Saturday, August 20, 2011

நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம் கலைஞர்.



திமுக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் சென்னை மயிலாப்பூரில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற பதிலுக்காகக் காத்திருந்தேன். கடைசியில் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதில் கிடைத்துள்ளது.

மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: இதற்கும் நானே வழி காட்டியிருக்கிறேன். என் ஆயுள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

அதேசமயம் 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள். இவ்வாறு கலைஞர் பேசினார்.

No comments: