Friday, March 25, 2011

தமிழக தேர்தல் -சோனியா, ராகுல் புறக்கணிப்பு.

தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் வர மாட்டார்கள் என்று தெரிகிறது. வேட்பாளர் தேர்வின்போது தலைவிரித்தாடி கோஷ்டிப் பூசலால் இருவரும் மனம் ஒடிந்து போய் விட்டதால் இந்த முடிவாம்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலை மகாத்மா காந்தியே மறு பிறவி எடுத்து வந்தாலும் தீர்க்க முடியாது. அந்த அளவுக்கு கோஷ்டிப் பூசலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது காங்கிரஸ்.

இந்த கோஷ்டிப் பூசலைத் தீர்த்துக் காட்டுகிறேன் என்று சவால் விடுவது போல தமிழக காங்கிரஸ் விவகாரத்தை சமீப காலமாக பார்த்து வந்த ராகுல் காந்தியே வெறுத்துப் போகும் அளவுக்கு சமீபத்திய வேட்பாளர் தேர்வின்போது கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டி விட்டதாம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பம் மற்றும் உள்ளடி வேலைகள், ஒவ்வொரு கோஷ்டியினரும் கொடுத்த நெருக்கடிகளால் ராகுல் காந்தியும், சோனியாவும் வெறுத்துப் போய் விட்டனராம்.

இதனால் வருகிற தேர்தலுக்கான பிரசாரத்திற்கு இருவரும் வர மாட்டார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினரே.

திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளைப் பெறுவதில் அத்தனை கோஷ்டியினரும் காட்டிய ஒற்றுமையால் காங்கிரஸ் மேலிடம் உள்ளூர மகிழ்ச்சியுற்றது. அதனால்தான் திமுகவிடமிருந்து அதிக இடங்களைப் பெறுவதில் மேலிடமும் தீவிரம் காட்டியது. ஆனால் 63 சீட்களை வாங்கிய அடுத்த விநாடியே ஒவ்வொரு கோஷ்டியினரும் தனித் தனியாக பிரிந்து தத்தமது ஆதரவாளர்களுக்கு சீட் பிடிக்க காட்டிய மோதலும், உள்ளடி வேலைகளும் மேலிடத்தை அதிர வைத்து விட்டதாம்.

இதன் காரணமாகவே சோனியாவும், ராகுலும் இந்த முறை வர மாட்டார்கள் என்று தெரிகிறது. மேலும், திமுகவுடன் கடும் மோதலில் ஈடுபட்டு விட்ட நிலையில் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கு சோனியா காந்தி தயங்குகிறாராம். அதேபோல ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோதெல்லாம் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை. மரியாதை நிமித்தமாக கூட அவர் சந்திக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக மட்டும் பிரசாரம் செய்ய வந்தால் அது மிகப் பெரிய சந்தர்ப்பவாத செயலாக எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்யப்படும் என்பதால் அவரும் வர மாட்டார் என்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தன்னுடைய எதிர்பார்ப்புகளை தமிழக காங்கிரஸார் தவிடுபொடியாக்கி விட்டதும் ராகுலை வெறுப்படைய வைத்து விட்டதாம்.

எனவே திமுகவினரின் தயவை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய பெரும் இக்கட்டான நிலைக்கு தமிழக காங்கிரஸார் தள்ளப்பட்டுள்ளனர்.

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் கடும் தாக்குதல்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென தாக்குதலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனது மனைவிக்கு சீட் வாங்கிக் கொடுத்து விட்டார், தனது ஆதரவாளர்களுக்கு முக்கியமான தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டு விட்டார் என்று தங்கபாலு மீது காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

குமரி மாவட்டத்தில் தங்கபாலுவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். சென்னையில், மயிலாப்பூர் வேட்பாளராக தங்கபாலு மனைவி அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து தங்கபாலு வீட்டுக்கு வெளியே பெண்கள் காங்கிரஸார் ஆவேசப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திரு.வி.க.நகர் தனித் தொகுதி வேட்பாளராக தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்த டாக்டர் நடேசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இன்று பிற்பகல் சத்தியமூர்த்தி பவனில் திருவி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸார் திரண்டனர். நடேசன் காங்கிரஸ்காரரே அல்ல, தங்கபாலுவுக்கு வேண்டியவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்கள் அல்ல என்று ஆவேசமாக அவர்கள் கூச்சலிட்டனர். பின்னர் திடீரென கல்வீசித் தாக்குதலில் இறங்கினர்.

இந்த கோபாவேச தாக்குதலில் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், மின்விளக்குகள் உடைந்து சிதறின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர்.

மனுத் தாக்கல் செய்தார் ஜெயந்தி

இந்த கடும் அமளிகளுக்கு மத்தியில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி இன்று மனுத் தாக்கல் செய்தார். அவருடன் தங்கபாலுவும் சென்றிருந்தார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் குறித்து கேட்டபோது, எந்தக் கட்சியாக இருந்தாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியிலும் எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டாலும் கூட சிலருக்குத்தான் கிடைக்கும். அதை மற்றவர்கள் ஏற்பார்கள்.

கட்சித் தலைமை யாருக்கு சீட் கொடுக்கிறதோ, யார் தகுதியானவர்கள் என்று எண்ணி கொடுக்கிறதோ அதுவே இறுதியானதாகும். இது காங்கிரஸுக்கும் பொருந்தும். இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.

கருணாநிதி, ஜெயலலிதா சொத்து மதிப்பு !


கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.44 கோடி!


தமிழக முதல்வர் கருணாநிதி தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருக்கிறது என்று பட்டியல் தாக்கல் செய்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் கருணாநிதி அளித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம்:

மொத்த சொத்துகள் - ரூ.44 கோடி

* கருணாநிதிக்கு அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு - ரூ.4,92,56,885
அசையா சொத்துகள் ஏதுமில்லை
* தயாளு அம்மாளுக்கு அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு - ரூ. 15,39,85,363
அசையா சொத்துகள் - ரூ.5,22,635
* ராசாத்தி அம்மாளுக்கு அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு - ரூ. 20,62,61,924
அசையா சொத்துகளின் மதிப்பு - ரூ. 3,08,35,318

கருணாநிதி பெயரில் உள்ள சொத்துகள் விவரம்...

கையிருப்பு ரொக்கம் - ரூ.15,000.
கோடம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளை நிரந்தர வைப்பு - ரூ.4,13,49,152
கர்நாடக வங்கி நிரந்தர வைப்பு - ரூ.39,62,995
ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்புக் கணக்கு - ரூ.10,956
ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துணைவி ராசாத்தியுடன் கூட்டுக் கணக்கு - ரூ.13,15,180
அஞ்சுகம் பதிப்பகத்தில் 50 சதவீதப் பங்கு - ரூ.78,330
தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 14.30 ஏக்கர் நிலம்.

மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள சொத்துகள்...

கையிருப்பு ரொக்கம் - ரூ.30,000
கோடம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் நிரந்தர வைப்பு - ரூ. 5,22,10,327
கொத்தவால் பஜார் இந்தியன் வங்கி - ரூ.29,23,055
கோடம்பாக்கம் கர்நாடக வங்கிக் கிளை - ரூ.39,62,995
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி - ரூ. 13,74,664
கோடம்பாக்கம் கரூர் வைஸ்யா வங்கி - ரூ.3 கோடி
சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் நடப்புக் கணக்கு - ரூ.4,764, கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு - ரூ.2,66,225
சென்னை கோடம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளை - ரூ.1,65,380
தேசிய சேமிப்புப் பத்திரங்கள் - ரூ.50,000
ஹோண்டா அக்கார்ட் கார் - ரூ.16,02,321
பழைய தங்க நகைகள் 716.34 கிராம் மதிப்பு - ரூ.10.96 லட்சம்
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60,06,000 பங்குகள் மதிப்பு - ரூ.6 கோடி
அஞ்சுகம் பதிப்பகம் நிறுவனத்தில் 50 சதவீதப் பங்கு மதிப்பு - ரூ.78,330
தயாளு குடும்ப அறக்கட்டளைக்கு மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் நிலம், திருவாரூர் மாவட்டம், வடக்குசேத்தி, மனை - ரூ.5.51 லட்சம்.

துணைவி ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ள சொத்துகள்...

கையிருப்பு ரொக்கம் - ரூ.2 லட்சம்.
ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் நிரந்தர வைப்பு - ரூ.8,41,06,067 ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி - ரூ.6,97,92,974
ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு - ரூ.11,378 ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கிளை - ரூ. 4,84,027
வணிக முதலீடுகள் வெஸ்ட் கோஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 25,00,000 பங்குகள் - ரூ.2.50 கோடி,
சொந்தத் தொழிலில் முதலீடுகள் - ரூ.2,56,81,878
பழைய தங்க நகைகள் 640 கிராம் மதிப்பு - ரூ.9,85,600
மயிலாப்பூர் சி.ஐ.டி.யு. காலனி வீடு மதிப்பு - ரூ.3,14,38,628.

கடன் பொறுப்புகள் விவரம்...

கருணாநிதி மூலக் கதையை, திரைப்படமாக எடுப்பவருக்கு விற்பதற்காக, பெற்ற முன்பணம் மோசர்பேர் நிறுவனத்திடமிருந்து பெற்றது - ரூ. 10 லட்சம்.
ராசாத்தி அம்மாள், கனிமொழியிடமிருந்து பற்றில்லாக் கடனாகப் பெற்றது - ரூ.1,01,76,503.

இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ. 51 கோடி!


அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 51.40 கோடி என்று பட்டியல் தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அளித்த சொத்துப் பட்டியல்:

மொத்த சொத்துகள் - ரூ. 51.40 கோடி.

அசையும் சொத்துகள் - ரூ. 13.03 கோடி
அசையா சொத்துகள் - ரூ. 38.37 கோடி.
கையிருப்பு ரொக்கம் - ரூ. 25,000

வங்கி இருப்பு -

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ. 8,324, மற்றொரு கணக்கு- ரூ. 48,850
பேங்க் ஆப் இந்தியா - ரூ. 17,668, மற்றொரு கணக்கு-ரூ. 3,43,137.

