Sunday, July 10, 2011

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல் !



தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி, இன்னமும் சில நாட்கள் நீடித்திருக்கக்கூடும். அப்படி நீடிக்காமல், அவசர அவசரமாக கடந்த வியாழக் கிழமையே ‘மங்களம்’ பாடவேண்டி வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, கனிமொழியில் வக்கீல் எடுத்து வைத்த வாதம் என்று இப்போது தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருகின்றது. இதில் கைதான யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிரான முழுமையான குற்றப் பத்திரிகையும் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் Preliminary அறிக்கை ஒன்றை வைத்தே சி.பி.ஐ. விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த விஷயத்தை கனிமொழியின் வக்கீல், அடிக்கடி நீதிபதிக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் சி.பி.ஐ. முழுமையான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ.யை நீதிபதி சைனி பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டார். “குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் முழுமையான குற்றப் பத்திரிகையை நீங்கள் தாக்கல் செய்யவில்லை?” என்று கேட்டார் அவர்.

அதற்கு சி.பி.ஐ.யின் வக்கீல், “வேறு சில முக்கிய சம்பவங்களையும் நாம் குற்றப் பத்திரிகையில் இணைக்க வேண்டியுள்ளது. அதற்கான சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனால்தான் தாமதம்” என்றார்.

இந்தப் பதிலுடன் நீதிபதி திருப்தியடையவில்லை. சி.பி.ஐ.யின் வக்கீலைப் போட்டுக் குடைந்து தள்ளிவிட்டார்.

“நீங்கள் குற்றப் பத்திரிகையைத் தாமதிப்பதைப் பார்த்தால் வேறு உள்நோக்கம் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும், தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உங்களது விருப்பமா? அதற்காகத் தாமதம் செய்யப்படுகின்றதா?”

“இல்லை. ஆவணங்கள் முழுமையடையவில்லை. புதிய தகவல்கள் சேர்க்கப்படவுள்ளன”

இந்த இடத்தில் குறுக்கிட்ட கனிமொழியின் வக்கீல், “எனது கட்சிக்காரருக்கு (கனிமொழி) அவரைக் கைது செய்வதற்கு என்ன காரணம் என்று ஆதாரம் காட்டும் சப்போர்ட்டிங் டாக்குமென்ட் ஏதும் வழங்கப்படவில்லை என்று ஞாபகப் படுத்துகிறேன்” என்று, கத்தி செருகினார்.

சி.பி.ஐ. வக்கீலின் பக்கமாகத் திரும்பிய நீதிபதி, “அந்த ஆவணங்கள் எங்கே?” என்றார். “ கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் அல்லவா அவர்களை கைது செய்தீர்கள்? அந்த ஆவணங்கள் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த ஆவணங்களை ஏன் இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை?”

“அந்த ஆவணங்களை ரிலீஸ் செய்தால், அதிலுள்ள விபரங்களை வைத்து சிலர் உஷாராகி விடுவார்கள் என்ற ப்ரீ-காஷனில்தான் அவை வழங்கப்படவில்லை”

“அந்த ‘சிலர்’ கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 14 பேரில் இருக்கிறார்களா?”

இதற்கு பதில் சொல்ல சில விநாடிகள் எடுத்துக்கொண்ட சி.பி.ஐ. வக்கீல், “இல்லை. வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

“அப்படியானால், அவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?” என்று கேட்டார் நீதிபதி சைனி.

இதற்கு சி.பி.ஐ. வக்கீலிடமிருந்து பதிலில்லை.

அதையடுத்து நீதிபதியிடமிருந்து உஷ்ணமான வார்த்தைகள் வந்து விழுந்தன. “இது ஒரு விதிமுறைகளுக்கு உட்பட்ட சட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவேண்டிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அல்லது அந்த ஆவணங்கள் ரெடியாகும் வரை அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. அதற்கு மேலும் நீங்கள் தாமதம் செய்தால், கோர்ட் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!” என்றார்.

இதைக் கேட்ட சி.பி.ஐ. தரப்பு, ஆடிப்போனது. நிலைமை சிக்கலாகுவதைப் புரிந்துகொண்டு மறுநாளே புதிய ப்ரீலிமினரி டிராஃப்ட் ஒன்றைத் தாக்கல் செய்தது.

இப்படி, மறு நாள் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், ‘வெளியே இருக்கும்’ நபர் ஒருவரின் பெயரும் சேர்க்கப் பட்டிருந்தது.

அந்தப் பெயர்-

‘மத்திய அமைச்சர்’ தயாநிதி மாறன்!

சி.பி.ஐ.யின் இந்தக் குற்றப் பத்திரிகையில் தயாநிதி மாறனின் பெயர் இணைக்கப்பட்ட பின்னர்தான், தொடர்ந்தும் அவரை அமைச்சர் பதவியில் வைத்திருக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. தயாநிதியின் பதவி பறிபோனது!

கனிமொழியில் வக்கீல் பிரஷர் கொடுக்காமல் இருந்திருந்தால், தயாநிதியின் பெயரை அவசர கதியில் உள்ளே கொண்டுவந்திருக்காது சி.பி.ஐ.! இன்னமும் சில நாட்களுக்காவது தயாநிதியின் அமைச்சர் பதவி நிலைத்திருக்கலாம்.

சரி. கனிமொழியின் வக்கீல் இந்த மூவை ஏன் செய்தார்? பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காகிப் போனதா? அல்லது.. அல்லது.. வேண்டுமென்றே தயாநிதியின் பதவிக்கு சங்கு ஊதினாரா?

viruvirupu.com

தில்ஷனை சுட்டதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது. உண்மைக் குற்றவாளி யார் ?



சென்னை இராணுவக் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனை இராணுவ அதிகாரிகள் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தில்ஷனின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. லெப்டினன்ட் கர்னல் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தான் யாரையும் சுட்டுக் கொல்ல வில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன் பிறகும் சில அதிகாரி களிடம் விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நேற்று மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் பிரவீண், சஞ்சய் ஆகியோர் இறந்த தில்ஷானை அங்கு காரில் வந்த ஒரு நபரே துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் ராணுவ குடியிருப்பில் உள்ளவர்கள்தான் தில்ஷானை சுட்டதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசாரின் விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையே தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிறுவனை சுட்டுக் கொன்றவரை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராமராஜை கைது செய்தது பற்றி சி.பி.சி.ஐ.டி. - ஏ.டி.ஜி.பி. சேகர் கூறியதாவது,

சிறுவன் தில்ஷனை கொலை செய்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார்; மேலும் 3 மாதங்கள் ராணுவ குடியிருப்பில் தங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

ராணுவ அதிகாரி ராம்ராஜ் ராணுவ குடியிருப்பு பால்கனியில் இருந்து சிறுவன் தில்ஷனை சுட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்; பின்னர் சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் வைக்க பயன்படுத்திய பை ஆகியவற்றை கூவத்தில் வீசி உள்ளார்.

ராம்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் 2008ம் ஆண்டுடன் காலாவதியாகி உள்ளது; உரிமத்தை புதுப்பிப்பதற்காக அவர் மனு தாக்கல் செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கர்னல் ராமராஜ் அளித்த வாக்குமூலம்:

என்னுடைய சொந்த ஊர் மதுரை. நான் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது மகனும் மருமகளும் கடற்படையில் கேப்டனாக உள்ளனர். 22 ரைபிள் துப்பாக்கியை வைத்துள்ளேன்.

சனி, ஞாயிற்றுகிழமைகளில் இந்திரா நகர் பகுதியில் இருந்து சிறுவர்கள் வந்து விளையாடுவார்கள். பாதாம் கொட்டை பறிப்பார்கள். அவர்கள் போடும் சத்தம் எங்களுக்கு இடையூறாக இருந்தது. பகலில் தூங்க முடியவில்லை. மேலும் மரத்தில் இருந்து வீட்டை வேடிக்கை பார்ப்பார்கள். எனக்கு கோபமும் சந்தேகமும் ஏற்பட்டது.

அந்த வெறுப்பில்தான் தில்சனை சுட்டுக் கொன்றேன். சிறுவர்கள் என்னைப் பார்க்கவில்லை. இது எனக்கு சாதகமாகி விட்டது. இரவில் என்னுடைய காரில் சென்று புது நேப்பியர் பாலத்தின் மீது இருந்து துப்பாக்கியை கூவத்தில் வீசி விட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் நேற்று இரவு பைபர் படகில் சென்று அவர் சொன்ன இடத்தில் துப்பாக்கியை தேடினர். செங்குத்தாக விழுந்ததால் உடனடியாக கிடைத்தது. துப்பாக்கி கிடைத்தவுடன், கர்னல் அங்கேயே தலையில் அடித்துக் கொண்டு அழுததாக கூறப்படுகிறது.

முன்னதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான சிறுவர்கள், லெப்டினெட் கர்னல் அஜித்சிங் என்னும் பஞ்சாபியரே, தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி என்று அடையாளம் காட்டினர்.

அவர் சம்பவ நேரத்தில் தான் அங்கு இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் செல்போன் டவர் ரிப்போட்படி அவர் அங்கிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறி, மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் இந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு, அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

உண்மைக் குற்றவாளி யார்?

இனி ஆண்டுக்கு 4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால், கேஸ் விலை ரூ.800 !!



ஆண்டுக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டருக்கு மேல் வாங்குவோர், ஒவ்வொரு கூடுதல் சிலிண்டருக்கும் இனி ரூ.800 விலை தர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.393.50 எனவும் மற்ற மாநிலங்களில் தூரத்தைப் பொறுத்து சராசரியாக ரூ.400 எனவும் விற்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை 3 வாரங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளலாம்.

கிராமங்களில் கூட கேஸ் சிலிண்டர்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

சிலிண்டர் ரூ.800

மத்திய அரசு சமீபத்தில் கேஸ் சிலிண்டர் விலை உள்பட எரிபொருள்களின் விலையை உயர்த்தியது. ஆனாலும் இந்த எரி பொருட்களுக்கு மானியமாக மிகப்பெரிய தொகையை வழங்கி வருகிறது. 2009-10-ம் ஆண்டில் கியாஸ் சிலிண்டருக்கு மட்டும் மத்திய அரசு மானியமாக ரூ.12,000 கோடி வழங்கியுள்ளது. இது இந்த ஆண்டு மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த மானியத் தொகையை ஏழைகள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனவே இந்த மானியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வருடத்திற்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் (அதாவது சராசரி ரூ.400-க்கு) வழங்கப்படும். அதற்கு மேல் அந்த வருடத்தில் வாங்கும் கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.800 ஆக இருக்கும். அதாவது மானியம் ஏதுமின்றி அன்றைய வெளிமார்க்கெட் விலையில் அந்த சிலிண்டர்கள் விற்கப்படும்.

ஏழைகளுக்கு உதவித்தொகை

வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் இதே முறை தான் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்களும் வருடத்திற்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலைக்கு வாங்க முடியும். அதற்கு மேல் ரூ.800 கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆனால் அவர்கள் கேஸ் இணைப்பு பெறுவதற்கு மட்டும் மத்திய அரசு ரூ.1400 உதவித் தொகையாக வழங்கும்.

வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு 4 சிலிண்டர் போதுமானது என்று பெட்ரோலிய இலாகா கருத்து தெரிவித்துள்ளது. காரணம் இவர்கள் ரேஷன் மூலம் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மேலும் மண்எண்ணெய், விறகு, சாணத்தில் இருந்து தயாராகும் வறட்டி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எதிர்ப்பு இருப்பதால் இத்திட்டம் அமலுக்கு வர சற்று காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேசிய திட்ட கமிஷன் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

லஞ்சமா? 9840983832 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.


லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர். சென்னை வேப்பேரி பகுதியில் திருமண ஊர்வலத்தை மறித்து லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர் பற்றி தினத்தந்தி படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியை படித்து பார்த்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நடுரோட்டில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட லஞ்ச சப்- இன்ஸ்பெக்டர் தர்மராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

அதோடு இதுபோல் லஞ்ச வேட்டை நடத்தும் போலீசார் பற்றி தகவல் தெரிவிக்க 9840983832 என்ற செல்போன் நம்பரையும் வெளியிட்டு, அந்த நம்பரில் பேசி லஞ்சம் தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமும் புகார் கொடுக்கலாம் என்றும், அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கமிஷனர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த செய்தியை தினத்தந்தியில் படித்து பார்த்த பொது மக்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு பாராட்டு மழை பொழிந்து தகவல்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன் மூலம் வரும் தகவல்களை பதிவு செய்ய 4 பெண் போலீசார் ஷிப்டு முறையில் பணியில் உள்ளனர். அவர்களால் தமிழகம் முழுவதும் இருந்து இது தொடர்பாக, பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களை பதிவு செய்ய முடியாமல் திணறும் நிலை உள்ளது. அவர்கள் பாத்ரூம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

அந்த அளவுக்கு மக்களிடம் இருந்து, இடைவிடாமல் தொடர்ச்சியாக பாராட்டு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்று தெரிவித்தார். பாராட்டு தெரிவிக்கும் பொது மக்கள் அனைவரும், இது போல் லஞ்ச போலீசார் பற்றி செல்போன் மூலம் புகார் தெரிவிக்கும் திட்டத்தை, சென்னையைப் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.ராமானுஜத்திற்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

பொதுமக்கள் அனுப்பி உள்ள இந்த தகவல்கள் டி.ஜி.பி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. டி.ஜி.பி.ராமானுஜம் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகி சித்ரா ரெக்கார்டிங் தியேட்டரில் கதறி அழுதார்..



பூவே பூச்சூட வா படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா...‘ என்று சின்னவர் முதல் பெரியவர் வரை அனை வரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பிறப்பால் மலையாளி.

இருப்பினும் தமிழ் மொழியில் பாடி அசத்தினார். ஏராளமான ரசிகர்களை குயில் குரலால் கட்டிப்போட்டிருந்த அவர் இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

லட்சக்கணக்கான ரசிகர்களை தனது பாடல்கள் மூலம் லயிக்க வைத்த சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியாமல் பாடுவதையே நிறுத்தினார்.

சில மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார்.

`இஷம் + ஸ்நேகம் = அம்மா‘ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண் டார்.

இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல்... பின் கேட்கவா வேண்டும்... தனது பாசத்தை அந்த பாடலில் பிழிந்து கொடுத்தார்.

சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடலை பாடும்போது ரெக்கார்டிங் தியேட்டரில் பீறிட்டு வந்த அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்... இந்நிகழ்வு ஸ்டுடியோவில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகை ஏஞ்சலினா ஜூலி.

அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியல்: போர்ப்ஸ் பத்திரிகை

பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2010 மே முதல் 2011 மே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

ஏஞ்சலினா ஜூலி நடித்த சால்ட் மற்றும் தி டூரிஸ்ட் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இவை உலக அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படங்களுக்கு ஊதியமாக தலா 138 கோடி ரூபாய் அவர் பெற்றுள்ளார்.தற்போது ஏஞ்சலினாவின் ஒரு படத்திற்கான சம்பளம் 140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சாரா ஜெஸிக்கா பார்க்கர் 138 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்த படியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் 130 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.