Saturday, April 23, 2011

எண்டோசல்ஃபனுக்கு தடை விதிப்பதில் பிரதமர் மெத்தனம்: கேரள முதல்வர்.



விவசாயத்தில் பயன்படுத்தப்படும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்துக்கு தடை விதிப்பதில் பிரதமர் மெத்தனமாக செயல்படுகிறார் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அச்சுதானந்தன் கூறியதாவது:

எண்டோசல்ஃபன் மருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க, கூடுதல் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த விவகாரத்தில் வேளாண் அமைச்சர் சரத் பவார், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் கருத்தையே பிரதமரும் தெரிவித்துள்ளார்.

எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது. அந்த மருந்துக்கு தடை விதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும்.

பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதில், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். ஏராளமானோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் 11 பஞ்சாயத்து பகுதிகளும், கர்நாடகத்தில் 96 கிராமங்களும் எண்டோசல்ஃபன் பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர். அதுமட்டுமில்லாமல் மக்களுக்கும் எதிரானவர்.

மத்திய அரசு பூச்சி மருந்து நிறுவனத்துக்கு குரல் கொடுக்காமல், உடனடியாக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

No comments: