Friday, May 27, 2011

ஒரே மார்க் எடுத்த இரட்டை சகோதரிகள்.

புதுவை கதிர்காமம் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் வீனா-மீனா.

இரட்டையர்களான இவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுபோல் தலா 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்றது குறித்து அந்த மாணவிகள்,

’’நாங்கள் 2 பேரும் ஒரே மாதிரியாக இருப்போம். 2 பேருமே நன்றாக படிப்போம். நாங்கள் பள்ளியில் எப்போதும் ஒன்றுபோல் மதிப்பெண்கள் பெறுவோம். 10-ம் வகுப்பு தேர்விலும் சாதனை படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு படித்தோம். தேர்வில் 2 பேரும் ஒன்றுபோல் மதிப்பெண்கள் பெற்றுள்ளோம்.

நாங்கள் சாதனை படைக்க எங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் அதிக ஊக்கம் அளித்தனர். எனவே, நாங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று கூறினார்கள்.

ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : போயஸ்கார்டனில் பரபரப்பு.


நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்.

இதற்காக அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து இன்று (27.5.2011) மாலை போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை விமான நிலையம் செல்கிறார் என்று ஒரு தகவல் வந்துள்ளதால் மீடியாக்காரர்கள் போயஸ்கார்டனில் குவிகிறார்கள்.

ராமச்சந்திராவில் இருந்தபடியே விமான நிலையம் செல்கிறார் என்றுஒரு தகவல் வந்துள்ளதால் அங்கேயும் மீடியாக்காரர்கள் குவிகிறார்கள்.

ரஜினிகாந்த் மீடியாவில் முகம் காட்டுவாரா? இல்லை முகம் காட்டாமலேயே விமானத்தில் ஏறிவிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.

ரஜினிகாந்த் மேல்சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் செல்கிறார்


நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.

ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள்.

அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

இதனால் ரஜினி முகத்தை பார்த்துவிட காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தயாநிதியை தோலுரித்த விக்கிலீக்ஸ்.


கடந்த 2008 நவம்பர் மாதம் ஈழத்தில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்றபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவில்லையெனில் திமுகவின் எம்.பிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள் என எச்சரித்தார். உடனே கனிமொழி தனது ராஜினாமா கடிதத்தை கொண்டும் போய் கருணாநிதியிடம் தந்தார். மற்ற எம்.பி, மத்திய அமைச்சர்களும் தந்தனர். உடனே பிரணாப்முகர்ஜி சென்னை வந்தார் போர் நின்றுவிட்டது என அறிவித்தார்கள்.

இதுப்பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரிகள் தயாநிதிமாறனை சந்தித்து பேசியுள்ளார்கள். அவர்களிடம், கூட்டணியில் இருந்து கருணாநிதி விலக மாட்டார். இது அவர் நடத்தும் நாடகம் என கூறியுள்ளார்.

இதேபோல் 2008 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிகாரிகளிடம், பதவிக்கு வந்ததும் எல்லோரும் மாறிவிடுகிறார்கள். திமுகவினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். திமுக தந்த இலவச கலர் டிவியை மக்கள் மறந்துவிட்டனர். இதனால் 2009 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சரிபாதியிடங்களில் வென்றால் பெரிய விஷயம் என்றுள்ளார். இதுயெல்லாம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைக்கு கேபிள் வழியாக சென்றுள்ளது. அதைத்தான் விக்கிலீக்ஸ் லீக் செய்துள்ளது. விக்கிலீக்ஸ்சுடன் ஓப்பந்தம் போட்டுள்ள இந்தியாவின் பிரபல ஆங்கில செய்திதாளான தி இந்து அதை முதல் பக்கத்தில் வெளியிட்டு தயாநிதிமாறனின் துரோக தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆனால் தயாநிதிமாறன், என் புகழை கெடுக்க, தங்களது சர்க்குலேஷனை உயர்த்திக்கொள்ள என்மீது வீண் பழி சுமத்துகிறது தி இந்து. உடனே இதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விக்கிலீக்ஸ் தரும் தகவல்களை மட்டுமே அவர்கள் பெயர் போட்டு வெளியிட முடியும். வெளியிடும் தகவல்களை அந்நிறுவனம் கண்காணிக்கிறது. போட்டி நிறுவனங்களும் அதே கண்கொத்தி பாம்பாக பார்க்கிறார்கள். அதோடு தயாநிதிமாறன் இந்து குடும்பத்தில் தான் பெண் எடுத்துள்ளார். அவர்களே வெளியிடுகிறார்கள் என்றால் நிச்சயம் தகவலை சரிபார்த்தே வெளியிட்டுயிருப்பார்கள். ஆக இது உண்மை செய்தி தான் என நம்பலாம்.


இனி விவகாரத்துக்கு வருவோம் :

தயாநிதிமாறன் யோக்கிய சிகாமணி போல் திமுககாரர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிடுகிறார்கள் என சொல்லியுள்ளார். திமுகவின் டெல்லி முகமான முரசொலிமாறன் இறந்ததும் வியாபாரியான அவரது மகனை எம்.பியாக்கி அமைச்சராக்கி, டெல்லியில் திமுகவின் முகமாக்கினார். (இன்றுவரை அவர் அரசியல்வாதியாகவில்லை. பெரு முதலாளியாகவே உள்ளார்). திமுக தலைமையின் பிச்சையால் அமைச்சரானதும், அதிகாரத்தின் மூலம், அம்பானி சகோதரர்களுக்கு டெலிகாம் அனுமதி தர 1000 கோடி வாங்கினார். அம்பானிகளுக்காக டாடாவை மிரட்டினார். அமெரிக்காவுக்கு அரசு செலவில் சென்று ஹாலிவுட் படங்களை தமிழாக்கம் செய்து சன் நிறுவனம் மூலம் வெளியிடும் ஒப்பந்தங்கள் செய்தார், எப்.எம் ரேடியோ ஸ்டேஷன்களை நாட்டின் பல மாநகரங்களில் திறந்தார். தனது சன் நிறுவனத்திற்க்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி இயந்திரங்களை இறக்குமதி செய்தார், உச்சமாக தமிழகத்தில் தாத்தாவை கீழே இறக்கிவிட்டு தான் அந்த நாற்காலியில் அமர காங்கிரஸ்சோடு சேர்ந்து காய் நகர்த்தியவர் தான் தயாநிதிமாறன்.

அப்படிப்பட்டவர் சொல்கிறார் பதவிக்கு வந்ததும் திமுககாரர்கள் மாறிவிடுகிறார்கள் என்று. திமுக நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்ததில்லை என்பது வரலாறு. திமுக தலைமை போட்ட பதவி பிச்சையில் அரியணையில் இன்றும் அமர்ந்துக்கொண்டு காங்கிரஸ்சோடு மறைமுகமாக கை கோர்த்துக்கொண்டு அவரது குடும்பத்தை வளர்த்த இயக்கத்தை அழிக்க துடிக்கும் மாறன் சொல்கிறார் இத்தகவல் பொய் என்று.

இந்த தயாநிதிமாறன்க்காக 2009ல் இரண்டாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, திமுகவின் முகமாக விளங்கிய டி.ஆர்.பாலுவை அமைச்சராக்க கூடாது. ஆனால் தயாநிதிமாறனை நிச்சயம் அமைச்சராக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையே முரண்டு பிடித்தது. அதனாலே அவருக்கு ஐவுளித்துறை கிடைத்தது. சீட் கூட அவருக்கு காங்கிரஸ் கட்சியே தர வேண்டும் என சொன்னதாக கூட தகவல்கள் உண்டு.

மதுரை தினகரன் நிறுவனம் தீ வைத்து எரிக்கப்பட்ட அன்று உடைத்து வெளியே அனுப்பப்பட்ட மாறன் சகோதரர்களை மீண்டும் இணைத்துக்கொண்டு கொஞ்சி குலாவியது தவறு என்பது இப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு புரிந்திருக்கும். இன்னும் புரியவில்லை எனில் காலம் நிச்சயம் இதை விட அதிகமாக கருணாநிதிக்கு புரியவைக்கும். திமுக தொண்டர்களுக்கும் புரியவைக்கும்.

நன்றி : anbanavargal.blogspot.com

பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் : தீபிகா படுகோன் மீது போலீசில் புகார் !

விஜய் மல்லையா மகனுடன் கிரிக்கெட் மைதானத்தில் லிப் டு லிப் கிஸ் அடித்து பரபரப்பேற்படுத்திய நடிகை தீபிகா படுகேன் மீது சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளது இந்து மக்கள் கட்சி.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் திருவல்லிக்கேணி போலீசில் நடிகை தீபிகா படுகோனே மீது இன்று புகார் அளித்தார்.

அதில், "நடிகை தீபிகா படுகோனே பொது இடங்களில் கலாச்சாரத்துக்கு எதிராகவும் அறுவறுக்கத்தக்க ஆபாச செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியை காண வந்திருந்த தீபிகா படுகோனே அணியின் தலைவர் சித்தார்த் மல்லையாவை உதட்டோடு உதடு முத்தமிட்டார்.

மைதானத்தில் இக்காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியானார்கள். இது இந்திய கலாச்சாரத்துக்கு விரோதமாகவும் பெண்மையை சீரழிக்கும் வகையிலும் இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியை காண தீபிகா படுகோனே வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திலும் தீபிகா படுகோனே ஆபாசமாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளும் தீபிகாபடுகோனேவை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக் குள் அனுமதிக்கக்கூடாது," என்று கூறியுள்ளார்.

பழனி முருகன் கோயிலுக்குப் படையெடுக்கும் கேரள பக்தர்கள்.


பழனி மலை முருகனை தரிசிக்கும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம்.

கொங்கு மண்டல பக்தர்கள்

இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தைப்பூசத்தினையொட்டி நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவது மிகவும் பிரசித்தம்.

முன்பெல்லாம் பொதுவாக பழனி என்றாலே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வருவார்கள். வீட்டிற்கு வீடு பழனிச்சாமி என்ற பெயரில் ஒருவராவது இருப்பார்கள். ‘பழனிச்சாமின்னு கூப்பிட்டா பத்து பேராச்சும் திரும்பி பார்ப்பாங்க...’ என கொங்கு மண்டலத்தில் நகைச்சுவையான சொலவடை கூட உண்டு. அந்த அளவிற்கு கொங்குமண்டலத்தில் பழனி மலை முருகனுக்கு பக்தர்கள் அதிகம்.

படையெடுக்கும் கேரள பக்தர்கள்

ஆனால் கடந்த சில வருடங்களாக பழனி மலை முருகனைத் தரிசிக்க வரும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க பலரும் கேரளா செல்வதைப் போல கேரள மக்கள் பலரும் பழனிக்கு சாரை சாரையாக வருகிறார்கள். இதனால் சீசன் எனப்படும் விசேஷ காலங்கள், கோடை விடுமுறை காலங்கள் தவிர்த்து வருடம் முழுவதும் பழனி மலையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

நம்பிக்கை

கேரள பக்தர்கள் இங்கு வருவதற்கு பல்வேறு நம்பிக்கைகளைக் காரணம் சொல்கிறார்கள். மலையில் தண்டாயுதபாணி கேரள மாநிலத்தை பார்த்தபடி அருள் பாலிக்கிறார். அதனால் தான் கேரள மாநிலம் எல்லா இயற்கை வளங்களும் பெற்று செழிப்பாக இருக்கிறது என்கிறது அவற்றுள் முக்கியமான நம்பிக்கை. ஓணம் பண்டிகை போன்ற கேரளத்தின் முக்கிய பண்டிகை தினங்களில் பழனியில் கேரள பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இங்கு வரும் பக்தர்களுக்காக பழனியில் ஏராளமான கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. சீசன் தவிர பிற மாதங்களில் ஈயாடிக்கொண்டிருந்த நிலை மாறி வருடம் முழுவதும் நல்ல வியாபாரம் நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றால் பழனிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து.

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பத்தினா சகோதரர்கள் சார்பில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 8, 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் ஆஸ்துமா நோய்க்கு மருந்து வழங்கப்படுகிறது.

இதுபற்றி பத்தினா சகோதரர்கள் கூறும்போது, "ஆஸ்துமா நோய்க்கு நாங்கள் ஆண்டுதோறும் மீன் மருந்தை அளித்து வருகிறோம். இம்மருந்தால் ஏராளமான நோயாளிகள் குணமாகி உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்படும். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கப்படும்'' என்றனர்.

8 ஆயிரம் பேரை கொன்று குவித்த போஸ்னியா முன்னாள் அதிபர் : செர்பியாவில் கைது.

8 ஆயிரம் பேரை கொன்று குவித்த போஸ்னியா முன்னாள் அதிபர்: செர்பியாவில் கைது

ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் ராட்கோ மிலாடிக். இவர் இரண்டாம் உலக போருக்கு பிறகு போஸ்னியாவில் பொதுமக்கள் மீது பல குற்றங்களை இழைத்து கொடுமைப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் கடந்த 1992 முதல் 1995-ம் ஆண்டு வரை சுமார் 8 ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தார். எனவே, இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.

இதை தொடர்ந்து இவர் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 16 ஆண்டுகளாக பல நாடுகளில் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் அவர் செர்பியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அவரை கைது செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை செர்பியா அதிபர் போரிஸ் தாடிக் நேற்று அறிவித்தார். செர்பியாவின் பாதுகாப்பு உளவு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர் செர்பியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.


உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தனித்துப் போட்டி.

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. தனித்துப் போட்டி

தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. தி.மு.க. 23 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியது. 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. அந்த 5 தொகுதிகளிலும் பா.ஜ.க. அதிக ஓட்டுக்களை பிரித்ததால்தான் காங்கிரஸ் ஜெயித்தது பிறகு தெரிய வந்தது.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் காங்கிரசார் நடந்து கொண்ட விதம்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மிகவும் கறாராக 63 இடங்களை வாங்கிய காங்கிரசார், பல தொகுதிகளை விடாப்பிடியாக அடம் பிடித்து வாங்கினார்கள். அவர்களது இந்த அணுகுமுறை மக்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

காங்கிரஸ் மீது ஏற்கனவே மக்களுக்கு இருந்த கோபம்தான் கூட்டணி தோல்விக்கு காரணமாகி விட்டதாக தி.மு.க. நிர்வாகிகள் கருதுகிறார்கள். இதுதவிர ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரசார் நடந்து கொள்ளும் விதமும் தி.மு.க.வினருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

எனவே காங்கிரசுடனான உறவு வேண்டாம் என்று பெரும்பாலான தி.மு.க.வினர் கூறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நான் எழுதிய பாடலை எடுத்து விட்டு சமச்சீர் கல்விப் புத்தகத்தை வெளியிடலாமே? - கருணாநிதி.


நான் தொகுத்து எழுதிய பாடலை முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.

முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?

சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?

அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரு பார்வை.


பத்தாம் வகுப்பு தேர்வு: 85.3 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 85.30 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 85.3 சதவீதம்பேர் தேர்ச்சியுற்றனர். பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வழக்கம் போல மாணவியரை விடக் குறைவாகும்.

மாணவியர் தேர்ச்சி 88.10%,


மாணவர்கள் தேர்ச்சி 82.30%


ஐந்து பேர் முதலிடம்.


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. 500க்கு 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:.


முதலிடம் பிடித்தவர்கள்


1.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.

2.நித்யா,
எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

3.ரம்யா,
ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி
செட்டிப்பாளையம்.


4.சங்கீதா,
முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.

5.ஹரிணி,
அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை.


11 பேர் 2வது இடம்


500க்கு 495 மதிப்பெண்களைப் பெற்று 11பேர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர் அவர்கள் விவரம் வருமாறு:


1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்.

2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி.

4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.

5.டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

6.எம்.பொன்மணி,எஸ்.ஆர்.பகத்பெண்கள்மேல்நிலைப்பள்ளி,ராஜபாளைம்

7.என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை.

8.ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள் பேட்டை, புதுச்சேரி.

9.வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை.

10.எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

11.ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை


24 பேருக்கு 3வது இடம்


500க்கு 494 மதிப்பெண்களைப் பெற்று 24பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்அவர்கள் விவரம் வருமாறு:


1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.

2.கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.

3.ஜே.உமா(494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.

4.லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

5.குங்குமால்யா (494), எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.

6.பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.

7.எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.

8.ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்

9.எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.

10.என்.லோகேஷ்குமார் (494),ஜி.வி.மேல்நிலைப் பள்ளி,மாசிலாபாளையம் சங்ககிரி.

11.கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12.கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.

13.என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.

14.எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

15.எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

16.எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

17.ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

18.சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19.ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.

20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.

21.இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

22.எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.

23.ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை


தமிழில் நூற்றுக்கு நூறு சாதனை.

உத்தமபாளையம் இசட்கேஎம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.

இந்த முறை கணிதத்தில்தான் அதிக அளவிலானோர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

கணிதத்தில் 12,532 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

அறிவியலில் 3677 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.


சமூக அறிவியலில் 756 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

ஐஎஸ்ஐயிடம் 50 முறை பயிற்சி பெற்றேன் - ஹெட்லி தகவல்.


பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனக்கு 50 முறை பயிற்சி கொடுத்ததாக தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோவில் வைத்து கைதானவன் பாகிஸ்தானிய அமெரிக்கரான ஹெட்லி. இவன் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியத் தொடர்புடையவன். இவன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்காக, மும்பைக்கு வந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை முன்கூட்டியே வேவு பார்த்து தாக்குதலைத் திட்டமிட பேருதவி புரிந்துள்ளான்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும்தான் திட்டமிட்டதாகவும், லஷ்கர் இ தொய்பாவுக்காக இவை முழு ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கியதாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோ கோர்ட்டில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறான் ஹெட்லி. அவன் வெளியிட்டு வரும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் எந்த அளவுக்கு செயல்பட்டன, என்னென்ன சதிச் செயல்களைச் செய்தன என்பதை அம்பலப்படுத்தி வருகிறான் ஹெட்லி.

சிகாகோ கோர்ட்டில் நேற்று அவனிடம் அரசுத் தரப்பு அட்டர்னி சார்லஸ் ஸ்விப்ட் விசாரணை நடத்தினார். அப்போது ஹெட்லி கூறியதாவது:

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த இடங்களை எப்படிக் கண்காணிப்பது, எப்படி உளவு பார்ப்பது என்பது தொடர்பாக எனக்கு ஐஎஸ்ஐதான் முழு பயிற்சியையும் அளித்தது. கிட்டத்தட்ட 50 முறை இந்தப் பயிற்சிவகுப்பில் நான் கலந்து கொண்டேன்.

எனக்காகவே சிறப்பு பயிற்சிகளைக் கொடுத்தது ஐஎஸ்ஐ. ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு பயிற்சிகளைக் கொடுத்தார். லாகூர் தெருக்களில் நடந்தபடியும், அங்குள்ள விமான நிலையத்திற்கு அருகே உள்ள 2 மாடி வீடு ஒன்றில் வைத்தும் என இந்த பயிற்சி தரப்பட்டது.

நான் 2006ம் ஆண்டு மேஜர் இக்பாலை சந்தித்தபோது, ராணுவமும், லஷ்கர் இ தொய்பாவும் எனக்கு முன்பு கொடுத்த பயிற்சிகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார். போதிய பயிற்சி தரப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மிகவும் பூர்வாங்க பயிற்சியையே நீ பெற்றுள்ளாய் என்று கூறிய அவர், எனக்கு நிறைய ஆலோசனைகளையும், குறிப்புகளையும் வழங்கினார். எப்படி வேவு பார்ப்பது என்பது தொடர்பாக நிறைய தகவல்களை அவர் எனக்குக் கொடுத்தார் என்றான் ஹெட்லி.

அமெரிக்க உளவாளியாகவும் இருந்தேன்

இந்த விசாரணையின்போது தான் அமெரிக்க அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உளவாளியாகவும் பணியாற்றியதாக ஒப்புக் கொண்டான் ஹெட்லி.

சிகாகோவில் ஹெட்லி கைதானபோது உடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணா தொடர்பான வழக்கில்தான் தற்போது ஹெட்லி சாட்சியம் அளித்து வருகிறான். ராணாவும், மும்பை தாக்குதல் வழக்கில் ஒரு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாக்குதல் வழக்கில் தான் தொடர்பு கொண்டிருப்பதையு்ம், அந்த குற்றச் செயலில் தனக்கும் பங்கு இருப்பதையும் ஏற்கனவே ஹெட்லி ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு மரண தண்டனை கிடைக்காமல் தப்பிக்க ராணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவும் அவன் முன்வந்து தற்போது சாட்சியம் அளித்து வருகிறான் என்பதும் நினைவு கூறத்தக்கது.

விதிமீறல்களால் தடுமாறி நிற்கிறதா ? சமச்சீர் கல்வி பாடநூல்கள் .

தமிழ்ப்பெரியசாமிகோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் பொது மக்களுக்குத் தீராத சிக்கலாகத் தோன்றுவது இரண்டு. ஒன்று; தனியார் பள்ளிகளின் கட்டணத் தொகை. இரண்டாவது; பாட நூல்கள்.

நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்து, அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்ப்பாட நூல் வழங்குவதைப் புதிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. காரணம், அவற்றில் முன்னாள் முதல்வரின் எழுத்தும் வரலாற்றுக் குறிப்புகளும் இருப்பதுதான்.

பலகோடி ரூபாய் செலவில், வண்ணமயமாக, அளவிலும் பெரியதாய் அச்சிடப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள் இப்போது மறுபரிசீலனைக்கு உட்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கல்வித்துறை அலுவலர்களும் பாடநூல் குழுவினருமே ஆவர்.

பாடத்திட்டத்தின் நோக்கத்தையும் செயல்முறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் கருவி பாடநூல். ஒவ்வொரு பாடத்துக்கும் கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை அமைக்கப்பட்ட பின்னர், அதற்கேற்ப பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன.

பாடநூல்கள் மதம், ஜாதி, இனம், அரசியல் சார்பற்றவையாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலை விளக்கிக் கூறும் வரலாற்றுப் பாட நூல்களைவிட, தமிழ்ப்பாட நூலில் அரசியல் கலந்தது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசுத் தேர்வுக்குரிய பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் தயாரிப்புக் குழுவில், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் சிறப்புத் தலைவரும், மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதிலும், சட்டமேலவைத் தேர்தலுக்குத் தமிழாசிரியர் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த கல்வியாண்டில் வெளிவந்துள்ள முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களைத் தயாரிக்கத் தேவைப்பட்ட ஆசிரியர்களை, கல்வித்துறையினர் மாநில அளவில் திறனறி தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதே கல்வித்துறை இவ்வாண்டு இத்தகைய பணிக்காக ஓர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை - ஓய்வு பெற்றவர்களை எந்தத் தகுதி அடிப்படையில் நியமித்தது என்பது தெரியவில்லை.

சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்ப்பாட நூல்களில் முதல் பக்கத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் "நீராருங் கடலுடுத்த' எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. அடுத்த பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரின் செம்மொழி வாழ்த்துப் பாடல் அச்சிடப்பட்டுள்ளது. ஒருமொழிக்கு இருவகைப்பட்ட வாழ்த்துப் பாடல்கள் தேவைதானா? செம்மொழி வாழ்த்து என்பது ஒரு நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்பட்ட கருத்தமைவுப் பாடல் மட்டுமே. அந்த விழாவோடு அதன் செயல்பாடுகள் முடிந்துவிட்டன. தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடல் இந்திய நாட்டின் அரசியலிலோ, கல்வித்துறையிலோ இடம்பெற்றிருக்கவில்லை. அதுபோன்ற ஒரு பாடலைத் தமிழ்நாட்டில் பாடநூல் குழுவினர் பாடநூலில் திணித்திருப்பது விதிகளை மீறிய செயலாகும்.

இதைக் கல்வித்துறை அலுவலர்கள் ஒப்புக்கொண்டு, நூல்களை அச்சிட்டு விற்பனை செய்யும் நிறுவனமான தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் கொடுத்து அச்சிடச்செய்து வெளிக்கொண்டு வந்துள்ளது எந்த வகையில் நியாயமானதாகும்.

இதில் அரசுத்துறைக்குரிய விதிமீறல்கள் எதுவும் நடந்திருக்கிறதா என்று எவ்வித மேலாய்வும் செய்யாமல் பாடநூல் குழுவினர் கருத்தை, கல்வி அலுவலர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டது முறைதானா? அத்துடன் இருவகையான வாழ்த்துப் பாடல்கள் இடம் பெற்றிருப்பதானது, எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் வேறு, செம்மொழி வேறு என்று பொருள்கொள்ளவும் இடமளிக்கிறது.

பாடநூல் பால்போல் இருக்க வேண்டும். அது மருந்தாகவும் உணவாகவும் இருப்பது அவசியம். அதில் சமநிலை பேணாது தங்கள் விருப்பம்போல் அரசியலைச் சேர்ப்பது சமூகநீதியைத் தகர்ப்பதாகும்.

வளரும் தலைமுறையின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஊன்றுகோலாக நிற்கும் பாடநூலைத் தமது விருப்பத்தின் விளம்பரக் கருவியாகப் பயன்படுத்துவது ஆசிரியர்க்கு அழகாகாது.

தமிழ்ப்பாட நூல்களில் புதிய அரசின் கருத்துக்கு ஒவ்வாத பகுதிகள் இடம்பெற்றிருப்பது ஒருபுறமிருக்க, பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் செய்யுள், இலக்கணம், மொழிப் பயிற்சி, ஆங்கிலச் சொற்களுக்கான மொழி பெயர்ப்பு ஆகியவற்றில் ஏராளமான பிழைகள் இடம் பெற்றுள்ளன.

உரைநடைப் பாடப்பகுதிகள் பத்தாம் வகுப்புக்கேற்ற தரத்தில் அமையவில்லை. களையப்பட வேண்டியதும் திருத்தப்பட வேண்டியதுமான பகுதிகள் எல்லா வகுப்புகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் சென்ற ஆண்டு வெளிவந்த ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளே இன்னும் திருத்தப்படவில்லை.

இந்நிலையில் புதிய நூல்களில் குவிந்துள்ள பிழைகளைக் களைவது எப்போது பிழையற்ற பாடநூல்களைத் தயாரிக்கப் புலமை மட்டும் போதாது பொறுப்புணர்வும் வேண்டும்.