வாகனங்களின் மதிப்பு - அம்பாசிடர் கார்-ரூ. 10,000
எல்எம்வி ஆம்னி பஸ்கள் (3)-ரூ. 6,25,000
எல்எம்வி கார்-ரூ. 2,00,000.

நிறுவனங்களில் பங்கு:

ஸ்ரீ ஜெயா பதிப்பகம், சசி எண்டர்பிரைசஸ், கொடநாடு எஸ்டேட், ராயல் வேலி ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றின் உத்தேச மதிப்பீடு - ரூ. 13,03,27,979.

விவசாய நிலங்களின் மதிப்பு:

ஆந்திரம்-14.50 ஏக்கர் - ரூ. 11,25,00,000; 3.43 ஏக்கர் - ரூ. 5,00,000.

வணிகக் கட்டடங்களின் மதிப்பு:

சென்னை போயஸ் கார்டனில் - ரூ. 3,02,40,000
ஹைதராபாதில் - ரூ. 3,50,00,000
சென்னையில் - ரூ. 4,00,000
சென்னை மந்தைவெளியில் - ரூ. 35,00,000.

குடியிருப்புக் கட்டடங்களின் மதிப்பு:

சென்னை போயஸ் கார்டன் வீடு - ரூ. 20,16,00,000.

மற்றவை:

சொத்துக் குவிப்பு வழக்கால் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இருக்கும் முதலீடுகள், வங்கி வைப்புத் தொகை மதிப்பீடு சுமார் ரூ. 2.50 கோடி; நகைகள் மதிப்பு தெரியவில்லை.

* தொழில் - விவசாயம், தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் - எதுவும் இல்லை.
* நிலுவையிலுள்ள வழக்குகள் - 10.
* வருமான வரித் துறையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி 2009-2010-ம் ஆண்டு வருமானம்-ரூ. 15,39,030.
* கடன்-எதுவும் இல்லை.

இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விஜயகாந்துக்கு ஒரு மனந்திறந்த மடல்

தமிழருவி மணியன்


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! 'மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி என்றவர் நீங்கள்.

எந்த அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் தனித்து நிற்கத் தயங்கியபோது, மாநிலம் தழுவிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தனித்து நின்ற உங்கள் துணிச்சல் மனம் திறந்த பாராட்டுக்கு உரியது. கூட்டணி அரசியலில் அனைத்துக் கட்சிகளும் குளிர் காயும்போது, நீங்கள் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டே இருந்தால், கச்சேரி கேட்கும் ரசிகர் கூட்டம் காலப்போக்கில் குறைந்துவிடும் என்ற அச்சம் உங்களை அலைக்கழித்துவிட்டது.

நீங்கள் விரும்பும் நிலையை அடையும் வரை தொடர்ந்து போராடும் இயல்பு உள்ளவர் என்பதற்கு உங்கள் திரையுலக சாதனைகளே சிறந்த எடுத்துக்காட்டு. சிவந்த நிறமும், கவர்ந்து இழுக்கும் முகமும் உள்ளவர்களே திரையுலகில் வெல்ல முடியும் என்ற எழுதப்படாத விதியை மாற்றி அமைத்த பெருமை ரஜினிக்கும், உங்களுக்கும் உண்டு.

ஆரம்பத்தில் நீங்கள் நடித்து வெளிவந்த 'இனிக்கும் இளமை, 'தூரத்து இடி முழக்கம், 'அகல் விளக்கு போன்ற படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. 'சட்டம் ஒரு இருட்டறை உங்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. 'கேப்டன் பிரபாகரன் உங்களுக்குத் தனிப் புகழைத் தேடித் தந்தது. 'வைதேகி காத்திருந்தாள், 'அம்மன் கோவில் கிழக்காலே’ ஆகிய இரண்டு படங்களும் கிராமப்புற மக்களைக் கிறங்கச்செய்தன.

தமிழக சினிமா ரசிகர்களின் இதயங்களில் உங்களுக்கு முக்கிய இடம் கிடைத்ததால், 30 ஆண்டுகள் நாயகனாகவே நடித்து 100 படங்​களுக்கு மேல் முடித்துவிட்டீர்கள். திரையுலக வாழ்க்கை முடியப்போவதை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட நீங்கள் ரகசியமாக அரசியல் கனவில் ஆழ்ந்துவிட்டீர்கள்.

ஒற்றை மனிதனாய் தீமைகளை எதிர்த்து வெற்றி பெறும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை அப்படியே பின்பற்றத் தொடங்கினீர்கள். அவரைப்போலவே, பாமர மக்களின் பரோபகாரியாகப் பெயர் எடுப்பதற்கு உங்கள் பிறந்த நாள் விழாக்களைப் பயன்படுத்திக்கொண்டீர்கள். ரசிகர் மன்றங்​களிடம் கொடி கொடுத்துப் படை திரட்டும் பணியைப் பக்குவமாய்த் தொடர்ந்தீர்கள். 'கறுப்பு எம்.ஜி.ஆர். என்று உங்களை மற்றவர்கள் அழைக்கச் செய்தீர்கள். உங்கள் ராஜ தந்திரம் வெற்றி பெறும் காலம் கனிந்தது.

நிஜத்துக்கும், நிழலுக்கும் வேற்றுமை உணராத வெள்ளை மனிதர்கள் எம் தமிழ் மக்கள். மதுரையில் திரண்ட மக்கள் முன்பு செப்டம்பர் 14, 2005-ல் 'தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற நாம​கரணத்துடன் புதிய கட்சிக்குப் பூபாளம் பாடினீர்கள். அன்று முதல் நீங்கள் ஓர் அரசியல் தலைவர் ஆகிவிட்டீர்கள். நடிகர்கள் தலைவர்களாவது, தமிழகத்தில் மட்டும்தான் எளிது.

கடந்த 43 ஆண்டுகளாக இந்த மண்ணை ஆள்பவர்கள் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்களே என்பது அதிசயமான ஓர் உண்மை. மாற்றாக வந்து நிற்கும் நீங்களும் திரையுலக நாயகரே. உங்கள் கட்சியிலும் 'திராவிட வாசம் வீசுகிறது. திராவிடக் கட்சிகள் அனைத்துக்கும் பிதாமகன் பெரியார். ஆனால், அவருக்கு அறவே பிடிக்காத ஒன்று சினிமா. எவ்வளவு பெரிய முரண்!

ரஜினியைப்போன்று 'புலி வருகிறது’ என்று 15 ஆண்டுகளாகப் பொய்ப் பாய்ச்சல் காட்டிப் பதுங்கிவிடாமல், கம்பீரமாக அரசியல் களத்தில் வந்து நின்ற மனிதர் நீங்கள். நடிகர் சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்திய அனுபவம் உங்களுக்கு உண்டு. கடனில் மூழ்கிக்கிடந்த சங்கத்தைக் கரையேற்றிக் காப்பாற்றியவர் நீங்கள் என்பதால், இலவசத் திட்டங்களால் பெரும் கடனாளியாகிவிட்ட தமிழக அரசையும் கடன் சுமையில் இருந்து காப்பாற்றிவிடுவீர்கள் என்று எம் 'அறிவார்ந்த’ தமிழர்கள் நம்பக்கூடும்.

நீங்கள் மதுரையில் கட்சி தொடங்கியபோது, அதை ஜெயலலிதாவும், கலைஞரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், இன்று போயஸ் தோட்டம் 41 தொகுதிகள் வழங்க உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது. கோபாலபுரம் உங்கள் கூட்டணியால் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோமோ என்று பதறித் துடிக்கிறது.

நீங்கள் புதிய கட்சிக்கு அச்சாரம் போட்டபோது, ஆட்சி நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். கலைஞரின் தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற களிப்பில் மூழ்கிக்கிடந்தது. அப்போது அரசியல் காற்று உங்களுக்கு ஆதரவாக ஒன்றும் வீசவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கை தந்த துணிவில் உங்கள் பயணம் நடந்தது.

2006-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. கட்சி தொடங்கிய எட்டே மாதங்களில் நீங்கள் பாரதப் போரில் அபிமன்யு தனியாக நின்றதுபோல் தனித்துக் களத்தில் நின்று, தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி 8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றீர்கள். அது ஒரு சாதனைதான். ஆனால், உங்கள் சாதனை தமிழகத்துக்கு வேதனையைத்தான் தேடித் தந்தது. நீங்கள் வாக்குகளைப் பிரித்ததால்தான், கலைஞருக்கு ஆளும் வாய்ப்பு கனிந்தது.

அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் துணிவுடன் தனித்துக் களம் கண்டீர்கள். உங்கள் 'முரசு’ சின்னம் முடக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் 'தீபம்’ தந்தபோது நீங்கள் திணறவில்லை. நீங்கள் விரும்பிய வெற்றி வெளிச்சத்தை 'தீபம்’ தராவிடினும், திரி அடங்கிவிடவில்லை. மதுரை மத்திய தொகுதி, மதுரை கிழக்கு ஆகியவற்றில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. உங்களை முந்துவதில் மூச்சு வாங்கியது.

திருமங்கலத்தில் டெபாசிட் பறிபோனதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டியது இல்லை. திருமங்கலம் ஃபார்முலாவை தேர்தல் அரங்கத்தில் அறிமுகம் செய்து, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தவர்கள்தான் வெட்கத்தில் தலை தாழ வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிகள் கூட்டணி அமைத்து 37.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றன. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து 42.5 விழுக்காடு வாக்குகளைச் சேகரித்தன.

ஆனால், தனியாக நின்ற நீங்கள் 'விழுவது மீண்டும் எழுவதற்கே என்ற விவேகானந்தரின் தன்னம்பிக்கைப் பாதையில் நடந்து 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதுதான் பெருமைக்குரியது. நீங்கள் பெற்ற 31 லட்சம் வாக்குகள் மீண்டும் தி.மு.க. அணியின் வெற்றிக்கே மறைமுகமாக உதவியது.

இன்று ஜெயலலிதாவுடன் சமரசம் செய்துகொண்ட நீங்கள், அன்று அவரோடு நின்றிருந்தால், தமிழினத்துக்குத் துரோகம் செய்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி களத்தில் காணாமற் போயிருக்கும். காங்கிரஸ் மேலிடமும் தமிழர் நலனில் நாட்டம் செலுத்தியிருக்கும்.

போனது போகட்டும். இது கூட்டணி அரசியல் காலம் என்பதைத் தாமதமாகவாவது நீங்கள் தெரிந்துகொண்டது நல்லது. 'உங்களுக்கு 31 லட்சம் வாக்குகள் எதனால் கிடைத்தது? என்று நீங்கள் அறிவீர்களா? உங்களைப் பெரிய அரசியல் ஞானி என்றோ, தத்துவ மேதை என்றோ, சீரிய சமூகச் சிந்தனையாளர் என்றோ மக்கள் வாக்களிக்கவில்லை. இரு திராவிடக் கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்துவிட்டவர்கள்தான் ஒரு மாற்றம் தேடி, உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். தனித்து நின்று தி.மு.க. கூட்டணியை இரு முறை வாழவைத்த நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உங்கள் இருப்பிடம் தேடி வந்து இடதுசாரிகள் மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்தபோது, அதை நீங்கள் வரவேற்றிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் இரண்டையும் தவிர்த்து, மற்ற கட்சிகளை ஓர் அணியில் நிறுத்த நீங்கள் முன்முயற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும். நீங்களோ, இடதுசாரி இயக்கங்களோ, வைகோவோ அதிகாரத்தில் அமர்ந்து ஊழல் செய்தது இல்லை. ஊழல் முத்திரை முகத்தில் விழாத கட்சிகளின் கூட்டுறவில்தான் தமிழகம் மீண்டும் தழைக்க முடியும்.

தமிழகத்தில் புதிய அரசியல் படைக்க நீங்கள் புறப்பட்டு இருப்பது உண்மையானால், நீங்கள் நிறைய மாற்றங்களுக்கு உங்களை முதலில் பக்குவப்படுத்திக்​கொள்ள வேண்டும். இன்றுள்ள நிலையில் எந்த வகையிலும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக உங்கள் அணுகுமுறை அமையவில்லை. கலைஞரின் குடும்பத்தைக் கூர்மையாக விமர்சிக்கும் நீங்கள், உங்கள் குடும்பம் புடைசூழவே அரசியலில் அடியெடுத்துவைத்தீர்கள்.

உங்கள் மனைவியும், மைத்துனரும் இல்லாமல் நீங்கள் காட்சி தருவதே இல்லை. இன்று அரசியல் கட்சிகளைப் பிடித்திருக்கும் புற்றுநோய்தான் குடும்ப அரசியல். நீங்கள் விதிவிலக்​காக இருக்க வேண்டாமா? ஆக்டேவியஸ் சீஸர், ஆண்டனி, லெபிடஸ் ஆகிய மூவரின் ஆளுகையில் பழைய ரோமப் பேரரசு இருந்ததுபோல், விஜயகாந்த, பிரேமலதா, சுதீஷ் பிடியில் தே.மு.தி.க.வும் இருப்பது சரியா?

குடும்ப அரசியல் நடப்பதே கூட்டாக அதிகாரத்தைச் சுவைக்கவும், பொதுச் சொத்தைக் கொள்ளை அடித்து ஊழலை வளர்க்கவும்தானே! 'ஊழலை என்னால் சகிக்க முடியாது’ என்று முழங்குகிறீர்கள். ஆனால், ஊழல் கறை படிந்த பொன்னுசாமிக்கும், கு.ப.கிருஷ்ணனுக்கும் கட்சியில் இடம் அளித்தது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா கேப்டன்? 'தி.மு.க. ஊழல் மலிந்த கூடாரம். அங்கே இருந்து யாராவது அ.தி.மு.க-வுக்கு வரவிரும்பினால், நான் நியமிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதியின் முன் நின்று, நிரபராதி என்று நிரூபித்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தவர் எம்.ஜி.ஆர்.

ஆனால், தி.மு.க-வில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவருக்கும், 'அக்னிப் பிரவேசம் நடந்ததாகத் தகவலே இல்லை. அந்த விதத்திலும் கறுப்பு எம்.ஜி.ஆராகவே காட்சியளிக்க விரும்புகிறீர்களா?

ஆளும் கட்சியை வன்மையாக விமர்சிப்பது மட்டுமே ஒரு வளரும் கட்சியின் வேலைத் திட்டமாக இருக்கவியலாது. உங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை, தீட்டி வைத்திருக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை மக்கள் முன் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மின்வெட்டில் இன்று சிக்கித் தவிக்கிறது தமிழகம். 'நான் ஆட்சியில் அமர்ந்தால், ஐந்தே மாதங்​களில் மின் பற்றாக்குறையைத் தீர்த்துவிடுவேன்’ என்று நீங்கள் மேடையில் முழங்குகிறீர்கள். உங்களிடம் இருக்கும் அந்த அலாவுதீன் அற்புத விளக்கை இப்​போதே எங்களுக்காகக் கொஞ்சம் காட்டினால் நல்லது. 'ரேஷன் பொருள்களை வீட்டுக்குக் கொண்டுவந்து விநியோகிப்பேன்’ என்பதற்கு மேல் இது வரை எந்தப் 'புரட்சிகரமான திட்டத்தையும் நீங்கள் வெளிப்படுத்தி​விடவில்லை.

ஒவ்வொரு துறையிலும் உங்கள் கட்சிக்குத் தீர்க்கமான சமூக, பொருளியல் பார்வை உண்டா? ஊழலற்ற நேரிய நல்லரசு வழங்குவதில் உண்மையான நாட்டம் உங்களுக்கு உண்டா? ராஜாஜி, கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையில் வைத்த இலக்குவன் கோட்டை உங்களால் போடக் கூடுமா? ஓமந்தூர் ராமசாமி, குமாரசாமி ராஜா, காமராஜர் போன்று சலனங்களும், சபலங்களும் அற்ற அரசியல் முனிவராக நீங்கள் ஆட்சி நடத்தக்கூடுமா?

இரண்டு திராவிடக் கட்சிகளைப்போல் நீங்களும் ஆடம்பர, ஆரவார அரசியலைத்தானே நடத்துகிறீர்கள்? எளிமை சார்ந்த நடவடிக்கைகள் உங்களிடம் இல்லையே? கொடிகளும், தோரணங்களும், ஃப்ளெக்ஸ் விளம்பரங்களும் உங்கள் வருகையின்போது விழிகளைக் கூசச் செய்கின்றனவே. கலைஞரைப்போலவே நீங்களும் காங்கிரஸ் தயவுக்காகக் காத்திருந்து, ஈழத் தமிழர் ரத்தம் சிந்தியபோது மௌனப் பார்வையாளராக வேடிக்கை பார்த்தீர்களே... 'கேப்டன் பிரபாகரன் வெறும் தோற்றம்தானா? பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலத்தில் மக்கள் வாக்களித்து உங்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்பியது சரித்திரம் இல்லையா! சட்டமன்றம் கூடிய காலங்களில் நாள் தவறாமல் விவாதங்களில் பங்கேற்று, உங்கள் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்றீர்களா?

எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா போன்று நீங்களும் முதல்வரானால்தான் ஒழுங்காக சட்டமன்றப் பணிகளில் ஈடுபடுவீர்களா? தோழர் ஜீவா 1952௫7-ல் தனி மனிதராய் நிகழ்த்திய சட்டமன்றப் பொழிவுகளின் தொகுப்பைத் தேடிப் படியுங்கள். சமுதாய நலன் சார்ந்து ஓர் உறுப்பினர் சட்டமன்றத்தில் எப்படி இயங்குவது என்பதை அப்போது அறிவீர்கள்.

தமிழக மக்களுக்கு இன்றைய அவசரத் தேவை, பொது சொத்தில் சுகம் தேடாத பொறுப்புள்ள பொது நலத் தொண்டர்கள். உங்கள் கட்சியில் அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லை என்றால், உங்களால் ஒரு மாற்று அரசியலை உருவாக்க இயலாது என்றால், புதிதாக எதற்கு இன்னொரு கட்சியும், குடும்பத் தலைவரும்?

'சினிமா ஒரு கலை. அதிலே நடிப்பது ஒரு வேலை. அப்படி இருக்க, சினிமாக்காரர்களுக்கு மக்கள் ஏன் அளவுக்கு மீறிய மரியாதை கொடுக்க வேண்டும்? சினிமாக் கூட்டம் ஒரு வியாபாரக் கூட்டம். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய மரியாதை? என்று சினிமா உலகில் சீர்திருத்தக்காரராக வலம் வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா கேட்ட கேள்வியைத் தமிழினம் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் சிந்திக்கும் நேரம் வரும், வர வேண்டும்!

களங்கமற்ற ஒரு நல்ல அரசியல்வாதியாய் உங்களால் உருவாக முடியும் என்ற நம்பிக்கையுடன்

கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்., சிபிஐ வேட்பாளர்கள் பட்டியல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 12 பேரின் பட்டியல்.

1.. பெரம்பூர்-சவுந்தர்ராஜன் 2. மதுரவயல்-பீமாராவ்
3. அரூர் தனி-டெல்லிபாபு 4. கீழ்வேளூர் - நாகை மாளி
5. திண்டுக்கல் - பாலபாரதி 6.பெரியகுளம்- ஏ.லாசர்
7. மதுரை தெற்கு-அண்ணாதுரை 8. பாளையங்கோட்டை-பழனி
9.விக்கிரவாண்டி-ராமமூர்த்தி 10.திருப்பூர்தெற்கு-தங்கவேலு
11.சிதம்பரம்-பாலகிருஷ்ணன் 12. விளவங்கோடு - லீமா ரோஸ்

சிபிஐ வேட்பாளர்கள் 10 பேரின் பட்டியல்.

1. திருத்துறைப்பூண்டி - உலகநாதன் 2. சிவகங்கை - குணசேகரன்
3. தளி - ராமச்சந்திரன் 4. குடியாத்தம் - லிங்கமுத்து
5. பவானிசாகர் - சுந்தரம் 6. குன்னூர் - தெள்ளி 7. பென்னாகரம் - நஞ்சப்பன்
8. புதுக்கோட்டை - முத்துக்குமரன் 9. வால்பாறை - ஆறுமுகம்
10. ஸ்ரீவில்லிபுத்தூர் - பொன்னுபாண்டியன்

காங்கிரஸ், பா.ம.க.,விடுதலை சிறுத்தைகள்,முஸ்லிம்லீக் வேட்பாளர் பட்டியல்

காங்கிரஸ் 63 வேட்பாளர்கள் பட்டியல்

அதன் விவரம்:

1. திருத்தணி - சதாசிவலிங்கம் 2. ஆவடி - தாமோதரன்
3. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன் 4. ராயபுரம் - ஆர்.மனோ
5. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார் 6. அண்ணா நகர்- அறிவழகன்
7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
8. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா
9. மதுராந்தகம் ஜெயக்குமார்
10. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி
11. வேலூர் - ஞானசேகரன்
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
14. ஓசூர் - கோபிநாத்
15. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத்
16. கலசப்பாக்கம் - விஜயக்குமார்
17. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை 18. ஆத்தூர் - அர்த்தநாரி
19. செய்யார் - விஷ்ணுபிரசாத் 20. ரிஷிவந்தியம் - சிவராஜ்
21. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ் 22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்
23. ஈரோடு மேற்கு - யுவராஜா 24. மொடக்குறிச்சி - பழனிசசாமி
25. காங்கேயம் - விடியல் சேகர்
26. உதகை - கணேஷ்
27. அவினாசி - நடராஜன் 28. தொண்டாமுத்தூர் - கந்தசாமி
29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
30. வால்பாறை - கோவை தங்கம்
31. நிலக்கோட்டை - ராஜாங்கம் 32. வேடசந்தூர் - தண்டபாணி
33. கரூர் - ஜோதிமணி 34. மணப்பாறை - டாக்டர் சோமு
35. முசிறி - எம்.ராஜசேகரன்
36. அரியலூர் - பாளை அமரமூர்த்தி
37. விருத்தாச்சலம் - நீதிராஜன் 38. மயிலாடுதுறை - ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை 40. பாபாபநாசம் - ராம்குமார்
41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன் 42. திருமயம் - ராம சுப்புராம்
43. பேராவூரணி - மகேந்திரன்
44. அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
45. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை - ராஜசேகரன்
47. மதுரை வடக்கு - ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு - வரதாஜன்
49. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன் 50. விருதநகர் - நவீன் ஆம்ஸிடராங்
51. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு
52. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி
53. வாசுதேவநால்லூர் - கணேசன் 54. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
55. நாங்குநேரி - வசந்தகுமார் 56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
57. ராதாபுரம் - வேல்துரை 58. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
59. விளவங்கோடு - விஜயதரணி 60. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
61. பூந்தமல்லி -காஞ்சி ஜி.வி.மதியழகன் 62. ராமநாதபுரம் - கே.என்.அசன் அலி
63. திருப்பூர் தெற்கு -கே.செந்தில்குமா


பா.ம.க. 30 வேட்பாளர்கள் பட்டியல்

அதன் விவரம்:

1. மேட்டூர் - ஜி.கே.மணி 2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு
3. நெய்வேலி - வேல்முருகன் 4. அணைக்கட்டு - மா.கலையரசு
5. ஆலங்குடி - டாக்டர் அருள்மணி 6. சோழவந்தான் - மு.இளஞ்செழியன்
7. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன் 8. திருப்போரூர்- திரு.திருக்கச்சூர் ஆறுமுகம்
9. போளூர் - திரு.எதிரொலி மணியன் 10. ஆர்க்காடு - திரு.இளவழகன்
11. ஜோலார்பேட்டை - திரு.பொன்னுசாமி 12. செங்கல்பட்டு - திரு. ரங்கசாமி
13. .மதுரவாயல் - திரு. செல்வம் 14. ஓமலூர்-அ.தமிழரசு
15. பர்கூர்-ராசா 16. புவனகிரி-அறிவுச்செல்வன்
17. காஞ்சீபுரம்-உலகராட்சகன் 18. எடப்பாடி-மு.கார்த்திக்
19. பவானி-கா.சு.மகேந்திரன் 20. பரமத்திவேலூர்- வடிவேல் கவுண்டர்
21. பூம்புகார்- அகோரம் 22. செஞ்சி- அ.கணேஷ்குமார்
23. பாலக்கோடு - பாடி.வெ.செல்வம் 24. தர்மபுரி-பெ.சாந்தமூர்த்தி
25. திண்டிவனம் (தனி) - மொ.ப.சங்கர் 26. திண்டுக்கல்-ஜே.பால்பாஸ்கர்.
27. கும்மிடிப்பூண்டி - கே.என்.சேகர்
28. வேளச்சேரி - மு.ஜெயராமன்
29. மயிலம் - இரா. பிரகாஷ் 30. வேதாரண்யம் - ந. சதாசிவம்


விடுதலை சிறுத்தைகளின் 10 வேட்பாளர்கள் பட்டியல்

அதன் விபரம்:

1. சீர்காழி (தனி) - உஞ்சை அரசன் 2. அரக்கோணம் (தனி) - செல்லப்பாண்டியன்
3. கள்ளக்குறிச்சி (தனி) - பாவரசு
4. உளுந்தூர்பேட்டை - முகமது யூசுப்
5. திட்டக்குடி (தனி) - சிந்தனைச் செல்வன்
6. அரூர் (தனி) - நந்தன்
6. ஊத்தங்கரை (தனி) - முனியம்மாள் கனியமுது

8. சோழிங்கநல்லூர் - எஸ்.எஸ்.பாலாஜி
9. காட்டுமன்னார்கோயில் (தனி) - துரை ரவிக்குமார்
10. செய்யூர் (தனி) - பார்வேந்தன்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 வேட்பாளர்கள் பட்டியல்

அதன் விவரம்:

1. துறைமுகம் - அல்தாப் உசேன்
2. வாணியம்பாடி- அப்துல் பாசித்
3. நாகை - முகமது ஷேக்தாவூது



தாய்மொழிக்குப் பிறகுதான் மற்ற மொழி!

கவிஞர் வைரமுத்து


தாய் மொழியான தமிழ்மொழிக்குப் பிறகுதான் மற்ற மொழிகளை மாணவ மாணவியர் கற்க வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் தமிழ் பேசுவது, என்றார் கவிஞர் வைரமுத்து.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.தவமணி தலைமை தாங்கினார். கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ். முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு ஆய்வு நூலை வெளியிட்டார்.

இந்த விழாவில் வைரமுத்து பேசியதாவது:

தமிழ் மணக்கும் இந்த மேடையில் ஆண்டறிக்கை ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. இனிமேல், ஆண்டறிக்கையையும் தமிழிலேயே வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் நாம் தமிழ் பேசுவது? எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல. ஆனால், தாய்மொழியை கற்றுக்கொண்ட பிறகு எந்த மொழியை கற்றுக்கொள்வதிலும் எனக்கு முரண்பாடு கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் உலகில் அதிக மக்களால் பேசப்படுகிற சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்துக்கு அடுத்து அமெரிக்காவை ஆளப்போகும் ஸ்பானிஷ் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை அறிவு பெற்றாலும், எத்தனை கண்டங்கள் கடந்தாலும் தாய்வழி பண்பாடு, தாய்மொழி நாகரிகம் என்ற இரண்டையும் மறந்து விடாதீர்கள்.

மேல்நாட்டுக்காரர்கள் இந்தியாவுக்கு வந்து வியப்பது பனி படர்ந்த இமயமலையை அல்ல. பளிங்கு தாஜ்மகாலை அல்ல. மூன்று கடல்கள் கூடிக் கும்மி அடிக்கும் குமரி முனையை அல்ல. இந்திய பண்பாட்டின் குடும்பம் என்ற கட்டமைப்பைத் தான் அவர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

ஐம்பது வயது மகளை எழுபது வயது தாய் அணைத்துக் கொள்வதும், நாற்பது வயது பேரனை எண்பது வயது பாட்டன் தழுவிக்கொள்வதும் நமது பண்பாட்டில் மட்டுமே காணக்கூடிய சிறப்பம்சமாகும்.

நமது பண்பாட்டின் உறவுகளின் வழியே உரிமைகளும், கடமைகளும் தொடர்கிற ஒரு மனிதச் சங்கிலி அமைப்பு முறை பேணப்படுகிறது. இந்த பண்பாட்டிற்கு அடிநாதமாக இருப்பவர்கள், பெண்களாகிய நீங்கள் (கல்லூரி மாணவிகள்).

வேலையே உடற்பயிற்சி...

எங்கள் பாட்டிமார்களும், எங்கள் அன்னைமார்களும் தனியாக எந்த உடற்பயிற்சியும் மேற்கொண்டது இல்லை. உலக்கை பிடிப்பதும், அம்மி அரைப்பதும், கோலமிடுவதும், வீட்டுக் கடமையாற்றுவதும் அவர்களுக்கு எப்போதுமே உடற்பயிற்சிகளாக அமைந்தன.

கம்ப்யூட்டர் முன்பும், டி.வி. முன்பும் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிற இந்த கால பெண்கள் , உடலுக்கு பயிற்சி இல்லாமல் போனார்கள். உங்கள் வேலையை உடற்பயிற்சியாக மாற்றிக்கொண்டால் தனியாக உடற்பயிற்சி தேவையில்லை.

உழைக்கும் பெண்கள் அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், ஆண்டுக்கு 39 ஆயிரம் கற்பழிப்புகளும், 42 ஆயிரம் வரதட்சணை சாவுகளும், 27 ஆயிரம் பாலியல் கொடுமைகளும் இந்த மண்ணில்தான் நிகழ்கின்றன என அதே புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, இன்னும் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி பெண் குலம் முன்னேற வேண்டும்.

உங்களில் யாரோ ஒரு இந்திரா காந்தி, யாரோ ஒரு கல்பனா சாவ்லா, யாரோ ஒரு மேடம் கியூரி, யாரோ ஒரு சானியா மிர்சாவாக இருக்கலாம். உங்களுக்குள் உள்ள ஆற்றலை தட்டியெழுப்புங்கள். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் கழித்து என்னை எங்கே சந்தித்தாலும் தேடி வந்து பேசுங்கள், 'நீங்கள் விதைத்த லட்சிய விதையில் முளைத்தவள் நான்' என்று உங்களில் யாராவது வந்து என்னிடம் சொன்னால் அதுவே எனது பேச்சால் விளைந்த பெரும் பேறாக கருதுவேன்...", என்றார்.