Sunday, July 17, 2011

மும்பையில் கொலைவெறியாட்டம் ஆடிய கசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்?தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று வாய் கிழியப் பேசும் மத்திய அரசு, 3 நாட்கள் மும்பையில் கொலை வெறியாட்டம் நடத்திய கசாப்பை இன்னும் தூக்கிலிடாமல், சாப்பாடு போட்டு, மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக செலவிட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது மகா அநியாயமான செயல் என்று மும்பை மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.

மும்பையில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களால் மகாராஷ்டிர மக்களும், மும்பை மக்களும் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வரும் அதே வேளையில் அதைத் தடுக்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடாதது அவர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் மும்பையில் 7 முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதத் தாக்குதல்கள் சகஜம் என்று கூறப்படும் காபூல் மற்றும் கராச்சியில் கூட இத்தனைப் பேர் இறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தீவிரவாதிகள் கையில் சிக்கி மும்பை சின்னாபின்னமாகி வருகிறது.

இந்த நிலையில் 2008ம் ஆண்டு பத்து பேருடன் உள்ளே புகுந்து 3 நாட்கள் வெறியாட்டம் போட்ட தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்டவனான கசாப்பை அரசு படு பாதுகாப்போடு வைத்து சாப்பாட்டு போட்டு, மக்கள் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாக செலவிட்டு வருவது மும்பை மக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்தி அவனை தூக்கில் போடாமல் ஏன் அரசு இப்படி மக்கள் பணத்தை செலவு செய்து, கசாப்பை பாதுகாத்து வருகிறது என்று அவர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவான் கூறுகையில், மக்களுடைய கோபம், ஆதங்கம், கேள்வி உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நிச்சயம் கசாப் தண்டனையை அனுபவித்தாக வேண்டும். ஆனால் நமது சட்ட நடைமுறைகள் மெதுவாகத்தான் உள்ளது. அவசரப்பட முடியாதநிலை உள்ளது என்றார். தொழில்நுட்பம் மாறியாக வேண்டும். அடிப்படைக்கட்டமைப்பு மாறியாக வேண்டும்.கம்ப்யூட்டர்மயமாக்கல் விரைவுபடுத்தப்பட வேண்டும். 21வது நூற்றாண்டில் நாம் மாட்டுவண்டி தொழில்நுட்பத்தை வைத்து செயல்பட முடியாது என்றார்.

ஆனால் எதிர்க்கட்சிகளோ சட்டத்தை கடுமையாக சாடுகின்றன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையி்ல்,

உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் இந்த சட்டம் பலவீனமாக்கப்பட்டுள்ளது. அதாவது தீவிரவாதிகள் இங்கு வந்து தாராளமாக தாக்கலாம் என்று அரசே அழைப்பு விடுப்பது போல சட்டம் எளிதாக உள்ளது என்றார்.

வகுப்பறையில் புகுந்து கத்திக்குத்து கல்லூரிக்குள் மோதல் ; 14 மாணவர்கள் கைது.

வகுப்பறையில் புகுந்து கத்திக்குத்து    கல்லூரிக்குள் மோதல்;    14 மாணவர்கள் கைது

கோவை அவினாசி ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.பி.ஏ.. சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும், பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலருக்கும் நேற்று முன்தினம் கேண்டீ னில் தகராறு ஏற்பட்டது. இதனை 2-ம் ஆண்டு பி.பி.ஏ., சி.ஏ., மாணவர்கள் தட்டிக்கேட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பிகாம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவர்களை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கல்லூரியில் மதிய இடை வேளையின் போது 2-ம் ஆண்டு பி.பி.ஏ., சி.ஏ., படிக்கும் மாணவர்கள் ஒன்று திரண்டு 3-ம் ஆண்டு பி.காம். படிக்கும் மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் பி.காம். மாணவன் தமிழ்செல்வன் என்பவருக்கு கத்திக் குத்து விழுந்தது. அதே போல் கவுதம் பெல்லா என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. மாணவர்கள் மோதலால் கல்லூரி வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடினர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த வினோத், கார்த்திக், சதீஷ்குமார், அலெக்ஸ், சரவணன், தேவா, கண்ணன், தமிழ்செல்வன், தேவராஜ், கவுதம், பிரதீப் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் சீத்தாப்பழ இலைகள் !!பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும்.பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீத்தாப்பழ ஒயின்

நன்கு கனிந்த சீதாப்பழத்தில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டது.

நித்யானந்தாவின் பின்னால் இருப்பவர்கள் யார்? அம்பலமாகிறது !பாலியல் விவகாரத்தில் சிக்கி ஊர் சிரித்த நித்யானந்தா நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தான் ஏதோ உத்தமப் புத்திரன் போல காட்டிக் கொள்ள முயற்சி செய்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இவருக்குப் பின் ஒரு மீடியா சக்தி - அரசியல் சக்தி இருக்கிறது என்பதை அவரின் பேட்டி புலப்படுத்தியது.

வதை வாங்கிய ஒலிவாங்கி

செய்தியாளர்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்து, பின்னர் பேட்டிக்குத் தயார் என்ற நிலையில் அரங்கினுள் நுழைந்தார் நித்யானந்தா. அவர் மேடையில் அமர்ந்து பேட்டி அளிக்கத் தொடங்கியபோது 20 நிமிடங்களுக்கு ஒலிவாங்கி வேலை செய்யவில்லை. ஒலி வாங்கி (Mike) செயல்படத் தொடங்கியதும் ஒலி பெருக்கி வேலை செய்ய மறுத்தது. இதனால் கோபமடைந்த ஒளிப்பதிவாளர்கள் குரல் கேட்காவிட்டால் பேட்டி தேவையில்லை என்று குரல் கொடுத்தனர். சாமி, உங்க Power- அய் வச்சு சரி பண்ணுங்க என்று கேட்ட குரலுக்கும் புன்சிரிப்புடனே அமர்ந்திருந்தார்.

செய்தியாளர்கள் எதிர்ப்பு!

தான் சிக்கலில் இருந்தபோது தினமலர், தினமணி, தினந்தந்தி, ஜெயா டி.வி., ராஜ் டி.வி. போன்ற ஊடகங்கள் சரியாக நடந்து கொண்டதாகவும், அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் நித்யானந்தா. தன்னை அவதூறு செய்தவர்கள் என்று சில ஊடகங்களைத் தெரிவித்த நித்யானந்தா அவர்களை நோக்கித் துப்பியும், தனது பக்தர்கள் அவர்களின் உருவங்களை செருப்பால் அடிப்பார்கள் என்றும் கூறி அநாகரீகமாக நடந்து கொண்டார்.

மேலும் நாய் போலக் கடித்தவர்கள் என்றும் ரவுடித்தனம் செய்வதாகவும் ஒரு சில பத்திரிகைகள் குறித்து அவர் எழுப்பிய விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பத்திரிகையாளர்கள் அவர் சொன்னதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூச்சல் எழுப்பினர்.

காவல்துறை தலையிட்டதால் கொதிப்படைந்த பத்திரிகையாளர்கள் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். பின்னர் காவல்துறையினரை வெளியேறச் சொல்லி நித்யானந்தா கேட்டுக் கொண்டார். இருப்பினும், தொடக்கம் முதல் சூழ்ந்தும், ஆங்காங்கு பத்திரிகையாளர்களோடு அமர்ந்து கண்காணித்துக் கொண்டும், கைதட்டி ஆரவாரம் செய்தும் எரிச்சல் ஊட்டிய நித்யானந்தாவின் பக்தர்களை அடக்கி வைக்குமாறும் கூச்சல் எழுப்பினர்.

மித்ர பேதம் செய்த நித்யானந்தா

பேட்டி தொடங்கியதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பத்திரிகையை, தொலைக்காட்சியை மட்டும் குற்றம்சாட்டி, அந்த ஊடகங்களின் நிருபர்களை அவமானப்படுத்தும் விதமாகப் பேசி மற்ற பத்திரிகைகளுக்கும் குறிப்பிட்ட ஊடகங்களுக்கும் இடையே மித்ரபேதம் செய்தபடியே இருந்தார். அவருடைய முயற்சியும் வென்றது. எப்போதும் பத்திரிகா தர்மம், பத்திரிகையாளர் உரிமைபற்றிப் பேசும் மூத்த பத்திரிகையாளர்கள் என்போர், எந்தக் கேள்வியும் எழுப்பாமல், அமைதி காத்ததன் பின்னணியில் இருப்பது என்ன? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.

அறிவியல் ஆன்மீக ஆராய்ச்சியாம்!

ஜூலை 15 ஆம் தேதி குரு பவுர்ணமி நாளாகக் கொண்டாடப்பட இருப்பதாகவும், பெங்களூர் பிடதியில் உள்ள தங்கள் தலைமையகத்தில் ஆன்மீக குண்டெலினி சக்தியை எழுப்பும் அறிவியல் ஆன்மீக ஆராய்ச்சியை சர்வதேச அறிவியலாளர்கள் முன்னிலையில் செய்து காட்ட இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சி மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். ரேடியேஷன் மூலமாக 40 விழுக்காடு மட்டுமே புற்றுநோய் போன்றவை குணமாகும் என்றும், குண்டெலினியை எழுப்புவதன் மூலம் 1300 விழுக்காடு அதிகமாக சக்தி கிடைக்கும் என்றும் ஓரிரு நிமிடங்கள் அந்தரத்தில் பறக்க முடியும் என்றும் தெரிவித்தார். செல் எனர்ஜியை அதிகப் படுத்த முடியும் என்று அவர் சொல்லத் தொடங்கும் போதெல்லாம் தொந்தரவு செய்த ஒலிவாங்கியை மட்டும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. யாரந்த அறிவியலாளர்கள் என்ற கேள்விக்கும் பெயரைச் சொல்லாமல் மழுப்பினார் நித்தியானந்தா.

இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட குரு நான்தான்!

தான் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆயிரக்கணக்கான மணி நேரம் ஆற்றிய உரைகளையும் உலகம் முழுக்க உள்ள நாடுகளில் பக்தர்கள் மதிப்பதாகவும், இணையத்தில் அதிக நேரம் பார்க்கப்பட்ட இளைய குரு நான்தான் என்றும் தெரிவித்தார். அதற்கு முன்பு, தனது ஆபாச வீடியோவைப் போட்டு நக்கீரன் இணையம் அதிகமான வாசகர்களைச் சென்றடைந்திருப்பதாக www.alexa.com அறிக்கையை ஆதாரமாகக் காட்டிப் பேசியதைத்தான் தன் பெருமையாகச் சொல்கிறாரோ என்று செய்தியாளர்கள் சந்தேகப்பட்டனர்.

பதில் சொல்ல மறந்த (மறுத்த) கேள்விகள்

சொத்து மதிப்பு? பெப்பெப்பே....!

120 நாடுகளில் கிளைகள் உள்ளதாகப் பெருமை பேசிய நித்யானந்தாவிடம் உங்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? என்று செய்தியாளர்கள் கேட்டதும், திடுக்கிட்டுப் போன சாமியார் சமாளித்துக் கொண்டு, ஆங்காங்கு வரும் வருவாயைக் கொண்டு பக்தர்கள் கிளைகளை நடத்துவதாகவும், அவற்றின் பொருளாதாரக் கட்டுப்பாடு தன்னிடம் இல்லை என்றும் சொன்னார். ஆனால் கடைசிவரை தன் சொத்து மதிப்பு - ஆசிரமத்தின் சொத்து மதிப்பு விவரங்களைத் தவறியும் வெளியிடவில்லை.

தொலைக்காட்சியில் காட்டப்பட்ட வீடியோவும், தடயவியல் ஆராய்ந்த வீடியோவும் ஒன்றுதானா? என்று தமக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட நித்யானந் தாவிடம், அப்படியென்றால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை விட வேறு காட்சிகளும் உள்ளனவா? அவை உண்மையானவையா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பித்தார் சாமியார்.

குறிப்பிட்ட பத்திரிகைகளின் சார்பில் தங்களை மிரட்டியோர், பணம் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக பேரம் பேசினார்கள் என்று குற்றம் சாட்டினார் நித்தியானந்தா. அப்படியானால் காவல்துறை இதில் கூட்டுச் சதி செய்தது என்று குற்றம் சாட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.

தங்களை அரசியல் ஆதிக்கம்தான் கைது செய்யச் செய்தது என்று குற்றம் சாட்டியவரிடம், உங்களைக் கைது செய்தது பெங்களூர் காவல்துறை அல்லவா? அங்கு ஆளும் எடியூரப்பாவும், பி.ஜே.பி.யும் உங்களுக்கு எதிராக சதி செய்தார்களா? என்ற கேள்விக்கு, அவர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பி.ஜே.பி.யை தான் குற்றம் சொல்ல மாட்டேன் என்றும் உதறிக் கொண்டார்.

மடாதிபதிகள் சுயநலவாதிகளா? உங்களுக்கு ஆதரவாக, எந்தவொரு சாமியாரும், மடாதிபதியும் ஆதரவு தரவில்லையே என்று கேட்கப்பட்டதற்கு, அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். அவர்களை சுயநலவாதிகள் என்றும் நான் சொல்ல மாட்டேன். அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள அவ்வாறு இருந்திருக்கலாம் என்றார். தனக்கு நேர்ந்தது இந்து மதத்தின் மீதான மதத் தாக்குதல் என்றும் குற்றம் சாட்டினார். உங்கள் மடங்களைத் தாக்கியதும் படங்களை எரித்ததும் இந்து மக்கள் கட்சி என்போர்தானே? என்று கேட்டதற்கு, யாரு அர்ஜூன் சம்பத்தா? அவருடைய பொண்டாட்டியையே அவரால் இந்து மதத்தல் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றி சொல்லத் தொடங்கியவர் பாதியில் நிறுத்தி விட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். சரசம்... சல்லாபம்... சாமியார் என்று தன்னைப்பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதிய சாருநிவேதிதா பணம் சம்பாதிப்பதற்காக அவ்வாறு செய்ததாகவும், அவருடைய மனைவியே சாருவைக் குறித்து எழுதிய அந்தரங்கக் கடிதத்தை வெளியிடுவதாகவும் கூறி 9 பக்கக் கடிதத்தை வெளியிட்டார் நித்யானந்தா.

அதற்கு முன்பு உங்களைப் பாராட்டி எழுத எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர் பத்திரிகையாளர்கள்.

அதுதான்... அது இல்லை... அதுவும் இதுவும்

அத்துமீறி (Trespass) (தனது அறையில்) எடுக்கப்பட்ட காட்சிகளுடன், அதன் மேல் மார்பிங் செய்து வீடியோ வெளிவந்திருப்பதாக முதலில் கூறிய நித்யானந்தா, பிறகு மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது, மொத்தக் காட்சிகளும் அவதார் படத்தைப் போல மார்பிங் செய்யப்பட்டது என்றும் அதில் தன் உருவம் இல்லை என்று கூறினார். பிறகு அது தனது அறையே இல்லை என்றும் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட வீடியோவை தான் சரியாக பார்க்கவில்லை என்றும் கூறினார். முன்னுக்குப் பின் முரணாகவே அவரது பதில்கள் இருந்தன.

இது மார்பிங் தான் என்று அமெரிக்காவின் ஹிண்டு பெடரேசன் என்ற அமைப்பு ஆய்வு செய்து தெரிவித்திருப்பதாக கூறினர் நித்யானந்தா. வேலிக்கு ஓணான் சாட்சி! ஆனால் கர்நாடகக் காவல்துறையோ, இவை மார்பிங் அல்ல; உண்மையான காட்சிகளே என்று சான்றிதழ் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேசத் தொடங்கியது முதல் அருவருப்பான தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்த நித்யானந்தா, தனது தற்காப்புக்காகவே தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்து வதாகத தெரிவித்தார்.

கழுத்தில் கிடந்த நித்யானந்தா டாலரை கையால் சுற்றி விளையாடியபடியே இருந்த மேடையில் அமர்ந்திருந்த நடிகை ரஞ்சிதா பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து, தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் சொல்லி விட்டதாகத் தெரிவித்தார்.

வாய்மூடிக் கிடந்த ஆங்கில ஊடகங்கள்

எந்த ஒரு பேட்டி என்றாலும் முண்டி அடித்துக் கொண்டு பிறரைக் கேள்வி கேட்க விடாமலும், பேட்டியாளரை பதில் சொல்லவிடாமலும் துளைத்தெடுக்கும் ஆங்கில ஊடகங்கள் நித்தியானந்தாவிடம் மட்டும் கேள்வி எழுப்பாமல் வாய் மூடிக்கிடந்தன. கடைசி நேரத்தில் நித்தியானந்தா சொல்ல நினைத்தவற்றை மட்டும், அதாவது சன் டி.வி., நக்கீரன் மீதான பழியை மட்டும் பதிவு செய்து கொண்டு திரும்பினர்.

ஆட்சி மாற்றம் - காட்சி மாற்றம்

ஆட்சி மாற்றத்தின் காரணமாகத்தான் நீங்கள் தைரியமாக வெளியில் வந்து பேட்டி தருகிறீர்களா? தற்போதைய அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த அரசின் மீதுள்ள நம்பிக்கையில்தான் வெளிப்படையாக புகார் கொடுத்திருப்பதாகவும், விரைவில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றும் அறிவித்தார். அவர் வழங்கியிருக்கும் புகார்களும், தெரிவித்த குற்றச்சாட்டுகளும், அண்மையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பழி வாங்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்பதைப் போலவே இருந்தன.

நில மோசடி, சக்சேனாவும் அவருடைய உதவியாளர் அய்யப்பனும் மிரட்டினார்கள், பணம் கேட்டார்கள், பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு ஒடி விட்டனர் என்றெல்லாம் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அண்மைக்கால நிலவரத்தில் அதிகம் செய்தியில் இடம் பெற்ற, தமிழக அரசின் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகவே இருந்தது.

காவல்துறை வழி நடத்தலா?

காவல்துறையிடம் புகார் கொடுக்க தன் தரப்பிலிருந்து சென்றிருப்பதாகவும், அதற்குமுன் ஆதாரங்களை வெளியிடாமல் இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டதாகவும் கூறிய நித்யானந்தாவிடம் அப்படியென்றால், காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டுமென உங்களை வழி நடத்துகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பெரும்பாலான கேள்விகளுக்கு, பதில் சொல்வதைத் தவிர்த்தும், மழுப்பியும், காவல்துறை வெளியிடக்கூடாது என்று சொல்லியிருப்பதாக சமாளித்தும், பத்திரிகையாளர்களிடம் சிண்டு முடிந்து விட்டும், தான் தப்பிக் கொள்ளும் தந்திரரோபாயத்தைத் தொடக்கம் முதலே கைக் கொண்டார் நித்யானந்தா. தான் அவதூறு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய சாமியார் நித்யானந்தா எழுத்தாளர் சாருநிவேதிதா, அர்ஜுன்சம்பத், ஊடகங்கள், மடாதிபதிகள் என எண்ணற்றோர் குறித்து அவதூறு செய்தபடியே இருந்தார்.

கூச்சலும் குழப்பமுமாக நடந்து முடிந்த செய்தியாளர் சந்திப்பில் எடிட் செய்யப்படாத, மார்பிங் செய்யப்படாத தனது முதல் வீடியோவைத் தான் செய்தியாளர்களிடம் வெளியிடுவதாகத் தெரிவித்த நித்யானந்தா, கடைசி வரையில் வீடியோ காட்சியைத் தராமல் செய்தியாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார்.

viduthalai.in

16 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் வசூல் ; கந்துவட்டி வசூலித்த தொழில் அதிபர் கைது.

16 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் வசூல்; கந்துவட்டி வசூலித்த தொழில் அதிபர் கைது

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் விஜய் . இவர் வியாபாரத்துக்காக அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் கடந்த 18 மாதங்களாக வட்டி கட்டி வந்தார்.

வியாபாரம் சரியாக நடக்காததால் தொடர்ந்து வட்டி கொடுக்க முடியாமல் திணறினார். இதில் கோபம் அடைந்த ரமேஷ்பாபு அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதனால் விஜய் தனது வீட்டை விற்று வட்டி தொகையை கொடுத்து வந்தார்.

மொத்தம் ரூ.50 லட்சம் வரை வட்டி கொடுத்து விட்டார். ஆனாலும் ரமேஷ் பாபு கடந்த ஒரு வாரமாக மிரட்டி இன்னும் ரூ.10 லட்சம் வேண்டும் என்றார். இதுபற்றி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் ரமேஷ்பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தோல்வியில் முடிந்த நித்யானந்தாவின் நிகழ்ச்சி !ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது.

பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார்.

இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார்.

குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், தேர்தல் தோல்விகள் என அடுத்தடுத்து அடி வாங்கும் திமுகவில் தற்போது வாரிசு சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக திமுகவில் சர்வ சக்தியோடு விளங்கும் மாவட்ட செயலாளர்கள் விஷயமாகவும், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழி மற்றும் தன் கோட்டையான மதுரையிலேயே கோட்டை விட்ட அழகிரி தொடர்பாகவும் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது இளைய மகனும் அவரின் அடுத்த அரசியல் வாரிசாகவும் கருதப்படும் ஸ்டாலினும் மோதிக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தோல்விக்கு காரணமாக வாரிசு அரசியல் பிரதானமாக கூறப்படும் சூழலில் இப்போதாவது தன் இருப்பை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரமாக இரு வித முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். முதலாவதாக கோவையில் வரும் 23ம் தேதி நடக்க உள்ள திமுகவின் பொதுக்குழுவில் வாரிசு அரசியல் பிரச்னையை கிளப்பி அழகிரி மற்றும் கனிமொழியை ஓரங்கட்டுவதோடு தன்னை முறைப்படி வாரிசாக அறிவிக்க கருணாநிதியை நிர்ப்பந்தப்படுத்துவதாக தெரிகிறது.

இதற்கு அணை போடும் விதமாக திருமண விழா ஒன்றில் பேசிய அழகிரி கட்சி விழாக்களில் கருணாநிதி, அண்ணா படங்களை பயன்படுத்துமாறும் தன் குடும்ப உறுப்பினர்கள் யாரின் பெயரையும் பயன்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக ஸ்டாலினுக்கு செக் வைத்தார். அடுத்த படியாக திமுகவில் சர்வ அதிகாரத்துடன் வலம் வரும் மாவட்ட செயலாளர்களை ஓரங்கட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் நினைத்தார். ஏனென்றால் நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி என தங்கள் மாவட்டங்களில் குறுநில மன்னர்களாக விளங்கும் இவர்களை ஓரங்கட்டாமல் தன்னால் முன்னேற முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும்.

அதனால் மாவட்ட செயலாளர்களை அகற்றி விட்டு ஒவ்வோர் சட்டமன்ற தொகுதிக்கு ஓர் பிரதிநிதியை நியமிக்கும் வகையில் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர கருணாநிதியை ஸ்டாலின் நிர்ப்பந்தித்தார். ஆனால் மாவட்ட செயலாளர்கள் இம்முடிவை கடுமையாக எதிர்க்கிறார்கள். இச்சூழலில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே ஸ்டாலின், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது. அப்போதே இருவருக்குமிடையே ஒருவித பிணக்கு இருந்திருக்கின்றது. இந்த நிலையில் ஸ்டாலின்மீது திட்டமிட்டபடி அடுத்தடுத்து புகார்கள் செல்லும் வகையில் சிலர் ஏற்பாடு செய்ததாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சிக்காரர்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக, கடந்த சில நாட்களாக தினமும் அறிவாலயம் சென்று கொண்டிருந்த கலைஞரிடம், இந்தப் புகார்கள் போய்ச் சேரும்படியாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைஞரைச் சந்திக்க அவரது அறைக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், ஸ்டாலினைப் பற்றிய புகார் சொல்லிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

வரிசையாக ஸ்டாலின்மீது புகார்கள் மாத்திரம் வருவதால், கலைஞர் கோபமுற்றதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ஸ்டாலினை அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

தகவல் கிடைத்து ஸ்டாலினும் அறிவாலயம் சென்று கலைஞரைச் சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தனிமையில் பேசாமல், தனது அறைக்குள் மற்றையவர்கள் இருந்த நிலையில் கலைஞர், கேள்விக் கணைகளைத் தொடுத்தது, ஸ்டாலினை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் அங்கிருந்த ஒருவர்.

இதையடுத்து ஸ்டாலினும் தன்பங்குக்கு கோப வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாராம். கனிமொழியின் ஏற்பாடுதான், வரிசையாகக் கலைஞரை வந்தடைந்த குற்றச்சாட்டு என்று வெடித்தாராம் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் ஆசீர்வாதம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அறிவாலயம்வரை வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டாராம்.

“அறிவாலயத்தில் உங்களைப் பார்க்க வெவ்வேறு விவகாரங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்? ஒவ்வொன்றும் வேறுபட்ட விஷயமாக இருக்கும். ஆனால், இங்கு நடந்தது என்ன? உங்களைச் சந்தித்த ஒவ்வொருவரும், ஒரு ஆள் பாக்கியில்லாமல், என்மீது புகார் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?” என்று குரலை உயர்த்தினாராம் ஸ்டாலின்.

அறிவாலயத்துக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கின்றது என்றும் கூறிய அவர், “உங்களைச் சந்திக்க வந்தவர்களை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுமினாராம்.

“இவ்வளவும் நடக்கையில், அந்த அறைக்குள் இருந்த மற்றவர்கள் திக்பிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார்கள். வழக்கமாக தந்தைக்கு முன் குரலை உயர்த்திப் பேசாத ஸ்டாலின் அன்று ருத்ரம் கொண்டது, அவர்களைத் திகைக்க வைத்தது”

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலையடுத்து, கோபத்துடன் ஸ்டாலின் அறிவாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில், கோபமான முகத்துடன் கலைஞரும் புறப்பட்டு கோபாலபுரம் சென்றிருக்கிறார்.

செல்வி அங்கே இருந்திருக்கிறார். அவர் கனிமொழிக்கும் அழகிரிக்கும் எதிராக புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசிய செல்வி, குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சியில் கனிமொழிதான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.

இந்தக் கட்டத்தில் கலைஞர், “நான் இந்த வீட்டிலிருந்தும் போய் விடுகிறேன். கட்சியிலிருந்தும் போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, தனது உதவியாளர் சண்முகநாதனை மாத்திரம் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றுவிட்டார். அன்று மாலைவரை போனில் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை

இலங்கையின் போர்க்குற்றம் : முதல்முறையாக 'வாயைத் திறந்தது ' இந்தியா !இலங்கை மீதான போர்க்குற்ற விவகாரத்தில், இந்தியா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இறுதிப் போரின்போது அங்கு நடந்த மனித உரிமை மீறல் புகார்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

அவர் மீது உலகம் முழுக்க போர்க்குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பிடிபட்ட பெண் போராளிகளை ராணுவத்தினர் கொடூரமாக சிதைக்கும் காட்சிகள், இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான 50 நிமிட வீடியோவை சேனல் 4-ம், இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடேவும் வெளியிட்டன. ஆனால் இந்த பிரச்சினையில், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த இந்தியா, நேற்று தனது மவுனத்தை கலைத்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், "இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர்.

எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கவுரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

மனித உரிமை மீறல்கள்

இலங்கை போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்தவரை, பல்வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின.

போர்க்குற்றம் குறித்து விசாரணை...

இந்தியாவை பொறுத்தவரை, போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின்போதும் கேட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்," என்றார்.

மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டாரா ?

ஈரோடு மாவட்ட   கலெக்டர் மாற்றத்துக்கு மாணவர்கள்-    விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டவர் ஆர். ஆனந்தகுமார். இவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார். மேலும் சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் கலெக்டர் ஆர். ஆனந்தகுமாரை நேற்று முன்தினம் தமிழக அரசு திடீரென்று மாற்றி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக இதற்கு முன்பு இங்கு கலெக்டராக இருந்த சி.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் மாற்றப்பட்டதற்கு விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் குக்கூ என்ற மாலை நேர படிப்பகத்தில் படித்து வரும் அரசு பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த ஏழை மாணவ - மாணவிகள் கலெக்டர் ஆனந்தகுமாரை மாற்றக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினர். அதில் அவர்கள், மண்ணையும், மக்களையும் காக்கும் கலெக்டர் ஆனந்த குமாரை மாற்றக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இதேபோன்று காளிங்கராயன் பாசன சபை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலாயுதம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், ஈரோடு மாவட் டத்தில் தோல், சாய, சலவை ஆலை கழிவுகளால், காவிரி, பவானி, காலிங்கராயன் ஆகிய நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன. பொது மக்கள் கேன்சர், மலட்டு தன்மை போன்ற பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலெக்டராக வந்த ஆனந்தகுமார் முறையாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது மீண்டும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே கலெக்டர் ஆனந்தகுமார் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் பாரதி வாசகர் வட்டம் விடுத்துள்ள ஒரு செய்தி குறிப்பில் தமிழக முதல்-அமைச்சர் கலெக்டரை மாற்றியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கலெக்டர் அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதால்தான் மாற்றப்பட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.