Saturday, August 6, 2011

டாக்டர்கள் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச கண் மருத்துவம் அளிக்க அப்துல் கலாம் வேண்டுகோள்.



கிராமப்புறங்களை சேர்ந்த 50 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச கண் மருத்துவம் செய்ய டாக்டர்கள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த கண் மருத்துவர்கள் மாநில மாநாட்டில் முன்னாள் ஜானதிபதி அப்துல கலாம் வேண்டுகோள் விடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை பெல் பள்ளியில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சஙகத்தின் 59வது மாநில மாநாடு துவக்கவிழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்க தலைவர் காந்தையா தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை டாக்டர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

மாநாட்டை துவக்கி வைத்து கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதாவது:

நமது நாட்டில் கண் மருத்துவம் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. டாக்டர் வெங்கடசாமி உருவாக்கிய அரவிந்த் கண் மருத்துவமனை இன்று ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.

இந்த மருத்துவமனை 100 பேருக்கு மருத்துவம் அளித்தால் 70 பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு கண் மருத்துவரும் ஒரு ஆண்டில் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச மருத்துவம் செய்ய உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக 500 கண் பரிசோதனை மையங்களை தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கம் நிறுவ வேண்டும். கிராமப்புறங்களுக்கும் கண் மருத்துவ வசதியை எடுத்து செல்ல கண் பரிசோதனை மையங்கள், நடமாடும் கண் மருத்துவமனைகளை தோற்றுவிக்க வேண்டும். இந்தியாவில் திறமையான மருத்துவர்களும் தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் பல நாடுகளுடன் கைகோர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாடு வளரும். உலகமும் நன்மை அடையும்.

உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சேவை கிராமப்புறங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தினர் கிராமப்புறங்களில் கண்பார்வை தடுப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

நோய் வந்தபின் சிகிச்சை அளிப்படைவிட முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கண் அழுத்த நோயால் உலகில் 65 மில்லியன் பேரும், இந்தியாவில் 10 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கண் அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

மருத்துவர்கள் தங்களுக்குள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் போது பயன் தரும். அனுபவம் மற்றும் தொகுப்பு ஆவணங்களை பாதுகாப்பதன் மூலம் உலக அளவில் கண் மருத்துவம் சார்ந்த தகவல் தொகுப்பை ஏற்படுத்த முடியும். பொறியியல் துறையை சார்ந்தவர்கள் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சாதனங்களை தயாரிக்க வேண்டும்.

வைட்டமின் சி குறைபாடு, நீரிழிவு நோயால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும்

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

No comments: