Saturday, April 23, 2011

சாய்பாபா உடல்நிலை மோசம்: பக்தர்கள் திரண்டதால் பதட்டம்;போலீஸ் குவிப்பு; தலைவர்கள் வருகைக்காக ஹெலிகாப்டர் தளம் அமைப்பு.

சாய்பாபா உடல்நிலை மோசம்:   பக்தர்கள் திரண்டதால்   பதட்டம்;போலீஸ் குவிப்பு;   தலைவர்கள் வருகைக்காக    ஹெலிகாப்டர் தளம் அமைப்பு
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை இன்று காலை மேலும் மோசமானது. இதனால் புட்டபர்த்தி நகரில் உச்சக்கட்ட பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது. இதனால் புட்டபர்த்தி நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 28-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய்பாபா உடல் நிலையில் ஒவ்வொரு நாளும் பின்னடைவு ஏற்பட்டபடி உள்ளது.

கடந்த வாரம் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் முழுமையாக முடங்கிப் போனது. இதன் தொடர்ச்சியாக சாய்பாபாவின் இதயத் துடிப்பு குறைந்து விட்டது. ரத்த அழுத்தமும் குறைந்து போனது. இதன் காரணமாக அவரது உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத நிலையில் உள்ளன.

இதனால் டாக்டர்கள் 24 மணி நேரமும் சாய்பாபாவை கண்காணித்தப்படி உள்ளனர். தற்போதைய நிலையில் சாய்பாபாவின் இதயத் துடிப்பு, சிறுநீரகம், கல்லீரல் உள்பட சில முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்கை முறையில் தான் இயக்கப்பட்டு வருகின்றன.

உடல் உறுப்புகள் 100 சதவீதம் இயங்காவிட்டால் செயற்கை முறையில் எது செய்தாலும் பலன் இருக்காது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை கணித்து கூற முடியாத நிலையில் டாக்டர்கள் தவித்தப்படி உள்ளனர். செயற்கை சுவாசம், செயற்கை ரத்த சுத்திகரிப்பும் திருப்தியாக இல்லை என்று டாக்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து புட்டபர்த்தியில் எல்லாவித ஏற்பாடுகளையும் அனந்தபூர் மாவட்ட கலெக்டர் ஜனார்த்தனன் ரெட்டி செய்து வருகிறார். புட்டபர்த்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டு சுமார் 5 ஆயி ரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு மட்டும் சுமார் 300 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புட்டபர்த்தி நகரில் உள்ள கடைகள் இன்று 3-வது நாளாக மூடப்பட்டு இருந்தன. இதனால் புட்டபர்த்தியில் ஆங்காங்கே உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் பல்வேறு முன் ஏற்பாடுகளை ஆந்திர மாநில அரசு ஓசையின்றி செய்து வருகிறது.

இதற்காக அரசின் உயர் அதிகாரிகள் புட்டபர்த்தியில் முகாமிட்டுள்ளனர். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 26 தாசில்தார்களும், புட்டபர்த்தியில் தங்கி இருந்து சில வசதிகளை செய்து வருகிறார்கள். கர்னூல் 2-வது பட்டாலியனைச் சேர்ந்த போலீஸ் பாண்டு வாத்தியக் குழுவினர் புட்டபர்த்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத், கடப்பா, நெல்லூர் உள்பட மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து ராட்சத ஜெனரேட்டர்கள் புட்டபர்த்திக்கு கொண்டு வரப்பட்டு நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டு வருகிறது. அது போல் நகரின் முக்கிய சந்திப்புக்களில் ராட்சத எல்.சி.டி. திரைகள் நிறுவப்பட்டு வருகிறது.

புட்டபர்த்தி புறநகர்களில் ஏராளமான தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர். புட்டபர்த்தி அருகில் உள்ள கிராமங்களிலும் எல்.சி.டி. திரை வைக்கப்பட்டு வருகிறது. சாய்பாபாவுக்கு 188 நாடுகளில் தீவிர பக்தர்கள் உள்ளனர். அவர்கள் புட்டபர்த்திக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஏதாவது நிலைமை ஏற்பட்டால் வி.வி.ஐ.பி.க்களும் புட்டபர்த்திக்கு வருவார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், கோடீசுவரர்கள், புட்டபர்த்திக்கு படையெடுப்பார்கள். இதை கருத்தில் கொண்டு புட்டபர்த்தி அருகே 6 இடங்களில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

புட்டபர்த்தியில் பிரம்மாண்ட ஸ்டேடியம் ஒன்று உள்ளது. அந்த ஸ்டேடியத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் இருக்கலாம். அந்த ஸ்டேடியத்தை நேற்று பார்வையிட்ட ஆந்திர மாநில அரசு உயர் அதிகாரிகள், அதை வி.ஐ.பி.க்கள் வந்து செல்வதற்கு வசதியாக சீரமைத்து வருகிறார்கள்.

மாநில அரசு சட்டம்- ஒழுங்கு மற்றும் வி.ஐ.பி.க்கள் வருகை பாதுகாப்பு விஷயங்களில் அக்கறை காட்டி வரும் நிலையில் சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சாய் பாபாவுக்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றலாமா என்று அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதனால் என்ன முடிவு எடுப்பது? என்பதை தீர்மானிக்க முடியாமல் அறக் கட்டளை நிர்வாகிகள் உள்ளனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஒருவித இறுக்கமான சூழ்நிலை புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நிலவுகிறது.

இதற்கிடையே சாய் பாபா அறக்கட்டளை ஆசிரமத்தில் இருந்து பக்தர்கள் அனைவரும் நேற்று அதிரடியாக வெளி யேற்றப்பட்டனர். இனி ஆசிரமத்துக்குள் வி.ஐ.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் மல்க தெருக்களில் நிற்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சாய்பாபா பிழைத்து எழுந்து வருவார். 96 வயது வரை உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இன்று காலை ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபயா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாய்பாபாவுக்கு சுவாச கோளாறு இருப்பதால் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

அவரது சிறுநீரகம் சரிவர செயல் படாததால் ஹீமோ டயாலி சிஸ் அளிக்கப்படுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மஞ்சள் காமாலை ஏற்பட் டுள்ளது. இவற்றை சரி செய்ய தொடர்ந்து மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருந்துகளை உடல் உறுப்பு கள் ஓரளவுதான் ஏற்கிறது.

இதனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. இதயதுடிப்பு மிகவும் குறைவாக உள்ளது. ரத்த அழுத்தமும் குறைந்து விட்டது. பேஸ்மேக்கர் கருவி பொருத்தியும் இதய துடிப்பு சீராகவில்லை. அதை சரிப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க டாக்டர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அதில் கூறி உள்ளார்.

சாய்பாபா உடல் நிலை மோசம் அடைந்திருப்பதை அறிந்த பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் சாய்பாபாவை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள். ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் சோகமாகவே காணப்படுகிறது.

ராயலசீமா ஐ.ஜி. சந்தோஷ் மெகரா தலைமையில் 20 கம்பெனி அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விமான நிலையம், சத்யசாய் ஆஸ்பத்திரி, புட்டபர்த்தி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments: