Saturday, April 23, 2011

உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி : அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்; வெங்கையா நாயுடு பேட்டி.

உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி: அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்; வெங்கையா நாயுடு பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் வெங்கையா நாயுடு எம்.பி. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது :-

உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்திருப்பதால் நெல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

உணவுப் பொருட்களை வைப்பதற்கான கிடங்குகளை ஒரு டன் அளவுக்கு கூட கூடுதலாக இந்த அரசு கடந்த 6 ஆண்டுகளாக உருவாக்கவில்லை. உணவு உற்பத்தி இந்த ஆண்டு 235.9 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச சாதனையாகும். இந்த ஆண்டு அறுவடை கோதுமை 84.34 மெ.டன்னாகவும், அரிசி 102 மெ.டன்னாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அளவு அதிக உற்பத்தியால் இவற்றின் விலைகள் குறைந்தபட்ச ஆதார விலையைவிட மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வேளாண் பொருட்களுக்கான விலை கொள்கையை அரசுக்கு பரிந்துரைக்கும் ஆணையம் ஏற்றுமதியை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அரசிடம் 28.72 மெ.டன் அரிசியும், 17.15 டன் கோதுமையும் கையிருப்பு உள்ளது. இதுவும் அரசின் வழக்கமான கையிருப்பைவிட இரு மடங்காகும். இதற்காகவும், வேளாண் உற்பத்தி பெருக்கத்திற்காகவும் விவசாயிகளை பாராட்டுகிறோம்.

உலக சந்தையில் உற்பத்தி குறைவால் பல நாடுகளில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. இங்கு அதிகமாக விளைந்து விலை குறைந்துள்ளது. எனவே இதுவே ஏற்றுமதிக்கு சரியான தருணம். ஆந்திராவில் மட்டுமே 35 லட்சம் டன் அரிசி தேவைக்கு அதிகப்படியாக கையிருப்பு உள்ளது. இதனால் அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை விட ரூ.175 குறைவாக விற்கிறார்கள். பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மார்ச் 16-ந் தேதி மத்திய வேளாண் மந்திரி சரத்பவாரை சந்தித்து அரிசி ஏற்றுமதியை அனுமதிக்கும்படி வலியுறுத்தினோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனைத்து கட்சிகளின் விவசாய பிரதிநிதிகளும், விவசாய சங்கத்தினரும் விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உடனடியாக அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கும்போது, புதுச்சேரி கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால் மின்வெட்டு அப்படித்தான் இருக்கும் என்றார்.

No comments: