Friday, December 23, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தல்.



முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் இருமாநிலங்களிடையே பதற்றம் எழுந்துள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை.

கோவை மாவட்ட செக்போஸ்ட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்றுமணல்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றனவாம்.

திருச்சி, கரூர் ஆற்றுமணல்

கேரளா மாநிலத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு விவரமாக தடைவிதித்துள்ளது. இதனால் அங்கு வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவற்கு மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் மணல் தேவையை நிறைவு செய்வது தமிழ்நாடுதான். பால், காய்கறி உள்ளிட்டவை போக தமிழகமக்கள் மணலையும் கேரளாவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல் லாரிகள் மூலமாக பல்லடம் வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் திமுக கொடியுடன் மணல் கடத்திய லாரிகள் தற்போது அதிமுக கொடியுடன் செக்போஸ்ட் போலீசாரின் ஆசியுடன் மீண்டும் மணல் கடத்தப்படுகிறதாம். இந்த கடத்தலுக்கு ஆளுங்கட்சியினரும் ஆதரவாக உள்ளதால் அவர்களுக்கும் மாமூல் கொடுத்துவிட்டு மணலை கடத்துகின்றனர் கடத்தல்காரர்கள்.

அணைப்பிரச்சினையிலும் தொடரும் கடத்தல்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் இருமாநிலங்களிடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர்.

கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக பதிவு எண்களுடன் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர்.

லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

No comments: