அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கும்போது, புதுச்சேரி கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால் மின்வெட்டு அப்படித்தான் இருக்கும் என்றார்.

தமிழக மீனவர்கள் படுகொலை; இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம்.

தமிழக மீனவர்கள் படுகொலை; இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம்

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு, இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மாசுவராஜ் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மாசுவராஜ், தமிழ்நாட்டுக்கு வந்திருந்து பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் நேற்று டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இலங்கையில் தமிழ் அகதிகளை மறுகுடியமர்த்தும் பிரச்சினை குறித்தும் அவருடன் சுஷ்மா பேச்சு நடத்தினார்.

இதுபற்றி `டுவிட்டர்' இணையதளத்தில் சுஷ்மாசுவராஜ் கூறி இருப்பதாவது-

"எனது வீட்டில் இலங்கை தூதர் கரியவாசத்தை சந்தித்தபோது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையை எழுப்பினேன். அதற்கு பதில் அளித்த கரியவாசம், இந்திய மீனவர்களை கொல்வதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் எனது கவலையை இலங்கை அரசின் மேல் மட்ட
தலைவர் களுக்கு எடுத்துச் சொல்வதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இந்த பிரச்சினையில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்''.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை அன்று பூடானில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி ஜி.எல்.பெரிஸ்சை மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசினார்.

30 நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மீனவர்கள் பிரச்சினையில் இரு தரப்பு பிரதிநிதி குழுவினரின் கூட்டத்தை விரைவில் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.