Tuesday, April 12, 2011

திமுக அரசுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்.


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தாமல் பார்த்துக் கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா உறுதி அளித்த மறுநாளே தமிழக மீனவர் ஒருவர் மரணமடைந்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்கும்போது, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும். என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

இம்மாதம் 2-ம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விக்டர்ஸ், மாரிமுத்து, அந்தோணிராஜ் மற்றும் ஜான்பால் ஆகிய நான்கு மீனவர்கள் ஊர் திரும்பாத சூழ்நிலையில், அண்மையில் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும், மற்ற இரு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்ற செய்தியையும் கேட்டு நான் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளேன்.

இந்தச் செயல் இலங்கை கடற்படையினரின் சதிச் செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, வழக்கம் போல கடிதம் எழுதி காலத்தைக் கடத்தாமல், கரை திரும்பாத மீதமுள்ள இரு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித ஆபத்துமின்றி அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசையும், தி.மு.க. அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.

இறந்துபோன தமிழக மீனவர்கள் விக்டர்ஸ் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


ஜப்பான் அணு கதிர்வீச்சு அபாய கட்டத்தை எட்டியது; பொதுமக்கள் பீதி.

ஜப்பான் அணு கதிர்வீச்சு   அபாய கட்டத்தை எட்டியது;   பொதுமக்கள் பீதி

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டது. இதில் சுமார் 28 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் அணு உலைகள் வெடித்தன. அதில் இருந்து அணு கதிர்வீச்சு வெளியேறியது. இதை தொடர்ந்து அப்பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே, வெடித்து சிதறிய அணு உலைகளை குளிர்வித்து கதிர்வீச்சு பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கதிர் வீச்சு பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.வெடித்த அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கதிர் வீச்சு அபாய அளவை எட்டி உள்ளது. அணு உலைகளில் பாதிப்பு ஏற்படும்போது கதிர் வீச்சின் அளவு 7 என்ற அளவு வரை இருக்கலாம் என உலக நாடுகள் வரையறுத்துள்ளன. தற்போது, வெடித்து சிதறி பிரச்சினைக்குள்ளான ஜப்பானின், புகுஷிமா அணு உலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவு நேற்று 7 ஆக உயர்ந்தது.

இது அபாயகரமான அளவாக கருதப்படுகிறது. இதனால் புகுஷிமா பகுதியில் வாழும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவை பூட்டியபடி உள்ளேயே தங்கி உள்ளனர்.

கதிர்வீச்சு அபாய கட டத்தை எட்டியுள்ளதால் அங்கிருந்து மக்கள் வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் ஷெர்னோவில் அணு உலையில் விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சில் 29 பேர் பலியானார்கள். அந்த அளவுக்கு புகுஷிமாவில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படவில்லை.

இருந்தாலும் தற்போது அதன் அளவுக்கு புகுஷிமா அணு உலையால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.


அமெரிக்க கோர்ட்டில் 103 வயதில் பணிபுரியும் நீதிபதி.

அமெரிக்க கோர்ட்டில்   103 வயதில் பணிபுரியும் நீதிபதி

அமெரிக்காவில் விசிதா நகரைச் சேர்ந்தவர் வெஸ்லி பிரவுன். 103 வயதான இவர் அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக பணி புரிகிறார். இந்த தள்ளாத வயதிலும் அவர் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரால் நடக்க முடியவில்லை.எனவே சக்கர நாற்காலியில் வருகிறார்.

கடந்த 49 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி தனது பதவி காலத்தில் 4 பேரை “பெடரல்” நீதிபதியாக நியமனம் செய்தார். அவர்களில் இவரும் ஒருவர். தற்போது பணி புரியும் நீதிபதிகளில் மிகவும் மூத்தவர் இவர் தான்.

தற்போதுள்ள 1294 பெடரல் நீதிபதிகளில் இவர் 516-வது நபர். ஏற்கனவே ஓய்வு பெற்ற இவர் தற்போது பாதி சம்பளத்தில் பணி புரிகிறார். அமெரிக்க நீதிபதிகளில் இவர்தான் அதிக நாள் பணிபுரிந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

காரில் இருந்து வெளியாகும் புகையால் மூளை நோய்; ஆய்வில் தகவல்.

காரில் இருந்து வெளியாகும்   புகையால் மூளை நோய்;   ஆய்வில் தகவல்

காரில் இருந்து வெளியாகும் புகை மற்றும் தூசியால் மூளை நோய் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக காற்று நீர், போன்றவற்றில் ஏற்படும் மாசுவினால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

எனவே, மாசு கட்டுப்பாடு அவசியம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் காரில் இருந்து வெளியாகும். புகை கழிவு மற்றும் ரோடுகளில் பறந்து திரியும் தூசி கழிவுகளால் மூளை பாதிக்கப்படுகிறது. அதன் மூலம் ஞாபகமறதி, அல்ஷமீர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்க லைக்கழக விஞ்ஞானி காலெப் பிஞ்ச் தலைமையிலான நிபுணர்கள் எலிகளின் மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

காரில் செல்லும் போது வெளியாகும் புகை மற்றும் காற்றில் பறக்கும் துசியை விட ஆயிரம் மடங்கு மிக நுன்னிய தூசி துகள்கள் சுவாசத்தின் மூலம் எலிகளின் மூளையை தாக்கின.

இது போன்று பல நாள் சம்பவத்துக்கு பின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு நோய் உருவானது. இதே போன்று தான் மனித உடலிலும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ஸ்டெம் செல் மூலம் சிறுநீரகம் தயாரிப்பு; விஞ்ஞானிகள் சாதனை.

ஸ்டெம் செல் மூலம் சிறுநீரகம் தயாரிப்பு; விஞ்ஞானிகள் சாதனை

“ஸ்டெம் செல்” மூலம் சிறுநீரகம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். “ஸ்டெம்செல்”கள் மூலம் உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது அவற்றின் மூலம் மனித சிறுநீரகத்தை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாமி டேவிஸ் தலைமையில் நிபுணர்கள் இந்த ஆய்வை மேற் கொண்டனர்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அது தேவைப்படுவோரின் ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவை சோதனை குழாய் முறையில் சிறுநீரகமாக ஆய்வு கூடத்தில் வளர்க்கப்பட்டது.

குழந்தையின் கருவில் இருக்கும் 1/2 சென்டி மீட்டர் அளவுக்கு வளர்ந்துள்ளது. அவற்றை மனித உடலில் பொருத்தி முழு வளர்ச்சி அடைந்த சிறுநீரகமாக்க முடியம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் சிலருக்கு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம் ஒத்துக் கொள்வதில்லை. மாறாக மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆனால் இந்த முறையில் தயாரித்து பொருத்தப்படும் சிறுநீரகம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டெம் செல்கள் மூலம் தயாரிக்கப்பட்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தி.மு.க.வை வீழ்த்திவிட- அழித்துவிட முடியாது : கருணாநிதி பேச்சு.


தி.மு.க.வை வீழ்த்திவிட- அழித்துவிட முடியாது: திருவாரூர் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டம் நேற்று மாலை திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

நான் திருவாரூர் மேடையில் எத்தனையோ கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன். எத்தனையோ விழாக்கள், வைபவங்கள் இவற்றிலெல்லாம் கலந்து கொண்டு உங்களோடு அளவளாவியிருக்கிறேன்.

ஆனால் இன்றைக்கு மணவறைக்கு வந்த புதுப்பெண்ணைப் போல நான் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். காரணம், மற்றவர்களுக்கெல்லாம் ஆதரவு கேட்டு, பல்லாயிரக்கணக்கானவர்களை ஒன்றல்ல இரண்டல்ல பல தேர்தல்களில் சந்தித்திருக்கிறேன். என்னை 1957ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அவர்கள் நீ தேர்தலிலே போட்டியிடு என்று ஆணையிட்ட போது, நாகப்பட்டினம் தொகுதியில் நான் நிற்கிறேன் என்று சொன்னபோது, அண்ணா சொன்னார்- "வேண்டாம். நீ அங்கே நிற்பதாக இருந்தால் உன்னுடைய சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் தான் நிற்க வேண்டும்.

அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டு விட்ட காரணத்தால் குளித்தலையிலே நில்'' என்றார். அன்று முதல் இன்று வரை அண்ணா பேச்சுக்கு என்றைக்குமே எதிர் பேச்சு பேசாத நான் சரி என்று ஒத்துக் கொண்டு குளித்தலையிலே போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதற்கு பிறகு தொடர்ந்து 11 முறை நான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னை அனுப்பி வைத்தால் 12-வது முறையாக சட்டமன்றத்திற்கு என்னை நீங்கள் அனுப்பி வைத்ததாக பொருள்.

12 என்பது தஞ்சை மாவட்டத்திலே மிக முக்கியமான எண். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தான் மாமாங்கம் வரும். மாமாங்கத்தை ஞாபகப்படுத்தும்போது உங்களுக்கு என்ன நினைவு வரும் என்று நான் ஞாபகப்படுத்த விரும்பவில்லை; அதை விட்டு விடுகிறேன். இந்தத் திருவாரூரில் இப்போது நோயுற்று நலிவுற்று மேடையிலே என்னை வா என்று அழைத்தாரே தென்னன் அவரோடு விளையாடிய தெருதான் இந்த கீழவீதி. அவர் மாத்திரமல்ல என்னோடு படித்த பார்ப்பன மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கீழ வீதியிலே என்னோடு சேர்ந்து விளையாடியிருக்கிறார்கள். அவர்களிலே பலர் இன்றைக்கு இல்லை.

ஆனால், அவர்களுடைய நினைவு என்றைக்கும் எனக்கு இருக்கும். அரும்பு பிராயத்திலே பள்ளிக்கூடத்திலேயே அய்யாவினுடைய கொள்கை, அண்ணாவினுடைய இலட்சியம் இவைகள் மனதில் பதிந்து - நான் சுயமரியாதைக்காரனாக மாணவப் பருவத்திலேயே என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். இப்பொழுதும் சுயமரியாதைக்காரன்தான். சுயமரியாதைக்காரன் என்ற காரணத்தால்தான் நான் ஆத்திகர்களுக்கோ பக்தர்களுக்கோ யாருக்கும் எந்த நேரத்திலும் எந்தத் தீங்கும் இழைப்பவன் அல்ல; கொள்கை வேறு, ஆக்கம் வேறு. திருவாரூர் தேர் எத்தனை ஆண்டு காலமாகிவிட்டது அது செய்யப்பட்டு. அது ஓடாமல் கிடந்ததும் உண்டு.

ஏறத்தாழ 30 ஆண்டு காலம் அந்தத் தேர் ஓடாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி நான் சட்டமன்றத்திலே முதலமைச்சராக வீற்றிருந்தபோது- இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறேன்- தம்பி காளிமுத்து எதிர்க்கட்சியிலே இருந்தார். எம்.ஜி.ஆர். கட்சியிலே அப்போது அவர் இருந்தார். அவர் என்னைப் பார்த்து, "தேரோட்டம் இன்றைக்கு திருவாரூரில் நடக்கிறதா?'' என்று கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா'' என்று பாடினீர்களே இன்றைக்கு அந்தத் தேரோட்டத்தை அனுமதிக்கிறீர்களா என்று கேட்டார். நான் சொன்னேன், இப்பொழுது தேர் ஓடுகிறது. நாங்கள் அனுமதிக்கிறோம்.

நானே அதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறேன் என்றேன். உடனே கேட்டார் அவர், அது எப்படி? அன்றைக்கு மாணவர் பருவத்திலே "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா'' என்று கேட்டீர்களே இப்பொழுது என்ன ஆயிற்று. நான் அந்தப் பாட்டை எழுதும் பொழுது ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவித்தார்கள் அந்த ஆட்சியில், அவர்களெல்லாம் இன்றைக்கு நல்ல முறையில் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். ஆகவேதான், "ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா'' என்று கேட்டது. அந்த மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த காலத்திலே- இன்றைக்கு அந்த மக்கள் ஏங்கித் தவிக்கவில்லை.

ஆகவே தேர் ஓடுவதில் தவறில்லை. அது மதவாதிகளுடைய கொள்கை- ஆத்திகர்களுடைய கொள்கை- அதை நான் தடுக்கமாட்டேன், எதிர்க்கமாட்டேன் என்று குறிப்பிட்டேன். சொல்வதற்கு காரணம், ஆட்சி வேறு; ஆட்சியாளர்களுடைய கொள்கை வேறு. எனவே இப்பொழுதும் ஆரூரிலே வாழ்கின்ற ஆன்மீக மக்களுடைய மனதை நான் புண்படுத்தவில்லை. எதிர்காலத்திலேயும் புண்படுத்த மாட்டேன் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அவர்களாகவே புரிந்து கொண்டு தெளிவடைய வேண்டுமேயல்லாமல், பகுத்தறிவு என்பது பாலைப் போல, தேனைப் போல ஊட்டப்படுகின்ற ஒன்றல்ல. பகுத்தறிவு என்பது பரப்பப்படுவது.

அதை ஏற்றுக் கொள்கிற மனிதர்கள் பகுத்தறிவுவாதிகளாக மாறுகிறார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னாலே நாங்கள் அதை திணிக்கின்ற வகையிலே என்றைக்கும் நாங்கள் ஈடுபட்டதில்லை. அதனால் சிலவற்றுக்கு சட்டம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபடுகின்ற கோயில்களில் எல்லோரும் சென்று அந்த கோயிலிலே வழிபடவேண்டும்.

அதிலே சாதி வேறுபாடு கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அந்தக் கருத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே இன்றைக்கும் நாங்கள் அமல்படுத்தி வருகின்றோம். கடைப்பிடித்து வருகின்றோம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கடவுளுக்கு எதிரி அல்ல; ஒருவேளை வேண்டுமானால் கடவுள் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். நாங்கள் கடவுளுக்கு எதிரி அல்ல.

என்னைக் கேட்டார்கள், நீங்கள் கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்ட போது நான் சொன்னேன்; கடவுளை நான் ஏற்றுக் கொள்வது முக்கியமல்ல, பிரச்சினையே அது அல்ல. கடவுள் என்னை கொள்கிற அளவுக்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் பிரச்சினை. எனவே ஆத்திக- நாத்திக விவகாரம் அந்த அளவோடு என்னைப் பொருத்தவரையிலே முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒன்று.

ஆனால் ஒரு மனிதனுடைய சுயமரியாதையை- ஒரு மனிதனுடைய தன்மானத்தை குலைக்கின்ற எந்த ஒன்றையும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏற்றுக் கொள்ளாது. அந்தக் கழகத்திலே ஒரு சிப்பாயாக இருக்கின்ற நானும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். பெரியாரின் அரவணைப்பு நான் தொண்டனாக இருந்தபோது அந்தக் காலத்திலே கான்பகதூர் கலிபுல்லா சாஹிப் அவர்கள் தலைமையில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநாடு திருவாரூரிலே விஜயபுரத்தில் நடந்தபோது அந்த மாநாட்டினுடைய தொண்டர் படையிலே நான் ஒருவனாக இருந்தேன்.

முஸ்லிம் லீக் மாநாட்டினுடைய தொண்டர் படையில் நான் ஒருவனாக இருந்தேன். அதை அடுத்துதான் தந்தை பெரியாருடைய பழக்கமும், நட்பும் பரிவும், அவருடைய பாராட்டுதலும் அவருடைய அரவணைப்பும், அதே போல அறிஞர் அண்ணாவுடைய அன்பும், பாசமும், பற்றும் என்னை பிணைத்துக் கொண்ட காரணத்தால் நான் இந்த இயக்கத்தின் முன்னணி பிள்ளைகளில் ஒருவனாக ஆனேன்.

மத்திய அரசிலே சேது சமுத்திரத்திட்டம் என்ற மகா உன்னதமான திட்டத்தை நிறைவேற்ற அண்ணா காலத்தில் இருந்து தொடங்கி அதற்கான ஆயத்தப் பணிகள் எல்லாம் நடைபெறும்பொழுது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியே ஆக வேண்டும், அது இராமருக்கு ஆகாது என்று சொன்னார்கள். இராமர் எங்கும் வந்து சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தை உலகத்தின் உச்சத்தில் உட்கார வைக்கும் என்று பொறாமை கொண்டவர்கள்தான் வேண்டுமென்றே இராமர் மீது பழியை சுமத்தி, இராமர் இந்த பாலத்தை வேண்டாம் என்கிறார் என்றெல்லாம் சொல்லி அந்த பாலத்தினுடைய பணி இன்றைக்கு நின்று போய்விட்டது.

நான் உங்களுக்குச் சொல்லுவேன், இந்தத் தேர்தலிலே நானும் தி.மு.கழகமும் வெற்றி பெற்றால் நாங்கள் மத்தியிலே இருக்கிற அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, சேது சமுத்திரத் திட்டம் மறுபடியும் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்போம். அது தம்பி பாலுவினுடைய அரிய முயற்சியினால் அந்தத் திட்டம் நிறைவேறி எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையிலே எல்லா நாடுகளுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையிலே அது விளங்கும் என்ற அந்த நிலையையும் நான் உங்களுக்கு இந்த கூட்டத்திலே உறுதியாக அறிவிக்க விரும்புகின்றேன்.

இவைகளையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ எங்களைப் போன்ற சில பேருக்கு பதவி கிடைக்கும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட கழகம் அல்ல. எங்களைப் போன்ற சிலர் செத்து மடிந்தாலும் கவலையில்லை, எங்களுடைய மொழிக்கு தகுதி வேண்டும், எங்களுடைய மொழிக்கு பெருமை வேண்டும், எங்களுடைய தமிழுக்கு இப்போதுள்ள சீரும் சிறப்பும் மேலும் பெருகிட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்தக் கழகத்தை வீழ்த்த வேண்டுமென்று திராவிட இயக்கத்தின் உணர்வையே பொசுக்கி விட வேண்டும், அழித்து விட வேண்டு மென்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாலும் கூட, முடியாது. ஏனென்றால் "திராவிட'' என்ற அந்தச் சொல்லை நானோ அல்லது என்னை உருவாக்கிய தந்தை பெரியாரோ உருவாக்கியதல்ல. "திராவிட'' என்ற சொல் நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்ற சொல். "நீராரும் கடலுடுத்த'' என்ற தமிழ்த் தாய் வாழ்த்திலே கூட, "திராவிட'' என்ற சொல் வருகிறது. "திராவிட'' என்ற சொல் தேசிய கீதத்தில் "திராவிட உத்கல வங்க'' என்று வருகிறது. எனவே எவராலும் "திராவிட'' என்ற சொல்லை அகற்ற முடியாது.

அதனால் தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்தக் கழகங்களுக்குப் பிறகு, புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்களோ- நாளைக்கு ஒரு கட்சி- காலையிலே ஒரு கட்சி- மாலையிலே ஒரு கட்சி- அப்படி கட்சி ஆரம்பிக்கின்ற யாரும் திராவிட என்ற இந்த அடைமொழியை சேர்த்துத் தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

அவர்கள் "திராவிடத்தை'' ஒத்துக் கொள்கிறார்களோ இல்லையோ- "திராவிடத்தை'' அவர்கள் பாராட்டுகிறார்களோ இல்லையோ- "திராவிட'' என்ற சொல்லை மதிக்கிறார்களோ இல்லையோ- நம்மைத் தாக்குவதற்காக "திராவிட'' என்ற சொல்லை இழித்தும் பழித்தும் பேசியவர்கள் எல்லாம் கூட இன்றையதினம் அந்தச் சொல்லை தாங்கள் ஆரம்பிக்கின்ற கட்சிகளுக்குப் பயன்படுத்துகின்ற நிலையை நாட்டில் பார்க்கிறோம்.

அதை நான் குறை சொல்லவில்லை. அந்த நிலை வளரட்டும். எப்படியோ எங்கள் "திராவிடம்'' வளர்ந்தால் சரி. திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தக் கழகத்தை வீழ்த்திவிட - அழித்து விட யாராவது முனைவார்களேயானால், முனைபவர்கள் தான் அழிவார்களே தவிர, இந்த இயக்கம் அழியாது என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு இதை அறிவுரையாக, எச்சரிக்கையாகக் கூட அல்ல, அறிவுரையாகச் சொல்ல விரும்புகிறேன். இதிலும் ஒரு போட்டி என்றால்- வெறுப்பின் அடிப்படையிலே அந்தப் போட்டி இருக்கக் கூடாது.

இலக்கியப் போட்டி, காவியப் போட்டி, கலைப் போட்டி, கவிதைப் போட்டி- அதைப் போலத் தான் அரசியலில் இருக்கிற போட்டிகளும் அமைய வேண்டும். இன்றைக்குக் கூட இந்தத் தேர்தலிலே நானும் எதிர்க்கட்சி நண்பரும் போட்டியிடுகிறோம் என்றால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டல்ல.

அப்படி இருக்கக் கூடாது. இந்தத் தொகுதிக்கு யார் நன்மைகளைச் செய்வது, யார் இந்தத் தொகுதியை கவனிப்பது, யார் இந்தத் தொகுதியிலே இருக்கின்ற மக்களுக்கு அனுசரணையாக இருப்பது என்கின்ற அந்தப் போட்டியே தவிர வேறல்ல. நாளைக்கு நானே கூட ஒரு வேளை மீண்டும் முதல்-அமைச்சராக உங்களுடைய அன்பால், அருளால் ஆகிவிட்டால் வேறொரு தொகுதியிலே நின்று வெற்றிப் பெற்று வருகின்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை- அவர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆயிற்றே என்று நான் வெறுக்க மாட்டேன்.

அவர்களையும் அனுசரித்து, அவர்களுக்கும் நிலைமைகளை எடுத்து விளக்கி, திருவாரூர் பகுதியிலே, இந்தத் தொகுதியிலே இன்னும் என்னென்ன வேலைகள் நடைபெற வேண்டும், இதுவரையில் நடைபெற்றுள்ள சாதனைகள் போதுமானவைகளா? பாதாளச் சாக்கடை ஆரம்பிக்கப்பட்ட முக்கால் பகுதியிலே நிற்கிறது, இன்னும் கால் பகுதி நிறைவேற்றப்பட வேண்டும், அதற்கு ஒத்துழைப்பை நல்கக் கோருவேன்.

என்னோடு சண்டை போட்டவர்கள் - சண்டை போட்டவர்கள் அல்ல, என்னோடு போட்டி போட்டவர்களைக் கூப்பிடாமல் தான் இதைச் செய்வேன் என்று நான் எந்தக் காலத்திலும் அவ்வளவு ஜனநாயகம் தெரியாதவனாக இருக்க மாட்டேன். எல்லோரையும் அனுசரித்து, எதிர்க்கட்சியையும் மக்கள் கட்சி தான், அவர்களும் மக்களுக்காகப் பாடுபடுகிறவர்கள்தான் என்றெண்ணி அவர்களையும் சேர்த்துக்கொண்டு தான் திருவாரூர் தொகுதிக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வேனே அல்லாமல், நீ தான் என்னோடு போட்டி போட்டு தோற்று விட்டாயே, நீ இந்தப்பக்கம் வராதே என்று சொல்லுகின்ற அளவிற்கு அற்பப்புத்தி படைத்தவனாக நான் இருக்க மாட்டேன்.

எல்லோரையும் அணைத்துக் கொண்டு இந்தத் தொகுதியின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவேன் என்ற உறுதியை உங்களுக்கெல்லாம் அளிக்கின்றேன். நான் மிகச் சாதாரணமானவன். இன்றைக்கு முதல்- அமைச்சராக இருந்தாலும் கூட நான் மிகச் சாதாரணமானவன். சட்ட மன்றத்திலே ஒரு நாள், நான் முதல்- அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, எதிர்த்தரப்பிலிருந்து ஒரு நண்பர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நண்பர் இது "மூன்றாம் தர சர்க்கார்'' என்று சொன்னார்.

உடனே என்னுடைய தோழர்கள் எல்லாம்- சட்டமன்றத்திலே எம்.எல்.ஏ.க்களாக இருந்த தோழர்கள் எல்லாம் எழுந்து என்ன சொன்னாய்? என்ன சொன்னாய் என்று ஆத்திரத்திலே குதித்தார்கள். நான் அவர்களையெல்லாம் கையமர்த்தி விட்டு சொன்னேன்- யாரும் பதட்டப்படக் கூடாது, அவர் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லை. உண்மையைத் தான் சொன்னார். நாம் ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மையைத் தான் சொன்னார். இது மூன்றாம் தர சர்க்கார் என்றார்.

பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று சொல்லப்படுகிற இந்த நான்கு சாதிகளில் அவர் மூன்றாம் தர சர்க்கார் என்று சொல்லும் போது, அதை விட இது நான்காம் தர சர்க்கார் அதாவது சூத்திர சர்க்கார் என்பதைக் குறிப்பிடுவதற்காக சொல்லியிருக்கிறார். அதற்காக நாம் பெருமையடைய வேண்டுமே தவிர அவரைப் பற்றித் தவறாக யாரும் கருதக் கூடாது என்றேன். இதைச் சொல்லி இது பத்திரிகையிலே வந்த அடுத்த நிமிடம் திருச்சியிலிருந்து இளவல் வீரமணி அவர்கள் மூலமாக தந்தை பெரியார் இதைக் கேள்விப்பட்டு, எனக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக் கூறினார்.

உனக்கு எவ்வளவு துணிவு, சட்டசபையிலேயே இது சூத்திர ஆட்சி என்று ஒப்புக் கொண்டு பேசியிருக்கிறாயே, எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படிச் சொல்லியிருப்பாய் என்றார். எல்லாம் உங்கள் கருணையால் வந்தது அய்யா என்று நான் சொன்னேன். என்னை காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவி, தியாகத் திருவிளக்கு, சோனியாகாந்தி அவர்கள் என்னைப் பாராட்டி- தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலமாக இருக்கிறது என்று சொல்கின்ற அளவிற்கு என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தருகின்ற ஆற்றலால்- நீங்கள் வழங்கியுள்ள சக்தியால் செய்திடுகிறேன். அதைப் போல- நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னைப் பாராட்டியிருக்கிறார் என்று பத்திரிகைகளில் எல்லாம் வந்திருக்கிறது.

இப்படி வட புலத்திலே உள்ள பெரிய மத்திய அமைச்சர்களின் பாராட்டுகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எங்களைத் தொட்டு, முத்தமிட்டு, தவழவிட்டு, எங்களைத் தாலாட்டி, அந்தத் தாலாட்டோடு கலந்துட்டிய தமிழ் உணர்வு தான்- சுயமரியாதை உணர்வு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்பதை எடுத்துக் கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.மாணவர்களுக்கு மொழி உணர்வு அழுத்தமாக இருக்க வேண்டும்; பாரதிராஜா பேச்சு.

மாணவர்களுக்கு மொழி உணர்வு அழுத்தமாக இருக்க வேண்டும்;    பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேச்சு

புதுவை மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு, தேர்வில் ஒவ்வொரு துறையிலும் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த பேராசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசும் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் போல் வேறு எந்த மாநிலத்திலும் கல்லூரிகள் கிடையாது.நாம் படிக்கிற காலத்தை விட எதிர்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.எனது தாயை தெய்வமாக வணங்குகிறேன். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் போல் வேறு எந்த மாநிலத்திலும் கல்லூரிகள் கிடையாது.நாம் படிக்கிற காலத்தை விட எதிர்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.எனது தாயை தெய்வமாக வணங்குகிறேன். உங்கள் முன் சிறந்த சினிமா இயக்குனராக நிற்கிறேன் என்றால் என்னை பள்ளி பருவத்தில் ஊக்குவித்த தமிழாசிரியரையே அந்த பெருமை சேரும்.

பெற்றோரை அடுத்து ஆசிரியர்கள்தான் உங்களின் எதிர்கால நிலையை கணிக்க முடியும். எனவே குறிக்கோளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். படிப்புடன் ஓவியம், எழுத்தாற்றல், கவிதை, உள்ளிட்ட கலைகளையும் வளர்த்துக் கொண்டு ஒன்றில் சரிந்தாலும் மற்றொன்றை இறுக பற்றி கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவர்களுக்கு மொழி, இனத்தின் உணர்வு அழுத்தமாக இருக்க வேண்டும். சமுதாயத்தை தூக்கி நிலை நிறுத்தும் மாணவர்கள்தான் பலம் வாய்ந்த சக்திகள். எதிர்கால சமுதாயம் உங்கள் கையில்தான் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

வைகோவால் பாதிப்பு இல்லை: 218 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; ஜெயலலிதா பேட்டி

வைகோவால் பாதிப்பு இல்லை:   218 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்;    ஜெயலலிதா பேட்டி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 218-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். கடைசி வாக்கு செலுத்தப்பட்டு மிஷின்கள் எல்லாம் சீல் வைத்து பூட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் அயரக்கூடாது. கடைசி நேரத்தில் கூட தி.மு.க.வினர் பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்த ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆகவே கழகத்தினர் கூட்டணி கட்சியினர் குறிப்பாக பூத் ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு முடியும் வரை பூத்களை விட்டு வெளியே வரக்கூடாது. மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

கே:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பற்றி?

ப:- வைகோ வெளியேறியதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கே:- தேர்தல் ஆணையம் பற்றி கருணாநிதி விமர்சிக்கிறாரே?

ப:- அதற்கு தேர்தல் ஆணையம்தான் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே:- வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கருணாநிதிக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

ப:- கருணாநிதி அவர்களுக்கு நான் தெரிவிக்கின்ற செய்தி பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. பணத்தால் பல பொருட்களை வாங்க முடியும். ஆனால் மக்களுடைய நன் மதிப்பையும் நம்பிக்கையையும், அன்பையும் வாங்க முடியாது. இந்த தேர்தல் முடிவுகளால் கருணாநிதி இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்வார்.

கே:- ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ப:- மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வலுவான பிரதமர் ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. பலவீனமான மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும். மத்திய அரசு ஒரு பொம்மை பிரதமரின் தலைமையில் செயல்படுகிறது.
பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி அவருக்கு கவலை இல்லை. எனவே அவர் தூக்கி எறியப்பட வேண்டும். மத்தியில் பலமான பிரதமரின் கீழ், புதிய அரசு அமைய வேண்டும்.

கே:- மத்தியில் 3-வது அணி அமைக்க முயற்சி செய்வீர்களா?

ப:-அதற்கு உரிய நேரம் வரும்போது முடிவு செய்வோம். இப்போதைக்கு தமிழக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறேன். அதன் பிறகு மத்தியில் புதிய அரசு அமைப்பது குறித்து முடிவு செய்வோம். இப்போதைக்கு தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்களது குறிக்கோள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : அப்துல்கலாம்.


மின் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை தெரிவித்தார்.

மேல்மருவத்தூர் அடிகளார் திருமண மண்டபத்தில் மாணவர்கள் கலந்துரையாடல் விழா நடந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும். 54 கோடி இளைஞர்களை கொண்ட ஒரே நாடு நம் இந்தியா. மாணவர்கள் எண்ணத்தில் நல்லொழுக்கம் இருந்தால் குடும்பத்தில் அழகு மிளிரும். இதனால் நாட்டில் சீர்முறையும், உலகத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும் என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அப்துல்கலாம் பதில் அளித்தார்.

விவசாய நிலங்கள் மனைகளாகவும், தொழில் நகரங்களாகவும் மாற்யூறப்படுகிறதே? என்று ஒரு மாணவர் கேட்டார். அதற்கு அப்துல்கலாம் பதில் அளிக்கையில், இந்தியாவில் கிராமங்களில் இடைவெளி குறைந்து 6,500 கிராமங்கள் நகரமாக வளர்ந்துள்ளது. இல்லாமை இல்லாத நிலை இந்தியாவிற்கு வரவேண்டும். 2020 ம் ஆண்டு நமக்கு 40 கோடி டன் உணவு இருப்பு தேவைப்படுகிறது. அதற்காக நாம் உயர் ரக விதைகள் மூலம் உற்பத்தியை பெருக்கி, உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன முறையிலான தானிய கிடங்குகளை பல மடங்கு உயர்த்த வேண்டும்' என்றார்.

மற்றொரு மாணவி, உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா? என கேட்டதற்கு, இந்தியாவிலுள்ள 100 கோடி மக்களின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட வேண்டும்'' என்றார்.

மின்சார தட்டுப்பாடு ஏற்பட காரணமும் அதனை சரிசெய்ய எந்த வகையான நடைமுறையை மேற்கொள்ளலாம் என ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்'' என்று பதில் அளித்தார்.