Sunday, June 12, 2011

போலீசாரின் ஈகோ - விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் “மர்ம” சாவு.


மதுரை அருகே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அடித்து கொன்று விட்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் கட்டிட காண்டிராக்டர். இவரது மகள் சந்தானகவுரி. சில நாட்களுக்கு முன்பு சந்தானகவுரியை அவரது காதலர் (தாய் வழி உறவினர்) கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க்கண்டேயன் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் இவரது புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்தி நிலுவையில் விட்டுவிட்டனர். இதனிடையே கடத்தி செல்லப்பட்ட சந்தானகவுரி கோவையில் இருக்கும் தகவலறிந்து மார்க்கண்டேயன் உறவினர்களுடன் கோவை சென்றிருக்கிறார்.

கோவை பீளமேடு காவல்நிலையத்தில், தனது மகள் கடத்தி வரப்பட்டு கோவையில் உள்ளாரென்றும் அவரை கண்டுபிடித்து தரவேண்டுமாய் ஒருபுகார் தந்திருக்கிறார்.

ஆனால் கடத்தி வரப்பட்ட அவரது மகளுக்கு கோவை பீளமேடு காவல் நிலையத்தில் வைத்துதான் காவல்துறை ஆணையாளர் முன்னிலையில் திருமணம் நடந்ததாக மார்க்கண்டேயனுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எங்கே என கேட்டதற்கு, தெறியாது என்று கோவை காவல்நிலையத்தில் இருந்து பதில் வந்திருக்கிறது. மேலும் காவலர்களின் சமாதானப் பேச்சிற்கு உடன்படாத மார்க்கண்டேயனிடம் வாக்குவாதம் வலுத்திருக்கிறது. நம்முடைய பேச்சிற்கு கட்டுப்பட மறுக்கிறானே என்று காவலர்களுக்கு கோபம் வெடித்து இருக்கிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மார்க்கண்டேயன் மீண்டும் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுக்க சென்றுள்ளார்.

இதனிடையே சந்தானகவுரியை கடத்தி சென்றவர்கள் தரப்பில் 2 பேரை காணவில்லை என்றும், மார்க்கண்டேயன் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மார்க்கண்டேயன் கோவையிலிருந்து மதுரை வருவதற்குள் மேற்கண்ட புகார் தரப்பட்டுள்ளது. இதன் பின்ன்னியில் கோவை போலிசார் இருந்துள்ளனர்.

கோவை போலிசாரின் இந்த செயலுக்கு காரணம்தான் என்ன? ஈகோ தான் காரணம் என்று அறியப்படுகிறது. தங்களுடைய காவல்நிலையத்தில் நடந்த, நாம் நடத்திவைத்த திருமணத்தில் பிரச்சினையா இரண்டில் ஒன்று பார்த்து விடுவது எனும் ஈகோ.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் ஈகோ பார்ப்பது?

ஊமச்சிகுளம் போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணைக்காக மார்க்கண்டேயனை அழைத்து சென்று உள்ளனர். போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அங்குள்ள கைதி அறையில் மார்க்கண்டேயனை அடைத்துள்ளனர்.

அதிகாலை மார்க்கண்டேயன் லாக்கப் அறைக்குள் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். உடனடியாக போலீசார் அவரது உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.

உடல் முழுவதும் இரத்த காயங்களோடு காணப்பட்ட மார்க்கண்டேயனைப் பார்த்ததும் உறவினர்கள் கொதித்துபோனார்கள். மார்க்கண்டேயனை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மறியலிலும் ஈடுபட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் மற்றும் அதிகாரிகள் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மார்க்கண்டேயன் சாவிற்கு காரணமான போலீசார் மூவரும் தலைமறைவாகி உள்ளதாகத் தெறிகிறது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் “மர்ம” சாவு மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: