Friday, December 23, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தல்.முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் இருமாநிலங்களிடையே பதற்றம் எழுந்துள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை.

கோவை மாவட்ட செக்போஸ்ட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்றுமணல்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றனவாம்.

திருச்சி, கரூர் ஆற்றுமணல்

கேரளா மாநிலத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு விவரமாக தடைவிதித்துள்ளது. இதனால் அங்கு வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவற்கு மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் மணல் தேவையை நிறைவு செய்வது தமிழ்நாடுதான். பால், காய்கறி உள்ளிட்டவை போக தமிழகமக்கள் மணலையும் கேரளாவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல் லாரிகள் மூலமாக பல்லடம் வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் திமுக கொடியுடன் மணல் கடத்திய லாரிகள் தற்போது அதிமுக கொடியுடன் செக்போஸ்ட் போலீசாரின் ஆசியுடன் மீண்டும் மணல் கடத்தப்படுகிறதாம். இந்த கடத்தலுக்கு ஆளுங்கட்சியினரும் ஆதரவாக உள்ளதால் அவர்களுக்கும் மாமூல் கொடுத்துவிட்டு மணலை கடத்துகின்றனர் கடத்தல்காரர்கள்.

அணைப்பிரச்சினையிலும் தொடரும் கடத்தல்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் இருமாநிலங்களிடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர்.

கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக பதிவு எண்களுடன் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர்.

லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா !முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதனால் அங்கு பல அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அரசு மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

சாதாரண அணைப் பிரச்சினையை கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை போல மாற்றி விட்டது கேரள அரசு. தேவையில்லாமல் அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களை கொந்தளிக்கும் வகையில் பேசப் போக தற்போது அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கேரளாவில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் சமூக விரோதிகள்.

இதன் விளைவு -தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர்பாராத பதிலடி. எங்கு பார்த்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுகிறார்கள் தமிழக மக்கள். உண்ணாவிரதம், பேரணி, கடையடைப்பு, கேரளக்காரர்களின் கடைகள் உடைப்பு, மறியல் என சகலவிதமான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம்தான் போராட்டத்தில் முன்னணியில் உள்ளது. இங்கு கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேனி என கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதுமே வீறு கொண்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிலும் பல நகரங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் குழுமி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். சலூன் கடைக்காரர்கள், ஆட்டோடிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், சலவைத் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், வியாபாரிகள், வக்கீல்கள், மாணவர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு போராட்டங்கள் தொய்வின்றி நடந்து வருகின்றன.

அதேபோல அரசியல் கட்சிகளும் கூட போராடி வருகின்றன. அதிமுகவைத் தவிர அத்தனை கட்சிகளுமே ஒரு சுற்றுப் போராட்டத்தை முடித்து விட்டன.

இந்தப் போராட்டங்கள் போதாது என்று பல்வேறு வகையான பொருளாதார முற்றுகையும் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து காய்கறி, பால், ஆடு, மாடுகள் என எதுவுமே கேரளாவுக்கு போவதில்லை. அத்தனையும் நிறுத்தப்பட்டு விட்டது.

அதேபோல சரக்கு லாரிகளும் கேரளாவுக்குப் போகாது என்று லாரி புக்கிங் ஏஜென்டு சங்கம் கூறி விட்டது. இதனால் சரக்கு லாரிகள் கேரளாவுக்குப் போகவில்லை.

அதேபோல மாநிலத்தின் பல பக்கங்களிலும் பல்வேறு வகையான பொருட்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தங்களுக்காகத்தானே பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் கேரளாவுக்குள் கொண்டு வரப்படுகிற சரக்கு வாகனங்களையும் கேரளக்காரர்கள் தாக்கி வருவதால் இந்த நிறுத்தம்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து தற்போது கறிக்கோழிகளை அனுப்புவதை நிறுத்தி விட்டனராம். காரணம், கோழிகளைக் கொண்டு போகிற வாகனங்களைத் தாக்கியதால். இதனால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து குறிப்பாக பல்லடத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதேபோல பிற பொருள் போக்குவரத்தும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.

திருப்பதி கோவில் லட்டு சுவை, தரம் உயருகிறது.

திருப்பதி கோவில் லட்டு சுவை, தரம் உயருகிறது; கடலை பருப்பு, நெய், சர்க்கரையை நேரடியாக வாங்க முடிவு

திருப்பதி எழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. அதற்கு காரணம் அதன் சுவைதான். ஆனால் சமீப காலமாக லட்டுவின் தரமும், சுவையும் குறைந்து வருவதாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. லட்டு சீக்கிரம் கெட்டு விடுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதற்கு தீர்வு காண்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் லட்டு தயாரிக்க பயன்படும் கடலை பருப்பு, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய், முந்திரி பருப்பு போன்றவை வாங்க டெண்டர் விடப்படுவதன் மூலம் தரம் குறைந்த பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிய வந்தது.

இதனால்தான் லட்டு தரம் குறைந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மூலப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பதி கோவிலில் ஒரு நாள் லட்டு தயாரிக்க 10 டன் கடலை பருப்பு, 10 டன் நெய், 10 டன் சர்க்கரை, 2 டன் முந்திரி பருப்பு, ஒரு டன் உலர்ந்த திராட்சை, 300 கிலோ ஏலக்காய் தேவைப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவிடப்படுகிறது.

இவைகளை நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கலாம் என தெரிய வந்தது. மும்பையில் உள்ள “பைசஸ்போர்டு” என்ற நிறுவனம் ஏலக்காயை தமிழ் நாடு, கேரளாவில் இருந்தும், முந்திரி பருப்பை கேரளாவில் இருந்தும் நேரடியாக கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்த நிறுவனம் மூலம் இந்த பொருட்களை வாங்கவும் ஆந்திர அரசு நிறுவனமான விஜயா டைரி மூலம் நெய் வாங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதே போல் சர்க்கரையை உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்து நேரடியாக பெறவும் திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் செய்யும் லட்டு தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறினார். தற்போது விற்கும் விலையில் ஒரு லட்டு எடை 800 கிராம் இருக்கும் வகையில் கண் காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.