
இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி கமிஷனர் மற்றும் மருத்துவ அதிகாரி பதவிகளில் 21 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என்ற பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-1, குருப்-2 நிலையிலான போட்டித்தேர்வுகளை பட்டதாரிகள் எழுதலாம். இதேபோல், குரூப்-4 தரத்திலான தேர்வுகளை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி தேர்வுபட்டியல் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.
இந்த நிலையில், புதிய பணி நியமனம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் 9 உதவி கமிஷனர் பணி இடங்களும், பொது சுகாதாரத்துறையில் 12 மருத்துவ அதிகாரி இடங்களும், கால்நடை மருத்துவ துறையில் 6 பால்வள உதவியாளர் பணி இடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் தகுதியுடையவராவர்.
இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, இளநிலை உதவியாளர், தொழிலாளர் உதவி கமிஷனர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆவண காப்பக உதவி ஆசிரியர் என்று அடுத்தடுத்து பல்வேறு பணி நியமனங்கள் வர இருக்கிறது.
No comments:
Post a Comment