Monday, April 18, 2011

இலங்கை அரசை கண்டித்துப் பேரணி : தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது - இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு.


இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு தூதரகம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட தங்கபாலு கைது செய்யப்பட்டார்.

தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் தங்கபாலு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தங்கபாலு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேரணி செல்ல முயன்ற தங்கபாலு மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மேலும் பேசிய தங்கபாலு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் வன்முறைத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை அதிபரை சந்தித்து முயற்சிகளை மேற்கொண்டனர். மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசும் துணை நின்றது.

இலங்கை அதிபர் ராஜபட்சே இதற்கு உறுதியளித்தபோதும், இலங்கை கடற்படையினரின் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள், கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியிருப்பது தமிழகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அதற்கு பின்னால் மைலாப்பூர் தொகுதி 45வது வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். அப்போது தங்கபாலு உருவபொம்மையை எரித்தனர்.

தங்கபாலு தனது சுயலாபத்துக்காக கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். கட்சியை பலவீனமாக்க முயற்சிக்கிறார். இலங்கை அரசை கண்டித்து தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் என்பது கண்துடைப்பு நாடகம் என்று சதீஷ் தலைமையில் உருவபொம்யை எரித்தவர்கள் கோஷம் எழுப்பினர்.

No comments: