Sunday, July 10, 2011

தில்ஷனை சுட்டதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது. உண்மைக் குற்றவாளி யார் ?



சென்னை இராணுவக் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனை இராணுவ அதிகாரிகள் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தில்ஷனின் உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிய வந்தது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. லெப்டினன்ட் கர்னல் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தான் யாரையும் சுட்டுக் கொல்ல வில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன் பிறகும் சில அதிகாரி களிடம் விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தில்ஷனைக் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நேற்று மதுரைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் தான் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் பிரவீண், சஞ்சய் ஆகியோர் இறந்த தில்ஷானை அங்கு காரில் வந்த ஒரு நபரே துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் ராணுவ குடியிருப்பில் உள்ளவர்கள்தான் தில்ஷானை சுட்டதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசாரின் விசாரணையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையே தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிறுவனை சுட்டுக் கொன்றவரை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராமராஜை கைது செய்தது பற்றி சி.பி.சி.ஐ.டி. - ஏ.டி.ஜி.பி. சேகர் கூறியதாவது,

சிறுவன் தில்ஷனை கொலை செய்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார்; மேலும் 3 மாதங்கள் ராணுவ குடியிருப்பில் தங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

ராணுவ அதிகாரி ராம்ராஜ் ராணுவ குடியிருப்பு பால்கனியில் இருந்து சிறுவன் தில்ஷனை சுட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்; பின்னர் சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் வைக்க பயன்படுத்திய பை ஆகியவற்றை கூவத்தில் வீசி உள்ளார்.

ராம்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியின் உரிமம் 2008ம் ஆண்டுடன் காலாவதியாகி உள்ளது; உரிமத்தை புதுப்பிப்பதற்காக அவர் மனு தாக்கல் செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கர்னல் ராமராஜ் அளித்த வாக்குமூலம்:

என்னுடைய சொந்த ஊர் மதுரை. நான் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனது மகனும் மருமகளும் கடற்படையில் கேப்டனாக உள்ளனர். 22 ரைபிள் துப்பாக்கியை வைத்துள்ளேன்.

சனி, ஞாயிற்றுகிழமைகளில் இந்திரா நகர் பகுதியில் இருந்து சிறுவர்கள் வந்து விளையாடுவார்கள். பாதாம் கொட்டை பறிப்பார்கள். அவர்கள் போடும் சத்தம் எங்களுக்கு இடையூறாக இருந்தது. பகலில் தூங்க முடியவில்லை. மேலும் மரத்தில் இருந்து வீட்டை வேடிக்கை பார்ப்பார்கள். எனக்கு கோபமும் சந்தேகமும் ஏற்பட்டது.

அந்த வெறுப்பில்தான் தில்சனை சுட்டுக் கொன்றேன். சிறுவர்கள் என்னைப் பார்க்கவில்லை. இது எனக்கு சாதகமாகி விட்டது. இரவில் என்னுடைய காரில் சென்று புது நேப்பியர் பாலத்தின் மீது இருந்து துப்பாக்கியை கூவத்தில் வீசி விட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் நேற்று இரவு பைபர் படகில் சென்று அவர் சொன்ன இடத்தில் துப்பாக்கியை தேடினர். செங்குத்தாக விழுந்ததால் உடனடியாக கிடைத்தது. துப்பாக்கி கிடைத்தவுடன், கர்னல் அங்கேயே தலையில் அடித்துக் கொண்டு அழுததாக கூறப்படுகிறது.

முன்னதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான சிறுவர்கள், லெப்டினெட் கர்னல் அஜித்சிங் என்னும் பஞ்சாபியரே, தில்ஷனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி என்று அடையாளம் காட்டினர்.

அவர் சம்பவ நேரத்தில் தான் அங்கு இல்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் செல்போன் டவர் ரிப்போட்படி அவர் அங்கிருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறி, மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் இந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு, அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

உண்மைக் குற்றவாளி யார்?

No comments: