2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், தேர்தல் தோல்விகள் என அடுத்தடுத்து அடி வாங்கும் திமுகவில் தற்போது வாரிசு சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக திமுகவில் சர்வ சக்தியோடு விளங்கும் மாவட்ட செயலாளர்கள் விஷயமாகவும், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழி மற்றும் தன் கோட்டையான மதுரையிலேயே கோட்டை விட்ட அழகிரி தொடர்பாகவும் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது இளைய மகனும் அவரின் அடுத்த அரசியல் வாரிசாகவும் கருதப்படும் ஸ்டாலினும் மோதிக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தோல்விக்கு காரணமாக வாரிசு அரசியல் பிரதானமாக கூறப்படும் சூழலில் இப்போதாவது தன் இருப்பை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரமாக இரு வித முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். முதலாவதாக கோவையில் வரும் 23ம் தேதி நடக்க உள்ள திமுகவின் பொதுக்குழுவில் வாரிசு அரசியல் பிரச்னையை கிளப்பி அழகிரி மற்றும் கனிமொழியை ஓரங்கட்டுவதோடு தன்னை முறைப்படி வாரிசாக அறிவிக்க கருணாநிதியை நிர்ப்பந்தப்படுத்துவதாக தெரிகிறது.
இதற்கு அணை போடும் விதமாக திருமண விழா ஒன்றில் பேசிய அழகிரி கட்சி விழாக்களில் கருணாநிதி, அண்ணா படங்களை பயன்படுத்துமாறும் தன் குடும்ப உறுப்பினர்கள் யாரின் பெயரையும் பயன்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக ஸ்டாலினுக்கு செக் வைத்தார். அடுத்த படியாக திமுகவில் சர்வ அதிகாரத்துடன் வலம் வரும் மாவட்ட செயலாளர்களை ஓரங்கட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் நினைத்தார். ஏனென்றால் நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி என தங்கள் மாவட்டங்களில் குறுநில மன்னர்களாக விளங்கும் இவர்களை ஓரங்கட்டாமல் தன்னால் முன்னேற முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும்.
அதனால் மாவட்ட செயலாளர்களை அகற்றி விட்டு ஒவ்வோர் சட்டமன்ற தொகுதிக்கு ஓர் பிரதிநிதியை நியமிக்கும் வகையில் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர கருணாநிதியை ஸ்டாலின் நிர்ப்பந்தித்தார். ஆனால் மாவட்ட செயலாளர்கள் இம்முடிவை கடுமையாக எதிர்க்கிறார்கள். இச்சூழலில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாகவே ஸ்டாலின், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது. அப்போதே இருவருக்குமிடையே ஒருவித பிணக்கு இருந்திருக்கின்றது. இந்த நிலையில் ஸ்டாலின்மீது திட்டமிட்டபடி அடுத்தடுத்து புகார்கள் செல்லும் வகையில் சிலர் ஏற்பாடு செய்ததாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சிக்காரர்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக, கடந்த சில நாட்களாக தினமும் அறிவாலயம் சென்று கொண்டிருந்த கலைஞரிடம், இந்தப் புகார்கள் போய்ச் சேரும்படியாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைஞரைச் சந்திக்க அவரது அறைக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், ஸ்டாலினைப் பற்றிய புகார் சொல்லிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
வரிசையாக ஸ்டாலின்மீது புகார்கள் மாத்திரம் வருவதால், கலைஞர் கோபமுற்றதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ஸ்டாலினை அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
தகவல் கிடைத்து ஸ்டாலினும் அறிவாலயம் சென்று கலைஞரைச் சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தனிமையில் பேசாமல், தனது அறைக்குள் மற்றையவர்கள் இருந்த நிலையில் கலைஞர், கேள்விக் கணைகளைத் தொடுத்தது, ஸ்டாலினை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் அங்கிருந்த ஒருவர்.
இதையடுத்து ஸ்டாலினும் தன்பங்குக்கு கோப வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாராம். கனிமொழியின் ஏற்பாடுதான், வரிசையாகக் கலைஞரை வந்தடைந்த குற்றச்சாட்டு என்று வெடித்தாராம் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் ஆசீர்வாதம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அறிவாலயம்வரை வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டாராம்.
“அறிவாலயத்தில் உங்களைப் பார்க்க வெவ்வேறு விவகாரங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்? ஒவ்வொன்றும் வேறுபட்ட விஷயமாக இருக்கும். ஆனால், இங்கு நடந்தது என்ன? உங்களைச் சந்தித்த ஒவ்வொருவரும், ஒரு ஆள் பாக்கியில்லாமல், என்மீது புகார் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?” என்று குரலை உயர்த்தினாராம் ஸ்டாலின்.
அறிவாலயத்துக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கின்றது என்றும் கூறிய அவர், “உங்களைச் சந்திக்க வந்தவர்களை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுமினாராம்.
“இவ்வளவும் நடக்கையில், அந்த அறைக்குள் இருந்த மற்றவர்கள் திக்பிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார்கள். வழக்கமாக தந்தைக்கு முன் குரலை உயர்த்திப் பேசாத ஸ்டாலின் அன்று ருத்ரம் கொண்டது, அவர்களைத் திகைக்க வைத்தது”
கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலையடுத்து, கோபத்துடன் ஸ்டாலின் அறிவாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில், கோபமான முகத்துடன் கலைஞரும் புறப்பட்டு கோபாலபுரம் சென்றிருக்கிறார்.
செல்வி அங்கே இருந்திருக்கிறார். அவர் கனிமொழிக்கும் அழகிரிக்கும் எதிராக புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசிய செல்வி, குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சியில் கனிமொழிதான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.
இந்தக் கட்டத்தில் கலைஞர், “நான் இந்த வீட்டிலிருந்தும் போய் விடுகிறேன். கட்சியிலிருந்தும் போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, தனது உதவியாளர் சண்முகநாதனை மாத்திரம் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றுவிட்டார். அன்று மாலைவரை போனில் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை
No comments:
Post a Comment