Saturday, August 27, 2011

சஸ்சாங்காசனம், மாரிச்சாசனம், உத்தித பத்மாசனம்.

சஸ்சாங்காசனம்.
சஸ்சாங்காசனம்

செய்முறை:

முதலாவதாக, வஜ்ராசனத்தில் அமரவும். இரண்டு கைகளையும் அந்தந்த பக்கத்தில் உள்ள குதிகாலில் வையுங்கள். உங்களின் நெற்றி, முழங்காலை ஒட்டியிருக்கட்டும். இடுப்பு பகுதியை முடிந்தவரை தூக்கவும். இது உங்களின் நெற்றியிலிருந்து மெதுவாக உச்சந்தலையை சென்றடைவதாக இருக்கவேண்டும். இப்படியாக 15 விநாடிகள் இருந்து, ஆசனத்தை கலைத்து பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

தைராய்டு, தைமஸ் சுரப்பிகள் நன்கு இயங்கும். சளி தொல்லை நீங்கும். மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள் சஸ்சாங்காசனம் செய்துவந்தால், கூடிய விரைவில் பூரணகுணம் கிட்டும்.


மாரிச்சாசனம்.
மாரிச்சாசனம்
செய்முறை:

இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். வலது காலை முழங்கால் வரை மடக்கி, பின்பக்கம் விடுங்கள். அடுத்தபடியாக இடதுகாலை மடக்கி, வலது அடித்தொடையில் ஒன்றிணைக்கவும். இடதுகையை முதுகுக்கு பின்னால் சுற்றிக்கொண்டு வந்து இடதுகால் கட்டை விரலை பிடியுங்கள். இடதுகால் மூட்டின் மேல், வலது கை இருக்கட்டும். இடுப்பு-தோள்பட்டையை இடப்பக்கமாக திருப்பவும். இதேமாதிரி பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டுபிடிப்பு, இடுப்பு பிடிப்பு பிரச்சினைகள் வராது. வயதான காலத்தில் முதுகு தண்டு இயக்கம் சரியாக அமையும். மாரிச்சாசனத்தை செய்வதால் பாதி பத்மாசனம், பாதி வஜ்ராசனம், அர்த்த மச்சேந்திராசனம் ஆகிய மூன்று ஆசனங்களையும் செய்த பலன்கள் கிட்டும்.

அதாவது, ஒரே கல்லில் மூன்று மாங்காய்!


உத்தித பத்மாசனம்.
உத்தித பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றி, பத்மாசனத்தோடு உடலை மேலே தூக்குங்கள். முதுகு தண்டு உள்நோக்கி சுருக்கி இருக்கட்டும். இரண்டு முழங்கால்களையும் முழங்கை உயரத்துக்கு தூக்குவது, மிகச்சிறந்த பலன் தரும்.

பயன்கள்:

சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். செரிமான கோளாறு நீங்கும். ஹிரண்யா, மூலநோய், வாயு தொல்லை ஏற்படாது. உடல்எடை குறையும். நீரிழிவு, கல்லீரல், மண்ணீரல் நோய்கள் நீங்கும். மூச்சுநோய் வராது. கை-தோள்பட்டைகள் வலுவாகும்.

Sunday, August 21, 2011

பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை ஏற்கனவே மன்னர் கடத்திக் கொண்டு போய் விட்டார் -அச்சுதானந்தன்பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை, அதன் 6வது ரகசிய அறையிலிருந்தவற்றில் பலமுறை திருவிதாங்கூர் மன்னர் உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றுள்ளார் என்று கேரள முதல்வர் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டனர். அவற்றில் பதுங்கிக் கிடந்த பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க மட்டும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து தேவ பிரஸ்னம் பார்க்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். அப்போது இந்த அறையைத் திறந்தால், திறப்பவரின் வம்சமே அழிந்து போய் விடும் என ஜோதிடர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் 6வது அறையில் இருந்த பொக்கிஷங்களில் பலவற்றை பலமுறை மன்னர் திருடிச்சென்று விட்டதாக அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்தியாவில் இப்போது மன்னர் ஆட்சி இல்லை. எனவே, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவுக்கு மன்னருக்கு உரிய அந்தஸ்து கிடையாது என்றே உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால்தான், மார்த்தாண்ட வர்மா காலத்தில் இருந்து மன்னர் குடும்பத்தின் கைவசம் உள்ள பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை திறந்து பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தடுப்பதற்காகத்தான் மன்னர் குடும்பத்தின் சார்பில் கோயிலில் தேவ பிரஸ்னம் நடத்தப்பட்டது. அதில் பொக்கிஷங்களை பரிசோதிக்கக் கூடாது என்றும், பி அறையை திறந்தால் திறப்பவர்கள் வம்சமே அழியும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தை மிரட்டியுள்ளனர்.

இதற்கு முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் ‘பி’ அறை திறக்கப்பட்டுள்ளது. அப்போது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அறையை திறந்த யாரும் இறக்கவோ, குடும்பம் அழியவோ இல்லை. இப்போது மட்டும் அந்த அறையை திறந்தால் வம்சமே அழியும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ஒரு வாளியில் கோயில் பாயாசம் எடுத்து செல்வார். அதில் பாயாசம் இருப்பதாகத்தான் அனைவரும் கருதுகின்றனர். உண்மையில் அந்த வாளியில் கோயில் பொக்கிஷங்களை எடுத்து சென்றுள்ளார்.

இவ்வாறு ஒருமுறை அவர் தங்கத்தை எடுத்துச்சென்றபோது அதை பூசாரி ஒருவர் பார்த்து விட்டார். இதனால் பயந்து போன மார்த்தாண்ட வர்மா, அந்த பூசாரியை கொதி நீர் ஊற்றிக் கொல்ல முயற்சித்தார். இது அனைவருக்கும் தெரியும்.

எனவே 6வது அறையைத் திறந்து பார்க்க வேண்டும். இதில் பயமுறுத்தலுக்கு அஞ்சக் கூடாது என்றார் அச்சுதானந்தன்.

Saturday, August 20, 2011

ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம் .குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது.

மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான்.

பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள் ? சீமான் கேள்வி !நாம்தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச் சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...!

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

மேற்குவங்க மாநிலம் பாஷிம்பங்காவாக பெயர் மாற்றம்.

மேற்குவங்க மாநிலம் பாஷிம்பங்காவாக பெயர் மாற்றம்

மேற்கு வங்கம் என பெயர் இருப்பதால் மத்திய அரசின் விவாதங்கள் உரிமைகளில் கடைசி நிலையில் வருகிறது.

எனவே மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என மம்தா தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இது குறித்து இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்கம் என்ற பெயரை பாஷிம்பங்கவாக மாற்ற தீர்மானம் செய்யப்பட்டது. இந்த பெயர் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

2-வது நாளாக லாரி ஸ்டிரைக் : நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்.

2-வது நாளாக லாரி ஸ்டிரைக்:   நாமக்கல்லில் 10 கோடி  முட்டைகள் தேக்கம்

தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக ரிக் உரிமையாளர்கள் சங்கம், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

தென் மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து முடங்கியது. போராட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நேற்றும், இன்றும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். இதனால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக சுமார் 10 கோடி முட்டைகள் நாமக்கல்லில் தேங்கி உள்ளன. இவை ஆங்காங்கே குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் கரையாம்புதூர் நல்லதம்பி கூறியதாவது:-

முட்டைகளை பாதுகாத்து வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் முட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்காத பட்சத்தில் கலெக்டரை சந்தித்து முட்டை லாரிகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க கேட்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு திட்டத்துக்கு தேவையான முட்டை கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடிப்பதால் சேலம், நாமக்கல் பகுதியில் காய்கறி விலையும் உயர தொடங்கியிருக்கிறது. நேற்றை விட இன்று விலை சற்று அதிகமாக இருந்தது. வாழைக்காய், வாழை இலை, தக்காளி, கத்திரிக்காய், இங்கிலீஷ் காய்கறிகள் விலையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

லாரி ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. லாரி தொழில் மூலம் அரசு மற்றும் லாரி உரிமை யாளர்களுக்கு தினமும் ரூ. 3500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இன்றுடன் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ. 2ஆயிரம் கோடிக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக ஈரோட்டில் மஞ்சள் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மஞ்சள் மண்டிகளில் தினசரி ஏலம் விடப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இந்த ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது லாரி ஸ்டிரைக் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது.

நேற்று முதல் மஞ்சள் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் முடிந்ததும் மஞ்சள் ஏலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது போல ஜவுளி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான்- ஓணம் பண்டிகையை யொட்டி வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு வந்து ஜவுளிகளை வாங்கி செல்வார்கள். இப்போது இதன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ஜவுளிகளும் வரவில்லை.

இன்டர்நெட்டில் போலியாக விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரியை, அதன் உரிமையாளரிடமே விற்க முயற்சி .

இன்டர்நெட்டில் போலியாக விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரியை, அதன் உரிமையாளரிடமே விற்க முயற்சி

கரூரை அடுத்த காருடையாம்பாளையம் அருகே வி.எஸ்.பி. என்ற பெயரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி செயலாளர் விஜய், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகராஜனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இணையதளம் ஒன்றில் எங்கள் கல்லூரி பெயர் குறிப்பிடாமல், கல்லூரி தொடங்கப்பட்ட வருடம், பஸ் எண்ணிக்கை, கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் வசதிகள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு, கரூரில் உள்ள கல்லூரி விற்பனைக்கு உள்ளதாகவும் விலை விவரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணுடன் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்தவுடன், எங்கள் கல்லூரிதான் விற்கப்படுகிறது என புரிந்து கொள்ளும் அளவுவுக்கு அந்த விளம்பரம் அமைந்துள்ளது. கடந்த 2007, 2008-ம் வருடங்களில் இருந்தே சிலர் இதே போன்று கல்லூரியை பற்றி வதந்தியை பரப்பியும், விற்கவும் முயன்று வருகின்றனர். தற்போது நாகராஜ்(விருத்தாச்சலம்), காமராஜ்(நாமக்கல்), மணிகண்டன், ரகுபதி ஆகியோர் இன்னும் சிலருடன் சேர்ந்து இந்த விளம்பரத்தை கொடுத்து உள்ளனர்.

அவர்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, எங்கள் கல்லூரி சம்பந்தமான போலி ஆவணம் தயார் செய்து கல்லூரி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. அத்துடன் எங்கள் கல்லூரியை விற்பதற்காக எங்களிடமே அவர்கள் விலை பேசினார்கள்.

இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் செல்போன் நம்பரில் காமராஜ் மற்றும் மணிகண்டனுடன் தொடர்பு கொண்டு பேசியதன் விவரம் அடங்கிய சி.டி. ஆகியவற்றையும் இணைத்து இருக்கிறோம். . இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி : அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் மத்திய அரசு அச்சம்.

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் மத்திய அரசு அச்சம்

ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. பொது மக்கள், குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மத்தியில் புதிய விடியலுக்கான புரட்சிகரமான எழுச்சி ஏற்பட்டு உள்ளது.

போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய அரசு, நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் ஆதரவால், அச்சம் அடைந்துள்ளது. மேலும் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பே அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலுக்கு அனுப்பியது, மத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது.

சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு, டெல்லி போலீசார் எடுத்த நிர்வாக நடவடிக்கை என்று அரசு தரப்பில் மூத்த மந்திரிகள் கைது பற்றி விளக்கம் அளித்து இருந்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அன்னாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில், அவர் விடுதலையாக மறுத்தது, மத்திய அரசுக்கு விழுந்த அடுத்த பலத்த அடியாகும். அவரை விடுதலையாகி சிறையை விட்டு வெளியே செல்வதற்காக பகீரத பிரயத்தன முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியதும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுவிட்டது.

பெருகிவரும் மக்கள் உணர்வலைகளுக்கு எதிராக போராட முடியாது என்பதையும் தெளிவாக புரிந்துகொண்டு விட்டது. இதன் காரணமாக, இந்த உண்ணாவிரதத்தில் வெளிப்படையாக தலையிட முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. எனவே, புதிய முயற்சிகள் மூலம் அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை முன்கூட்டிய முடிவுக்கு கொண்டுவரும் புதிய முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, ஹசாரே குழுவில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய, குறிப்பாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அன்னா குழுவினரின் மக்கள் லோக்பால் சட்ட மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புவது அல்லது நிலைக்குழுவின் முன்பு தனது மசோதா பற்றி எடுத்துக்கூற அன்னாவுக்கு அழைப்பு விடுப்பது போன்ற யோசனைகள் பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

மத்திய அரசின் புதிய சமரச திட்டம் குறித்து தங்களிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று, அன்னா குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், மற்றொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே இந்த முயற்சியை சூசகமாக ஒப்புக்கொண்டார்.

பிரதமர், உயர் நீதிபதிகளை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதில் இரு தரப்பிலும் உள்ள பிடிவாதத்தை தளர்த்த தனது குழுவினரிடம் பேசுவதாகவும், அதே நேரத்தில், எங்களுக்கு உடன்பாடு இல்லாத மற்ற 8 அம்சங்களில் அரசு தரப்பில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். சி.பி.ஐ. மற்றும் அதிகாரிகள் அல்லாத அரசு ஊழியர்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டு உள்ளது.

நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம் கலைஞர்.திமுக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் சென்னை மயிலாப்பூரில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற பதிலுக்காகக் காத்திருந்தேன். கடைசியில் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதில் கிடைத்துள்ளது.

மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: இதற்கும் நானே வழி காட்டியிருக்கிறேன். என் ஆயுள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

அதேசமயம் 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள். இவ்வாறு கலைஞர் பேசினார்.

புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை ! - கருணாநிதி .புதிய தலைமைச் செயலகம் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை, என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம், சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். நான் கூட என்ன செய்யப் போகிறார்களோ என்று நினைத்தேன்.

அதற்கு பதில் கிடைத்தது. மக்களுக்கு பயன்படுவதற்காக மருத்துவமனையாக ஆக்கப்போகிறார்கள். மருத்துவமனையாக ஒரு வீட்டை, ஒரு கட்டிடத்தை ஆக்குவதில் தவறில்லை.

நானே இதற்கு வழிக் காட்டியிருக்கிறேன். எனது கோபாலபுர இல்லத்தை எனக்கு பிறகு மருத்துவமனையாக மாற்ற எழுதி கொடுத்துள்ளேன்.

அதனால் புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் அதிருப்தி எதுவும் இல்லை. தாராளமாகச் செய்யட்டும். எப்படியோ நான் தொட்டுப் பார்த்து கட்டிய ஒரு கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள்," என்றார்.

அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம், சுப்த வஜ்ராசனம், கோமுக ஆசனம்.

அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்.

அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்

செய்முறை:

இரண்டு காலையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். வலது காலை மடக்கி, இடது அடித்தொடையில் வைக்கவும். வலது கையை பின்னால் வீசி கொண்டு வந்து, வலதுகால் கட்டை விரலை பிடியுங்கள்.

முன்னோக்கி நீட்டிய இடது காலின் கட்டை விரலை, இடது கையால் பிடிக்கவும். அடுத்தபடியாக உடலை முன்னோக்கி குனிந்து கொண்டுவந்து, இடதுமுழங்காலை தொடவும். கடைசியில் ஆசனத்தை கலைத்து, இதேபோல பக்கம் மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

சிறுநீரக கோளாறு, மாத விடாய் பிரச்சினை, வாயு தொல்லை, குடலிறக்கம் நீங்கும். மாணவ-மாணவியர் செய்துவந்தால் இளம்பருவவளர்ச்சி இயல்பானதாக-சரியாக வந்து அமையும்.


சுப்த வஜ்ராசனம்.
சுப்த வஜ்ராசனம்

செய்முறை:

முழங்கால்கள் மடிந்தநிலையில் அமருங்கள். அப்படியே மெதுவாக பின்னால் சாய்ந்து, இரண்டு முழங்கைகளின் மேல் படுக்கவும். உங்களின் உள்ளங்கைகள், தோள் பட்டையை தொட்டு முதுகுதண்டில் படுமாறு இருக்கட்டும்.

அடுத்தபடியாக - இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, பக்கம் மாற்றி செய்ய வேண்டும்.

பயன்கள்:

முடக்குவாதம், பக்கவாதம், இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூலநோய், வாயு தொல்லை, அடிவயிறு பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு தொடையின் எடை குறையும்.ஆடவர்களுக்கு, விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் ஆண்மை குறைவு மறைந்து புதிய இன்பம் காணுவீர்கள்.


கோமுக ஆசனம்.
கோமுக ஆசனம்

செய்முறை:

கால்களை முன்னோக்கி நீட்டி அமரவும். வலதுமுழங்காலை மடக்கி, இடதுதொடை மீது வையுங்கள். இதுபோலவே, இடதுமுழங்காலை மடக்கி, வலது தொடை மீது போடவும். இரண்டு கை விரல்களையும் படத்தில் காட்டியபடி முதுகுக்கு பின்பாக, கால் மூட்டை கோர்த்தநிலையில் ஒன்றிணையுங்கள். இரண்டு கரங்களையும் அந்தந்த கால் பாதங்களில் ஒன்றிணைத்து, அப்படியே முன்புறமாக குனியவும்.

பயன்கள்:

மூலநோய், வாயு தொல்லை, ஆண்மைகுறைவு, மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். உயர்ரத்த அழுத்தம் சீராகும். கர்ப்பப்பை இயக்கம் நன்றாக இருக்கும். மகப்பேறுக்கு பின்வரும், வயிற்றுபெருக்கம் குறையும். மனநிலை கோளாறு, கோபக்காரர்களுக்கு உகந்த ஆசனமிது. "தேசத்தந்தை காந்தியடிகள் கோமுகாசனத்தை செய்துதான், `மகாத்மா'வாக புகழ்பெற்றார்'' என்பது வரலாறு!

Friday, August 19, 2011

சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஓடியது : பால் - கியாஸ் - உணவு பொருட்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறது.


சேலம் மாவட்டத்திலும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தால் ஏதும் பாதிப்பு வந்து விடாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் தலைமையில் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

லாரி ஸ்டிரைக் நடந்தாலும் சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஒடுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் தான் லாரிகள் ஓடுகிறது. 80 சதவீதம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பால், கியாஸ், உணவு பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரிகள் ஸ்டிரைக்கினால் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.இ. கவுன்சிலிங் முடிந்தது ; 44 ஆயிரம் இடங்கள் காலி.


தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 47 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 40 நாட்களாக கவுன்சிலிங் நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 8-ந்தேதி தொடங்கிய பொது கலந்தாய்வு இந்த மாதம் 11-ந்தேதி வரை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிளஸ்-2 உடனடி தேர்வு எழுதியவர்களுக்கும் பின்னர் தொழில் பிரிவை சேர்ந்தவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று வரை நடந்து முடிந்தது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 564 பேரின் விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருந்தது. அவற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 166 இடங்கள் மட்டும் நிரம்பி உள்ளன.

அறிவியல் பாடப்பிரிவில் ஒரு லட்சத்து 6182 இடங்கள் நிரம்பியது. இதில் 43,393 இடங்கள் காலியாக உள்ளன. தொழில் பாடப்பிரிவில் 3984 இடங்கள் மட்டும் நிரம்பின. 746 இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தம் 44,139 என்ஜினீயரிங் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. கடந்த ஆண்டு 12 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. பி.இ. படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) முதல் எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்: தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை- கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த நில அபகரிப்பு பற்றி போலீசுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. இந்த புகார்களில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளை கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கண்காணித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன. இதில் விசாரணை நடத்திய பின்பு 430 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்களையும் நில அபகரிப்பு பிரிவு தனிப்படை விசாரித்து வருகிறது. பலகோடி நிலம் மோசடி புகார்களில் தகுந்த ஆதாரத்துடன் கூடிய உண்மையான, தகுதியான புகார்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம்.

நிலஅபகரிப்பு மிரட்டல், பலப்பிரயோகம், அச்சுறுத்தல் போன்ற புகார்களில் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டும் 6000 புகார்கள் வந்துள்ளன. நில அபகரிப்பு வழக்கில் போலீசார் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.

எனவேதான் புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. கோவை, சேலம், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களில்தான் அதிக அளவில் நில அபகரிப்பு புகார்கள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் புகார் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு போலீஸ் இணைய தளத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம்.

இவ்வாறு ஜார்ஜ் கூறினார்.

இந்தியாவை உலுக்கிய அன்னாஹசாரே : பூ வியாபாரி காந்தியவாதியானார்.


உண்ணாவிரத போராட்டத்தை உலகுக்கு கற்றுத்தந்த காந்தியின் அகிம்சை போராட்டத்தால் ஆங்கிலேய ஏகாதிபத்தியமே நடுங்கிப் போனது வரலாறு. அதே வழியில் இன்றும் உண்ணாவிரத போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அன்னாஹசாரே.

இந்த 76 வயது இளைஞரின் மனதில் கொளுந்து விட்டு எரியும் நெருப்பு மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் பரவ வைத்துள்ளது. மிக மோசமான தொற்று நோய். அடி முதல் நுனிவரை செல்லரித்து விட்ட இந்த நோயை குணப்படுத்தியே தீரவேண்டும். இல்லாவிட்டால் நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்ற ஏக்கம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரிடமும் உள்ளது.

எங்கும் லஞ்சம்... எதிலும் லஞ்சம்... என்று தலை விரித்தாடும் லஞ்சத்தால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழல் செய்து குறுகிய காலத்திலேயே செல்வ செழிப்பில் மிதக்கிறார்கள். இதை பார்த்து படித்தவர்களும் பாதை மாறும் துர்பாக்கிய நிலைமை உருவாகி உள்ளது.

இப்படியே போனால் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நிழல்போல் தொடரும் ஊழலை வெட்டி வீழ்த்த முடியுமா? என்ற யதார்த்தமான கேள்வியும் மனதில் எழுகிறது. ஆனாலும் இதற்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்ற ஆதங்கம் நம்மிடம் உள்ளது.

ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்று ஒவ்வொருவரும் யோசனையில் ஆழ்ந்து இருந்த நேரம்... இதோ நான் இருக்கிறேன் என்று ஆபத்பாந்தவனாக கையை உயர்த்தியவர்தான் அன்னாஹசாரே!

1937-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் பின்கார் கிராமத்தில் பாபுராவ் ஹசாரே- லட்சுமிபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளமையில் வறுமையோடு போராடியவர். 6 வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது சித்தி படிக்க வைப்பதாக கூறி மும்பைக்கு அழைத்து சென்றார். 7-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் படிக்க வைக்க வசதி இல்லை.

இதனால் மும்பை தாதரில் பூ வியாபாரத்தை தொடங்கினார் ஹசாரே. பின்னர் பூக்கடை ஒன்றை சொந்தமாக தொடங்கினார். அதில் ஓரளவு வருமானம் வந்தது. இந்த நேரத்தில் (1962-ல்) சீனப்போரில் களம் இறங்க இந்திய ராணுவத்துக்கு இளைஞர்களை தேடினார்கள். தாய்நாட்டை காக்க தன்னை அர்ப்பணிக்க முன்வந்தார் ஹசாரே.

ராணுவத்தில் டிரைவராக சேர்ந்த ஹசாரே 1965-ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் எல்லைப் பகுதியில் எதிரிகளின் களத்தை துவம்சம் செய்ய ஒரு குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் ஹசாரேயுடன் இருந்த அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். தலையில் குண்டு காயத்துடன் ஹசாரே மட்டும் தப்பினார்.

எவ்வளவு ரத்தம் சிந்தினோம்...? எத்தனை உயிர்களை இழந்தோம்...? இதில் கிடைக்கப் போவது என்ன? என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் ஹசாரே. காண்டீபத்தை கீழே போட்டு விட்டு கலங்கி நின்ற அர்ஜுனனை போல் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை முடிவோடு புறப்பட்டார்.

அப்போது டெல்லி ரெயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை வாங்கி படித்தார். அதில் அவர் கூறிய வாழ்க்கை தத்துவங்கள் ஹசாரேயின் மனதில் இருந்த தற்கொலை முடிவை மாற்றி மனதில் உறுதியையும், தெளிவையும் கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை அர்த்தமாக்கி கொள்ள வேண்டும். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்கு பயன்தரும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனை ஹசாரேயை மீண்டும் புது மனிதனாக்கியது.

39 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான ரலேகான்சித்திக்கு திரும்பினார். வாலிப முறுக்கோடு இருந்த ஹசாரே திருமண ஆசையை துறந்தார். சொந்த கிராம மக்களின் வறுமையை துடைக்க களம் இறங்கினார். மழைநீர் சேமிப்பு திட்டம் உள்பட பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் ரலேகான்சித்தி செழித்தது.

அகமத்நகர் மாவட்டத்திலேயே ரலேகான்சித்தி ஒரு முன் மாதிரி கிராமமாக உருவெடுத்தது. தனது கிராமப்பணியை நிறைவு செய்து திருப்தி அடைந்த ஹசாரே தனது போராட்ட வியூகத்தை விரிவாக்கினார். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். ஊருக்கு சேவை செய்ய வரும் அரசியல்வாதிகள் ஊரை அடித்து உலையில் போடும் அநியாயத்துக்கு எதிராக வெகுண்டெழுந்தார்.

ஹசாரேயின் போராட்டத்தால் மராட்டிய மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவர்களான பால் தாக்கரே, சரத்பவார் போன்றவர்களே ஆடிப்போனார்கள்.

1996-ல் சிவசேனா ஆட்சியில் ஊழல் செய்த 2 மந்திரிகளை தனது போராட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பினார். 2003-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்த 4 மந்திரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வைத்தார். ஊழலுக்கு எதிரான அவரது போர் 2-வது சுதந்திரபோர் என்று பேச வைத்துள்ளது.

ஊழலுக்கு எதிரான அவரது குரல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. அவரது உரத்த குரலுக்கு முன்பு செப்படி வித்தைகள் தவிடு பொடியாகி விட்டன. ஹசாரேயின் போராட்டத்தை அடக்க நினைத்த இந்திய பேரரசே காந்தியவாதியின் அஹிம்சை போராட்டத்தின் முன்பு அடிபணிந்து விட்டது.

பின்புலம் எதுவுமின்றி லட்சியத்துக்காக போராடும் ஹசாரேயின் போராட்டத்துக்கு இன்றோ, நாளையோ விடை கிடைத்து விடாது. ஆனால் இந்திய மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் இந்த புதிய மகாத்மாவின் பின்னால் அணி திரள்கிறார்கள். காந்திக்கு பிறகு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஹசாரேயின் போராட்டத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்தை அமைதியான முறையில் சொல்லி வருகிறார்கள். இது வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் என்று அமெரிக்கா கூறி உள்ளது.

தொடரும் 15 நாள் போராட்டத்தால் புதிய விடியலுக்காக இந்தியாவே காத்திருக்கிறது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது

கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அப்போது இதுகுறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் இருந்து தங்கம் விலை ராக்கெட்டை மிஞ்சும் வேகத்தில் இடைவிடாது விர்ரென அதிரடியாக உயர்ந்து வருகிறது.

2010-ம் ஆண்டில் ஒரு பவுன் 12 ஆயிரத்து 784 வரை விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டில் (2011) கடந்த ஏப்ரல் மாதம் பவுன் ரூ.16 ஆயிரத்தை கடந்தது.

தொடர்ந்து “ஜெட்” வேகத்தில் ஏறிய தங்கம் நேற்று ஒரு பவுன் 20 ஆயிரத்தை தாண்டியது. பவுன் ரூ.20 ஆயிரத்து 32 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.2,504-க்கு விற்கப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு என வர்ணிக்கப்பட்டது.

ஏழை எளிய மக்களும், பெண் குழந்தைகளை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகி விட்டதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று தங்கம் விலை மேலும் எகிறியுள்ளது. ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.648 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 680 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2504க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் தங்கம் பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பங்கு சந்தை வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இனி சுப முகூர்த்த நாட்கள் தொடங்கி விட்டதால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 625 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.67க்கு விற்கப்படுகிறது.

ராஜீவ் கொலைக் கைதிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்படும் நம்பிக்கை உள்ளது பேரறிவாளன் உறவினர்கள் பேட்டி.

ராஜீவ் கொலைக் கைதிகளின்   மரணதண்டனை ரத்து செய்யப்படும் நம்பிக்கை உள்ளது   பேரறிவாளன் உறவினர்கள் பேட்டி

ராஜீவ் கொலைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் கொலைக் கைதிகளை நேற்று முன்தினம் வைகோ சந்தித்து பேசினார். நேற்று சீமானும் சந்தித்தார். அப்போது அவர் உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றார். இதேபோல் மரண தண்டணையை ரத்து செய்யக்கோரி மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் சைக்கிளில் பேரணியாக சென்னையிலிருந்து வேலூர் வந்தனர். அப்போது அவர்கள் வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனை பார்க்க அவரது உறவினர்களான அத்தை, தம்பி ஆகியோர் வேலூர் ஜெயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் ஜோலார்பேட்டை தற்போது பொள்ளாச்சியில் வசித்து வருகிறோம். நாங்கள் மாதம் ஒரு முறை வந்து பேரறிவாளனை சந்தித்து விட்டு செல்வோம். முதலில் எங்களுக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேம். தற்போது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் மரண தண்டனையை எதிர்ப்பதால் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு - தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 4 லட்சத்து 97,187 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் 11,984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அடுத்தக்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள், அக்டோபர் மாதம் 29ம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.

நான் நிரபராதி என்று கத்தும்போதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ ? - பேரறிவாளன்.நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.

விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?


4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் நோய்க்கு விரைவில் தடுப்பூசி : விஞ்ஞானிகள் தகவல்.

எய்ட்ஸ் நோய்க்கு விரைவில் தடுப்பூசி: விஞ்ஞானிகள் தகவல்

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் பல்வேறு வித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது நம்பிக்கைதரும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர். விரைவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கி விடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

மனிதன் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதில் அதிக திறன் கொண்ட 17 மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதை மேலும் மேம்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோயையும் மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுத்து விடலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே இந்த மூலக்கூறுகளை மேலும் வீரியமாக்க தடுப்பூசி மருந்தை உருவாக்கி வருகின்றனர். விரைவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் எய்ட்ஸ் நோயை முன்கூட்டியே தடுத்து முற்றிலும் விரட்டிவிடலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் மருத்துவ அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் : ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு.


புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலைதா அறிவித்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக இந்த மருத்துவமனை அமையும் என்றும் அவர் அறிவித்தார்.

’A’பிளாக்கில் பல்வேறு உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படும் என்றும்,

‘B’பிளாகில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி

இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.

ராஜபக்சே நீண்ட நாள் வாழ, ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து யாக குண்டலத்தில் வீசும் கொடூரம்.இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.

பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.

தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.

“இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Thursday, August 18, 2011

விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா..விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.

பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.

இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.

26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்... விலைவாசி உயரும் அபாயம் !தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்றுமுதல் 26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதைத் தொடர்ந்து லாரி அதிபர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் இன்சூரன்ஸ் கட்டணம், உதிரிபாகங்கள் மீதான விலை உயர்வினை குறைக்க வேண்டும், தனியார் மூலம் சுங்கவரி வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும், சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்தது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இதையொட்டி தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தாழ 26 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு லாரி தொழிலை சார்ந்த பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 14-ந் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு சரக்கு பதிவு செய்வதை நிறுத்தி கொண்டன.

எனவே வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் ஜவுளி, தீப்பெட்டி, தேங்காய், பட்டாசு உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் 26 லட்சம் லாரிகள் ஓடாது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாயும், 6 மாநில அரசுகளுக்கும் சேர்த்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் நாமக்கல் தாலுகா அளவில் 8 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், தமிழக அளவில் 30 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 6 மாநிலங்களிலும் சேர்த்து 70 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் ஓடாது என நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 4100 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயுவை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பு கருதி கேஸ் டேங்கர் லாரிகளையும் நிறுத்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே இன்று தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸில் ஐடி ரெய்டு : 50 அதிகாரிகள் சோதனை.சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி. நகர் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 6 கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 50 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த திடீர் சோதனையால் கடைகள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான் ஊழல் செய்யவில்லை என நீதிபதி செளமித்ரா சென் ராஜ்யசபாவில் வாதம்..ராஜ்யசபா இன்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் ராஜ்யசபாவில் தொடங்கின. விசாரணைக்குட்படுத்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் நேரில் ஆஜராகி அவர் சார்பி்ல் அவரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

நான் ஊழல் செய்யவில்லை. இதுதொடர்பாக ராஜ்யசபாவுக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அவர் வாதிட்டார்.

தவறான நடத்தை காரணமாக ஒரு நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் ராஜ்யசபாவில் வாதத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்று பிற்பகலுக்கு மேல் செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானம் மீதான வாதம் தொடங்கியது. இதற்காக ராஜ்யசபா அரங்கம் கோர்ட் போல மாறியது.

முன்னதாக செளமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து அவர் ஒரு சிறப்பு விசாரணைக் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, நீதிபதி சென் மீதான நிதி முறைகேடு புகார் உண்மையானது என்று கண்டுபிடித்தது. 90களில் வக்கீலாக இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ரூ. 24 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க ராஜ்யசபா உத்தரவிட்டது. அதன்படி இன்று ராஜ்யசபாவில் ஆஜரானார் சென். ராஜ்யசபாவில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றார் சென். அவருக்குப் பின்னால் அவரது வக்கீல்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து பதவி நீக்க தீர்மானத்தை சிபிஎம் உறுப்பினர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார். இதையடுத்து தனது தரப்பு வாதத்தை 90 நிமிடங்களுக்குள் தரலாம் என சென்னுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வக்கீல்களுக்குப் பதில் தானே வாதாடினார் சென்.

அவர் கூறுகையில், என் மீதான ஊழல் புகார்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை. நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. சட்டப்படியும் சரி, மனசாட்சிப்படியும் சரி நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

எனக்கும், ராஜ்யசபாவுக்கும் இந்த புகார்கள் தொடர்பாக தரப்பட்டுள்ளவை தவறான தகவல்களாகும் என்று வாதிட்டார்.

வாதத்திற்குப் பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும். அதில் தீர்மானம் நிறைவேறினால் ஒரு வாரத்திற்குள் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நீதிபதி செளமித்ரா சென்னை பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படி,ஒரு உயர்நீமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஊழல் புகார் வந்தால், அவரை உடனடியாக பதவி நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றி அதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, உச்சநீதின்ற நீதிபதி வி.ராமசாமி மீது லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1993ம் ஆண்டு இது நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பிலில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இதனால் தீர்மானம் தோற்று, ராமசாமி தப்பினார். ராமசாமி சார்பில் அவரது வக்கீலாக கபில் சிபல் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது..

எனவே தற்போது நீதிபதி சென்னின் பதவி தப்புவதும், தப்பாமல் போவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இருஅவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் செளமித்ரா சென்னுக்குக் கிடைக்கும்.

Wednesday, August 17, 2011

ஏக அர்த்த ஹலாசனம், பத்ம சுப்த வச்சிராசனம், உத்தித பாதாங்குஸ்த ஆசனம்.

ஏக அர்த்த ஹலாசனம்.
ஏக அர்த்த ஹலாசனம்

செய்முறை:

ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் ஏக அர்த்த ஹலாசனமே செய்ய இயலாது. அவர்கள் காலை கையால் பிடித்தபடி செய்யலாம். நன்கு பழகிய பிறகு கை பிடிக்காமம் செய்யலாம். முதலில் இடது காலை மூச்சை இழுத்துக் கொண்டே தூங்கவும்.

காலை நேரே நிமிர்த்தவும். பின் மூச்சை வெளியே விட்டு 10 விநாடிகள் இருந்து மூச்சை இழுத்துக் கொண்டே கீழே காலை போடவும். பின் வலது பக்கம் செய்யவும். இது போல் மாற்றி மாற்றி 4 முறைகள் செய்யவும்.

பலன்கள்:

வயிறு, மார்பு, கழுத்து, தொண்டைகள் பலம் பெறும். தொடையில் உள்ள வீண் சதைகள் அகலும். வயிறு சம்பந்தமான நோய்கள் வராது. இதயப் பலவீனம் அகலும்.


பத்ம சுப்த வச்சிராசனம்.
பத்ம சுப்த வச்சிராசனம்

செய்முறை:

மெல்ல வலதுகையை ஊன்றி பின்னர் இடது கையை ஊன்றவும். அப்படியே மல்லாந்து சமமாக முதுகை தரையில் படுமாறு படுத்த பின்னர் இருக்கைகளையும் காது பின்னால் கொண்டு வந்து தலையினை மெல்ல தூக்கி பின்னால் வளைத்தபின் இரு கைகளையும் கீழே கொண்டு போய் கால்களை பிடிக்கவும். மூச்சை நிறுத்தாமல் சாதாரணமாய் சுவாசிக்கவும்.

பலன்கள்:

தொடைகள், கணுக்கால், இடுப்பு நோய்கள் அகலும். ஹெர்னியா, வாயு அண்டம், நீர் அண்டம் முதலிய நோய்கள் அகலும். இதயம் பலப்படும்.


உத்தித பாதாங்குஸ்த ஆசனம்.
உத்தித பாதாங்குஸ்த ஆசனம்

செய்முறை:

நேராக நின்ற நிலையில் வலதுகாலை மட்டும் இடுப்பு மட்டத்துக்கு தூக்கி, வலது பெருவிரலை, வலதுகையால் பிடியுங்கள். குனிய கூடாது. அடுத்த படியாக வலதுகாலை முன்னோக்கி நீட்டி , வலது கையால் கட்டைவிரலைப் பிடிக்கவும். சுவாசத்தை இயல்பாக்கிக் கொண்டு, அதே நிலையில் 10 விநாடிகள் இருங்கள். ஆசனத்தை கலைத்த் பிறகு, இடது காலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

குழந்தைகளுக்கான ஆசனமிது. குறிப்பிட்ட நோய் என்றில்லாமல் பொதுவான ஆரோக்கியத்துக்கு செய்து பழகலாம்.

Monday, August 15, 2011

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை.உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் கொள்ளையர்கள் தங்களை கைவரிசையை காட்டியுள்ளனர். சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் வீட்டில் நடந்துள்ள இந்த கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ளது. அந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். அந்த வீட்டில் உள்ள 6 அறைகளை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இதில் 3 அறைகள் ப.சிதம்பரத்திற்கு சொந்தமானவை ஆகும்.

உள்துறை அமைச்சரின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் குடும்பத்தின் பூர்வீகநகைகள் அந்தஅறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அரிய வகை குரங்குகள் கண்டுபிடிப்பு - படம் .

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலையின் மேல் இருக்கிறது திருமலைநம்பி கோயில். அங்கே சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் கூட்டம் கூட்டமாக திரிந்தன. இந்த குரங்குகளின் முகம் கருப்பாகவும், வால் மிகவும் நீளமாகவும் காணப்பட்டது. சாதாரண குரங்குகளைவிட இதன் உருவம் நீளமாகவும் உள்ளது.

இதனை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அதிசயத்துடன் பார்த்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் சொல்லுவது அரிய வகையான இந்த குரங்குகள் மலையின் மீது உள்ள அடர்ந்த காட்டில் மட்டுமே வசிக்கும். தற்போது ஒரு சில குரங்குகள் திசை மாறி மலையடிவாரத்தில் சுற்றித்திரந்தன. இப்போது அந்த இனத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த குரங்கு தொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்த வகை குரங்குகள் களக்காடு புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில்தான் அரிதாக வசிக்கின்றன என தெரிவித்துவிட்டு போனார்கள்.

சேலம் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் டிஸ்மிஸ்.சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மீது சேலம் 5ரோடு ரோலர் பிளவர் மில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டது. இதன் மீது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதனால் லட்சுமணன் போலீசில் சரண் அடைந்து வாக்குமூலம் கொடுத்தார்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் வந்தார். அப்போது லட்சுமணனை சேலம் சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். சூரமங்கலத்தை சேர்ந்த அருள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 387 (மிரட்டி பறித்தல்), 389 ( தொடர்ந்து அச்சுறுத்தி பறித்தல்), 506 (2) கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் லட்சுமணன் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே லட்சுமணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் வக்கீல்கள் அவருக்கு ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். ,இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதி பாஸ்கரன் விசாரிக்கிறார். அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக அருண்குமார் வாதிட உள்ளார். இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்காக வக்கீல் ஏ.எஸ்.அன்பு வாதிடுகிறார்.

பிரதமர் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை : அன்னா குழு குற்றச்சாட்டு.லோக்பால் விவகாரம் குறித்த பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று அன்னா ஹஸாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது சுதந்திர தின உரையில், நமது நீதித்துறையை வலுவாக்காமல் நம்மால் ஊழலை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. உயர் மட்ட அளவில் ஊழலை ஒழிக்க கடுமையான, வலுவான லோக்பால் சட்டம் தேவை.

அதற்காக பட்டினி கிடப்பது, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது ஊழலை ஒழிக்க உதவாது. இந்தியாவின் நீதித்துறையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்குத் தான் அன்னா குழுவினர் பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று அன்னா குழுவில் ஒருவரான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிடிஐக்கு கூறியதாவது,

பிரதமர் இறுதி நடுவர் போன்று பேசுகிறார். நீங்கள் போராட்டம் எல்லாம் நடத்தக் கூடாது என்கிறார். இது மக்களின் விருப்பத்திற்கு எதிராக லோக்பால் மசோதாவை அவர்கள் மீது திணிப்பது போன்றதாகும். லோக்பால் மசோதாவை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது தவறு என்கிறார்.

மக்களின் கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் நிராகரித்துள்ளதாகக் கணக்கெடுப்புகளும், வாக்கெடுப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

ஹஸாரே எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற காரணத்தை பிரதமர் தெரிவிக்கவில்லை. ஒரு போலியான மசோதாவை எதிர்த்து தான் இந்த போராட்டம். அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவுக்கு பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை பிரதமர் தெரிவிக்கவில்லை என்றார்.