தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டவர் ஆர். ஆனந்தகுமார். இவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார். மேலும் சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கலெக்டர் ஆர். ஆனந்தகுமாரை நேற்று முன்தினம் தமிழக அரசு திடீரென்று மாற்றி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக இதற்கு முன்பு இங்கு கலெக்டராக இருந்த சி.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் மாற்றப்பட்டதற்கு விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் குக்கூ என்ற மாலை நேர படிப்பகத்தில் படித்து வரும் அரசு பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த ஏழை மாணவ - மாணவிகள் கலெக்டர் ஆனந்தகுமாரை மாற்றக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினர். அதில் அவர்கள், மண்ணையும், மக்களையும் காக்கும் கலெக்டர் ஆனந்த குமாரை மாற்றக்கூடாது என்று கூறியுள்ளனர்.
இதேபோன்று காளிங்கராயன் பாசன சபை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலாயுதம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், ஈரோடு மாவட் டத்தில் தோல், சாய, சலவை ஆலை கழிவுகளால், காவிரி, பவானி, காலிங்கராயன் ஆகிய நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன. பொது மக்கள் கேன்சர், மலட்டு தன்மை போன்ற பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலெக்டராக வந்த ஆனந்தகுமார் முறையாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது மீண்டும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே கலெக்டர் ஆனந்தகுமார் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் பாரதி வாசகர் வட்டம் விடுத்துள்ள ஒரு செய்தி குறிப்பில் தமிழக முதல்-அமைச்சர் கலெக்டரை மாற்றியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கலெக்டர் அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதால்தான் மாற்றப்பட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment