
மதிமுக பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதர்களைத் தவிர உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இனப்பெருக்கம் செய்ய பருவகாலங்கள் உண்டு . தமிழகத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 45 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலம். இதில் மீனவர்களுக்கு நன்மை இருப்பினும் இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கக் கூடாது.
இருப்பினும், கட்டுமரம், ஃபைபர் போட் மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிடினும் கோடைக்காலங்களில் கடலில் திடீர் என்று ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.
எனவே, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 1,076 கி.மீ. பரந்துபட்ட கடலில் 45 நாள்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.
வசந்தத்தை வரவேற்கும் சித்திரை முதல் நாளில் நெய்தல் நில மக்கள் வறுமையை வரவேற்பதாய் இந்த 45 நாள்கள் அமைகின்றது. ஆண்டின் 365 நாள்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக்காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் என்று போக மீதம் 150 நாள்கள்தான் மீன்பிடித் தொழிலில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, அரசு அறிவித்துள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத்தில்தான் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பிக்கக் கட்டணம், கல்லூரிப் படிப்பு முடிந்தவர்களுக்குத் திருமணம், சித்திரை வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கடுக்காக செலவுகள் வந்துகொண்டே இருக்கும்.
45 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலகட்டத்திற்குப் போதுமானதாக இல்லை. குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என்று கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 100/- வழங்குவதைப் போன்று மீனவர்களைப் பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம் 45 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 45 நாள்களுக்கு ரூ. 4,500 உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும்.
வட தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலில் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. தென் தமிழ்நாட்டில் கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரோடு கரை திரும்புவோம் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையை சிங்கள ராணுவம் உருவாக்கியுள்ளது.
இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் கடல் கடந்து பிற நாட்டுப் பட்டினங்களில் வாணிபம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த பட்டினத்தவர்களான நெய்தல் நில மக்கள் இன்று பட்டினி கிடக்கும் நிலையும் உருவாகியுள்ளது. கடலாளிகளான பருவதராஜகுல மக்களுக்கு கடல் சொந்தமாக உள்ளதோ இல்லையோ, அவர்கள் கடனாளியாக உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை.
இந்த நிலை மாறி, மீன்பிடித் தொழிலை ஊக்குவித்திட இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய - மாநில அரசுகள் அமைத்துத் தந்திட வேண்டும். முகத்துவாரம் இல்லாத பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் போதுமான தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகங்களை அமைத்துத் தர வேண்டும்.
கடலும் ஆறும் சேருகின்ற இயற்கை முகத்துவாரப் பகுதிகளில்தான் இறால், நண்டு போன்றவை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், தற்போது அப்பகுதிகளில் சாக்கடை நீர், ரசாயனம் கலந்த ஆலைக் கழிவு நீரால் மாசு அடைந்து இனப்பெருக்கம் தடைபடுகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு நீர் மாசுபடாமல் இருக்க தூய்மைப்படுத்தப்பட்ட நீர் மட்டுமே முகத்துவாரம் வழியாக வந்து கடலில் கலப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இந்த 45 நாள்கள் மீன்பிடித் தடைக் காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்க கண்காணிப்பது மிகவும் அவசியம்.
ஊதியம் பெறாமல் பரந்துபட்ட 1,076 கி.மீ. கடல் எல்லையைப் பாதுகாத்து வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.