Saturday, August 6, 2011

விரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதியமுறை.குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகை.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டு இருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக் கொடுத்து விடுகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடுகிறது இந்த புதிய கைரேகை ஆய்வு.

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

இதுவரையிலும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். விரல்களால் தொடும் பொருட்களின் நுண்ணிய துகள்கள் விரலில் ஒட்டிக்கொள்ளுமாம். அது மட்டுமல்லாமல், உடலில் சுரக்கும் திரவங்கள் கூட விரல்களில் தங்கி விடுவதுண்டாம். எனவே, ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு.

வியாழன் கோளை ஆய்வு செய்ய நாசா விண்கலம் ஜுனோ.அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணத்தில் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து ஜுனோ என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளனர்.

இது மணிக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து கோள்களின் அரசன் என்றழைக்கப்படும் வியாழனின் மையப்பகுதிக்கு சென்றடையும். பின்னர் அதன் உட்புற பகுதிகள், வியாழனின் வளிமண்டலம் மற்றும் அதன் காந்தப்புல வலிமை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வின் தலைவர் ஸ்காட் போல்டன் கூறும் போது, சூரிய குடும்பம் உருவானது எவ்வாறு என்பது உள்பட பல ரகசியங்கள் வியாழன் கோளில் மறைந்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்கப் பெறும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு ஜுனோ என்று பெயரிடப்பட்டது சற்று சுவாரசியமானது. ரோம பெண் கடவுளான ஜுனோ வியாழனின் மனைவி ஆவார். இவர் வியாழனை பற்றி உளவு பார்த்ததாக கூறப்படுவதுண்டு. அதனடிப்படையில் இந்த விண்கலத்திற்கு ஜுனோ என பெயர் வைத்துள்ளனர்

சுங்க சாவடியில் கூடுதல் வரி வசூலை கண்டித்து தனியார் பஸ்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.

சுங்க சாவடியில் கூடுதல் வரி வசூலை கண்டித்து   தனியார் பஸ்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்;   போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் பாதிப்பு

சென்னை-பெங்களூர் தங்க நாற்கர சாலையில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, பள்ளிகொண்டா, வாலாஜா ஆகிய 3 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச் சாவடியில் வசூல்செய்யும் உரிமத்தை தனியார் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் சுங்க சாவடியில் வாகன நுழைவு கட்டணம் அதிரடியாக பலமடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு பஸ் ஒன்றுக்கு மாதம் ரூ.4655 மட்டும் செலுத்தினால் அந்த மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்க சாவடி வழியாக சென்று வரலாம் என இருந்துள்ளது.

ஆனால் தற்போது புதிய கட்டண முறைப்படி ரூ.6955-ஐ செலுத்தி விட்டு 50 முறை மட்டுமே சுங்கச் சாவடி வழியாக சென்று வர வேண்டும் என உள்ளதாக தெரிகிறது. இதனால் ஒரு நாளைக்கு சுங்க சாவடியை கடந்த 5 முறை சென்று வந்தாலே 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக பஸ் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்தகட்டண உயர்வை குறைக்க வேண்டும் இல்லை என்றால் பஸ்களை இயக்க மாட்டோம் என அறிவித்து இருந்தனர். அதன்படி 100க்கு மேற்பட்ட பஸ்களை வாணியம்பாடி, பள்ளி கொண்டா சுங்க சவாடி முன்பு நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சுமூகமான நிலை எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் கட்டணத்தை குறைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என உரிமையாளர்கள் கூறினர். 2-வது நாளான இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்காததால் வேலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது. வேலூரிலிருந்து திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஜோலார் பேட்டை, நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஆலங்காயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் டாக்டர் கோவிந்ததராஜ் கூறியவதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் சரியான முறையில் கட்டணம் வசூலித்து வந்தனர். அந்த முறையிலே மீண்டும் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் வரி விதிப்பால் தனியார் பஸ்கள், பள்ளி பேருந்துகள் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் கம்பெனி பஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கார் மற்றும் வாகனங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பழைய முறையிலேயே கட்டணம் வசூலிக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம். போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அவர் தெரிவித்தார்.

டாக்டர்கள் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச கண் மருத்துவம் அளிக்க அப்துல் கலாம் வேண்டுகோள்.கிராமப்புறங்களை சேர்ந்த 50 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச கண் மருத்துவம் செய்ய டாக்டர்கள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த கண் மருத்துவர்கள் மாநில மாநாட்டில் முன்னாள் ஜானதிபதி அப்துல கலாம் வேண்டுகோள் விடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை பெல் பள்ளியில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சஙகத்தின் 59வது மாநில மாநாடு துவக்கவிழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்க தலைவர் காந்தையா தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை டாக்டர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

மாநாட்டை துவக்கி வைத்து கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதாவது:

நமது நாட்டில் கண் மருத்துவம் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. டாக்டர் வெங்கடசாமி உருவாக்கிய அரவிந்த் கண் மருத்துவமனை இன்று ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.

இந்த மருத்துவமனை 100 பேருக்கு மருத்துவம் அளித்தால் 70 பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு கண் மருத்துவரும் ஒரு ஆண்டில் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச மருத்துவம் செய்ய உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக 500 கண் பரிசோதனை மையங்களை தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கம் நிறுவ வேண்டும். கிராமப்புறங்களுக்கும் கண் மருத்துவ வசதியை எடுத்து செல்ல கண் பரிசோதனை மையங்கள், நடமாடும் கண் மருத்துவமனைகளை தோற்றுவிக்க வேண்டும். இந்தியாவில் திறமையான மருத்துவர்களும் தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் பல நாடுகளுடன் கைகோர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாடு வளரும். உலகமும் நன்மை அடையும்.

உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சேவை கிராமப்புறங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தினர் கிராமப்புறங்களில் கண்பார்வை தடுப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

நோய் வந்தபின் சிகிச்சை அளிப்படைவிட முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கண் அழுத்த நோயால் உலகில் 65 மில்லியன் பேரும், இந்தியாவில் 10 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கண் அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

மருத்துவர்கள் தங்களுக்குள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் போது பயன் தரும். அனுபவம் மற்றும் தொகுப்பு ஆவணங்களை பாதுகாப்பதன் மூலம் உலக அளவில் கண் மருத்துவம் சார்ந்த தகவல் தொகுப்பை ஏற்படுத்த முடியும். பொறியியல் துறையை சார்ந்தவர்கள் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சாதனங்களை தயாரிக்க வேண்டும்.

வைட்டமின் சி குறைபாடு, நீரிழிவு நோயால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும்

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்... மெட்ரிக் புத்தக விநியோகம் மும்முரம.சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தாலும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதைக் காலில் போட்டு மிதிக்கும் விதமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் பழைய மெட்ரிக் முறை புத்தகங்களை பெரும் விலைக்கு மாணவர்கள் தலையில் கட்டி வருகின்றன.

சென்னை மாநகரில் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலுமே மெட்ரிகுலேஷன் பாடப்புத்தகங்கள் தரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புரசைவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க முற்படும் பெற்றோர்களை இந்தப் பகுதி தனியார் பள்ளிகள் செக்யூரிட்டிகளை வைத்து விரட்டியடிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.

சென்னை வேளாங்கண்ணி குழும பள்ளிகளில் மெட்ரிக் பாடப் புத்தகங்களை வழங்கியுள்ள நிர்வாகம், இடைத் தேர்வையும் அறிவித்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, நாங்கள் புத்தகங்களை வழங்கவே இல்லை என சாதிக்க ஆரம்பித்துவிட்டார் கேகே நகரில் உள்ள இந்த பள்ளியின் நிர்வாகி. ஆனால் இந்தப் பள்ளிக் குழந்தைகள் அனைவரிடமும் மெட்ரிக் பாடப் புத்தகங்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

இதேபோல மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுமே மெட்ரிக் பாடப் புத்தகங்களை ஆயிரக்கணக்கான ரூபாயை பிடுங்கிக் கொண்டு மாணவர் தலையில் கட்டியுள்ளன (சமச்சீர் கல்வி புத்தகம் ரூ 300-க்குள்தான்). மடிப்பாக்கத்தின் பிரபல பள்ளியான பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மெட்ரிகுலேஷன் வழி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியின் நங்கநல்லூர் உள்ளிட்ட கிளைகளிலும் இதே நிலைதான்.

இந்தப் பகுதியில் உள்ள சாய், கிங்க்ஸ், ஹோலி பேமிலி போன்ற அனைத்துப் பள்ளிகளிலும் இதே போல புத்தகங்களை தன்னிச்சையாக வழங்கி பாடங்களை நடத்தி வருகின்றனர்.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இதே நிலைதான். தாம்பரம் பகுதியில் எந்த தனியார் பள்ளியும் சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக காத்திருக்கவில்லை. தங்கள் விருப்பப்படி தனியார் பதிப்பாளர்களிடம் வாங்கிக் குவித்துள்ளனர்.

சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடையாது என்று நிர்வாகம் கூறிவிட்டதாக தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் நேரடியாகப் போய் விசாரித்த போது, இனி சமச்சீர் கல்வி கிடையாது. அடுத்த ஆண்டும் வராது. நீங்கள் வேண்டுமானால் அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என முகத்திலடித்தது போல பதில் கூறி அனுப்பி வருவதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்களில்தான் இந்த நிலை என்றில்லை. கல்வியை கார்ப்பொரேட் வியாபாரமாக மாற்றிவிட்ட ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரிய தனியார் பள்ளிகளும் எந்த அச்சமுமின்றி மெட்ரிகுலேஷன் பாடத் திட்டப் புத்தகங்களை வழங்கிவிட்டன.

தனியார் பள்ளிகள் விஷயத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை என அரசு முடிவெடுத்திருப்பதாகவே பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், தனியார் பள்ளிகள் குறித்த பெற்றோரின் புகார்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு இது தொடர்பாக அனுப்பப்படும் புகார்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

குறிப்பாக கட்டண விவகாரத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பவை மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகளே. புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடையாக சில லட்சங்களையும், கல்விக் கட்டணம் என பெயருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் வாங்கி ஏமாற்றி வருகின்றன. இதுகுறித்த புகார்கள் எதையும் அரசுத் தரப்பு கண்டு கொள்ளவே இல்லை.

இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத நிலையில் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

பாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு !!திமுக அரசால் அமல்படுத்தப்பட்டது என்ற காரணத்துக்காக சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் முரண்டு பிடித்து வரும் ஜெயலலிதா அரசு, பாடப்புத்தகமே வழங்கப்படாத நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் இடைநிலைத் தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக மாணவர்கள் புத்தகமே இல்லாமல் பள்ளிக்கு வருகின்றனர். இலக்கணம், யோகா, களப்பணி ஆகியவை மூலம் பொது அறிவு விஷயங்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கிவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு பிடிவாதமாக அமைதி காத்து வருகிறது.

இதனால், பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் 10, 11, 12ம் தேதிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் முதல் இடைத்தேர்வுகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், "வரும் 10ம் தேதி காலை தமிழ், மதியம் ஆங்கிலம், 11ம் தேதி சமூக அறிவியல், கணிதம், 12ம் தேதி அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 6ம் வகுப்புக்கு மட்டும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகவே கேள்வித்தாள் தயாரித்துக் கொள்ள வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது.

பாடமே நடத்தாத நிலையில், திடீரென தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘அரசுப் பள்ளிகளில் 1,6ம் வகுப்புகள் தவிர 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று வரை புத்தகம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே எடுத்த பாடங்களில் இருந்தும், கல்வித்துறை வழங்கிய சி.டி.யில் இடம்பெற்றுள்ள பாடங்களில் இருந்தும் கேள்விகளை கேட்குமாறு கூறியுள்ளது. இவை பெரும்பாலும் பழைய பாடத்திட்டத்தை ஒத்தே உள்ளது. பாடமே நடத்தாமல் தேர்வு நடத்த கூறுவது எப்படி சரியாகும்?” என்றார். பாடமே நடத்தாமல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

என்ன நாடய்யா இது? வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம் !“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம்.

தி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி.

அவர் இப்படிக்கூறி 6 மாதங்களுக்குள், ஆட்சி அவரது கையில் வந்து சேர்ந்தது. இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக கடன் தொகையுடன் பிறக்கின்றது.

இதைச் சொல்வது நாங்களல்ல. அவரது அரசு இரு தினங்களுக்குமுன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசு, கடந்த தி.மு.க. அரசு விட்டுச் சென்ற கடன் தொகையையும் சேர்த்து தலையில் சுமக்க வேண்டியுள்ளது என்பது நிஜம்தான். ஆனால், அந்தக் கடன் தொகையை அதிகரிப்பது எதுவென்றால், இவர்கள் மழை போலத் தூவும் ‘இலவசங்கள்!’

ஒரு சாம்பிளுக்குப் பாருங்கள். இலவச பேன், மிக்ஸி, கிரைன்டர் வழங்கும் திட்டத்துக்கு ரூ1,250 கோடி. சூரிய சக்தியுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்க ரூ1,080 கோடி. மாணவர்களுக்கு ரூ394 கோடி. தாலிக்குத் தங்கம் ரூ514 கோடி. இந்த லிஸ்ட் இத்துடன் நிற்கவில்லை. இலவச கறவைப் பசு, வெள்ளாடு என்று அதுபாட்டுக்கு நீண்டுகொண்டே போகிறது.

2011-12 பட்ஜெட் காலப்பகுதியில் தமிழக அரசு கடன் வாங்க வேண்டிய தொகை ரூ1.01 லட்சம் கோடி என்று தி.மு.க. ஆட்சியின்போது கணிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் புதிய பட்ஜெட், அந்தத் தொகையை 1.19 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

தி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன? இலவச பிரியாணியா?

ஒவ்வொரு ஆட்சியிலும் மாறிமாறி இதுவே தொடர்ந்தால் என்னாகும்? முதல்வர் ஜெயலலிதாவின் ‘பிறக்கும் குழந்தை’ உதாரணத்தையே நாமும் சொல்லிப் பார்க்கலாம்.

அம்மா ஆட்சியில் தமிழகத்தில் பிறந்த குழந்தை, வளர்ந்து பெரியவனாகி அமெரிக்கா சென்றால், அமெரிக்க அரசைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கும்! “என்ன நாடய்யா இது? வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம்!”

வெற்றி பெற தேவையான 5 குணங்கள் : முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவதற்காக 05.08.2011 அன்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்துல் கலாமுடன், கலந்துரையாடுவதற்காக மாணவ மாணவிகள் உற்சாகமாக காத்திருந்தனர். அவர்கள் அப்துல்கலாம் வந்த போது, மகிழ்ச்சி வெள்ளத்தில் வரவேற்றனர். அரங்கத்தில் திரண்டு இருந்த மாணவர்களுடன், அவர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேசியதாவது:

மாணவர்களே, இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் வருங்காலத்தை பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே. இதுதான் எனது கருத்து ஆகும். உங்கள் எல்லோரையும் இங்கு காணும் போது என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன.

ஒரு காட்சியில் 20 வயதுக்கு உள்ளே இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்விப் பயனால், உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் திகழ வாழ்த்துகிறேன்.

இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பது ஆகும்.

பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்?

"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்." இதுவே வெற்றியின் ரகசியம்.

எங்கு சென்றாலும் இளைஞர்களிடம், வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும், லட்சியத்தையும், கனவையும் நான் பார்க்கிறேன்.

தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர், ஒவ்வொருவரும் ஒரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே.

இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறது. ஏன் என்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைபோல் ஆக்குவதற்காகத்தான், அந்த கடுமையான உழைப்பு.

எனவே, "இந்த மாயவலையில் மட்டும் நான் விழமாட்டேன். நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்" என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடியிலேயே, வரலாற்றில் உங்களுக்கான பக்கம் எழுதப்பட, நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். எனவே நீ நீயாக இரு. மன எழுச்சியடைந்து உள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறைகள் எழுச்சி பெற வேண்டும். மாணவ மாணவிகளின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்டால், அது மாணவர்களின் படைப்பு திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.

இப்போது நாட்டில் பெரும் சதவீதம் பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில், கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மற்ற வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். பல்வேறு கவனச் சிதறல்கள், வறுமை, வேலைக்கு ஏற்ற படிப்பு மற்றும் சிறப்பு பயிற்சியும் இல்லாத சூழல், உலகமயமாக்குதல் கொள்கையால் ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு, குடும்பச்சூழல், மாற்று கலாசாரம் போன்றவை நம் இளைஞர்களை, வேகமாக மாற்றும் சூழலில் தள்ளி விடுகிறது.

இத்தனையும் தாண்டி நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டுக்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்கவழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்த கால முறைக்கு ஏற்றார்போன்று, நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் நம் முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மலர்ச்சிக்காக, அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டு இருக்கிறோம். பணி செய்து கொண்டு இருக்கிறோம். இவைகளை செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். ஒரு நாடு வளமான நாடாக கருதப்பட வேண்டும் என்றால் நோயின்மை, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும் சுமூகமான சமுதாய சூழலுடன், வலிமையான பாதுகாப்பும் அந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

நாம் எல்லோரும் உழைத்துதான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டும் என்றால் நாம் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். இந்த தூத்துக்குடியில் ஒவ்வொரு மாணவரும் 5 மரங்களையாவது நடவேண்டும்.

பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பூமி சூரியனை வலம் வரும் போது, நம் வயதில் ஒன்று கூடுகிறது. நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். வினாடிகள் பறக்கும். நிமிடங்கள் பறக்கும். மணித்துளிகள் பறக்கும். நாட்கள் பறக்கும். வாரங்கள் பறக்கும். மாதங்கள் பறக்கும். ஆண்டுகள் பறக்கும்.

இப்படி பறந்து கொண்டேயிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் நம் வாழ்வில் உள்ள நேரத்தை நமக்கு பயன்படும் படியாக உள்ள, தகுந்த பணிக்கு நம்மால் செலவளிக்க முடியும். என் அறிவுரை என்னவென்றால் பறக்கும் நாட்களை, பறந்து கொண்டு இருக்கும் நாட்களை வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகப்படுத்த வேண்டும்.

மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள். இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய குணம் அவசியமாகும். அதுதான் நல்லொழுக்கம். இந்த நல்லொழுக்கத்தை ஆன்மிக சூழ்நிலையில் உள்ள உங்கள் தாய், தந்தை மற்றும் உங்களது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆகிய 3 பேரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வு சிறக்கவும், தோல்வியை தோல்வி அடையச் செய்யவும் ஐந்து குணாதிசயங்கள் உங்களுக்கு வரவேண்டும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியத்தை அடையக்கூடிய அந்த அறிவை தேடிப்பெற வேண்டும்.

கடின உழைப்பு வேண்டும்.


பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது.


பிரச்சினைகளை தோல்வி அடைய செய்ய வேண்டும்.


வாழ்விலே நல்லொழுக்கம் வேண்டும்.


இவை ஐந்தும் இருந்தால் நம் எல்லோருக்கும் என்றென்றும் வெற்றிதான்.

நீங்கள் அவசியம் வெற்றி அடைவீர்கள்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.