Monday, April 18, 2011

4 லட்சம் பேர் வாக்களிக்காத - கன்னியாகுமரி மாவட்டம்.


கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நூற்றுக்நூறு எழுத்தறிவு பெற்ற மாவ்டடமான குமரியில் 4 ல்டசம் பேர் வாக்களிக்கவேயில்லை.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 424 வாக்கள்ர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கவில்லை.

இத்தனை பேர் வாக்களிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் ஏராளமானோர் கேரளா, குஜராத் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறையின்போது மட்டும் தான் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

இதுதவிர ஏராளமானவர்கள் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை. அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,

கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 63.7 சதவீத வாக்குகளும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 64.50 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த தேர்தலில் 68.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.

லோக்பால் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு வழக்கு.

லோக்பால் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு வழக்கு


லோக்பால் சட்டவரைவை உருவாக்கும் கூட்டுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறுவது குறித்து வழக்குரைஞர்குழு வழக்கு தொடர்ந்துள்ளது .

எம்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 5பேர் அடங்கிய லோக்பால் சட்ட வரைவு குழுவில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முடியும் என்றும், அப்படிப்பட்டை குழுவில் சமூக உறுப்பினர் எவரும் பங்கேற்க முடியாது என்றும், மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

லோக்பால் கூட்டுக்குழுவில் சமூகப் பிரதிநிதிகளாக இடம் பெற்றுள்ளவர்களில் தந்தையும் மகனுமான சாந்தி பூஷனும், பிரசாந்த் பூஷனும் இடம் பெற்றுள்ளதையும் எதிர்த்தும்,லோக்பால் சட்ட வரைவை கலைக்கவும் இம்மனுவில் தெரிவித்துள்ளனர்.


வியாசர்பாடி கல்லூரி மாணவர் தற்கொலை: மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்.

வியாசர்பாடி கல்லூரி மாணவர் தற்கொலை:  மாணவ- மாணவிகள்   திடீர் போராட்டம்;  கை, கழுத்தை பிளேடால் கீறினர்; போலீசார் மீது கல்வீச்சு-தடியடி

செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரை சேர்ந்த தனபாலின் மகன் இளையராஜா (20). வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இளையராஜாவுக்கு கல்லூரி வருகை பதிவேட்டில் நாள் குறைவாக இருந்ததால் கல்லூரி இறுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இளைய ராஜா கடந்த 11-ந் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் காலை கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள் இளையராஜா தற்கொலை குறித்து அறிந்ததும் ஆவேசமானார்கள். மாணவ-மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இறந்து போன மாணவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், கல்லூரி நிர்வாகிகள் சந்திரசேகர், சத்தியமூர்த்தி, ரமேஷ் கண்ணன், நீலகண்டன், பிரேமா ஆகிய 5 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் கல்லூரியை பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரண உதவி கிடைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். இதனை ஏற்று மறியலை மாணவர்கள் கைவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள், இறந்து போன இளையராஜா குடும்பத்துக்கு நிவாரண உதவி கிடைக்க வில்லை என்பதை அறிந்ததும் ஆவேச மானார்கள். 9 மணி அளவில் கல்லூரி முன்பு எருக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கோஷமிட்டனர். மாணவர்களுடன் இளையராஜாவின் பெற்றோர் தனபால்- முனியம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டனர். பெரும்பாலான மாணவர்கள் ரோட்டில் படுத்து உருண்டனர். சில மாணவர்கள் பிளேடால் கை, கழுத்தில் அறுத்துக் கொண்டனர். அப்போது ரத்தம் வழிந்து ஓடியதால் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் கோபி மனோகரன், மற்றும் 100-க்கும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள்.

ஆனால் மாணவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து சேர், டேபிள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் வளாகத்திற்குள் நிறுத்தியிருந்த கல்லூரி பேராசிரியர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீது பெரிய கற்களை போட்டு உடைத்தனர். அப்போது சில மாண வர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் 5-க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைந்தது.

நேரம் செல்ல செல்ல மாணவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இயல வில்லை. போராட்டம் பெரிய கலவரமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். உடனே மாணவ-மாணவிகள் நாலா புறமும் சிதறி ஓடினர்கள். அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் கல்லூரிக்குள் புகுந்து தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதனால் அவர்களுடன் மாணவர் இளையராஜாவின் பெற்றோரும் கைதானார்கள்.

சென்னையில் 2013-ல் 6 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் ஓடும்.

சென்னையில் 2013-ல் 6 நிமிடத்துக்கு ஒரு  மெட்ரோ ரெயில் ஓடும்;  1,276 பேர் பயணம் செய்யலாம்

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, முதலாவதாக வண்ணாரப் பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மற்றொரு பாதையும் அமைக்கப்படுகிறது.

இவற்றின் மொத்த நீளம் 45 கிலோ மீட்டர். இதில் 24 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், மீதம் உள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைகிறது.சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை செல்லும் மெட்ரோ ரெயில் பாதையில், கோயம்பேடு பஸ்நிலையம் அருகில் இருந்து அமைக்கப்படும் உயர்த்தப்பட்ட பாதை பணி வேகமாக நடந்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்டுக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி வேகமாக முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, 2013-ல் கோயம்பேட்டில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2014-ல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர் கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மெட்ரோ ரெயில் ஓடும்.

இதே ஆண்டில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படும் பாதையிலும் மெட்ரோ ரெயில் ஓடும். 2015-ல் 4 நிமிடத்துக்கு ஒரு ரெயில் ஓடும் வசதி ஏற்படும். 2016 முதல் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் ஓடும். இதுதவிர புதிய பாதைகளும் உருவாக்கப்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படுகிறது.


கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதா? சீமான்.


நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

''இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஸ்ரீலங்கா அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேளி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் ஸ்ரீலங்கா அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்த பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது.

மார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய ஸ்ரீலங்கா அரசிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரானது.

தமிழர்களுக்கு எதிரான அந்தப் போரில் மிகப் பெரிய அளவிற்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும்,

போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட ஸ்ரீலங்கா அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது?

ஸ்ரீலங்கா அரசு செய்த மிகப் பெரிய போர்க் குற்றம், தங்களோடு இருந்த மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க, துப்பாக்கிகளை மெளனிக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட 300 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்ததும், அதன் பிறகு, மே 18ஆம் தேதி ஒரே நாளில் முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும்தான்.

சரணடைய வந்த புலிகளின் அமைப்பினரை கொன்றதற்கும், இறுதிக் கட்டப்போரில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களை கொன்று குவித்ததற்கும் உத்தரவிட்டது ஸ்ரீலங்கா அரசுதானே?

ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜவின் தம்பி கோத்தபய ராஜபட்சா அல்லவா? உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை ஸ்ரீலங்கா அரசிடம் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா? அல்லது தமிழினப் படுகொலையை புதைக்கவா?

ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக ஆதாரப்பூர்வமான குற்றச்சாற்றுகளை பட்டியலிட்டுள்ள நிபுணர் குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளையும் பட்டியலிட்டுள்ளது வருத்தத்திற்குரியது. தங்களோடு இருந்த மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாற்றை நிபுணர் குழு வைத்துள்ளது.

தமிழினத்தையே அழித்தொழிக்கும் திட்டத்தோடு செயலாற்றிவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் ராணுவத்தை, தமிழர்களை கேடயமாகக் கொண்டு எவ்வாறு தடுத்திட முடியும்? கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்துவரும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு அப்படிப்பட்ட மனிதாபிமானம் உண்டென்று ஐ.நா.நிபுணர் குழு நம்புயுள்ளது வியப்பைத் தருகிறது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் ஒரே கோரிக்கை, இலங்கையின் பூர்வீகக் குடிகளாக தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழித்த ஸ்ரீலங்கா அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்பதே. ஆனால் ஐ.நா. அதனைச் செய்யுமா என்ற சந்தேகம் நிபுணர் குழு பரிந்துரையால் ஏற்பட்டுள்ளது.


இலங்கை இனப் பிரச்சனை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது.

இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடு்ப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது ஸ்ரீலங்கா அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றி்ற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும். என்று குறிப்பிட்டுள்ளார்.

www.nakkheeran.in

அசன்அலி கான் பாஸ்போர்ட் விவகாரம் , மருத்துவக் கல்லூரி-குருத்வாரா: புதுவை கவர்னர் மீது குவியும் புகார்கள்.


பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.

இதே விவகாரத்தில் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் விஜய்சங்கர் பாண்டேவை பதவி நீக்கம் செய்து அம் மாநில முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ள நிலையில், இக்பால் சிங்கிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

சுவிஸ் உள்பட பல வெளிநாட்டு வங்கிகளில் இவர் பல லட்சம் கோடியளவுக்கு பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளார் அசன் அலி. இது குறித்து மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலி மற்றும் அவரது பார்ட்னரான காசிநாத் தபுரியாவும் ஆகியோர் ரூ. 75,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இவருக்கும் தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் அசன் அலி மற்றும் தபுரியா இருவரையும் கடந்த மாதம் அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பிகார் மாநில ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது அசன் அலிக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுத் தந்ததாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் மீது அமலாக்கப் பிரிவு புகார் கூறியுள்ளது. பிகாரைச் சேர்ந்த அமலேந்து பாண்டே என்பவர் மூலமாக அலிக்கு இக்பால் சிங் உதவியதாகக் கூறியுள்ள அமலாக்கப் பிரிவினர் இது தொடர்பாக இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இந் நிலையில் இக்பால் சிங் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், 1992 முதல் 1998ம் ஆண்டு வரை 6 ஆண்டு காலத்துக்கு பிகார் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தபோது அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருந்த அமலேந்து பாண்டே பாஸ்போர்ட் பெறும் ஒரு விண்ணப்பம் அனுப்பினார். தனக்கு மிகவும் வேண்டியவர் மருத்துவ சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு செல்ல வேண்டி இருப்பதால் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அந்த விண்ணப்பத்தில் ஏ.கான் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பாஸ்போர்ட் விண்ணப்பத்தை உடனடியாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஐ.கே.குஜ்ராலுக்கு அனுப்பி பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

ஆனால் அமலேந்து பாண்டே தற்போது மாற்றி பேசுகிறார். அவர் சொல்வதில் எந்த உண்மை இல்லை. அசன் அலி யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் கவர்னரின் செயலாளர் ஜே.பி.சிங் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், இக்பால் சிங் தனது சொந்த வேலை காரணமாக டெல்லி வந்துள்ளார். அவருக்கு எந்த சம்மனும் வரவில்லை. கவர்னருக்கு சம்மன் அனுப்பப்பட வேண்டுமானால் மத்திய உள்துறை மூலம்தான் அனுப்ப முடியும். கவர்னர் இக்பால் சிங்குக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. அதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

அதிமுக கூறும் புதிய புகார்கள்:

இந் நிலையில் இக்பால் சிங் மீது அதிமுக புதிய புகாரைக் கூறியுள்ளது. அம் மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், காரைக்காலில் கவர்னரின் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி தொடங்க அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் அனுமதி வழங்கியுள்ளார். மிக மிக சொற்ப எண்ணிக்கையில் வாழும் சீக்கிய மக்களுக்கு குருத்வாரா கட்ட 40 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியுள்ளார் என்றார்.

முதல்வரிடம் சோனியா விசாரணை:

இதற்கிடையே அதிமுகவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைமை, முதல்வர் வைத்திலிங்கத்தை டெல்லிக்கு அழைத்தது. இதையடுத்து நேற்று வைத்திலிங்கம் டெல்லி சென்றார். இன்று காலை சோனியாவை சந்தித்த அவர் கவர்னர் மீது எழுந்துள்ள நில விவகார புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.

மேலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பது தொடர்பாகவும் சோனியா கேட்டறிந்தார்.


கேட்பாரின்றி கிடக்கும் ரூ 49 கோடி.


தமிழகத்தில் வாகன சோதனையின் போது பிடிபட்ட ரூ 49 கோடி இன்னும் அப்படியே உள்ளதாகவும், இந்தப் பணத்துக்கான ஆதாரமிருப்போர் வந்து அதைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்தது. வாகனங்களில் பணம் கொண்டு போவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டன. பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமும் திடீரென சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த அதிரடி சோதனையின்போது, வாகனங்களில் கொண்டு போகப்பட்ட பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக சிலர் கொண்டு சென்ற பணமும் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.29 கோடியே 87 லட்சம் ரூபாயை பறக்கும் படை கைப்பற்றியது. ரூ.15 கோடியே 6 லட்சம் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் சிக்கியது. ரூ.9 கோடியே 24 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் ஆணைய நடவடிக்கைமூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.5 கோடி மட்டும் உரிய ஆவணங்களை காட்டி அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மொத்தம் பறிமுதல் ஆன ரூ.54.17 கோடியில் ரூ.49.17 கோடியை வாங்கிச் செல்வதற்காக இதுவரை யாரும் வரவில்லை.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு சரியான ஆவணங்களை காட்டி ரூ. 5 கோடியை மட்டும் தேர்தலுக்கு முன்பு சிலர் திரும்ப பெற்றுள்ளனர். வருவதாகக் கூறிச் சென்ற பலர் இன்னும் வந்து பணத்தை வாங்கவில்லை. இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம். வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம் மற்றும் ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்," என்றார்.


கேரளாவில் 7 மணி நேரத்தில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை.


கேரளாவில் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வெறும் 7 மணி நேரத்தில் ரூ. 21 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.


கேரளாவில் கடந்த 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 11-ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தல் காரணமாக 11-ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 2 நாட்களுக்கு கேரளாவில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


இதனால் மது பிரியர்கள் 11-ம் தேதி காலையிலேயே மது கடைகள் முன்பு குவிந்ததால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக கடைகள் காலை 10 மணிக்குதான் திறக்கப்படும். ஆனால் காலை 8 மணிக்கே கடைகள் முன்பு நீண்ட வரி்சை காணப்பட்டது. அன்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.2010-11 நிதியாண்டில் மட்டும் கேரளாவில் ரூ.6 ஆயிரத்து 730 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.1130 கோடி அதிகம் ஆகும்.


இலங்கை அரசை கண்டித்துப் பேரணி : தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது - இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு.


இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு தூதரகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட தங்கபாலு கைது செய்யப்பட்டார்.

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் தங்கபாலு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தங்கபாலு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேரணி செல்ல முயன்ற தங்கபாலு மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மேலும் பேசிய தங்கபாலு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் வன்முறைத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை அதிபரை சந்தித்து முயற்சிகளை மேற்கொண்டனர். மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசும் துணை நின்றது.

இலங்கை அதிபர் ராஜபட்சே இதற்கு உறுதியளித்தபோதும், இலங்கை கடற்படையினரின் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள், கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியிருப்பது தமிழகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அதற்கு பின்னால் மைலாப்பூர் தொகுதி 45வது வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். அப்போது தங்கபாலு உருவபொம்மையை எரித்தனர்.

தங்கபாலு தனது சுயலாபத்துக்காக கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். கட்சியை பலவீனமாக்க முயற்சிக்கிறார். இலங்கை அரசை கண்டித்து தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் என்பது கண்துடைப்பு நாடகம் என்று சதீஷ் தலைமையில் உருவபொம்யை எரித்தவர்கள் கோஷம் எழுப்பினர்.

ஊழல் ஒழிப்புக்காக `ஹீரோ' ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை : ராகுல் காந்தி.

அமைதியாகவே செயல்படுவேன் ஊழல் ஒழிப்புக்காக `ஹீரோ' ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை: அன்னா ஹசாரே போராட்டம் பற்றி ராகுல் காந்தி கருத்து

ஊழல்ஒழிப்பை வலியுறுத்தி, சமூகசேவகர் அன்னாஹசாரே தனது உண்ணா விரதத்தை முடித்த அன்று, ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கிருஷ்ணய்யர் கூறி இருப்பதாவது:-
அன்னா ஹசாரே போராட்டம் ஏன் நடந்தது? எத்தனையோ தீமைகள் நடந்தும், டெல்லி நடவடிக்கை எடுக்காததால்தான். பிரதமர் மன்மோகன்சிங், செயல்படாமல் இருப்பதிலேயே புகழ்பெற்றவர்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மீதே புகார் வந்தும்கூட, அதுபற்றி கருத்து தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ மன்மோகன்சிங் தயாராக இல்லை. பாராளுமன்றம், நேரத்தையும், மக்கள் பணத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள், உலக அளவிலான ஊழல் மூலம், வருவாயை பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நீதித்துறையே ஊழல்மயமாகி விட்டது. ஆனால் ஒரு நீதிபதி கூட தண்டிக்கப் படவில்லை. அந்த அளவுக்கு ஊழல் புரையோடிப் போயுள்ளது. மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சியில் உள்ள பெரிய ஊழல் மனிதர்களுக்கு எதிராக நீங்கள் (ராகுல் காந்தி) குரல் கொடுக்க வேண்டும். அதை விடுத்து ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் இளைஞர்.

இந்தியாவை காந்திய இந்தியாவாக மாற்ற போராடினால், நீங்கள் `ஹீரோ' ஆகலாம். நீங்கள் ஜெயிலுக்கு சென்றது இல்லை. போராட்டத்துக்காக, ஒருநாள் கூட அடைத்து வைக்கப்படவில்லை. உங்கள் தாத்தா நேரு எழுதிய சுயசரிதையை படியுங்கள். அதன்மூலம், தேசபத்தி, சோசலிசம், சுதந்திர போராட்டம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்வீர்கள்.

இவ்வாறு கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.

இந்த கடிதத்துக்கு ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராகுல் கூறி இருப்பதாவது:-

நல்ல சிந்தனை கொண்டவர்களைப் போலவே, நானும் ஊழலை நினைத்து கவலைப்படுகிறேன். ஊழலை ஒழிக்க அமைதியாக செயல்பட்டு வருகிறேன். அதற்காக `ஹீரோ' ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் விழித்திருக்கும் பெரும்பாலான நேரங்களில், இந்த கெட்டுப்போன சமுதாயத்தை மேம்படுத்துவது பற்றியே சிந்தித்து வருகிறேன்.

அதற்காக, உங்களைப் போல வெறுமனே குறை கூறுவதுடன் விட்டு விடுவதில்லை. நேருவின் சுயசரிதையை நான் ஏற்கனவே படித்துள்ளேன். வேண்டுமானால், மீண்டும் படிக்கிறேன்.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இக்கடிதத்துக்கு பதில் எழுதியுள்ள வி.ஆர்.கிருஷ்ணய்யர், தனது கடிதம் காயப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.


போர்க்குற்றவாளி என்று கூறப்பட்டதால் இலங்கை அரசு அதிர்ச்சி: ஐ.நா. சபை மீது பாய்ச்சல்.

போர்க்குற்றவாளி என்று கூறப்பட்டதால் இலங்கை அரசு அதிர்ச்சி: ஐ.நா. சபை மீது பாய்ச்சல்

இலங்கையின் சிங்கள ராணுவம் கடந்த 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிகட்ட தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சரண் அடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். ஐ.நா. சபையும், மனித உரிமை மீறல் தடுப்பு அமைப்புகளும் இந்த போர் குற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்துவதற்காக 3 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்து இருந்தார்.

இந்த குழுவின் அறிக்கையில், இலங்கையின் இறுதிப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதற்கும், ராணுவத்தினர் புரிந்த குற்றங்களுக்கும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. அந்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், பொய்யானது என்றும் கூறி உள்ளது. ஐ.நா. சபை குறிப்பிட்ட சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது எனவும் குற்றஞ்சாட்டி உள்ளது.


தமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை: இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்; ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு அறிக்கை.

தமிழ் பெண்கள் கற்பழிப்பு, படுகொலை:  இலங்கை இறுதி போரில் சிங்கள வீரர்கள் அட்டூழியம்;   ஐ.நா. விசாரணை குழு பரபரப்பு அறிக்கை

இலங்கை இறுதி போரில் போர் குற்றம் நடந்ததா? என கண்டறிய ஐ.நா.சபை 7 பேர் குழுவை அமைத்தது. இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி டருஷ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை அமைப்பு பிரதிநிதி யாஸ்மின் சோஜா, அமெரிக்க வக்கீல் ஸ்டீபன் ரட்னா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விரிவாக விசாரணை நடத்தினார்கள். 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டன. அவர்கள் விசாரணையை முடித்து 196 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளனர்.

இந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இருதரப்பினருமே போர் விதிமுறைகளை மீறினார்கள். இருதரப்பும் போர் குற்றங்களை செய்தன என்று கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*இறுதிப் போரின்போது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் தப்பி செல்ல முடியாமல் குவிந்து இருந்தனர். அவர்கள் உயிரைப்பற்றி கவலைப் படாமல் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இரு தரப்பினரும் தாக்கினார்கள்.

*இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

*தாக்குதல் நடத்தப்படாத இடம் என அறிவித்து விட்டு அந்த பகுதிகளிலும் குண்டு வீசினார்கள்.

*போரில் தடை செய்யப்பட்ட குண்டுகளும், ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. மக்கள் உயிரிழப்பை பற்றி கவலைப்படாத அரசு குண்டு வீச்சை ஊக்கப்படுத்தியது.

*ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை பொதுமக்களுக்கு உதவி செய்ய விடாமலும், சிகிச்சை அளிக்கவிடாமலும் ராணுவம் தடுத்து விட்டது.

*அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பெரிய குண்டுகளை வீசி தகர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் செய்யப்படவில்லை.

*போரில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதால் பத்திரிகை நிருபர்கள் அங்கு செல்லவிடாமல் தடுக்கப் ட்டனர். பொதுமக்கள் இறப்பு குறித்து விமர்சனம் செய்தவர்கள் கடத்தப்பட்டனர். மிரட்டப்பட்டனர்.

* ராணுவம் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

*இரு தரப்பினரும் நடத்திய தாக்குதலில் சிக்கி கொண்டு பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். பெண்கள், குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

*ஏராளமான தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்தனர். அவர்கள் பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் சிலரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கொன்றனர்.

*போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை குறுகிய பகுதிகளுக்குள் அடைத்து வைத்தனர். அங்கிருந்த பெண்களும் கற்பழிக்கப்பட்டனர்.

* வெளியே வந்த மக்களை விடுதலைப் புலிகள்தானா? என கண்டறிய எந்த அளவு கோளையும் வைக்கவில்லை. சந்தேகப்பட்ட அனைவரையும் அழைத்து சென்று சித்ரவதை செய்தனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனார்கள்.

*போர் பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் தடுத்தனர்.

*விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட நபர்களை ராணுவத்தினர் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

* போரில் தப்பி வந்த மக்களுக்கு போதிய வசதி செய்து தராமல் கடும் கஷ்டங்களை கொடுத்தனர். சித்ரவதைகளும் நடந்தன.

* போரில் காயம் அடைந்து வெளியே தப்பி வந்தவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வில்லை.

*ராணுவ நீதிமன்றங்கள் ராணுவத்தினர் அத்துமீறல் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* போர் குற்றங்கள் நடந்தது உறுதிபடுத்தப்பட்டு இருப்பதால் சர்வதேச அமைப்பு மூலம் முழு விசாரணை நடத்த வேண்டும்.

* போரில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசாங்கம் தனது வன்முறை செயலை நிறுத்த வேண்டும்.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

*காணாமல் போனவர்கள் பற்றி அரசு உரிய தகவலை வெளியிட வேண்டும். இல்லை என்றால் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.

*கைது செய்து வைத்துள்ள விடுதலைப்புலிகள், மற்ற நபர்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிட வேண்டும்.

*இலங்கையில் அமைதியும், சமாதானமும் ஏற்பட அனைத்து நடவடிக்கை களையும் ஐ.நா.சபை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளன.