Tuesday, April 12, 2011

வைகோவால் பாதிப்பு இல்லை: 218 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; ஜெயலலிதா பேட்டி

வைகோவால் பாதிப்பு இல்லை:   218 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்;    ஜெயலலிதா பேட்டி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 218-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். கடைசி வாக்கு செலுத்தப்பட்டு மிஷின்கள் எல்லாம் சீல் வைத்து பூட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் அயரக்கூடாது. கடைசி நேரத்தில் கூட தி.மு.க.வினர் பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்த ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆகவே கழகத்தினர் கூட்டணி கட்சியினர் குறிப்பாக பூத் ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு முடியும் வரை பூத்களை விட்டு வெளியே வரக்கூடாது. மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

கே:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பற்றி?

ப:- வைகோ வெளியேறியதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கே:- தேர்தல் ஆணையம் பற்றி கருணாநிதி விமர்சிக்கிறாரே?

ப:- அதற்கு தேர்தல் ஆணையம்தான் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே:- வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கருணாநிதிக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

ப:- கருணாநிதி அவர்களுக்கு நான் தெரிவிக்கின்ற செய்தி பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. பணத்தால் பல பொருட்களை வாங்க முடியும். ஆனால் மக்களுடைய நன் மதிப்பையும் நம்பிக்கையையும், அன்பையும் வாங்க முடியாது. இந்த தேர்தல் முடிவுகளால் கருணாநிதி இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்வார்.

கே:- ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ப:- மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வலுவான பிரதமர் ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. பலவீனமான மத்திய அரசு தூக்கி எறியப்பட வேண்டும். மத்திய அரசு ஒரு பொம்மை பிரதமரின் தலைமையில் செயல்படுகிறது.
பொதுமக்களின் பிரச்சினைகள் பற்றி அவருக்கு கவலை இல்லை. எனவே அவர் தூக்கி எறியப்பட வேண்டும். மத்தியில் பலமான பிரதமரின் கீழ், புதிய அரசு அமைய வேண்டும்.

கே:- மத்தியில் 3-வது அணி அமைக்க முயற்சி செய்வீர்களா?

ப:-அதற்கு உரிய நேரம் வரும்போது முடிவு செய்வோம். இப்போதைக்கு தமிழக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறேன். அதன் பிறகு மத்தியில் புதிய அரசு அமைப்பது குறித்து முடிவு செய்வோம். இப்போதைக்கு தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்களது குறிக்கோள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


No comments: