Thursday, June 30, 2011

ராஜபக்சே ஒரு உலக மாகா பொய்யன் - தங்கபாலு திடீர் தாக்கு.


ராஜபக்சேவைக் கண்டித்தோ, திட்டியோ, விமர்சித்தோ, கடுமையாக தாக்கியோ இதுவரை ஒரு வார்த்தையைக் கூட உதிர்த்திராத தங்கபாலு இன்று திடீரென ராஜபக்சே ஒரு உலக மகா பொய்யன் என்ற உண்மையைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்காரர்கள், இலங்கை அரசையும், இலங்கை அரசு செய்த ராணுவ அட்டூழியத்தையும், ஈழத் தமிழ்ப் பெண்களை கொடூரமாக கற்பழித்த செயலையும், கொலை செய்து புதைத்த கொடூரத்தையும் வன்மையாக கண்டித்தோ, வியர்க்க விறுவிறுக்க போராட்டம் நடத்தியோ தமிழக மக்கள் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில் திடீரென ராஜபக்சே ஒரு உலக மகா பொய்யன் என்று கூறி அதிரடியாக பேசியுள்ளார் தங்கபாலு.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தவர் தங்கபாலு என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஈழப் பிரச்சினையில் பலப் பல நாடகம் போட்டு நீலிக் கண்ணீர் வடித்த ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் குழி தோண்டிப் புதைத்தனர். இதைத் தொடர்ந்து தனது மாநிலத் தலைவர் பதவியை உதறினார் தங்கபாலு. அவருக்கு அடுத்த தலைவரைக் கூட தேர்வு செய்ய முடியாமல் பெரும் குழப்பத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் இன்று தங்கபாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவும் நீண்ட அறிக்கை. ராஜபக்சேவை வன்மையாக கண்டித்து நீளுகிறது அந்த அறிக்கை.

அதில் தங்கபாலு கூறியிருப்பதாவது...

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உலகமகாப் பொய்ச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை மிகவும் உக்கிரம் அடைந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.

இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான்.

அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி. பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர் ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.

1985 ஜூலை 7ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி.

மேலும் ராஜீவ்காந்தி இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது.

இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார் என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.

கடந்த 1984 89ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு" என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர்.

இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்ட

இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபட்சேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.

ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்சே தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு கூறியுள்ளார்.

ராஜபக்சே என்றைக்குமே உண்மை பேசியதில்லை என்பது அவர் அதிபராக வந்த அடுத்த சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் அவரைப் புரிந்து கொள்ள தங்கபாலுவுக்கு இத்தனை காலம் பிடித்துள்ளது வேடிக்கை, வினோதம்தான்.

thatstamil.oneindia.in

Wednesday, June 29, 2011

டீசல், கேஸ் விலையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை ! - பிரணாப்.

பெட்ரோல், டீஸல் விலையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

வாஷிங்டன் நகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், "டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே நாங்கள் கச்சா எண்ணை இறக்குமதி மீதான சுங்க வரியை குறைத்து இருக்கிறோம். இதனால் ஆண்டு ஒன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ.49 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு மேல் தியாகம் செய்ய இயலாது.

மாநில அரசுகள் டீசல், கியாஸ் விலையை குறைக்க வரியை சற்று குறைக்கலாம். இதற்காக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் குறைத்தும் உள்ளன," என்றார்.

திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது - தமிழக அரசு.ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. ஆனால் முந்தைய அரசு தரமற்ற சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதால்தான் அதில் தமிழக அரசு திருத்தம் செய்தது என்று தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி மனோன்மணி உள்ளிட்ட சிலர் சமச்சீர் கல்விக்கு தடை விதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

அதில் தமிழக அரசு கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்விச் சட்டம்-2010 என்ற சட்டத்தை இயற்றிய போது கடந்த ஆட்சியாளர்கள், மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை கருத்தில் கொள்ளவில்லை. கல்விச் சட்டங்களை இயற்றுவதற்கு அதுதான் மூலச்சட்டமாக உள்ளது.

தேசிய பாடத் திட்டங்கள் வடிவமைப்பு-2005-ல் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணையாக சமச்சீர் பாடத்திட்டங்கள் தரமானதாக அமையவில்லை.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அன்று ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கல்விக் குழு தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் சில குறைகளை கல்விக் குழு சுட்டிக்காட்டியது. அந்த குறைகளை முந்தைய அரசு நிவர்த்தி செய்யவில்லை. சமச்சீர் கல்வி பற்றி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புத்தகங்களை தேர்வு செய்யும் உரிமை பள்ளிக்கூடங்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டத்திலேயும் இந்த ஷரத்து இடம்பெற்றுள்ளது. ஆனால் இதை நடைமுறையில் முந்தைய அரசு கடைபிடிக்கவில்லை. எனவே அது அந்த சட்டத்தை மீறுவதுபோல் அமைந்துவிட்டது.

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் அட்டவணையை 15.5.10-க்குள் அங்கீகரிக்க வேண்டும் என்று சமச்சீர் கல்வி வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்படி நடந்துகொள்ளவில்லை. கட்டாய கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகளை வகுக்காமல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 14-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. அதை இரவு-பகலாக பாடுபட்டு நிறைவேற்றி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜுலை 5-ந் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மனுதாரரின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிடும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதாக இருக்காது.

ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி.

ஆனால் சமூகநீதி என்ற பெயரில் தரமற்ற பாடத்திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை. அந்த கல்வியை நாங்கள் நீக்காமல், சமச்சீர் சட்டத்தின் 3-ம் பிரிவை மட்டும்தான் (சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு வகை செய்யும் பிரிவு) திருத்தம் செய்தோம்.

முத்துக்குமரன் கமிட்டி, விஜயகுமார் ஆகியோரின் பரிந்துரைப்படி, சமச்சீர் கல்விக்கான மாநில கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தக் கவுன்சில்தான் கல்வி தரத்துக்கான வழிமுறைகளை தொடர்ந்து வகுத்தளிக்கும். ஆனால் இந்த குழுவை முந்தைய அரசு ஏற்படுத்தவில்லை.

சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு அவசரமாக முடிவு செய்யவில்லை. தீர விசாரித்து, நிதானமாக யோசித்துதான் நடவடிக்கைகளை எடுத்தோம். எனவே இந்த நடவடிக்கைகளால் எந்த பிரிவினருக்கும் அரசியல் சாசனம் தரும் உரிமைகள் பாதிக்கப்படாது.

மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தால், தமிழகத்தில் உள்ள 54,957 பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 35 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.200 கோடி வீணாய்ப் போகும் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு மிகையானது. சட்டங்களை அமல்படுத்தவும் அவற்றில் குறையிருந்தால் அதை திருத்தி அமல்படுத்தவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

தற்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு எப்படிப்பட்ட பாடத்திட்டத்தை வகுத்தளிக்கிறதோ, அதனடிப்படையிலான புத்தகங்களை மாணவர்களுக்கு இந்த அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறோம். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் பரபரப்பு : கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் .

தாம்பரத்தில் பரபரப்பு:  கைக்குழந்தையை கொன்று  பீப்பாயில் அடைத்த பெண்

தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. 2 வருடத்துக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களாகவே ரேவதி மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று இரவு அவர் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 2 பேர் இருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் மாமியார் ராணி எழுந்து பார்த்தபோது ரேவதியின் அருகில் குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார்.

இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் பீப்பாயில் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீர்க்கன் காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

வீடு பூட்டியிருந்தது குழந்தையை காணாமல் அனைவரும் தேடியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. குழந்தை இறந்து கிடந்த பீப்பாய் வெளியில் இருந்ததால் உள்ளே இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் குழந்தையை கொன்று பீப்பாயில் வைத்து விட்டு வீட்டிருந்து சென்று உள் பக்கமாக பூட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ரேவதிக்கு இரவில் நடந்து செல்லும் பழக்கம் இருந்தது தெரிந்தது. அவர் குழந்தையை கொன்று தண்ணீர் பீப்பாயில் அடைத்து வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். எதற்காக இப்படி செய்தார் என்று கூற தெரியவில்லை.

குழந்தை இறந்தது பற்றி அவர் கவலையடைந்தவர் போல் இல்லை. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கடந்த ஆண்டு ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென இறந்து விட்டது.

உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக அப்போது கூறப்பட்டது. அந்த குழந்தையையும் ரேவதி கொலை செய்திருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே கொன்றது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்.

சீனாவில் உணவு திருவிழாவுக்காக கொல்லபட்ட 15 ஆயிரம் நாய்

சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. பெரும்பாலும் சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.

தற்போது சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற பகுதியில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை அவர்கள் ஒரு கலாசாரமாக வைத்துள்ளனர். திருவிழா போன்று ஒரு வாரம் வரை நடைபெறும் இதற்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர்.

நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என காலங்காலமாக அவர்களது நம்பிக்கையாக உள்ளது. எனினும், இதனை கொடுமையாக கருதி, நாய் கறி உண்பதை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஒலிம்பிக்போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய் கறி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி சொத்து : உலக பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய பெண் முதலிடம்.

ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி சொத்து: உலக பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய பெண் முதலிடம்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மெக்சிகோவைச் சேர்ந்த மேக்னெட் முதலிடம் வகித்து வந்தார். இவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி சொத்து வைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் 2-வது இடம் வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி.

தற்போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜினா ரினிகார்ட் என்ற 57 வயது பெண் தொழில் அதிபர் முதலிடத்தை பிடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி.இவர் நிலக்கரி மற்றும் இரும்பு தொழில் செய்கிறார். இந்த தொழில் நிறுவனங்களை இவர் சொந்தமாகவே நடத்துகிறார். பங்குதாரர்கள் யாரும் இல்லை.

எனவே, ஆஸ்திரேலியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா.உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், கோசி ஆறு சீரமைப்பு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் கடனுதவி அளிக்க உள்ளது உலக வங்கி.

அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை.கடையநல்லூர், அழிந்து வரும் குருவி இனங்களை காக்க கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெட்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது.

உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் 141 பறவை இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகிறது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தற்போது ஏரளமான செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் தான் நாம் அன்றாடம் காணும் குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் சர்வ சாதாரணமாக பறந்து தொந்தரவு கொடுக்கும் குருவிகளை தற்போது பார்ப்பதே அரிதாக உள்ளது.

குருவி இனத்தை பார்க்காமலேயே வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர்கள் குருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர். கடையநல்லூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் சந்திக்கும் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் குருவி வளர்ப்புக்கு அட்டை பெட்டி வழங்கி வீடுகளில் வைத்து குருவிகளை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்.

அட்டைப் பெட்டிகளில் குருவி சென்று வர ஓட்டை அமைத்து உள்ளே உமி மற்றும் வைக்கோல் வைத்து அடைக்கப்பட்டுள்ள இந்த கூடு தற்போது கடையநல்லூர் பகுதியில் பிரபலமாகி வருகிறது. எனவே, வருங்கால சந்நதியினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குருவி உள்பட அழிந்து வரும் அனைத்து பறவைகளையும் பாதுகாப்பது மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Tuesday, June 28, 2011

சுற்றுச்சூழல் பள்ளிக்கு ரூ 50 கோடி நன்கொடை கொடுத்த நிலகேனி !


இன்போஸிஸ் நிறுவனரும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை தயாரிப்புக் குழு தலைவருமான நந்தன் நிலகேனி மற்றும் அவர் மனைவி ரோஹிணி, சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்துக்கு ரூ 50 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் (IIHS) நிறுவனத்தின் சுற்றுச் சூழல் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்தத் தொகையை அவர்கள் வழங்கியுள்ளனர்,.

இதுகுறித்து நிலகேனி மற்றும் ரோஹிணி விடுத்துள்ள கூட்டறிக்கையில், "கல்வி மற்றும் நகர்ப்புறமயமாக்கத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. இப்படி ஒரு நிறுவனத்துக்கு எங்கள் நன்கொடை பயன்படுகிறது என்பதே எங்களுக்கு மிகுந்த மனக் கிளர்ச்சியைத் தருகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட் கல்வி மையம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அமைப்பாகும். ஸெர்க்ஸெஸ் தேசாய், கோத்ரெஜ், சைரஸ் குஸ்டெர், ரெஹானா ஜாப்வாலா, விஜய் கேல்கர், கேஸுப் மஹிந்திரா, கிஷோர் மரிவாலா, ராஹுல் மெஹ்ரோத்ரா, பன்சி மேத்தா, ராகேஷ் மோகன், நந்தன் நிலகேனி, நாசர் முகர்ஜி, தீபக் பரேக், சிரிஷ் படேல் மற்றும் தீபக் ஸ்டால்வாக்கர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இணைந்து நடத்தும் நிறுவனம் இது.

பல்வேறு படிப்புகளுக்கான சிறப்புத் துறைகளை உருவாக்க, டிஜிட்டல் லைப்ரரிகளை அமைக்க ரூ 300 கோடி வரை நிதி திரட்டி வருகிறது இந்த கல்வி மையம். அதன் ஒரு பகுதியாகவே ரூ 50 கோடியை வழங்கியுள்ளார் நிலகேனி தம்பதியர்.

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு : 1,809 மாணவர்களுக்கு அழைப்பு.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெறும் முதல் கட்ட கலந்தாய்வுக்கு மொத்தம் 1,809 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்-விளையாட்டு வீரர்கள் - ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான 55 எம்.பி.பி.எஸ். இடங்கள் - 1 பி.டி.எஸ். இடம்,

சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 767 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வரும் 30-ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொடர்ந்து பொதுப் பிரிவினர் உள்ளிட்ட பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 3-ம் தேதி ஞாயிறு கலந்தாய்வு கிடையாது.
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்... எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து ஏற்கப்பட்ட 20,123 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. ரேங்க் பட்டியலில் 66 மாணவர்கள் 200-க்கு 200 பெற்று முன்னணியில் உள்னர். இவர்களில் பிறந்த தேதி அடிப்படையில் கம்ப்யூட்டர் ரேண்டம் எண் மூலம் முதல் 10 பேருக்கு சிறப்பிடமும் ஏற்கெனவே அளிக்கப்பட்டு ள்ளது.

அனைத்துப் பிரிவினர் உள்பட வகுப்பு வாரியாக ரேங்க் பட்டியல் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தயாரித்து சுகாதாரத் துறையின் இணையதளம்

அரசின் இணையதளம் www.tnhealth.orgல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

50 மாற்றுத் திறனாளிகளுக்கு... தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் (3 சதவீதம்) மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கலந்தாய்வு தொடக்க தினமான ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 66 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்

குழு அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து ஊனத்தின் பாதிப்பை உறுதி செய்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

15 மாணவர்களுக்கு... ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 2 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடமும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் விண்ணப்பித்தவர்களில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 433 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 197.25 வரை வரிசையாக முதலில் உள்ள 15 மாணவர்கள் மட்டும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். படிப்பில் சேரவும் அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்குவோர்: விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 3 இடங்களுக்கான மாணவர்களை செவ்வாய் (ஜூன் 28), புதன் (ஜூன் 29) ஆகிய இரண்டு தினங்கள் அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு சான்றிதழ் களைச் சரிபார்த்து தேர்வு செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் 3 மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதியன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

ஜூலை 1 முதல் 6-ம் தேதி வரை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் அனைத்துப் பிரிவினருக்கு வரும் ஜூலை 1, 2 ஆகிய இரண்டு தினங்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவினரில் ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 198.75 வரை பெற்றுள்ள 550 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 1, 2) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் என வகுப்பு வாரியாக ஜூலை 6-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 197.75 வரை மொத்தம் 432 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 2, 4) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 65 மாணவர்கள் (ஜூலை 4 பிற்பகல் 2 மணி) அழைக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 339 மாணவர்கள் (ஜூலை 5) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 6-ல்.... தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினருக்கு ஜூலை 6-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 191.75 வரை உள்ள 261 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ல் தொடங்கி 188.00 வரை உள்ள 55 மாணவர்களும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 197.25 முதல் 185.25 வரை இடம்பெற்றுள்ள 23 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

எம்.பி.பி.எஸ். - தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்.தமிழகத்தில் 2011-12 நடப்புக் கல்வி ஆண்டில் தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

2006-ம் ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் திங்கள்கிழமை ஜூன் 27 அன்று அங்கீகாரம் அளித்து விட்டது. எனவே நடப்புக் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களைச் சேர்ப்பதில் இனி எந்தவித பிரச்னையும் இருக்காது.

கடந்த கல்வி ஆண்டில் (2010-11) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு தொடர்ந்து 2014-15-ம் கல்வி ஆண்டு வரை தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டியிருக்கும். அதன் பிறகு இந்தக் கல்லூரியும் அங்கீகரிக்கப்படும்.

பெற்றோர், மாணவர்களுக்கு நிம்மதி: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தேனி-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒப்புதல் கிடைத்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர்-மாணவரிடையே இருந்து வந்தது.

இப்போது தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விட்டதால், 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவது உறுதியாகி பெற்றோரும் மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000 உள்பட ஆண்டுக் கட்டணமாக ரூ.12,290 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு வட மாநிலங்களில் மதிப்பில்லாமல் போய் விட்டது சாலமன் பாப்பையா.நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.

மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.

அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர். ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.

அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை இந்தி அழித்துவிடும் என நடந்த பிரசாரத்தால், தமிழகத்தில் இந்தி கற்பது தடைபட்டது. இந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, இந்தி எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது. இந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கி இருக்க முடியும். இந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.

தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும் என்றார் பாப்பையா.

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு.முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.

கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை தோல்வி அடைந்ததால் எதிர்அணியினர் ஆத்திரம்

கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை: தோல்வி அடைந்ததால் எதிர்அணியினர் ஆத்திரம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ராவூரி வான்ட்ல பள்ளி, நாராயணரெட்டி பள்ளி ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இரு கிராமங்களைச் சேர்ந்த வீரர்கள் கிரிக்கெட் ஆடினார்கள்.

இதில் நாராயணரெட்டி பள்ளி அணி தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் பிரதாப் ரெட்டி மற்றும் வீரர்கள் ராவூரிபான்ட்ல பள்ளி அணி வீரர் கேசவ ரெட்டியிடம் சென்று, நீ பந்து போடும் முறை சரி அல்ல. நீ பந்தை எறிவதால்தான் நாங்கள் “அவுட்” ஆனோம் என்றனர்.

அதற்கு அவர் நான் சரியாகத்தான் பந்து போட்டேன். உங்களுக்கு “பேட்டிங்” செய்ய தெரியவில்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப்ரெட்டி மட்டையால் கேசவ ரெட்டியை சரமாரியாகத் தாக்கினார். அப்போது அவரது அணியினரும் சேர்ந்து மட்டையால் அடித்தனர்.

இதில் மண்டை உடைந்து கேசவரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இதுகுறித்து மதனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணரெட்டி பள்ளி வீரர்களை தேடி வருகிறார்கள்.

வகுப்பறையில் கூச்சல் போட்டதால் 31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர் : டிஸ்மிஸ் செய்யகோரி பெற்றோர் போராட்டம்.

வகுப்பறையில் கூச்சல் போட்டதால்  31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர்: டிஸ்மிஸ் செய்யகோரி பெற்றோர் போராட்டம்

வகுப்பறையில் கூச்சல் போட்ட 31 மாணவிகளின் கையை முறித்தார் ஒரு ஆசிரியர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேவலசெருவு பள்ளி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இந்தி ஆசிரியராக பணியாற்றுபவர் சந்திரசேகர். இவர் மாணவிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார்.

சின்ன தவறு செய்தால் கூட அடி பின்னி எடுத்து விடுவார். இந்த நிலையில் அவர் 7-ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது, மாணவிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. இதைப் பார்த்ததும் அவர் ஆவேசம் அடைந்தார். பிரம்பை எடுத்து ஒவ்வொரு மாணவியாக அழைத்து கையில் சரமாரியாக அடித்தார்.

இதில் 31 மாணவிகளின் கை முறிந்து போனது. வலி தாங்காமல் அனைவரும் அலறித்துடித்தனர். இதை அறிந்ததும் அக்கம் பக்கத்து வகுப்பறைகளில் இருந்து ஆசிரியர்கள் ஓடிவந்தனர். பின்னர் மாணவிகள் அனைவரையும் மதன பள்ளியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ரேகா, மாதவி, காயத்ரி, ரேவதி ஆகிய 4 பேரின் கை எலும்புகள் உடைந்து நொறுங்கி உள்ளன. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 31 மாணவிகளின் கையை முறித்த ஆசிரியர் சந்திரசேகரை டிஸ்மிஸ் செய்ய கோரி பெற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி.திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது மகனைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாராம். மகனை நினைத்து வாடி வரும் அவர் அவ்வப்போது கதறி அழுது விடுகிறாராம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டது. அதுவரை சற்று மனம் தளராமல் தைரியத்துடனும், புன்னகையுடனும் காணப்பட்ட கனிமொழி தற்போது கவலை படர்ந்த முகத்துடன் காணப்படுகிறாராம்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டதாலும், மகன் ஆதித்யாவைக் காண முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாலும், அவனை விட்டுப் பிரிந்து நீண்ட நாட்களாகி விட்டதாலும் பெரும் வருத்தத்திலும், துயரத்திலும் இருக்கிறாராம் கனிமொழி.

தனி செல்லில் தங்கியிருக்கும் கனிமொழி பெரும்பாலான நேரங்களை புத்தகம் படிப்பதிலும், எழுதுவதிலும் கழிக்கிறார். அவ்வப்போது கதறி அழுகிறாராம்.

அவரது முகம் சோகம் படர்ந்து காணப்படுவதாகவும், விரக்தியுடன் அவர் இருப்பதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அடிக்கடி அழுவதால் அவரது முகம் சோகமயமாக உள்ளதாக கூறும் அத்தகவல்கள், முன்பெல்லாம் அடிக்கடி பேசும் கனிமொழி தற்போது எப்போதாவதுதான் சக கைதிகள் அல்லது அதிகாரிகளுடன் பேசுகிறார். அப்படிப் பேசினாலும் தனது மகனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார் என்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் நிலை பரவாயில்லை என்கிறார்கள். அவர் தனது சூழ்நிலையை நன்குஉணர்ந்து புரிந்து அதற்குப் பழகிக் கொண்டு விட்டார். இயல்பான நிலையில் அவர் காணப்படுகிறார். உடற்பயிற்சி, இந்தி கற்பது, சக கைதிகளுடன் இணைந்து விளையாடுவது என்று சகஜமான நிலையில் தன்னை வைத்துக் கொண்டுள்ளார். இதனால் மன இறுக்கம் இல்லாமல் இயல்பான நிலையில் இருக்கிறார். ஆனால் கனிமொழியால் சிறை சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவர் உடைந்து போய்க் காணப்படுகிறார்.

கனிமொழிக்கு டிவியும், கேபிள் இணைப்பும் தரப்பட்டுள்ளது. அதில் 28 சேனல்கள் வருகின்றனவாம். அவ்வப்போது டிவியைப் பார்த்து பொழுது போக்கி வருகிறாராம் கனிமொழி. பெரும்பாலும் செய்திகளையே பார்ப்பாராம்.

திஹார் சிறையில் தனது மகள் உடலில் கொப்புளம் வந்து அவதிப்படுவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கூறியிரு்நதார். ஆனால் திஹார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா இதுகுறித்து கூறுகையில், தேசிய மனித உரிமை ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை திஹார் சிறையின் சூழலை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிறைக் கைதிகளின் அனைத்து அடிப்படைத் தேவைகள் குறித்தும் நாங்கள் பெரும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

எந்தக் கைதியாவது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடனடியாக உள்ளேயே உள்ள மருத்துவமனையை அணுகலாம். தேவைப்பட்டால் டாக்டர்கள் செல்லுக்கே நேரில் வந்தும் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. தங்களுக்கு தேவையான மருந்துகளை கைதிகள் நேரடியாக டிஸ்பன்சரிக்குப் போய் வாங்கிக் கொள்ளவும் அனுமதி உள்ளது. கைதிகள் தங்களது மருத்துவத் தேவைகளை சிறைக் கண்காணிபப்பாளரிடம் தெரிவித்தால் அவர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கனிமொழி ஒரு விசாரணைக் கைதி. விசாரணைக் கைதிகளுக்கு திஹார் சிறையில் எந்தக் கைத்தொழிலும் கற்றுத் தரப்படுவது இல்லை. எனவே கனிமொழி மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறார் என்று மீடியாக்களில் வந்த செய்தி தவறு என்றார்.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது : ஜெயலலிதா பேட்டி.முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு :-

கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும். இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும். அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது. இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?

பதில்:- காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பிறகு நிலைமை வெகுவாக மாறி விட்டது. அது அப்போது தரப்பட்ட ஒரு உறுதிமொழி, அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவ்வளவுதான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.

கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?

பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

கேள்வி:- 3வது அணி ஏற்படுமா?

பதில்:- எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து இப்போதே கூற முடியாது. அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி:- பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் நல்ல நண்பர்கள் உள்ளனர்.

கேள்வி:- மத்தியில் மீண்டும் தனிக்கட்சி ஆட்சி வரும் என கருதுகிறீர்களா?

பதில்:- அதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறை முடிந்து போய் விட்டது. எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் என நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் வரும்.

கேள்வி:- தயாநிதி மாறன் நீக்கப்பட வேண்டுமா?

பதில்:- அதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டியது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பிரதமரின் கடமையும், பொறுப்புமாகும். அதை அவர் செய்ய வேண்டும்.

கேள்வி:- ப.சிதம்பரம்?

பதில்:- ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெல்லவே இல்லை. அவர் மோசடியான முறையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது நாட்டுக்கே தெரியும். நாட்டை அவர் மோசடி செய்து விட்டு பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல, பொருத்தமானதல்ல, நியாயமானதல்ல என்றார் ஜெயலலிதா.

கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?

பதில்:- இந்தியா, சூப்பர் பவர் ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற் கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்” இன்று மாலை கடந்து செல்கிறது.

பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது

விண்வெளியில் 10 மீட்டர் சுற்றளவு கொண்ட சிறு கிரகம் ஒன்று இருப்பதை சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது கண்டுபிடித்தனர். இந்த புதிய கிரகத்துக்கு அவர்கள் 2011 எம்.டி. என்று பெயரிட்டுள்ளனர்.

ஆம்னி பஸ் அளவுக்கு இருக்கும் இந்த குட்டி கிரகம், பூமியை சுற்றி வர 396 நாட்கள் எடுத்துக் கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி கிரகம் இன்று (திங்கள்) பூமிக்கு மிக, மிக அருகில் வர உள்ளது.

இன்று பிற்பகல் இந்த கிரகம் பூமியில் இருந்து 7 ஆயிரத்து 500 மைல் தொலைவுக்குள் நெருங்கி வர உள்ளது. இன்று மாலை 6.56 மணிக்கு அந்த குட்டி கிரகம் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி அருகில் வந்து கடந்து செல்லும்.

பூமிக்கு அருகில் வரும் இந்த குட்டி கிரகத்தால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஒரு வேளை அந்த கிரகம் பூமியின் ஈர்ப்பு சக்தி பகுதிக்குள் வந்து விட்டால், பூமியின் சீதோஷ்ண நிலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் எரிந்து சாம்பலாகி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இனி இந்த குட்டி கிரகம், 2023-ம் ஆண்டு மே மாதம் 10-ந் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.

Monday, June 27, 2011

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்.

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.

தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.

எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.

பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.

கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம் : மருத்துவர்கள் தகவல்.தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை (ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.

புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.

தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் : போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்.தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை அறிய மலேசியாவில் இருந்து ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேரும் ஆகிய ஐந்து பேர் கொண்ட உண்மை அறியும் குழு கடந்த 25.05.2011 அன்று இலங்கை சென்றது.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள பர்னாட் பாத்திமா, பத்மாவதி, சண்முக பிரியா, இருதய ராஜ், தென்பாண்டியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் தேதி நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழல் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐவர் குழு தமிழகத்தில் இருந்து இலங்கை வடகிழக்குப் பகுதிக்கு சென்றது.

இலங்கை அரசு சர்வதேசக் குழுமத்திடம் சொல்வது போல நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்து விட்டோம் என்பதெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டுணர்ந்தது. மேலும் யுத்த களத்தில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.

30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு அல்லது ஒருவர் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவராய் இருக்கின்றனர். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.

இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

1. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகட்டுவதற்கு பொருளாதார உதவி ஏதும் செய்யாமல் வெறும் நிலத்தை மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

2. அடிப்படை வசதிகளான வீடு, குடிதண்ணீர், மின்சாரம், கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி போன்றவை செய்துதரப்படவில்லை.

3. தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைப்பெற்று வருகின்றன.

4. இந்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை அழித்துவிட்டு புத்த சிலைகளை நிறுவி பௌத்த மதக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர்.

5. தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளான வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் ராணுவ முகாமகள் அடர்த்தியாக காணப்படுவதால் மக்கள் பீதியிலும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியும் நாட்களை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

6. போர் இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சே நாட்டைப் பிளவுப்படுத்தும் பயங்கரவாதத்த்திற்கான யுத்தத்திலே நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று தொடர்ந்து கூறுவது சிங்கள இனவெறியை தூண்டுகின்ற வகையில் இருக்கிறது.

7. யுத்தம் முடிந்த பிறகு தமிழ் மக்கள் தங்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பிவிட்டனர் என்று இலங்கை அரசு சொல்வது உண்மையில்லை.

8. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான மீள்குடியேற்றம் செய்வதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை இலங்கை அரசு உருவாக்கவில்லை. இந்தியாவிலிருந்தும் மற்ற சர்வதேச நாடுகளில் இருந்தும் உதவியாக வந்த பொருட்களையும், பணத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தவில்லை என்பதை மக்களே கூறுகிறார்கள்.

9. யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறும் இலங்கை அரசு வடகிழக்கு மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான ராணுவ முகாம்களை அமைத்திருக்கிறது.

10. இன்னும் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களில் 12,000 மக்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் போர் கைதிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்றும் தெளிவாகத் தெரியவில்லை.

11. வடகிழக்கு பகுதியில் பேச்சு சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது கூட்டமோ அல்லது அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யாரோ அந்த நபர் திடீரென்று காணாமல் போய்விடுவதாவும் கூறுகிறார்கள்.

12. ஒரு இடத்தில் வாழ்ந்த மக்கள் சண்டைக் காரணமாக பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

13. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் கணவர்களைத் தேடி அலைகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை தேடி அலையும் நிலையில் உள்ளனர்.

14. குடும்பத்தை தலைமையேற்கும் பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இல்லை.

15. 17 வயது முதல் 28 வயது வரை இளம் விதவைகள் 12,000 பேர்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இவர்கள் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

16. 18 வயதிற்கும் குறைவாக உள்ள 6 ஆயிரம் இளம் பெண்கள் திருமணமாவதற்கு முன்பே கருவுற்றிருக்கிற அவலநிலை உருவாகியுள்ளது.

17. போரில் குண்டடிப்பட்டு உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத் திறனாளிகளாக காலம் முழுவதும் மாற்றப்பட்டுள்ள தமிழர்களுக்கு முறையான மறுவாழ்வு திட்டம் இல்லாததால் நடுக்கடலில் விடப்பட்ட படகு போல விடப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலையை அறிந்து இந்த உண்மையறியம் குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

பரிந்துரைகள்:

1. இலங்கைத் தமிழர்களுக்கு அரசு அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும்.

2. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

3. இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தொடர்பான தீர்வு காண வேண்டும்.

4. 1987-ல் 13வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத்தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் வழங்க வேண்டும்.

5. முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

6. வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

7. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நெருக்கடி நிலைமை, காவல்துறை மற்றும் ராணுவமும் திரும்ப பெற வேண்டும்.

8. இலங்கையில் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாதிக்கப்பட்டதமிழ் மக்களோடு இணைந்த குழு ஏற்படுத்த வேண்டும்.

9. தடுப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும்.

10. போரினால் தனித்து விடப்பட்ட கணவனை இழந்த, பிள்ளைகளை இழந்த பெண்களின் மறு வாழ்வுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். (உம்) வேலை வாய்ப்பு, விவசாய நிலம் வழங்குதல், தொழிற்ப் பயிற்சி போன்றவைகள் செய்துதர உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

11. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்து, அவர்களுடைய மறுவாழ்வுக்கு உறுதி செய்ய வேண்டும்.

12. இதுவரை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை, ராணுவம், ஆண்கள் இவர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுத்து சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும்.

13. முகாம்களில் இருக்கும் பெண்களுக்கு அந்தந்த முகாம்களில் இருக்கும் நாட்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

14. போரினால் பெற்றோர்களை இழந்து காப்பகங்களில் இருக்கும் ஆண், பெண், குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவைகள் உண்மை அறியும் குழுவின் சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது என்றனர்.

மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு ! ப.சிதம்பரம்.நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், அமைச்சரவையில் 40 வயது, 50 வயதானவர்கள் தான் இடம் பெற வேண்டும். நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும். இளைய தலைமுறை மீதும், இளம் அரசியல்வாதிகள் மீதும் எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு என்றார்.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறி வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்துப் போவதாக சொல்லலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த சிதம்பரம், நான் அந்த விஷயத்தைப் பற்றியே பேசவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் ஒரு தலைவரைத் தருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிரதமர் பதவிக்குத் தகுதியான நபர் கிடைக்கிறார். ராகுல் காந்தி உரிய நேரத்தில் பிரதமரானால் காங்கிரஸ் கட்சி மிகவும் மகிழ்ச்சியடையும் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாட்டை 7 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆண்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பல வெற்றிகளையும் சில பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறோம். ஆனால், இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. இந்தக் கருத்தை பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன் என்றார்.

நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எனது மிச்சமுள்ள காலத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் நிறைய படிக்க விரும்புகிறேன். நிறைய பயணம் செய்ய ஆசைப்படுகிறேன். அதைவிட மேலாக எழுதவும் விரும்புகிறேன். எனக்குள் ஒரு எழுத்தாளனும் இருக்கிறார். அருந்ததி ராய் மாதிரி எழுத என்னாலும் முடியும். அருந்ததியின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடே கிடையாது, ஆனால், அவரது எழுத்து நடையை ரசிப்பவன் நான் என்றார்.

விரைவில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது உள்துறை அமைச்சர் பதவியை தொடர்ந்து வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு வேறு வழி இருக்கிறதா... எனக்கு வேறு சாய்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியது இருவர். ஒருவர் காங்கிரஸ் தலைவர். இன்னொருவர் பிரதமர். அவர்களது முடிவுகளை நான் எப்போதும் ஏற்பவன். இந்த நாளோடு நான் உள்துறை அமைச்சர் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்கள், 25 நாட்கள் ஆகிவிட்டன என்றார் சிதம்பரம்.

அமைச்சரவை மாற்றத்தின்போது சிதம்பரத்தின் இலாகாவும் மாற்றப்படக் கூடும் என்று டெல்லியில் கிசுகிசுக்கள் பரவியுள்ள நிலையில் அவரது இந்தப் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர் - போதைத் தடுப்பு இன்ஸ்பெக்டரும் கைது !


நேற்றிரவு மும்பை ரிசார்ட்டில் கஞ்சா, கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் வினியோகத்துடன் நடந்த இரவு நேர களியாட்டத்தில் கலந்து கொண்ட 60 இளம் பெண்கள் உள்பட 300 பேர் பிடிபட்டனர். இந்த போதை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார்.

மும்பை போலீசார் மற்றும் கிரைம் பிராஞ்ச் போலீசார் இணைந்து மும்பையில் பல ஹோட்டல்கள், டிஸ்கோத்தேக்கள், தாபாக்கள், ரிசார்ட்கள், பார்களில் சோதனையிட்டனர்.

அப்போது மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றிவளைத்தனர். இவர்கள் அனைவருமே வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் போதை மருந்துகளை பயன்படுத்தியிருந்ததால் கடும் போதையில் இருந்தனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அந்த மாதிரிகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் வந்தவுடன் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார். போதை மருந்துகள் இருந்த அறையில் ஜாதவ் அமர்ந்திருந்து, அதை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். இவரது முழு உதவியுடன் தான் இந்த போதை களியாட்டம் நடந்துள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்த ரிசார்ட்டில் இருந்து கஞ்சா, சராஸ், கோகைன், சிறிஞ்சுகள், ஊசிகள் மற்றும் ரூ. 3 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த "டிங்டிங்' கிற்கு தேவகோட்டையில் "டும் டும் டும்'.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமது கவனத்திற்கு தெரிந்து இரண்டு சீனப்பெண்கள் தமிழ்நாட்டு மருமகள்களாகியுள்ளனர். வாழ்த்துவோம்!ஜூன் 27,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சீனாவைச் சேர்ந்த பெண், "டிங்டிங்' கிற்கு, இந்திய கலாசாரப்படி, "டும் டும் டும்' நடந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த சேதுக்கரசு - காளியம்மாள் தம்பதிகளின் மகன் லெட்சுமண பெருமாள், 29; சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார். அந்நிறுவனத்தில், சீனாவைச் சேர்ந்த உபென்ஜிசியங் - சன்சான்குவா தம்பதியரின் மகள், டிங்டிங், 26, பணிபுரிந்தார். அங்கு, இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது.

நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் முடிக்க எண்ணினர். ஒப்புதல் கிடைத்ததும் இந்திய கலாசாரப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். மணமகளுக்கு, இந்தியா வர கடந்த வாரம் விசா கிடைத்தது. இருவரும் திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், தேவகோட்டை வந்தனர். நேற்று, இருவருக்கும் திருமணம் நடந்தது.

இது குறித்து மணமகள் டிங்டிங் கூறுகையில், "தமிழ் இணையதளம் மூலம் தமிழ் கற்றுவருகிறேன். சீன முறைப்படி மோதிரம் மாற்றுவதோடு திருமணம் முடிந்துவிடும். தமிழக கலாசாரம் என்னை அதிகளவில் ஈர்த்துவிட்டது. என் பெற்றோருக்கு விசா கிடைக்காததால், என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தனர். இந்திய குடும்பத்தில் ஒருவராக நான் மாறியிருப்பது, எனக்கு பெருமையை தருகிறது' என்றார்.


இவருக்கு முன்பே ஜூன் 21ல், சேலம்மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்ராஜாவிற்கும், சீன நாட்டின் ஜுயாங்ஷு மாநிலத்தை சேர்ந்த ஆத்திங் என்கிற ஹுசென்திங்கிற்கும் பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்து முறைப்படி, திருமணம் நடைபெற்றது.மணமக்கள் சீனாவிலுள்ள கே.ஜே.கே., குரூப் கம்பெனியின், என்டெக் ஜுவல்லரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் திருமணத்துக்கு, இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது - சீமான்."உலக எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் டீசல் விலையை உயர்த்துவதா? மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது" என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மத்திய அரசுமீது சாடியுள்ளார்.

சமீபத்தில் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையினை மத்திய அரசு உயர்த்தியது. இது நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளை உயர்த்தினால் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதால் தேர்தல் முடிந்தபின் விலையேற்றம் செய்தது மத்திய அரசு. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதி தந்தது.

இந்த விலையேற்றத்தைச் செய்தபோது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக இருந்தது. அதை வைத்துக் கணக்கிட்டே எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.458 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும், அது இந்த நிதியாண்டு முழுவதும் கணக்கிட்டால் ஒட்டுமொத்த இழப்பு ரூ.1,67,000 கோடியாக ஆகும் என்றும் கூறி செய்திகளைப் பரப்பியது.

ஆனால், இன்றைக்கு டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியபோது, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 91.23 டாலராக குறைந்துள்ளது. ஆயினும் அதே இழப்பு கணக்கை - ரூ.1,71,000 கோடியை - பெட்ரோலியத்துறை மந்திரி கூறுகிறார். இது மக்களை ஏமாற்றுவதாக ஆகாதா?.

2008-ம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக உயர்ந்தது. அப்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.50.60 (டெல்லி விலை) ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35.86 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி 100 டாலருக்கும் கீழ் வந்தவுடன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.2-ம் மத்திய அரசு குறைத்தது.

ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் என்று நிலவும் போது விலையை ரூ.43.80 ஆக உயர்த்தியது ஏன்?. பெட்ரோல் விலை ரூ.70-க்கு உயர்ந்த பின்னரும், இன்னமும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது என்றால் எப்படி?. இந்த வினாக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும்.

எனவே, பொதுமக்களுக்கு எழும் வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புரியும்படியான ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்." என்று அந்த அறிக்கையில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொடைக்கானலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

கொடைக்கானலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கொடைக்கானலில் உள்ள பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் சார்பில் 75-வது சிவ ஜெயந்தி பவல விழாவினையொட்டி 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க சிவ தரிசன தொடக்க விழா கொடைக்கானலில் உள்ள கோல்டன் பார்க் இன் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் தியானம், தீப தியானம், ஒலி-ஒளி காட்சிகள், சொர்க்க காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. தரிசன நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனர். இத்தரிசன நிகழ்ச்சி வரும் 29-ம்தேதி வரை நடைபெறுகின்றனது.

போலீசாருக்கு சவால் விடும் போலி அடகு கடைகள்.

போலீசாருக்கு சவால் விடும் போலி அடகு கடைகள்

கோவையில் காலம் காலமாக தொழில் செய்து வரும் நல்ல அடகு கடைக்காரர் களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போலி அடகு கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

போலி அடகு கடை உரிமையாளர்கள் ஒரு இடத்தில் நிலையாக தொழில் செய்வதில்லை. 6 மாதம் ஒரு இடம் என்று மாற்றி அமைத்து கொள்கிறார்கள். கொள்ளையர்களுடன் கூட்டணி வைத்து திருட்டு நகைகளை வாங்கி குவிக்கிறார்கள்.

அரசு அனுமதியுடன் நியாயமான வட்டிக்கு நகைகளை அடகு பிடிக்கும் கடைகளில் அரசு விதிப்படி நகை கொடுப்பவரின் விவரம், நகையின் எடை,ரசீது, அடகு நகை கொண்டு வருபவர் நம்பிக்கையானவரா? என்று சரிபார்க்கப்படுகிறது.

ஆனால் போலி அடகு கடைக்காரர்கள் இது போன்று எதையும் சரிபார்ப்பது இல்லை. தைரியமாக திருட்டு நகைகளையும், வெள்ளி பொருட்களையும்,பித்தளை பாத்திரங்களையும் அடகு பிடிக்கின்றனர். போலீசாரிடம் சிக்கி கொண்டால் தெரியாமல் வாங்கி விட்டோம். பொருளை எடுத்து செல்லுங்கள். எங்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர்.

இத்தகைய போலி அடகு கடைக்காரர்கள்தான் நகரில் திருட்டு சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களது இந்த சமூக விரோத செயல்பாட்டால் நீண்ட காலமாக நியாயமாக தொழில் செய்யும் அடகு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட நகை அடகு கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:-

திருட்டு நகைகளை எல்லா அடகு கடைகளிலும் வாங்குவதில்லை. குறிப்பாக எங்களது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடகு கடைகள் அனைத்தும் முறையான அரசு உரிமம் பெற்று சட்டப்படி தொழில் செய்து வருகின்றோம்.

சமீபத்தில் கோவையில் நடந்து வரும் நகை திருட்டு வழக்குகள் எதிலும் எங்கள் உறுப்பினர்களின் அடகு கடைகள் சம்பந்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எனவே கொள்ளையர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலீசுக்கு சவால் விடும் போலி அடகு கடைகளை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் திருட்டு குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் - எஸ்.ஆர். பார்த்திபன் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு.

டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு.

டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

மத்திய அரசு கடந்த 24-ந் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியது.

இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆங்காங்கே இந்த விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டீசல் விலையை குறைக்காவிட்டால், லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-

தனியார் சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூல், டிரைவர்கள் பற்றாக்குறை, டயர் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி அடிக்கடி டீசல் விலையை உயர்த்தி வருவதால், லாரி தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

டீசல் விலையை குறைக்காவிட்டால், அகில இந்திய அளவில் உடனடியாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் நடைபெறும் அகில இந்திய மோட்டார் காங்கிரசின் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு செய்ய உள்ளோம். அந்த கூட்டத்திற்கு பிறகு லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பான அதிகாரபூர்வ முடிவு வெளியிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் மட்டும் 23/4 லட்சம் லாரிகள் நிறுத்தப்படும். இவ்வாறு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறினார். லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தரை வழி சரக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு தரைவழி போக்குவரத்து தடைபட்டால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சட்ட மசோதா தயாரிப்பில் இனிமேல் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது ; மத்திய மந்திரி கபில்சிபல் பேட்டி.

சட்ட மசோதா தயாரிப்பில் இனிமேல் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது; மத்திய மந்திரி கபில்சிபல் பேட்டி

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தயாரிக்கும் பணியில், அன்னா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்களுடன் மத்திய மந்திரிகள் ஈடுபட்டனர். அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- மத்திய அரசின் மசோதா தயாரிப்பு பணியில் சமூக ஆர்வலர்களை இனி மேல் சேர்க்க மாட்டோம்.

அதனால் இப்போது ஏற்பட்ட அனுபவம், இனி வருங்காலத்தில் ஏற்படாது. மசோதா தயாரிப்பு குழுவில் சேர்க்காவிட்டால், சில சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும். அதையும் நான் ïகிக்கவே செய்துள்ளேன். மத்திய மந்திரிகள் தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவை இறுதியானதாக கருத முடியாது.

அனைத்துக் கட்சிகளுடனும், வேறு சில சமூக ஆர்வலர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, மசோதாவில் சில திருத்தங்களை செய்யப் போகிறோம். மசோதாவை நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்டு 16-ந் தேதி முதல், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலை வரும் போது, அதை மத்திய அரசு சமாளிக்கும். உண்ணாவிரதம், சரியான வழிமுறை அல்ல என்று சமூக ஆர்வலர் தரப்பைச் சேர்ந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். எனவே, தனக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்று முடிவு எடுக்கும் ஞானம், அன்னா ஹசாரேவுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவதா? இல்லையா? என்பதுதான், எங்கள் பேச்சுவார்த்தையின் மையப்பிரச்சினை என்று கருதுவது சரியல்ல.

அரசுக்கு நிகரான அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்றும் அன்னா ஹசாரேவும், அவருடைய ஆதரவாளர்களும் கூறினர். அது தான் கருத்து வேறுபாட்டுக்கு வழிவகுத்தது.

சி.பி.ஐ., ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு நிகரான அமைப்பை அவர்கள் விரும்பினார்கள். இத்தகைய அமைப்பில் இருப்பவர்கள், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், தூய்மையாக நடந்து கொள்வார்கள் என்று எப்படி உறுதிப்படுத்த முடியும்? எனவேதான், கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பாபா ராம்தேவ், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாக்குறுதி அளித்துக் கொண்டே, ராம்லீலா மைதானத்தில், அதற்கு நேர்மாறான காரியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை மத்திய அரசு அம்பலப்படுத்தியது. விமான நிலையத்தில், அவரை வரவேற்றதால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாக கூற முடியாது. அவரை சந்தித்ததால்தான், அவரை அம்பலப்படுத்த முடிந்தது.

புதிதாக அமைக்கப்படும் தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கமிஷனில் மருத்துவ கல்வியையும் சேர்ப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இது தொடர்பான வரைவு மசோதா, மத்திய மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர், அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

Sunday, June 26, 2011

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய சிங்களப் படை - தடுத்த இந்திய கடற்படை.கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க வந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்து அவர்களைப் பிடிக்கவும் முயன்றனர். ஆனால் அப்போது இந்தியக் கடற்படை ரோந்துக் கப்பல் அங்கு வரவே பின்வாங்கிச் சென்று விட்டனர் சிங்களப் படையினர்.

தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்தபடி உள்ளது இலங்கைக் கடற்படை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய முறையில் செய்யாமல் மெத்தனமாக இருக்கிறது மத்திய அரசு.

சமீபத்தில் 23 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று விட்டது. இதனால் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சிகள் காரணமாக 23 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 600 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்து தமிழக மீனவர்கள் பீதியடைந்தனர். அங்கு வந்த இலங்கைப் படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். அவர்களைப் பிடிக்கவும் முயற்சித்தனர். அந்த சமயம் பார்த்து இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பல் ரோந்து வரவே, சிங்களப் படையினர் பின்வாங்கி திரும்பிச் சென்றனர்.

சிங்களப் படை சென்றதும், இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்தனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலையில் கரைக்குத் திரும்பினர். இந்தியக் கடற்படைக் கப்பல் தங்களுக்கு தக்க சமயத்தி்ல பேருதவியாக வந்ததாக மீனவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நான்கு நாட்களாக கடலுக்குள் போகாமல் இருந்து சென்றதால் பெருமளவில் மீன்கள் கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.

பேப்பர் பயன்பாட்டை குறைக்க எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் : மத்திய அரசே வழங்குகிறது.

பேப்பர் பயன்பாட்டை குறைக்க பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: மத்திய அரசே வழங்குகிறது

பாராளுமன்ற கூட்டத் தொடர்களின் போது, பாராளுமன்ற பணிகள், அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் போன்றவை காகிதத்தில் அச்சிடப்பட்டு எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகிறது. பெரிய கட்டுகளாக இவை இருப்பதால், எம்.பி.க்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், பேப்பர் செலவுகளும் அதிகமாகிறது.

பேப்பர் பயன்பாட்டை குறைத்து சீரமைக்கவும், செலவையும் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதில் எம்.பி.க்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் வாங்குவதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பம் கொண்ட இந்த கம்ப்யூட்டரில், கீ-போர்டை பயன்படுத்த தேவை இல்லை. தொடுதிரை மூலம் அன்றைய தினத்தின் கேள்விகள் பட்டியலை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். எம்.பி.க்கள் பாராளுமன்ற செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என, ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான் தெரிவித்தார். கையடக்க கம்ப்யூட்டரை இயக்க எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தடுப்பு சுவரை இடித்து தனியார் பஸ் மீது மோதிய ஆம்னி பஸ் - 9 பேர் பலி.

தடுப்பு சுவரை இடித்து    தனியார் பஸ் மீது மோதிய    ஆம்னி பஸ்-9 பேர் பலி

சேலம் புதிய பஸ் நிலை யத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு 10-15 மணியளவில் ஒரு தனியார் பஸ் தர்மபுரி நோக்கி சென்றது. பண்ணப்பட்டி என்ற ஊருக்கு அருகே சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, எதிரே பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ராஜேந்திரன் என்பவர் மொபட்டில் பிரிவு ரோட்டில் இருந்து அதிவேமாக மெயின் ரோட் டிற்கு வந்தார்.

இதைப் பார்த்த ஆம்னி பஸ் டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது தனியார் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. 2 பஸ்களின் முன்பகுதியும் ஒன்றுடன் ஒன்று சிக்கி கொண்டது. இந்த பயங்கர விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த 9 உடல்களையும் போலீசார் மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை சேலம், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகள், மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். விபத்தில் இறந்த 9 பேரில் 8 பேரின் அடையாளம் தெரியவந்ததுள்ளது.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. பிஜூவில்சன் (42) கர்நாடகா பஸ் டிரைவர். கேரள மாநிலம் திருச்சூர்.
2. பாக்கியராஜ் (25), சேலம் - தர்மபுரி, தனியார் பஸ் டிரைவர். தீவட்டிப்பட்டி.
3. சின்னத்தம்பி (40) தொப்பூர்.
4. கமலக்கண்ணன் (38) தாசசமுத்திரம், தீவட்டிப்பட்டி.
5. கமல்பாட்சா (60) பெங்களூர்.
6. தில்சா பேகம். (கமல் பாட்சாவின் மனைவி)
7.சண்முகசுந்தரம் (37) தர்மபுரி,
8. ராஜா (16) கஞ்சநாயக்கன்பட்டி
9. 50 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்று தெரியவில்லை. மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டது. விபத்து பற்றி அறிந்ததும் அமைச்சர்கள் இடைப்பாடி பழனிச்சாமி, உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லி, எம்.எல்.ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், பாஸ்கரன் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.