Sunday, June 12, 2011

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...


நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் 4 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு வசதியாக பாளை ஐகிரவுண்டில் மாணவர்களுக்கு 'இளவரசர் மாளிகை' என்ற பெயரிலும் மாணவிகளுக்கு 'இளவரசிகள் மாளிகை' என்ற பெயரிலும் தனித்தனியாக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியிலுள்ள மாணவ, மாணவிகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விடுதி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 23ல் விடுதி விழா நடந்தது. விழா முடிந்ததும் ஒவ்வொவரும் வீடுகளுக்கும் விடுதிக்கும் திரும்பினர். விழா மகிழ்ச்சியில் சில மாணவர்கள் குடித்துவிட்டு மாணவிகள் விடுதிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த 3 மாணவிகளை உடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் பின்னர் மாணவர்களின் மிரட்டலுக்குப் பணிந்தனர். இதன்பிறகு மாணவர்கள் அந்த மாணவிகளை நிர்வாணமாக நடனமாட கூறி வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி அவர்களும் நடனமாடினர். இதை தங்களது செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். தொடர்ந்து விடுதிக்குள் வந்த சில மாணவிகளிடமும் மாணவர்கள் அத்துமீற முயன்றுள்ளனர்.

இதை பார்த்த மாணவி ஒருவர் துணிச்சலாக பெற்றோருக்கும் பேராசிரியர் களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார். விடுதிக்குப் பேராசிரியர்கள் வருவது தெரிந்ததும் மாணவிகளிடம் அத்துமீறிய மாணவர்கள் அங்கிருந்து நழுவினர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் குழு அமைக்கப் பட்டு மாணவிகளிடமும் அத்துமீறிய மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை குழு நடவடிக்கையில் இரண்டு மாதம் காலதாமதம் ஏற்பட்டதால் பா.ஜ.க சார்பில் கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடந்தது. பின்னரே ஏப்ரல் 23ந்தேதி நடந்த சம்பவத்திற்கு ஜுன் மாதம் 10ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கல்லூரி நிர்வாகம் பிரச்சனையை அப்படியே மறைக்க எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. இதனால் கல்லூரி வளாகத்திற்குள் கசிந்த விவகாரம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜனும், காவல்துறை அதிகாரிகளும் இச்சம்பவத்தில் மாணவிகள் ராக்கிங் செய்யப்பட்டனரா? என விசாரிக்க உத்தரவிட்டனர். இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரன் மற்றும் விசாரணை குழுவினரிடம் நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் நேரில் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டார். அப்போது நடந்த சம்பவங்களையும் இதுவரை மாணவ, மாணவிகளிடம் நடத்தப் பட்ட விசாரணை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக mbbs மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பாலவிக்னேஷ், சுந்தரவேல், கமலேஷ்குமார், மற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவரும் ஆக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரனிடம் கேட்ட போது, "மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். முதற்கட்டமாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், "இச்சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டது. அத்துமீறி நடந்த மாணவர்களைக் காப்பாற்ற சிலர் முயற்சித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் முழுவிபரத்தையும் கூறியும் மாணவர்கள் மீது எதிர்காலம் நலன்கருதி நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. இவர்களைத் தண்டிக்காமல் விட்டு விட்டால் இதே தவறு மீண்டும் தொடரும். எனவே மற்றவர்களுக்குப் பாடமாக அமைய சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

6 comments:

Radha N said...

This punishment is not enough, they should terminated from the college.

அன்புடன் நான் said...

இவனுங்கள ஒட்ட நறுக்கனும்.

Anonymous said...

கடும் நடவடிக்கை தேவை

Anonymous said...

இந்த தண்டனைப் போதாது.. இந்திய மருத்துவ கவுன்சிலில் நிரந்தர தடைக் கொண்டுவந்து இனிமேல் இவர்கள் மருத்துவர்கள் ஆகவே முடியாத அளவுக்கு தடை வர வேண்டும் .. ஏனெனில் இவர்கள் மருத்துவர்கள் ஆனால் இவர்களிடம் சிகிச்சைப் பெறவருவோரையும் இப்படித் தான் நடத்துவார்கள் .. மற்றுமொரு டாக்டர் பிரகாசாக ஆகிவிடுவார்கள் ... இதுக் குறித்து நாம் எதாவது செய்தே ஆகவேண்டும் .

BoobalaArun said...

வெறும் சஸ்பெண்டு என்றால் அந்த கல்லூரி முதல்வரின் மனைவியை கூட என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமே என்று அந்த மாணவர்கள் நினைத்தால் , அப்போது கல்லூரி நிர்வாகம் என்ன செய்யும்???

இந்த மாதிரியான நாய்களை பலபேர் பார்க்க நடுரோட்டில் ஒரு நாள் முழுதும் கட்டிவைத்து மீடியாக்கள் அந்த பெண்களின் பெயரை சொல்லாமல் "இவர்கள் ராகிக்ங் செய்தவர்கள்" என அவமான படுத்தணும்.

இவனுங்க மருத்துவம் படித்து எதற்கு??

இவர்களிடம் ஒரு பெண் தலைவலி என்று வந்தால் வயிற்று வலி வர வைத்து விடுவார்கள் என்பதை அறிந்தும் அவர்களின் எதிர்காலம் என சப்பை கட்டு கட்டுவது தண்டிக்க தக்கது.

இன்று இவர்களின் எதிர்காலம் என்று கூறும் அறிவாளிகள் நாளை இவர்களால் கொடூரங்கள் அரங்கேறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

அழகிய நாட்கள் said...

மாமேதை ஷேக்ஸ்பியரின் நினைவாக உலகெங்கும் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களும் கூட புத்தகத்தினின்றும் கற்றுத்தேர்ந்துதான் மருத்துவராக வர வேண்டும். அது காலத்தின் கட்டாயம். அப்படிப்பட்ட ஒரு நாளின் நடந்த நிகழ்வு கண்டிக்கத்தக்கது. தக்க தண்டனை குற்றத்தில் ஈடு பட்டவர் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியது.