Wednesday, June 29, 2011

டீசல், கேஸ் விலையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை ! - பிரணாப்.

பெட்ரோல், டீஸல் விலையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

வாஷிங்டன் நகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், "டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே நாங்கள் கச்சா எண்ணை இறக்குமதி மீதான சுங்க வரியை குறைத்து இருக்கிறோம். இதனால் ஆண்டு ஒன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ.49 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு மேல் தியாகம் செய்ய இயலாது.

மாநில அரசுகள் டீசல், கியாஸ் விலையை குறைக்க வரியை சற்று குறைக்கலாம். இதற்காக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் குறைத்தும் உள்ளன," என்றார்.

திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது - தமிழக அரசு.ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. ஆனால் முந்தைய அரசு தரமற்ற சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதால்தான் அதில் தமிழக அரசு திருத்தம் செய்தது என்று தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி மனோன்மணி உள்ளிட்ட சிலர் சமச்சீர் கல்விக்கு தடை விதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

அதில் தமிழக அரசு கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்விச் சட்டம்-2010 என்ற சட்டத்தை இயற்றிய போது கடந்த ஆட்சியாளர்கள், மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை கருத்தில் கொள்ளவில்லை. கல்விச் சட்டங்களை இயற்றுவதற்கு அதுதான் மூலச்சட்டமாக உள்ளது.

தேசிய பாடத் திட்டங்கள் வடிவமைப்பு-2005-ல் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணையாக சமச்சீர் பாடத்திட்டங்கள் தரமானதாக அமையவில்லை.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அன்று ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கல்விக் குழு தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் சில குறைகளை கல்விக் குழு சுட்டிக்காட்டியது. அந்த குறைகளை முந்தைய அரசு நிவர்த்தி செய்யவில்லை. சமச்சீர் கல்வி பற்றி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புத்தகங்களை தேர்வு செய்யும் உரிமை பள்ளிக்கூடங்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டத்திலேயும் இந்த ஷரத்து இடம்பெற்றுள்ளது. ஆனால் இதை நடைமுறையில் முந்தைய அரசு கடைபிடிக்கவில்லை. எனவே அது அந்த சட்டத்தை மீறுவதுபோல் அமைந்துவிட்டது.

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் அட்டவணையை 15.5.10-க்குள் அங்கீகரிக்க வேண்டும் என்று சமச்சீர் கல்வி வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்படி நடந்துகொள்ளவில்லை. கட்டாய கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகளை வகுக்காமல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 14-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. அதை இரவு-பகலாக பாடுபட்டு நிறைவேற்றி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜுலை 5-ந் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மனுதாரரின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிடும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதாக இருக்காது.

ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி.

ஆனால் சமூகநீதி என்ற பெயரில் தரமற்ற பாடத்திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை. அந்த கல்வியை நாங்கள் நீக்காமல், சமச்சீர் சட்டத்தின் 3-ம் பிரிவை மட்டும்தான் (சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு வகை செய்யும் பிரிவு) திருத்தம் செய்தோம்.

முத்துக்குமரன் கமிட்டி, விஜயகுமார் ஆகியோரின் பரிந்துரைப்படி, சமச்சீர் கல்விக்கான மாநில கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தக் கவுன்சில்தான் கல்வி தரத்துக்கான வழிமுறைகளை தொடர்ந்து வகுத்தளிக்கும். ஆனால் இந்த குழுவை முந்தைய அரசு ஏற்படுத்தவில்லை.

சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு அவசரமாக முடிவு செய்யவில்லை. தீர விசாரித்து, நிதானமாக யோசித்துதான் நடவடிக்கைகளை எடுத்தோம். எனவே இந்த நடவடிக்கைகளால் எந்த பிரிவினருக்கும் அரசியல் சாசனம் தரும் உரிமைகள் பாதிக்கப்படாது.

மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தால், தமிழகத்தில் உள்ள 54,957 பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 35 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.200 கோடி வீணாய்ப் போகும் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு மிகையானது. சட்டங்களை அமல்படுத்தவும் அவற்றில் குறையிருந்தால் அதை திருத்தி அமல்படுத்தவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

தற்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு எப்படிப்பட்ட பாடத்திட்டத்தை வகுத்தளிக்கிறதோ, அதனடிப்படையிலான புத்தகங்களை மாணவர்களுக்கு இந்த அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறோம். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் பரபரப்பு : கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் .

தாம்பரத்தில் பரபரப்பு:  கைக்குழந்தையை கொன்று  பீப்பாயில் அடைத்த பெண்

தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. 2 வருடத்துக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களாகவே ரேவதி மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று இரவு அவர் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 2 பேர் இருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் மாமியார் ராணி எழுந்து பார்த்தபோது ரேவதியின் அருகில் குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார்.

இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் பீப்பாயில் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீர்க்கன் காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

வீடு பூட்டியிருந்தது குழந்தையை காணாமல் அனைவரும் தேடியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. குழந்தை இறந்து கிடந்த பீப்பாய் வெளியில் இருந்ததால் உள்ளே இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் குழந்தையை கொன்று பீப்பாயில் வைத்து விட்டு வீட்டிருந்து சென்று உள் பக்கமாக பூட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ரேவதிக்கு இரவில் நடந்து செல்லும் பழக்கம் இருந்தது தெரிந்தது. அவர் குழந்தையை கொன்று தண்ணீர் பீப்பாயில் அடைத்து வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். எதற்காக இப்படி செய்தார் என்று கூற தெரியவில்லை.

குழந்தை இறந்தது பற்றி அவர் கவலையடைந்தவர் போல் இல்லை. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கடந்த ஆண்டு ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென இறந்து விட்டது.

உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக அப்போது கூறப்பட்டது. அந்த குழந்தையையும் ரேவதி கொலை செய்திருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே கொன்றது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்.

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.

நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும், இதனை கொடுமையாக கருதி, நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஒலிம்பிக்போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி சொத்து : உலக பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய பெண் முதலிடம்.

ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி சொத்து: உலக பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய பெண் முதலிடம்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மெக்சிகோவைச் சேர்ந்த மேக்னெட் முதலிடம் வகித்து வந்தார். இவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் 2-வது இடம் வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி.

தற்போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜினா ரினிகார்ட் என்ற 57 வயது பெண் தொழில் அதிபர் முதலிடத்தை பிடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி.இவர் நிலக்கரி மற்றும் இரும்பு தொழில் செய்கிறார். இந்த தொழில் நிறுவனங்களை இவர் சொந்தமாகவே நடத்துகிறார். பங்குதாரர்கள் யாரும் இல்லை.

எனவே, ஆஸ்திரேலியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா.உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், கோசி ஆறு சீரமைப்பு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் கடனுதவி அளிக்க உள்ளது உலக வங்கி.

அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை.கடையநல்லூர், அழிந்து வரும் குருவி இனங்களை காக்க கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெட்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது.

உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் 141 பறவை இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகிறது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தற்போது ஏரளமான செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் தான் நாம் அன்றாடம் காணும் குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் சர்வ சாதாரணமாக பறந்து தொந்தரவு கொடுக்கும் குருவிகளை தற்போது பார்ப்பதே அரிதாக உள்ளது.

குருவி இனத்தை பார்க்காமலேயே வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர்கள் குருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர். கடையநல்லூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் சந்திக்கும் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் குருவி வளர்ப்புக்கு அட்டை பெட்டி வழங்கி வீடுகளில் வைத்து குருவிகளை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்.

அட்டைப் பெட்டிகளில் குருவி சென்று வர ஓட்டை அமைத்து உள்ளே உமி மற்றும் வைக்கோல் வைத்து அடைக்கப்பட்டுள்ள இந்த கூடு தற்போது கடையநல்லூர் பகுதியில் பிரபலமாகி வருகிறது. எனவே, வருங்கால சந்நதியினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குருவி உள்பட அழிந்து வரும் அனைத்து பறவைகளையும் பாதுகாப்பது மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.