Sunday, April 17, 2011

'நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' - முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண்.


ஊழலுக்கு எதிராக உருவாக்கப்படவுள்ள லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், 'நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று கூறியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு ஆடியோ சிடி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர் சிங் (பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்) ஆகியோருடன் சாந்தி பூஷண் தொலைபேசியில் உரையாடுகிறார்.

அதில், நீதிபதிகளை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியும். எனது மகன் பிரசாந்த் பூஷண் (மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான இவரும் லோக் பால் மசோதா வரைவுக் குழுவில் உறுப்பினராக உள்ளார்) நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் என்று கூறுவது போல உரையாடல் பதிவாகியுள்ளது.

லோக் பால் மசோதா வரைவு தொடர்பான கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்த நிலையில் இந்த சிடி சில மீடியா நிறுவனங்களுக்கு வந்து சேர்ந்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். இந்த சிடி தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி டெல்லி போலீஸில் அவர் மனு அளித்தார். நிருபர்களிடம் பேசிய சாந்தி பூஷண், நான் முலாயம் சிங் யாதவ், அமர் சிங்குடன் பேசியதே இல்லை. அந்த உரையாடலே பொய்யானது. அந்த சிடியை தடயவியல் சோதனைக்கு உள்படுத்தினால் உண்மை வெளிவரும். சிடி விவகாரத்தின் பின்னணியில் பலர் எனக்கும் எனது மகனுக்கும் எதிராக திட்டமிட்ட சதி இது என்றார்.

இது குறித்து அமர் சிங் கூறுகையில், சாந்தி பூஷண்-முலாயம் சிங் இடையே தொலைபேசி உரையாடலுக்கு நான் அப்போது ஏற்பாடு செய்தது உண்மை தான். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. அவர்கள் பேசியதை விட இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதைத் தான். எனது தொலைபேசி உரையாடல்கள் மீடியாக்களில் வெளியானபோது அதை தடை செய்யக் கோரி நான் வழக்குத் தொடர்ந்தேன்.

ஆனால், தடை விதிக்கக் கூடாது என்று வாதாடியவர் தான் பிரஷாந்த் பூஷண். இப்போது அதே டேப்கள் பூஷண்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது என்றார். இதன்மூலம் இந்த சிடி உண்மையானது தான் என்பது போல கருத்துத் தெரிவித்துள்ளார் அமர் சிங்.

மேலும் இந்த சிடியை ஆராய்ந்த சில தடயவியல் நிபுணர்கள், இது உண்மையான சிடி தான் என்று கூறியுள்ளனர்.

அதே போல பிரஷாந்த் பூஷண் நிருபர்களிடம் கூறுகையில், அந்த சிடியில் உள்ளது எனது தந்தை சாந்தி பூஷணின் குரலாக இருக்கலாம். ஆனால், அதை முழுமையாக தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

இந் நிலையில் இந்த சிடி தொடர்பாக டெல்லி போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அது தொடர்பான விவரங்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர்.


No comments: